21.1.16

PGBWU circular 1/2016 dated 20.1.2016


இன்று நம் சங்கத்தின் சுற்றறிக்கை தயாராகி இருக்கிறது. திங்கட்கிழமை கிளைகளுக்கு கிடைக்கும். அதற்கு முன்பு படிப்பதற்காக:



சுற்றறிக்கை எண்: 1/2016                                                         நாள் : 20.1.2016

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

மிகப் பெரும் துயரமாக அனைவரையும் கலங்கடித்து போயிருக்கிறது தமிழகத்தில் பெருமழை. சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களும், வாழ்க்கையும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அரசும், அதிகார வர்க்கமும் செயலற்று இருந்த போது, மக்களும், தன்னார்வக் குழுக்களும், தொழிற்சங்கங்களும் களத்தில் இறங்கி சேதங்களிலிருந்து மக்களை மீட்டதும், உதவிக்கரம் நீட்டியதும், ஆதரவாய் நின்றதும் மனிதாபிமானத்தின் உன்னதத் தருணங்களாகி இருக்கின்றன. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், இழப்புகள் மலை போல முன் நிற்கின்றன. அந்த மக்கள் மனதில் மேகம் திரண்ட வானத்தைப் பார்த்தாலே அடி வயிறு பதைக்கிற மிரட்சியும் பயமும் வருகின்றன.  மழை வெள்ளத்தால் பாதிக்காத பகுதிகளாக நமது வாழ்விடங்கள் அமையுமாறு, சுற்றுப்புற சூழல் மீது அக்கறை கொண்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது உடனடி எதிர்காலக் கடமையாகும். அதை நாம் வலியுறுத்துவோம்.

சென்னையில் நம் வங்கித் தோழர்களின் மனித நேயமிக்க பங்களிப்பு:

சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்னும் துடிப்பு நம் வங்கித் தோழர்களை பற்றியது. PAD-CM தோழர் கண்ணன் ஆகியோர் நம்முடன் கலந்து பேச, நாம் நம் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தோம். சங்க வித்தியாசமின்றி அனைவரும் இந்த மகத்தான பணியில் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். இரண்டே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமான நிதி திரண்டது. மதுரையில் பழங்காநத்தம் கிளை மேலாளரும், PGBOU முன்னாள் தலைவருமான தோழர் சாமுவேல் திக்குமார் முயற்சியால், வாடிக்கையாளர்களும் நம் வங்கி ஊழியர்களைப் பாராட்டி, பொருட்கள் தந்து உதவினர். இரண்டே நாளில், நம் வங்கியின் இளம் தோழர்கள் மழையோடு மழையாக, லாரிகளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை சென்று, மிதக்கும் தண்ணிரில் பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி இருக்கின்றனர். நம் தோழர்களுக்கு BEFI-TN தோழர்கள் கூட இருந்து வழிகாட்டியிருக்கின்றனர்.  நிதியளித்த அனைத்துத் தோழர்களுக்கும், அவைகளை அத்தியாவசியப் பொருட்களாக்கி கொண்டு சென்று வழங்கிய அற்புதமான நம் இளம் தோழர்களுக்கும் PGBWU பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நெல்லை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:

நமது 13 கோரிக்கைகளை முன்வைத்து அறிவித்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, நெல்லை மண்டல அலுவலகம் முன்பு 2.12.2015 அன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். உக்கிரமான கோஷங்களுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நமது தலைவர்கள் கோஷங்களை விளக்கிப் பேசினர். பொதுமக்கள் பெருமளவில் நின்று அவைகளை கேட்டனர். பத்திரிகை, டிவி நிருபர்கள் வந்து காட்சிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நெல்லை மண்டல மேலாளர் அவர்களிடம் மெமோரெண்டம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் தன்னால் ஆன முயற்சிகள் எடுப்பதாக உறுதியளித்தார். தொடர் மழையால் ஏற்பட்ட துயரங்களை ஓட்டி நாம் மற்ற மண்டல ஆர்ப்பாட்டங்களை ஒத்தி வைத்தோம்.

லேபர் கமிஷனர் முன்பு பேச்சுவார்த்தை:

நமது 13 கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தி வருகிற போராட்டங்களையும், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும் என்பதையும் நாம் லேபர் கமிஷனருக்குத் தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில், ஜனவரி 7ம் தேதி லேபர் கமிஷனர் நம்மையும், நிர்வாகத்தையும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். நம் தரப்பில் தலைவர் தோழர்.விவேகானந்தன், பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ் மற்றும் இணைச்செயலாளர் தோழர் சங்கர சீனிவாசன் கலந்து கொண்டனர். நிர்வாகத்தரப்பில் பொதுமேலாளர் திரு.பால்ச்சாமி ராஜா அவர்களும், PAD-CM திரு.கண்ணன் அவர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.லேபர் கமிஷனர் ஒவ்வொரு கோரிக்கையாக கேட்டறிந்து, சட்ட ரீதியாக கட்டாயம் நிறைவேற்ற வேண்டியவை என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியவை என்றும் இருவகையாக பிரித்துக்கொண்டார்.

சட்ட ரீதியானவை:

1) மெஸஞ்சராக இருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்னயம் செய்யும் போது தவறுதலாக இரண்டு இன்கிரிமெண்ட்கள் அதிகமாக கொடுத்து விட்டதாகவும்,  10 வது இருதரப்பு ஒப்பந்தத்தின் போது அதைச் சரி செய்ததாகவும், அதனால் அவர்களுக்கு அரியர்ஸ் வழங்கவில்லை என்றும் நிர்வாகம் கூறியது. நாம் நம் தரப்பில், அவ்வாறு தவறாக ஊதியம் வழங்கப்பட்டதற்கும், இப்போது இன்கிரிமெண்ட்கள் குறைக்கப்பட்டதற்கும் எந்த வித கடிதமோ, நோட்டீஸோ சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பவில்லை என்று தெரிவித்தோம். மேலும் நிர்வாகம் தவறாக ஊதியம் நிர்ணயம் செய்ததற்கு அந்த பதவி உயர்வு பெற்ற ஊழியர்கள் பொறுப்பாக மாட்டார்கள், எனவே அதற்குரிய அரியர்ஸை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தோம். ஒரு ஒப்பந்தத்தை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அமல்படுத்தாமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றார் லேபர் கமிஷனர்.

2) சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில், சென்னை லேபர் கோர்ட்டில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டும் நிர்வாகம், அதை நிறைவேற்றாமல் இருப்பது Contempt of Court ஆகக் கருதப்படும் என எச்சரித்தார்.

3) ஒரிஜினல் சர்டிபிகேட்களை கொடுக்காமல் இருப்பது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும், ஊழியர்களை bonded labour போல நடத்துவது போலாகும் என்றார். 4) அதுபோல் SC/ST ஊழியர்களுக்கு அவர்களது Community Certificate கொடுக்காமல் இருப்பது சரியல்ல என்றார்.

5) நிர்வாகத்தரப்பில்,  தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்திற்கும் அதிகமாகவே கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. “தற்காலிக மெஸஞ்சர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை” என்றோம் நாம். போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தற்காலிக மெஸஞ்சர்களுக்கு வழங்க வேண்டும் என லேபர் கமிஷனர் உறுதியாகச் சொன்னார்.

6) பெண் ஊழியர்களுக்கு அவர்களது maternity leave periodற்கு இன்கிரிமெண்ட்டை postpone செய்திருந்தால் அது சட்ட விரோதமானது என்பதை சுட்டிக்காட்டினார் லேபர் கமிஷனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டியவை:

1) புதிதாக திறக்கப்படும் கிளைகளில் பெண்களுக்கு என்று தனிக் கழிப்பிடவசதி இருப்பதாகவும், பழைய கிளைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வசதியை ஏற்படுத்துவதாகவும் நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது.

2) பாண்டியன் கிராம வங்கியில் ஊழியர்களுக்கு என்று, தொழிற்சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரே சங்கம் PGBWUதான் என்பதையும், நமது சங்கத்தை அங்கீகாரம் செய்ய எந்த தடையுமில்லை என்பதையும் நாம் தெரிவித்தோம். அதற்குரிய நடவடிக்கைகளை துவக்கி விட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.

3) 2014, 2015 ஆண்டிற்குரிய பிரமோஷன்களை சேர்த்து நடத்த இருப்பதாகவும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட்டு விடும் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது.

4) Transport Allowance ஐ தொடர்ந்து நமது ஊதியத்தில் சேர்க்கவும், அரியர்ஸ் தரும்போது தவறுதலாக பிடிக்கப்பட்ட அந்த அலவன்சை 2012 நவம்பர் மாதத்திலிருந்து 38 மாதங்களுக்குத் திருப்பித் தரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. பிப்ரவரி மாதத்திற்குள் இது நிறைவேற்றப்படும் என உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

5) Petrol Allowance  மற்றும் House maintanence Allowance ஆகிய இரண்டையும் ஸ்பான்ஸர் வங்கியில் அனுமதி பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கும் என்பது தெவிக்கப்பட்டது.

6) Retired Staffகளை வங்கிப்பணிகளுக்கு பயன்படுத்துவது சரியல்ல என்றோம். அப்படிப் பயன்படுத்துவதற்கு Service regulationகளில் provision இருக்கிறதா என லேபர் கமிஷனர் நிர்வாகத்திடம் கேட்டார். நிர்வாகம் இல்லையென்றது. அப்படியானால் உடனடியாக அந்த வழக்கத்தை கைவிடுங்கள் என்று தெளிவுபடுத்தினார்.

7) தற்போது Staff strength குறைவாக இருப்பதால் கிளர்க்குகளை தலைமையலுவலகத்திலும், மண்டல அலுவலகத்திலும் தேவையான அளவு பணியமர்த்தவில்லை என்றும் வருங்காலத்தில் நிச்சயம் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கிய Minutes சுருக்கமாக எழுதப்பட்டு அவைகளில் லேபர் கமிஷனர் முன்பு, நிர்வாகமும், நாமும் கையெழுத்திட்டு இருக்கிறோம். கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து கொண்டு இருக்கும் முயற்சிகளில் ஒரு பெரும் முன்னேற்றம் இது. நிர்வாகம் ஒப்புக்கொண்ட விஷயங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தென்படுகின்றன. ஒரிஜினல் சர்டிபிகேட்கள் தோழர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. அரியஸ் வழங்கப்படாத தோழர்களுக்கு ஊதிய நிர்ணயம் குறித்த தனித்தனி கடிதங்கள் அனுப்பும் ஏற்பாடுகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. சங்க அங்கீகாரப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்குள் நிறைவேற்றி விடுவோம் என நிர்வாகத் தரப்பில் நம்பிக்கையளிக்கப்பட்டு இருக்கிறது.

Transfers:


கிளரிக்கல் தோழர்களின் Transfers குறித்து நம் சங்கம் மட்டுமே நிர்வாகத்துடன் பேசி வருகிறது. நாம் கொடுத்த லிஸ்ட்டின் மீதுதான் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு டிரான்ஸ்பர்கள் போடப்பட்டு இருக்கின்றன. 2014, 2015ம் ஆண்டிற்கான பதவி உயர்வு மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட்டு கிளரிக்கல் தோழர்கள் சிலர் ஆபிஸராகும் வாய்ப்பும் உள்ளது. மேலும் 2015ம் ஆண்டிற்கான புதிய பணி நியமனம் ஏப்ரல் மாதத்தில் இருக்குமெனத் தெரிகிறது. இவைகளையொட்டி டிரான்ஸ்பர்கள் இருக்கும். எனவே, தோழர்கள் தங்கள் Transfer requestகளை நம் சங்கத்தின் பொதுச்செயலாளருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Bonus உச்ச வரம்பு உயர்வு:

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த செப்டம்பர் 2ம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். நாடு தழுவிய போராட்டத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். அந்த கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று போனஸ் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது.

அந்த வேலைநிறுத்தத்தின் விளைவாய் மத்திய அரசு இப்போது போனஸ் உச்ச வரம்பை ரூ.10000/-லிருந்து, ரூ.21000ற்கு உயர்த்தி இருக்கிறது. இந்த உயர்வு ஏப்ரல் 1, 2014ம் ஆண்டிலிருந்து அமலாகும் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. நம் வங்கியிலும் இந்த போனஸ் உச்ச வரம்பு உயர்வுக்கான சர்க்குலர் வெளியிட பேசியிருக்கிறோம். விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

எனவே Basic Pay + DA + Special Allowance  சேர்த்து எந்தெந்த மாதங்களுக்கெல்லாம் ரூ.21000/-ற்கு குறைவாக மாத ஊதியம் யாருக்கெல்லாம் வந்திருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் 2014- 2015 நிதியாண்டுக்கான போனஸ் வழங்கப்பட வேண்டும். இதன்படி 2013, 2014ம் ஆண்டில் பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு போனஸ் கிடைக்கும். மேலும் தற்காலிக மெஸஞ்சர்த் தோழர்களுக்கும் கிடைக்கும்.

அகில இந்திய செய்திகளும், போராட்டங்களும்: 

பென்ஷன் குறித்த வழக்கு உச்ச நீதிமன்ரத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கின் அடுத்த ஹியரிங் வராமல் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் ஹியரிங்கிற்கான தேதி உச்சநீதிமன்றத்தில் லிஸ்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் வாழ்வாதாரமான பிரச்சினையில் அரசும், அதிகார அமைப்பும் காட்டும் மெத்தனப் போக்கையே இந்த தாமதம் காட்டுகிறது.

எனவே கிராம வங்கிகளில் உள்ள அனைத்து மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு (United Forum of RRB Unions - UFRRBU) கிராம வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பென்ஷன், compassionate appointment, Other Allowances, Regularisation of Tem Employees உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கீழ்கண்ட போராட்டங்களை UFRRBU அறிவித்துள்ளது.

1)  03-02-2016  -  Memorandum to Chairman, RRBs
2)  12-02-2016  -  Demonstration/deputation to Chairman, RRBs
3)  15-02-2016 -   Dharna/Rally/Deputation at RO/NABARD at the state capital
4)   01-03-2016 -  Mass Dharna at Jantar Mantar at New Delhi
6.  10th & 11th March, 2016 -  Two days all India RRB Strike

இந்தப் போராட்டங்களை நமது வங்கியில் வெற்றிகரமாக நடத்தி, கோரிக்கைகளை வென்றெடுக்க நமது வங்கியில் PGBOUவுடனும், PGBOAவுடனும் கலந்தாலோசித்து திட்டமிடுவோம், செயல்படுத்துவோம்.

BEFI - TN  மாநாடு:

BEFI- TN மாநிலக்குழு சென்னையில் ஜனவரி 9ம் தேதி நடத்தப்பட்டது. நமது சங்கத்தின் தலைவர் தோழர்.விவேகானந்தன், பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ், இணைச்செயலாளர் தோழர் சங்கரசீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட அனைத்து பாண்டியன் கிராம வங்கித் தோழர்களையும் BEFI-TN  மாநிலக்குழு பாராட்டியது.

வரும் மார்ச் 25, 26, 27 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் நடக்க இருக்கும் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டது. மார்ச் 25ம் தேதி பெண்களுக்கான சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நல்ல செய்திகளோடு விரைவில் சந்திப்போம்!

தோழமையுடன்        



(J.மாதவராஜ்)

பொதுச்செயலாளர்






1 comment:

Comrades! Please share your views here!