உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் வெளிப்படைத்தன்மை இல்லாத அரசையும், அமைப்பையும் கடுமையாகச் சாடியும், எதிர்த்தும் வந்திருக்கின்றன. வருகின்றன. எங்கே வெளிப்படைத் தன்மை (transparency) இல்லையோ அங்கே பாரபட்சங்களும், அநீதிகளும், தவறுகளும் தலைதூக்குகின்றன என்பது ஒரு எளிமையான சமூக விஞ்ஞானம். வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அறிய முடியும். இங்கே பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்திடமும் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் விஷயங்களில் ஒன்றாக அதே ‘வெளிப்படைத்தன்மை’ இருக்கிறது. வெளிப்படைத் தன்மையற்ற அணுகுமுறையை நமது நிர்வாகம் தொடர்ந்து போற்றி பாதுகாத்து வருகிறது.
வெளிப்படைத் தன்மையை ஏன் ஜனநாயகரீதியானது என நாம் சொல்கிறோம் என்றால், அதிகாரத்திலிருப்பவர்களின் ஒரு செயல் அல்லது சிந்தனை, அந்த அமைப்பின் கடைகோடியில் இருப்பவர்களுக்கும் தெரிய வரும். அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அனைவரும் தங்களை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அந்த அமைப்பின் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். அமைப்பை ச் சார்ந்த அனைவரும் கூட்டாக பொறுப்பேற்று ஒரு காரியத்தை நிறைவேற்ற வைக்கும். உண்மையானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் உரிய மரியாதையும் இடமும் கிடைக்கும்.
இதற்கு நேர் எதிரானது சர்வாதிகாரச் சிந்தனை. அது வெளிப்படைத்தன்மையற்றது. ஒரு முடிவு அல்லது காரியம் மேலே அதிகாரத்தால் இருப்பவர்களால் அறிவிக்கப்படும். ஏன் என்ற கேள்வி இல்லாமல், அனைவரும் அதற்கு உடன்பட வேண்டும். உடன்படாதவர்களை கலகக்காரர்கள் என்றும், துரோகிகள் என்றும் அந்த அமைப்பு சித்தரிக்கும். நேர்மையானவர்களை விட விசுவாசம் மிக்கவர்களே அங்கு போற்றப்படுவார்கள். திறமையானவர்களை விட அடிமைத்தனம் கொண்டோரே கொண்டாடப்படுவார்கள்.
இந்த அளவுகோலோடு, நமது வங்கியின் நிலைமைகளை ‘ஆடிட்’ செய்து பார்த்தால் , பல விஷயங்கள் சட்டென புரியும்.
நமது வங்கியில் நடைபெறும் பல காரியங்கள், எதோ எதிரிகள் நாட்டில் திடிரென புகுந்து தாக்குதல் நடத்துவதைப் போலவே அரங்கேற்றப்படும். யாருக்கும் தெரியாமல் திட்டமிட்டு, அதை பரம ரகசியமாக வைத்திருந்து, அதிவேகமாக அமல்படுத்த அறிவிப்புகள் வெளியாகும். ஏன், என்ன என யாரும் யோசித்துவிடக் கூடாது.
தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களானாலும் சரி, புதிதாக நம் வங்கியில் ஒருவர் பணிக்குச் சேர்கிறார் என்றாலும் சரி, ரகசியம் ரகசியம்தான். அவைகள் ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இங்கே எழுத வேண்டியும் வரலாம். இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.
இப்படி டிரான்ஸ்பர், அப்பாயிண்ட் மெண்ட், தொழில்நுட்ப விஷயங்கள், பிரமோஷன் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையற்றதாய் இந்த நிர்வாகம் இருந்தாலும், சில அடிப்படை விஷயங்களையாவது ஒப்புக்காக பின்பற்றி வந்தது. இந்த Scale III to IV பிரமோஷனில் அதையும் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது.
25.1.2014 அன்று நடக்க இருக்கிற Scale III to IV பிரமோஷனுக்கு இன்று வரை சர்க்குலர் வரவில்லை. கேட்டால் intranetல் போட்டு இருப்பதாக பதில் வருகிறது. ஏன் இந்த PAD சர்க்குலர் மட்டும் intranetல் போடப்படுகிறது என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.
Intranetல், வெளியிடப்பட்டு இருக்கிற PAD சர்க்குலரில், 19 இடங்களுக்குரிய பதவி உயர்வு வரும் சனிக்கிழமை, 25.1.2014 நடைபெறும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகி இருக்கிறது. எத்தனை பேர் eligble, யார் யார் அவர்கள் என்பதெல்லாம் இல்லை. இதில் என்ன ரகசியம் என்ற கேள்வி அடுத்து எழுகிறது.
ஒவ்வொரு வருடமும் அனைத்து கேடர்களுக்கான அறிவிப்புகள் சேர்த்து அறிவிக்கப்படும். இந்த தடவை Scale III to IV பதவி உயர்வு மட்டும் ஏன் தனியாக அறிவிக்கப்படுகிறது எனவும் யோசிக்க வேண்டி இருக்கிறது.
பதவி உயர்வுகளை நாம் வரவேற்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யும் நிர்வாகத்தை நாம் நிச்சயம் பாராட்டவேச் செய்கிறோம். Scale III to IV மட்டுமல்ல, Scale IV to V பிரமோஷனும் கொடுக்க வேண்டும், நமது வங்கியில் பணிபுரிபவர்களே நமது ஜெனரல் மேனேஜர்களாகவும், சேர்மன்களாகவும் உயர வேண்டும் என்பதே நமது நீண்ட கால கோரிக்கை. அவை நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
ஆனால், இந்த Scale III to IV பிரமோஷனில் இல்லாத வெளிப்படைத்தன்மை பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. அதை ஆராய்ந்து பார்த்தால் வெளிவரும் உண்மை மோசமானதாய் இருக்கிறது.
AIVD முதுநிலை மேலாளராய் இருக்கும் மிஸ்டர் சங்கரநாராயணன் இந்த மார்ச் மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறார். இந்த வங்கியின் ஊழியர்கள் அலுவலர்களின் பொது எதிரியான அவருக்கு பதவி உயர்வு கொடுப்பதற்காகவே இந்த Scale III to IV பிரமோஷன் ரகசியமாகவும், அவசரம் அவசரமாகவும் நடத்தப்படுகிறது. இவர் எந்த performanceம் செய்யவில்லை, இவருக்கு scale III கொடுத்ததே தவறு, scale IIக்கு இறக்க வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு சொன்ன இதே நிர்வாகம் இப்போது scale IV பிரமோஷன் கொடுக்க இருக்கிறது. இந்த வருடங்களில் அப்படியென்ன பிரமாதமாய் perform செய்துவிட்டார்? இன்னும் இரண்டு மாதங்களே பணி ஓய்வு பெற இருக்கிறவருக்கு ஏன் இந்த பதவி உயர்வு? பலரின் சாபங்களையும் வயிற்றெரிச்சலையும் பெற்று பணி ஓய்வு பெற இருப்பவருக்கு இந்த நிர்வாகம் செய்கிற மரியாதை இது. வக்கிரமும், வன்மமும் கொண்ட, மனிதாபிமானமற்ற அந்த நபரால் நமது வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் பலரின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு இருக்கிறது. அவரது கொழுப்பேறிய ஆங்கில வார்த்தைகளால் பக்கம் பக்கமாக எழுதிய குற்றச்சாட்டுகள் அழுகிப்போன இதயத்திலிருந்து உருவானவை. அதற்குத்தான் இப்படி, இந்த பிரமோஷன்!
இதனையொட்டி உண்மையிலேயே சில அற்புதமான தோழர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது என்பதுதான் இதில் ஒரு சந்தோஷமான விஷயம்!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!