24.9.16

புதுவை பாரதியார் கிராம வங்கியா இல்லை ரோட்டோரத்து பெட்டிக்கடையா?



செப்டம்பர் 21, 22 தேதிகளில் புதுவைக்கு (புதுச்சேரி / பாண்டிச்சேரி) சென்றிருந்தோம்.

21ம் தேதி காலையில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஆபிஸர்கள் சங்கத்தைச் சார்ந்த (AIBOC) தோழர்கள் முருகன், நாகலிங்கம் உள்ளிட்ட நான்கு தோழர்கள் நேரில் வந்து சந்தித்து, வங்கியில் தாங்கள் படும் அவஸ்தைகளையும், தங்கள் வாழ்க்கையே சிதைக்கப்படுவதையும் மிகுந்த வேதனையுடன் எடுத்துரைத்தனர். 


தங்களது  உழைப்பும், சிந்தனையும் முழுமையாக உறிஞ்சப்படுவதையும், இந்த வங்கிக்கு வெளியே இருக்கும் வாழ்க்கையே அறியாமல் தாங்கள் நசுக்கப்படுவதையும்  கண்கலங்கச் சொன்னார்கள். தாங்கள் இணைந்திருக்கும் சங்கம் இந்த அல்லல்கள் குறித்து கவலைப்படவில்லை என்றும், AIRRBEAவிலிருந்து வந்திருக்கும் தாங்கள் எதாவது செய்து, தங்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அன்றைக்கு புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஒன்பது கிளைகளுக்கு விஜயம் செய்தோம். பார்த்த முதல் கிளையில் ஒரே ஒருவர்தான் அங்குமிங்கும் மாறி மாறி உட்கார்ந்து கேஷ் கொடுத்துக்கொண்டும், வவுச்சர்களை பாஸ் செய்துகொண்டும் இருந்தார். இதுதான் rotation of job போலும். விசாரித்தபோது அவர் ஆபிஸர் என்பதும், அவரே safe முதற்கொண்டு single ஆக handle  செய்வது தெரிய வந்தது. அதிர்ந்து போனோம். எப்படி நீங்களே post செய்யவும், pass செய்யவும் முடிகிறது என்று கேட்டோம். எனக்கென்று ஆபிஸர் பாஸ்வேர்டும், கிளரிக்கல் பாஸ்வேர்டும் தந்து விடுவார்கள் என்றார்.  புரியாமல், “இங்கு பணிபுரியும் கிளரிக்கலின் பாஸ்வேர்டு தந்து விடுவார்களோ” என்றோம். “இல்லை, இல்லை எனக்கென்று ஆபிஸர் பாஸ்வேர்டும், கிளரிக்கல் பாஸ்வேர்டும் தந்து விடுவார்கள்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிய போது தலை சுற்றியது. அன்றைக்குப் பார்த்த கிளைகளில், சிலவற்றில்தான் கிளரிக்கல் கேஷ் பார்த்தனர். சில கிளைகளில் ஆபிஸர்கள் பார்த்தனர். மேலாளராக இன்னொரு ஆபிஸர் இருந்தனர். இப்படித்தான் எந்தஒழுங்கும் இல்லை.

மொத்தம் 38 கிளைகள்தான். ஆபிஸர்கள் 48 பேர். கிளரிக்கல் 38 பேர். அதில் 80 சதவீதத்துக்கும் மேலே 30 வயதுக்குள் இருந்தார்கள். தலைமையலுவலகத்தில் நான்கைந்து ஆபிஸர்களும், ஒரு கிளர்க்கும் போக, கிளைகளில் மற்றவர்கள் எப்படி பணிபுரிய வேண்டி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே கலக்கம் ஏற்பட்டது. லீவுக்கும், டெபுடேஷனுக்கும் அவர்கள் என்ன செய்வார்கள்? உறவுகள், நட்புகள் எல்லாம் எங்களை விட்டு தூரத்தில் போய்க்கொண்டு இருக்கின்றனர் என்றார் ஒருவர் கண் கலங்கி.

எல்லாக் கிளைகளிலும் வேலை நேரம் என்பது 10 A.M - 5 P.M என்பது பிரிண்ட் செய்யப்பட்டு பெரிதாக சுவற்றில் ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கிளையிலும் மதிய உணவு நேரம் என 2 P.M - 2.30 P.M  என பேருக்குக் கூட எழுதி வைக்கப்படவில்லை. உணவு, இயற்கையின் அழைப்புகளை நிராகரித்து வடிக்கையாளர்களை சமாளிக்க வேண்டி இருக்கும் எனவும் கிடைத்த நேரத்தில் ஒருவர் மாற்றி மாற்றி ஒருவர் சாப்பிட்டுக் கொள்வோம் என்றனர். இங்கு எதுகுறித்தும் கேள்வி கேட்கக் கூடாது, அதுதான் வேலைபார்ப்பதற்கு  சொல்லித்தரப்பட்ட ஒரே விதி என்றனர்.

டெபுடேஷன், டிரான்ஸ்பருக்கென்று எழுத்து பூர்வமான ஆர்டர் கொடுப்பதில்லை, நாளைக்கு இந்த கிளை என போனில் சொல்வார்கள், செல்ல வேண்டும் என்றனர்.  சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கூட வரச்சொல்லி, பெண்டிங் வேலைகளை முடிக்கச் சொல்வார்கள் என புலம்பினார்கள். டெபுடேஷன் சென்றால் TAவாக ரூ.50/- கொடுப்பார்களாம். ஆபிஸர்களுக்கு அதுவும் இல்லையாம். வந்து பார்த்த கொஞ்ச நாட்களிலேயே வேலைக்குச் சேர்ந்த பலர் தலை தெறிக்க ஓடி விடுகிறார்களாம்.

ஒவ்வொன்றாக அவர்கள் சொல்லச் சொல்ல வேதனையும், கோபமும் அதிகரித்தது. தனியார் மயம், மித்ரா கமிட்டி, தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுவது குறித்து விளக்கி, அவைகளால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி வந்த நமக்கு, அதை விடக் கொடுமையால் கண்ணெதிரே நம் இளம் தோழர்கள் வதைபடுவது தாங்க முடியாததாய் இருந்தது.

இதென்ன வங்கி தானா என்று முதல் கேள்வி எழ ஆரம்பித்தது. குறைந்த பட்ச சட்ட திட்டங்கள், நியாயங்கள் கூட கடைப் பிடிக்கப்படாமல். தங்கள் இஷ்டத்திற்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் ஆட்டிப்படைப்பது எப்படி சரியாய் இருக்கும் என இரண்டாவது கேள்வி எழுந்தது.

22ம் தேதி காலையில் புதுவை பாரதியார் கிராம வங்கி சேர்மன் திரு.மனோரஞ்சன் சாஹு அவர்களை சந்தித்து உரையாடியபோது, இந்த அவலங்களை எடுத்துரைத்தோம்.

ஒருவரே கேஷியராகவும், ஆபிஸராகவும் இருக்கிறார் என்றால், ‘அப்படியா’ என்றார். கொஞ்சம் யோசித்து, “அப்படி இருக்காது சார், பேங்க்கிங்ல அது முடியுமா?” என சிரிக்கிறார்.

புரிந்து பேசுகிறாரா, புரியாமல் பேசுகிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என விளங்காமல், ”முதலில் பேங்க் மாதிரியே நடத்தப்படவில்லை, ஒரு கிளையில் கூட manual of instructions / book of instructions இல்லையே” என்றோம். “அதெப்படி இல்லாமல் இருக்கும். நான் வந்து மூணு மாசம் ஆகுது. விசாரிக்கிறேன்.” என்றார்.

இஷ்டத்துக்கு டிரான்ஸ்பர் போடப்படுகிறதே என கேட்டதுக்கு, சிரித்துக் கொண்டே “மொத்தமே 35 கி.மீ பரப்பளவு கொண்ட இந்த பாண்டிச்சேரியில் எங்கு வேலை பார்த்தால் என்ன சார்?” என்றார். 

“இருக்கட்டும் சார், அதற்கென விதிமுறைகள் இருக்கிறதே: எனக் கேட்டோம். அதற்கு பதில் இல்லை.

நேரம் காலம் இல்லாமல் பணிபுரிய வேண்டி இருப்பது, விடுமுறைகள் கூட குடும்பதோடு கழிக்க முடியாத நிலை ஏற்படுவது, எந்த சட்ட திட்டங்களும், விதிமுறைகளும் கடைப்படிக்கப்படாமல் இருப்பது எல்லாம் தெரிவித்து, “இங்கு எல்லோரும் கொத்தடிமைகளாய் நடத்தப்படுகிறார்கள்” என்று நேரடியாகத் தெரிவித்தோம்.

“என்ன செய்ய? வந்தவர்கள் எல்லாம் போய் விடுகிறார்கள். நாங்கள் இருப்பதை வச்சு பேங்க் நடத்துறோம்” என்றார் சேர்மன். “நீங்கள் இப்படி பேங் நடத்துவதால்தான் வந்தவர்கள் உடனே போய் விடுகிறார்கள்” என்றோம் நாம்.

“நபார்டு இன்ஸ்பெக்‌ஷன் எல்லாம் நடக்கிறதா, அவர்கள் இதுகுறித்தெல்லாம் எதுவும் குறிப்பிடுவது இல்லையா?” என்ற கேள்வியோடு அவருடனான சந்திப்பை முடித்துக் கொண்டோம்.

அன்று மாலை நடந்த ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் இளம் தோழர்கள் கொதித்துப் போய் பேசினார்கள். பெண் ஊழியர்கள் தாங்கள் படும் சித்திரவதைகளை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கு தர வேண்டிய அலவன்சு, சலுகைகளை கூட பின்னர் பார்த்துக் கொள்ளலாம், முதலில் நங்கள் மனிதர்களாக, சுய மரியாதையுள்ளவர்களாக நடத்தப்பட வேண்டும் என வெடித்தனர்.

அவர்களது பிரச்சினைகளுக்கு மாநில அமைப்பும், புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்கமும் இணைந்து தீர்வு காணும் என தெரிவித்தோம். BEFI, AIRRBEA வழிகாட்டுதல்களோடு நமது பாதைகலையும், இயக்கங்களையும் தீர்மானிப்போம் என்றோம். அவர்களுக்கு ஆதரவாக AIRRBEA-TN & Puduvai  என்றும் இருக்கும் எனவும், பாண்டியன் மற்றும் பல்லவன் கிராம வங்கியின் இரண்டாயிரம், மூவாயிரம் தோழர்கள் அவர்களோடு இருக்கிறர்கள் என்பதை தெரிவித்தபோது, நம்பிக்கையோடு ஆரவாரித்தார்கள்.

கீழ்கண்டவாறு நமது முயற்சிகளை செய்ய யோசித்திருக்கிறோம்.

1. புதுவை பாரதியார் கிராம வங்கியை நிஜமாகவே ஒரு வங்கியாக மாற்ற வேண்டியதிருக்கிறது. வங்கிக்கு உரிய விதிமுறைகளோடு செயல்பட வேண்டும். Public moneyஐ handle செய்யும் பொறுப்புணர்வும், தேவையான நடைமுறைகளும் வேண்டும். அதுகுறித்து  நிர்வாகத்திற்கு மாநில அமைப்பிலிருந்து முறையாக கடிதம் எழுதுவது எனவும், அதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் RBI, NABARD க்கு புகார் செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

2. லீவு, டெபுடேஷன், டிரான்ஸ்பரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஒரு அரசு நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள் எதுவுமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. நிர்வாகம் இதனைச் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது குறித்து  மாநில அமைப்பிலிருந்து ஊடகங்களுக்குத் தெரிவித்து நவம்பர் மாதத்தில் புதுவை பாரதியார் கிராம வங்கியின் நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது.

3. ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தப்படி இன்னும் வழங்கப்படாத அலவன்சுகளை அரியர்ஸோடு வழங்க நிர்வாகத்தை புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்துவது.

நாம் வேண்டுவதெல்லாம் வங்கியை வங்கியாகவும், ஊழியர்களை மனிதர்களாகவும் நடத்தட்டும்!

வாழ்நாளெல்லாம் அடிமைத்தனத்திற்கு எதிராக பாடிய, போராடிய பாரதியை பெயரில் வைத்துக்கொண்டு செய்யப்படும் அநியாயங்கள் நிறுத்தப்படட்டும்!!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!