5.9.16

கடமலைக்குண்டு கிளை விவகாரத்தில் முதல் குற்றவாளி நிர்வாகமே!



கடமலைக்குண்டு கிளையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு, probation periodல் இருந்த ஒரு ஆபிஸர் டெபுடேஷன் வந்த  ஒரு வாரத்தில் 78 நகைக்கடன்கள் வழங்கி இருக்கிறார். அதில் repledge செய்த நகைக் கடன்களின், நகைப் பாக்கெட்டுகளில் பெரும்பாலும் நகைகள் காணாமல் போயிருக்கின்றன. Safeல் வைத்த நகைப் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறையவில்லை.

 அப்ரைசர் நகையின் purity மற்றும் weight பார்க்கிறார். மேனேஜர் அதன் அடிப்படையில் கடன் வழங்க முடிவு செய்கிறார். டாகுமெண்ட்கள் நிரப்பப்பட்டு, நகைக்கடன் அட்டைகள் எழுதப்பட்டு, மேனேஜர் முன்வைக்கப்படுகின்றன. மேனேஜர் உரிய வவுச்சர்களில் கையெழுத்திட்டு, நகைப் பாக்கெட்டுகளுக்குள் நகைகளை வைத்து, அட்டையோடு pin செய்து அவரது டிராயரில் வைத்துக் கொள்கிறார். இப்படியே நகைக்கடன்கள் ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு, நகைப் பாக்கெட்டுகள் அனைத்தும் மேனேஜரின்  custodyயில் இருக்கின்றன.

பெரும்பாலும் மாலையில் கேஷ் வைக்கும்போது அன்று கொடுத்த நகைக்கடன்களுக்குரிய நகைப் பாக்கெட்டுகளும் safeல், Trayயில் வரிசையாக வைக்கப்படுகின்றன. அந்த நேரத்தில் அன்று கொடுத்த நகைக்கடன்களுக்குரிய நகைப் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா, கடன் எண்கள் சரியாக இருக்கிறதா, trayயில் வரிசையாக வைக்கப்படுகிறதா என்பது கிளர்க்கின் பொறுப்பாகிறது.

இப்படி நடைமுறை இருக்கும் பட்சத்தில், ஒரு கிளர்க், safeல் வைக்கப்படும்  நகைப்பாக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பொறுப்பாகிறார். கடமலைக்குண்டு பிரச்சினையில் safe-ல் இருந்த நகைப்பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறையவில்லை. நகைப் பாக்கெட்டுகளுக்குள் இருந்த நகைகள்தான் குறைந்திருக்கின்றன. ஆனாலும் அந்தக் கிளையில் பணிபுரிந்த இரண்டு கிளர்க்குகளையும் சேர்த்து நடந்த முறைகேட்டிற்கு பொறுப்பாக்கி நிர்வாகம் போலீஸில்  புகார் அளித்தது.

கிளர்க்குகள் இரண்டு பேரும் நடந்த முறைகேட்டிற்கு சம்பந்தமில்லாதவர்கள், கொஞ்சம் கூட அவர்களுக்கு பொறுப்பு கிடையாது என்று சங்கத்தின் சார்பில் பேசி, கடிதம் கொடுத்திருந்தோம். கிளர்க்குகள் இருவர் மீதும் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இருந்தும் நிர்வாகம் அனைவரும் பொறுப்பு என்ற நிலைபாட்டில் பிடிவாதமாக இருந்து விட்டது.

கடமலைக்குண்டு கிளையில் பணிபுரிந்த மேனேஜர், Probationary Officer, இரண்டு கிளர்க்குகள், அப்ரைசர் மற்றும் அந்தக் கிளைக்கு டெபுடேஷன் வந்த probationary officer ஆகியோர் மீது நிர்வாகம் கொடுத்த புகாரின் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அதுகுறித்த செய்திகள் இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

இந்த முறைகேட்டிற்கு கொஞ்சம் கூட  சம்பந்தமில்லாத அப்பாவிகளின் குடும்பமும், சொந்தங்களும், நட்புகளும் இச்செய்தி படித்து எவ்வளவு அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அவமானம் அடைந்து இருப்பார்கள். அதுகுறித்து கொஞ்சம் கூட சிந்திக்காமல் , கவலையில்லாமல் நிர்வாகம் அளித்த புகார் கண்டனத்திற்குரியது.

நடந்த முறைகேட்டிற்கு முக்கிய காரணம் பாண்டியன் கிராம வங்கியின்  பணிகளில் எந்த ஒழுங்கும், தெளிவும் இல்லாமல் இருப்பதுதான்.  தங்கள் வசதிக்கு விதிகளை நிர்வாகமே மீறச் செய்துவிட்டு, தவறு நடந்தவுடன் ஊழியர்களையும், அலுவலர்களையும் பொறுப்பாக்குவது என்பது வாடிக்கையாகி விட்டது. பணிபுரியும் ஊழியர்களிடையே சதா நேரமும் பயமும், சந்தேகமும் மட்டுமே  நிலவி வருகிறது.

அப்படிப் பார்க்கும்போது, கடமலைக்குண்டு கிளையில் நடந்த முறைகேட்டிற்கு பெரும் பொறுப்பு நிர்வாகமே ஏற்க வேண்டும்.

1. Probationary Officer-கள் இரண்டு வருடம் கழித்துத்தான் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதன் பின்னர்தான் அவர்கள் ஒரு கிளைக்கு inchargeஆகவோ, கடன் வழங்கும் அதிகாரம் கொண்டவராகவோ கருதப்படுவர். நிரந்தரமாக்கப்படுவதற்கு முன், local policeல் verification நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு police verification  முடிந்து, நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களை incharge ஆக நிர்வாகத்தால் நியமிக்கப்படுகின்றனர்.  கடன் வழங்கவும் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுகின்றனர். கடமலைகுண்டு கிளையில் பணியில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் ஒரு ஆபிசர் இன்சார்ஜாக டெபுடேஷனில் நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். நடந்த முறைகேட்டிற்கு முதல் காரணம் இது.

2. நகைக்கடன்களில்  repledge அனுமதிக்கப்படக் கூடாது. ஒரு நகைக்கடனுக்கு முழுதாக பணம் கட்டி திருப்பிய பின்னர், அந்த நகையை வைத்து மீண்டும் அந்த வாடிக்கையாளர் புதிய கடன் பெற வேண்டும். இதுதான் விதி. ஆனால் இங்கு முழுதாக பணம் கட்டித் திருப்பப்படாமலேயே, பழைய கடனுக்கு உரிய தொகையையும், புதிய கடனுக்குரிய தொகையையும் அட்ஜஸ்ட் செய்து அந்த நகைக்கடன் புதுப்பிக்கப்படுகிறது. அப்படி வைக்கும்போது அந்த நகைகள் வாடிக்கையாளர் கைகளுக்கும், அப்ரைசர் கைகளுக்கும் செல்லாமலேயே நகைக் கடன் அளிப்பவரால் புதிய பாக்கெட்டிற்குள் வைக்கப்படுகிறது. இந்த வகையான repledgeற்கு தடை விதிக்காமல், நிர்வாகமே அனுமதிக்கிறது. நடந்த முறைகேட்டிற்கு இரண்டாவது காரணம் இது.

3. கிளைகளின்  நடவடிக்கையை கண்காணிக்க மேலாளர் அறையில் காமிரா பொருத்தப்படுவதும் இல்லை. பொருத்தப்பட்ட சி.சி.டிவி கேமிரா பல கிளைகளில் வேலை செய்வதில்லை. இதுகுறித்து முறையாக தலைமையலுவலகத்திற்கு கடிதம் எழுதினாலும் அதற்கு எந்த சாதகமான விளைவுகளும் உடனடியாக நிகழ்வதில்லை. கடமலைகுண்டு கிளையில் சி.சி.டிவி காமிரா ஆறு மாதங்களாக வேலை செய்யவில்லை. இதுகுறித்து தலைமையலுவலகத்திற்கு மேலாளர் பல முறை கடிதம் எழுதியிருக்கிறார். எந்த அசைவும் இல்லை. ஆனால் இந்த முறைகேடு நடந்த அடுத்த நாளே அங்கு சி.சி.டிவி காமிரா வேலை செய்ய வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் நிர்வாகத்தின் லட்சணம். நடந்த முறைகேட்டிற்கு மூன்றாவது காரணம் இது.

4. கம்யூட்டர் புகுத்தப்பட்ட சூழலில் மெஸஞ்சர்கள், கிளர்க்குகள், ஆபிசர்கள், மேலாளர்கள் என ஒவ்வொரு பொறுப்பிலிருப்பவர்களின் duties and responsibilities வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும் என ஐந்தாறு வருடங்களாக நமது சங்கம் கோரிக்கை வைத்து இருக்கிறது. நிர்வாகம் இதுவரை அந்த காரியத்தைச் செய்யவில்லை. நடந்த தவறுக்கு மிக முக்கிய காரணம் இது.

இவைகளின் அடிப்படையில் பார்த்தால், கடமலைக்குண்டு விவகாரத்தில் முதல் குற்றவாளியும் முக்கிய குற்றவாளியும் நிர்வாகமே!

2 comments:

Comrades! Please share your views here!