17.8.12

நம் மீது தப்பு இருக்கிறதா? - விவாதம்



“இதை ஒரு சுயவிமர்சனமாக பார்த்தால் நம்மீதும் தப்பு இருக்கிறது தோழா. எப்போது நிர்வாகம் வேலைநேரத்தை நீடித்து சர்க்குலர் போட்டதோ, அப்போதே குறைந்த பட்ச staff போடுவதற்கு நாம் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். நாம் அதை செய்யவில்லை. வேலையாட்கள் குறையக் குறைய, பிஸினஸ் பலமடங்கு கூடிக்கொண்டு போகிறது.

ஏன் சங்கங்கள் விதிப்படி வேலை என்கிற ஒரு நிலைபாட்டை எடுக்க முயற்சிக்கவில்லை. அப்படிப்பட்ட முடிவு பல பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும்.

இவ்வாறாக கமுதி பிரச்சினையை அம்பலப்படுத்தி எழுதியதற்கு ஒரு தோழர்  தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் ஒரு முக்கிய கேள்வியையும், பிரச்சினையையும் எழுப்பியிருக்கிறார். அது குறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் எனப்படுகிறது.

வேலைநேரத்தைக் கூட்டுவது, அதற்குத் தகுந்த ஆட்களை போடாமல் இருப்பது என்று இந்த அதிகாரவர்க்கம் ஒருபக்கம் நெருக்கடி கொடுக்கிறது. இன்னொரு பக்கம், பிஸினஸ் மற்றும் லாபம் போன்ற இலக்குகளை முன்வைத்து போட்டியான சூழலில் வங்கியின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த வேண்டிய நெருக்கடியையும் கொடுக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழலில் தொழிலாளி வர்க்கம் இன்று நிறுத்தப்பட்டு இருக்கிறது.

அதாவது, தான் பணிபுரிகிற வங்கியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும், தங்கள் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பையும் ஒருசேர செய்ய வேண்டிய நிலைமைக்கு ஊழியர்களும், அலுவலர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தஆட்டத்தில் ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற முடியும் என்பதை முக்கிய விதியாக இந்த வியாபார உலகம் முன்வைத்திருக்கிறது. உரிமைகளைப் பேசி, அதற்காகப் போராடினால் வங்கியின் வளர்ச்சி பாதிக்கும். வங்கியின் வளர்ச்சியை மட்டும் பார்த்தோமானால் நாம் நேரம் காலமில்லாமல் வேலை செய்ய வேண்டி வரும்.

இப்போது கூட, மத்திய அரசு ‘லாபம் உள்ள கிராம வங்கிகளுக்கு மட்டுமே பென்ஷன் வழங்க முடியும்’ என்று சொல்கிறது.‘per staff profit 5 lacs’ இருந்தால்தான் அந்த கிராம வங்கி புதிய பணி நியமனங்களைச் செய்ய முடியும் என முடிவு செய்திருக்கிறது. இதெல்லாம், வங்கியின் வளர்ச்சியை, லாபத்தை நமது நலன்களுக்கு ஒரு முன்நிபந்தனையாக்கும் சதியாகும். உலகமயமாக்கலின், நவீன பொருளாதார சீர்திருத்தங்களின் அடிநாதம் இதுதான்.

இதில் விநோதமும் விசித்திரமும் என்னவென்றால், வங்கியின் லாபத்திற்கும், வளர்ச்சிக்கும் தொழிலாளிவர்க்கத்தை பொறுப்பாக்குகிற அரசு, அந்த வங்கியின் நிர்வாக முடிவுகளை எடுப்பதில், தீர்மானிப்பதில் அல்லது குறைந்த பட்சம் ஆலோசிப்பதில் கூட தொழிலாளிகளுக்கு ஒரு சிறு இடம் கூட அளிப்பதில்லை. சிதம்பர ரகசியம் போல அதனை மட்டும் ஏ.சி அறைக்குள்ளே,  கனவான்களே வைத்திருக்கிறார்கள்.

இந்த சவாலை எப்படி தொழிலாளிவர்க்கம் எதிர்கொள்கிறது என்பதுதான் இன்றைய கேள்வி. அதனைத்தான் மேலே கருத்து தெரிவித்திருக்கும் தோழரின்  வார்த்தைகளும் எதிரொலிக்கின்றன. நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் தங்களுக்கு ஒரு இடம் கேட்பதும், பணிநேரத்தில் (10 - 5) முழுமையாக வங்கியின் வளர்ச்சியை உறுதி செய்யும் காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், அதே வேளையில் நமது நலன்களையும், பிரச்சினைகளையும் முன்னிறுத்தி குரல் எழுப்புவதும், போராடுவதும் நமது செயல்திட்டங்களாகின்றன.

இதை அமல்படுத்துவதில் ஒரு முற்போக்கான, தொலைநோக்குப் பார்வையுள்ள சங்கத்திற்கு பெரும் தடையாய் இருப்பது, அந்த நிறுவனத்தில் அல்லது வங்கியில் இருக்கும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள். ஒரு சரியான பார்வையோடு தொழிலாளர்களைத் திரட்டும் போது, அந்த பிற்போக்கு தொழிற்சங்கங்கள் அரசின் கோட்பாடுகளோடும், நிர்வாகங்களோடும் சமரசம் செய்துகொள்ளும். எதிர்த்து சர்க்குலர் போடும். போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும். ‘விதிப்படி வேலையை’ முறியடிக்கும். நிர்வாகம் அவர்களுக்கு சில காரியங்களை செய்து கொடுத்து ’விசுவாசிகளாக’ பேணும்.

அந்த சங்கங்கள் உரிமைகளைப் பேசாது. டிரான்ஸ்பர்களை மட்டுமே பேசும். அவர்கள் பக்கமும் கணிசமான தொழிலாளர்கள் இருப்பார்கள்.

இலட்சியங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் சிதைந்து போவது இப்படித்தான். ஊழியர்கள் எப்போது இவைகளை உணர்ந்து ஓரணியில் திரளுகிறார்களோ, அப்போது நிலைமைகளில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.

இந்த நம்பிக்கையோடுதான், BEFI, AIRRBEA, PGBEA, PGBOU போன்ற சங்கங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. 

2 comments:

  1. This is a common fact all where. Many are accused for this.But the exact responsibility is only on the working class. They for domestic reasons fall prey to the managerial elements. Even those managers themselves are the part of working community,but it is always out of their memory. The change is to occur at the heart of them. Unoin has a role of regularising them with standard working practice. Everybody should initiate for the change. Today to someone is certain to us also.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர். இதில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் கடமை இருக்கிறது. நிலைமைகளை சரியாக உணர்த்தவும், புரியவைக்கவும் அவர்கள் தொடர்ந்து தோழர்களோடு உரையாட வேண்டி இருக்கிறது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட, தொழிலாளர்களை பாதிக்கிற ஒவ்வொரு விஷயத்திலும் தொழிற்சங்கங்கள் தலையிட வேண்டியது சர்வ அவசியமான நடவடிக்கை. அதுதான், ‘part and parcel of the management' மனோபாவத்திலிருந்து ‘part and parcel of working class' மனோபாவத்திற்கு ஊழியர்களை சரிசெய்யும்.

      Delete

Comrades! Please share your views here!