24.10.16

பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்கம்- நினைவுகளும் நம் கடமைகளும்

அக்டோபர் 22ம் தேதி விழுப்புரத்தில் பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்க கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு, AIRRBEA-TN & Puduvai பொதுச்செயலாளர் தோழர் மாதவராஜ் ஆற்றிய உரை:


பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்கமாகிய இந்தத் தொழிற்சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு இது. வள்ளலார் கிராம வங்கி ஊழியர் சங்கமாக 1991ல் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்கமாக பரிணமித்து 25 ஆண்டுகள் ஆகின்றன என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

1991ல் ஒன்றுபட்ட PGBEAவின் பொதுச்செயலாளராக, சாத்தூர் கிளையில் பணியாற்றிய ஒரு நாளில், வள்ளலார் கிராம வங்கியின் தலைவராக இருந்த தோழர் அலெக்ஸாண்டர் சாத்தூர் வந்து என்னை சந்தித்தது, அதிலிருந்து அவரோடும் பொதுச்செயலாளர் ஸ்ரீதரோடும் தொடர்பு ஏற்பட்டது, தோழர்கள் சோலைமணிக்கம், காமராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடலூர் சென்று அச்சங்கத்தின் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு உதவியது, அந்த சங்கம் AIRRBEAவில் இணைக்கப்பட்டு முறையாக செயல்பட்டது என காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.


பின்னர் சோலைமாணிக்கம், நான், கிருஷ்ணகுமார் எல்லாம் பலமுறை கடலூர் சென்றோம். பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரே கார் லாட்ஜில் எங்களுக்கு ரூம் புக் பண்ணி வைத்திருப்பார்கள். விடிகாலை 3 அல்லது 4 மணியளவில் சென்று தங்குவோம். தோழர்கள் மகேஷ் காலையில் வந்து, காபி வாங்கித் தந்து அந்த நாளை துவக்கி வைப்பார். அவர்களின் செயற்குழுவில் கலந்து கொண்டு ஆலோசனைகள் தந்து, சங்கத்தை முறையாக நடத்த உதவினோம். தோழர்கள் பழனிச்சாமி, சுரேஷ், சிவசங்கர் போன்ற தோழர்கள் எல்லாம் இளைஞர்களாக துடிப்பாக இருந்த காலம் அது.

ஒரு காலக்கட்டத்தில், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் வியந்து பார்க்கும் அளவுக்கு வள்ளலார் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் வளர்ந்திருந்தது. சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் எல்லாம் மினிட்ஸ்களாக பதிவு செய்யப்பட்டு, பல சலுகைகள் பெற்றனர். நாங்கள் பாண்டியனில், 40 வருடங்கள் கழித்து இன்றுதான் ரெகக்னைசேஷனை சாதிக்க முடிந்திருக்கிறது.

தலைமையலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் தர்ணாக்கள் என வீரியத்தோடு இயங்கிய காலம் அது. ஒருமுறை கேஷியர்கள் அனைவரும் வங்கிச் சேர்மனிடம் தங்கள் கைகளில் இருக்கும் சாவியை ஒப்படைப்பது என்னும் போராட்டத்தை அறிவித்தது, அவர்கள் சேர்மன் மிரண்டு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது, பாண்டியன் கிராம வங்கியிலிருந்து தோழர்களும் கடலூர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது எல்லாம் நினைவிலிருக்கிறது.
பின்னர் வள்ளலார் கிராம வங்கியும், அதியமான் கிராம வங்கியும் ஒன்றாக பல்லவனாக இணைக்கப்பட்ட பிறகு, பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்கமாக இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. மெல்ல மெல்ல ஊழியர்களை சேர்த்து வளர்ந்து கொண்டு இருக்கிறது.

முன்பு துடிப்பாக இருந்த பல தோழர்கள் அலெக்ஸாண்டர், ஸ்ரீதர், சிவசங்கர் , மகேஷ் எல்லாம் ஆபிஸர்களாகி விட்டனர். புதிய தோழர்கள் பணிக்குச் சேர்கின்றனர். காலங்கள் மாறி இருக்கின்றன. இளம் தோழர்கள் இந்தக் கூட்டத்தில் மொத்தத்தில் நான்கைந்து தோழர்களே பங்கு பெற்றிருக்கின்றனர். இது மிகவும் கவலைக்குரியது.

விவசாயமோ, எதாவது வியாபாரமோ செய்து பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பங்களில் இருந்து முதல் தலைமுறையாக ஒரு அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தவர்கள் நாங்கள். தொழிற்சங்கம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் நாங்கள். ஆனால் எங்கள் தலைமுறையில், மிகுந்த ஆர்வ்த்தோடும், ஆவேசத்தோடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டோம். இன்றைய தலைமுறை அப்படி இல்லை. அவர்களது பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் டீச்சராகவோ, வங்கி ஊழியராகவோ, என் எதாவது வேலைகளில் இருப்பவர்களாக நிச்சயம் இருப்பார்கள். தொழிற்சங்கம் குறித்து அறிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்தத் தலைமுறையினர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அதிகமாக ஆர்வமின்றி இருக்கின்றனர்.

இந்த முரண்பாட்டை, கால மாற்றத்தை சங்கங்களும், சங்கத் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தேசம் முழுவதும் பல தொழிற்சங்க அரங்குகளில் நடந்து வரும் முக்கிய விவாதப் பொருள் இது.

நாங்கள் பணிக்குச் சேர்ந்த காலங்களில்  சாத்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு போன் செய்ய வேண்டும் என்றால் கூட டிரங்க் கால் புக் செய்ய வேண்டும். பின்னர் எஸ்.டி.டி வந்தது. இப்போது எல்லாம் தலைகீழ். இந்தக் கணத்தில், இங்கிருந்து அமெரிக்க நண்பரோடு பேச முடியும். உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் முகம் தெரியாத ஒருவரின் கருத்துக்கு பேஸ்புக்கில் லைக் போட முடியும். வாட்ஸ் அப்பில் சேட் செய்ய முடியும். காலம், நேரம் எல்லாம் குறுக்கப்பட்டு இருந்தாலும், மனித மனங்கள் இடைவெளி அதிகமாகி இருப்பதாகத் தோன்றுகிஅது. இந்த தொழில்நுட்பங்களின் குழந்தைகள் இன்றைய தலைமுறை.

எல்லாம் அவர்களுக்கு சட் சட்டென்று தெரிய வேண்டும். வாட்ஸ் அப்பில் அவர்களின் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் எங்கிருந்தாவது வர வேண்டும். அது போல் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இதனை தலைமையில் இருக்கிற நாம் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்களிடம் சென்று, தோளில் கை போட்டு பேச வேண்டும். புரிய வைக்க வேண்டும். பக்குவப்படுத்த வேண்டும். 25 வருடங்களுக்கு முன்பு சங்கம் நடத்தியது போல் இப்போது நடத்த முடியாது என நினைக்கிறேன். இளைய முறைக்கும், சென்ற தலைமுறைக்கும் இடையே சுவர்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதைச் சரியாக புரிந்து கொண்டால், சரியான இடத்தில் தட்டினால் சுவர்கள் உடைந்து, இளம் தோழர்கள் நம் அருகில் வந்து நிற்பார்கள். எந்தத் தலைமுறையாய் இருந்தாலும் மனிதர்கள்தானே நாம்? இதைப் புரிந்து கொண்டு சங்கத் தலைமைகள் தங்கள் நடவடிக்கையை புனரமைக்க வேண்டும்.

அதே வேளையில், இளம் தலைமுறையினரும் எல்லாம் சகஜமாகவும், இயல்பாகவும் இருப்பதாகவும் நினைக்க வேண்டாம். மித்ரா கமிட்டி அறிக்கையே கடுமையான ஆட்குறைப்பை முன்வைக்கிறது என AIRRBEA அதை எதிர்க்கிறபோது, இங்கு நாம் அந்த மித்ரா கமிட்டி அறைக்கையையாவது அமல் செய்யுங்கள் எனக் கேட்கும் அளவுக்கு அவல நிலையில் இருக்கிறோம். கேஷ் முடிக்க நேரமாகிறது என வேதனையடைகிறீர்கள். லீவு கிடைக்கவில்லை எனச் சொல்லி வருத்தப்படுகிறீர்கள்.இவைகளை எப்படி தீர்ப்பது. நீங்கள் தனித்தனியாக இந்தப் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது. சங்கமாக அனைவரும் ஒன்றாகி நிற்கும் பட்சத்தில் மட்டுமே தீர்க்க முடியும். இந்த அரங்கம் நிறைய விழுப்புரம் மண்டலத்தில் பணிபுரியும் அத்தனை ஊழியர்கள் திரண்டு இருந்தால், நம் பிரச்சினைகளுக்கு அதிவேகமாக விடை கிடைக்கும். இல்லையென்றால் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

தோழர்கள் சுரேஷும், பழனிச்சாமியும் தங்கள் திறமைகளால், ஆளுமையால்  உங்கள் கோரிக்கைகளை தீர்க்க முடியாது. அவர்கள் பின்னால் திரண்டு நிற்கும் நீங்கள்தான் அவர்கள் சக்தி. அந்த பலத்தில்தான் அவர்கள் நிர்வாகத்தோடு உரக்கஃ பேச முடியும். அதனால்தான் collective bargaining என்று அழைக்கிறோம். இதுதான் தொழிற்சங்கத்தின் அடிப்படை விதி.

நீங்கள் கனெக்டிவிட்டி பிரச்சினை குறித்து பேசினீர்கள். வாடிக்கையளர்கள் உங்கள் மீது பாய்வதாகச் சொன்னீர்கள். இது பாண்டியன் கிராம வங்கியிலும் அடிக்கடி நடக்கிறது. ஐ.டி டிபார்ட்மெண்ட்டில் என்ன நடக்கிறது என நாம் அறிந்து கொள்வதில்லை. 150 கிளைகளுக்கு, 500 userகளுக்கு தாங்கும் சர்வரை 200 கிளைகளுக்கும், 700 userகளுக்கு பயன் படுத்தும்போது இப்படித்தான் ஆகும். தவறுகளை முழுக்க நிர்வாகம் செய்து கொண்டு, அதன் பாரத்தை நம்மீது சுமத்துகிறது. இதுதான் நிர்வாகம்.

இந்த அமைப்பு முதலாளிகளுக்கான அமைப்பு. அரசு, நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் அனைத்தும் முதலாளிகளுக்கானவை. அம்பானியின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டு அது குறித்து எதேனும் வழக்கு நடக்குமானால் உச்ச நீதிமன்றம் ஸ்தம்பிக்கும். ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேலான கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷன் பிரச்சினை என்றால் வருஷக்கணக்கில் வாய்தா போட்டுக்கொண்டு இருக்கும்.
பலன்களை முதலாளிகளுக்கும், கஷடங்களை தொழிலாளர்களுக்கும் கொடுக்கிறது.

இதைப் புரிந்து கொண்டு, தொழிலாளர்களாகிய நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும். இந்தியாவில் வங்கித்துறையின் வரலாறு 1806லிருந்து துவங்குகிறது. 210 ஆண்டு காலத்தில் அடைந்திருக்கும் மாற்றங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் இரவு 10 மணி, 12 மணி என்றுதான் ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டு இருந்தார்கள். வெள்ளிக்கிழமை பேலன்சிங் நடக்குமாம். வீடுகளுக்கு அன்று செல்ல முடியாதாம். பெற்ற தாய் இறந்ததற்குக் கூட லீவு கிடைகாத துயர நிகழ்வுகள் இருந்திருக்கின்றன. தொழிற்சங்க இயக்கங்களின் விளைவாக இன்று 10-5 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. நம் முன்னோர்கள், தங்கள் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான பணிச்சூழலை, நலன்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இதுதான் வாழ்வின் விதி.

ஆனால், வர இருக்கிற காலங்கள் மிக மோசமாக இருக்கின்றன. 1991ற்கு பிறகு நிலைமையை U turn போட்டு மாற்ற முதலாளித்துவம் முயற்சிக்கிறது. மீண்டும் இரவு 10 மணிக்கு வங்கி ஊழியர்கள் வீடுகளுக்குச் செல்ல வைக்கிறது. பணிச்சூழல் மோசமாகிக் கொண்டு இருக்கிறது.

இதைப் புரிந்து கொண்டு, இந்தத் தலைமுறை தொழிற்சங்க இயக்கங்களில் அதிகமாக பங்கு பெற வேண்டும். உண்மைகளை அறிந்து, ஒன்று திரண்டு நிற்பதன் மூலமே நம் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அந்த வல்லமை உங்களுக்கு உண்டு. வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!