1.5.12

May day message - 2012



இன்று மேதினம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக சபதமேற்கும் நாள் இது. இந்த தினம் பெரும் போராட்டங்களால் நிரம்பியது. சிகாகோவில் தொழிலாளர்கள் உயர்த்தியாகம் செய்தனர். அதன் விளைவாகத்தான் ‘எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் தூக்கம்’ என்பதே சாத்தியமானது.

உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான், அவர்களால் தொடர்ந்து உழைப்பைச் செலுத்த முடியும். இதுதான் சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பதற்கான அர்த்தமும். அதற்காகத்தான் தங்கள் எதிர்காலம், தங்கள் சந்ததியினரின் வாழ்க்கை எல்லாவற்றையும் மனதில் கொண்டு தொழிலாளர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இன்று அந்த நியாயங்கள் எல்லாம் மெல்ல மெல்ல கரைந்துகொண்டு இருக்கின்றன. முதலாளித்துவ சாத்தான்கள் புதிய வேதங்களை ஒதுகின்றன. ’ஒரு நிறுவனம் நன்றாக இருந்தால்தான், அங்கு பணிபுரிபவர்களும் நன்றாக இருக்க முடியும். எனவே காலநேரமில்லாமல் உழைக்க வேண்டும்’ என்பதுதான் ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்’ என்பதற்கு அவர்கள் தரும் புதிய பொழிப்புரை.

இங்குதான் தொழிலாளர்கள் தடுமாறுகிறார்கள். ‘தொழிலாளி நன்றாக இருந்தால்தான் ஒரு நிறுவனம் நன்றாக இருக்கும்’ என்பதற்கு நேர் எதிர்மாறாகவும், தலைகீழாகவும் முதலாளித்துவம் பேசுவதை, இதுதான் உண்மையோ என நம்பவும் செய்கிறார்கள். சரியான தொழிற்சங்கங்கள்  தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த உண்மைகளை எடுத்துரைத்து, முதலாளித்துவத்தின் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் புரியவைக்கும் பணியை செய்கின்றன. தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுக்காமல் தற்காப்புக்காக போராடுகின்றன.

தொழிலாளர்களின் தேக ஆரோக்கியம், மனநலம் குறித்தெல்லாம் இன்று முதலாளித்துவம் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ‘எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேரத் தூக்கம்’ எல்லாவற்றையும் காணாமல் போக வைக்கிறது. நேரம் காலமில்லாமல் அவர்களின் உழைப்ப உறிஞ்சத் துடிக்கிறது. தொழிலாளர்களை நசுக்குகிறது.  நவீனத் தொழிலாளர்களான ஐ.டி துறையிலிருந்து, பழைய பஞ்சாலைத் தொழிலாளர்கள் வரை இதுதான் நிலைமையாகவும், கதியாகவும் இருக்கிறது.

நமது வங்கியிலும் இதுதான் நிலைமை. கொஞ்சம் கொஞ்சமாக பணி நேரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேரம், காலம், பார்ப்பவர்களையும் விதிகளைப் பேசுபவர்களையும் ஒழுங்கற்றவர்களாக நிர்வாகம் பார்க்கிறது. அவர்களை வங்கிக்கு எதிரானவர்களாய் சித்தரிக்கிறது. நிர்வாகத்தின் விருப்பங்களுக்கு அனுசரனையாக இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, டிரான்ஸ்பர் போன்றவற்றில் முன்னுரிமையும், சாதகமும் காட்டப்படுகிறது. இதைக் காட்டி, மற்றவர்களையும் நிர்வாகத்தை அனுசரித்துப் போகிறவர்களாய் மாற்றுகிறது. நிர்வாகத்தின் இந்த வஞ்சனைகளுக்கு PGBWU, PGBOA போன்ற சங்கங்கள் துணை போகின்றன.

இதன் விளைவாக, ஊழியர்கள், அலுவலர்களின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது. உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது. மன அழுத்தம் கூடி நமது திறனை இழக்க வேண்டியிருக்கிறது. சுய மரியாதை, சொரணை எல்லாவறையும் நீர்த்துப் போகிறது. நலன்கள், உரிமைகள் எல்லாவற்றுக்கும் சத்தமில்லாமல் வேட்டு வைக்கப்படுகின்றன. விரக்தியும், வேதனைகளும் மிஞ்சுகின்றன. இதற்கு எதிராகத்தான் PGBEAவும், PGBOUவும் இங்கு தொடர்ந்து பேசுகின்றன. செயல்படுகின்றன.

நிர்வாகத்தின் தந்திரங்களுக்கு யாரும் விலை போகாமல், ஊழியர்கள், அலுவலர்கள் அனைவரும் PGBEA, PGBOU வின் கீழ் அணி திரளும்போது, இந்த நிலைமைகள் மாறும். நம்பிக்கைகள் பெருகும். ‘எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேரத் தூக்கமும்’ ஒருநாள் சாத்தியமாகும்.

இதுதான் மே தினம் நமக்குச் சொல்லும் செய்தி!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!