சின்னச் சின்ன ஊர்களில் பேண்ட்டும் சட்டையும் போட்ட மனிதர்களாய் நுழைந்த பலர் 'பதினாறு வயதினிலே' டாக்டர்களாய் வலம் வந்த கதைகளில் ஆரம்பித்தது கச்சேரி. எங்கேயோ உள்ள முக்கு ரோட்டில் இறங்கி, அதன் வழியே செல்லும் ஒரே ஒரு பஸ்ஸை விட்டு விட்டு நான்கைந்து மைல் தொலைவில் உள்ள கிராமத்துக்கு கேஷ் சாவியோடு நடந்தே செல்லும் பயணங்கள் வெளிவந்தன. 'என்னய்யா பேங்கு இது.. ஒரு கக்கூஸ் கூட இல்ல...' என்று சொல்லிக் கொண்டே கடைநிலை ஊழியர் ஒருவர் தனது கிளையின் அனுபவத்தைச் சொன்னார். அவர்கள் கிளையில் ஒரு மேடம் பணிபுரிகிறார்களாம். பனிரெண்டு மணிக்கு மேலே இவரை அழைத்து 'பக்கத்து வீட்டுல அந்த அண்ணாச்சி வெளியே போய்ட்டாங்களான்னு கொஞ்சம் பாத்துட்டு வந்து சொல்லுங்களேன்' என்று தினமும் சொல்வார்களாம். கேட்டவுடன் அந்த இடம் அமைதி கொண்டது. இன்னொருவர் 'என்னத்த செய்ய' என்று சொல்லிக் கொண்டே அவரது கதையைச் சொன்னார். காலைக்கடன் கழிக்க அவரும் கிளையில் வேலை பார்க்கும் இன்னொருவரும் ஊருக்கு வெளியே செல்வார்களாம். மறைவிடம் பார்த்து உட்கார்ந்த சில நிமிடங்களில் பீடியோடு வந்து நேர் எதிரே உட்கார்ந்தவாறே அந்த ஊர்க்காரர் 'அப்புறம் சார், இன்னிக்கு நகக்கடன் உண்டுங்களா" என்று கேட்டாராம். முதலில் கொஞ்சநாள் அரண்டு இவரது கடனையே கழிக்க முடியாமல் கஷ்டப்பட்டவருக்கு பிறகு அதுவே சகஜமாகி விட்டதாம். எல்லோரும் பெரிதாக கத்திச் சிரித்தார்கள்.
இப்படியே ஆளாளுக்கு சொல்லி சோகங்களும், சிரிப்புகளுமாய் அந்த இரவின் நிறத்தை வேறொரு வண்ணத்தில் வரைந்து கொண்டு இருந்தார்கள். எப்போது படுத்தார்கள் என்று தெரியாது. விழித்த போது அங்கங்கே ஏழு மணிக்கான இளம் வெளிச்சத்தில் படுத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் எழுந்து மீண்டும் அதே அரட்டைகளோடு ரமண வித்யாலாயா பள்ளிக்கு புறப்படத் தயாரானார்கள்.
பள்ளிக்கூட வாசலில் கிருஷ்ணகுமாரும், அவருடன் சிலரும் நின்று 'வாங்க வாங்க' என்று மிக அன்போடு கும்பிட்டும், கை கொடுத்தும் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்றபோது தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். 'ஐ யம் கிருஷ்ணகுமார்' என்றார். பக்கத்தில் இருந்தவர் 'நாந்தான் மணி, பழையபேட்டை" என்றார். அப்போதுதான் அவரை முதல் தடவையாக பார்க்கிறேன். இன்னொருவர் தன்னை சோலைமாணிக்கம் என்று சொல்லிக் கொள்ளவும் மற்றவர்கள் கணேசன் என்றும், விஸ்வநாதன் என்றும், சுப்புராஜ் என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். எல்லோரையும் இந்த ஒரு மாதமாகத்தான் கேள்விப்பட்டிருந்தேன். தான் பொதுச் செயலாளர் பதவிக்குபோட்டியிடுவதாகவும், ஒரு வாய்ப்பு தரவேண்டும் எனவும் கிருஷ்ணகுமார் மிகவும் மரியாதையோடு கேட்டார். "இல்லை, நா சிதம்பரத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன்" என அவரது முகத்துக்கு நேரே சொன்னேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு "என்ன அப்படி" என்றார். "அவர் கூட ஒரே டிபார்ட்மெண்டில் வேலை பாக்குறேன். நல்ல பழக்கம்" என்றேன். அதற்குப் பிறகும் அவர் விடவில்லை. "பரவாயில்ல, எங்க பேனல்ல நிக்குற மத்தவங்களுக்கு ஓட்டுப் போடலாம்ல" என்றார். சம்மதித்தேன். சந்தோஷமாக கைகுலுக்கிக்கொண்டார்.
மகரபூஷணமும், நெல்லையப்பனும் வந்திருந்தார்கள். நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு அவர்களை சந்திக்கிறேன். 'எப்படி இருக்கீங்க...' என்று மணிசங்கர் லாட்ஜில் உள்ள எல்லோரையும் விசாரித்துக் கொண்டார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து வந்து மக்கள் குவிந்து கொண்டிருந்தார்கள். சோமுவையும் அன்றைக்கு திரும்ப சந்தித்தேன். அவரும் ராதாகிருஷ்ணனும் ஒரு ஓரமாய் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களும் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக பேசினார்கள். சேர்மன் திருமலையின் டிரைவர் அம்பியும் வந்திருந்தார். அது ஒரு ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. பொதுக்குழுவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வந்து அவ்வப்போது தகவல் சொல்லவே அவரை திருமலை அனுப்பி வைத்திருப்பதாக பேசிக்கொண்டார்கள்.
சிதம்பரம், சூரியப்பிரகாசம், மாரியப்பன், சிகப்புத்துண்டு போட்ட பரிமளச்செல்வம், ரெங்கநாதன் எல்லோரும் இன்னொரு பக்கம் ஒரு கோஷ்டியாய் நின்றிருந்தார்கள். 'கொக்கிகள் எல்லாம் ஒண்ணு சேந்துட்டாங்க' என்றார் ரெங்கநாதன். "கொக்கிகளா அப்படின்னா..?" என்றேன். சிதம்பரம் சிரித்துக் கொண்டே "கொக்கிகள்னா தெரியாதா..கம்யூனிஸ்ட்டுகள்" என்றார். யாரெல்லாம் என்று கேட்டபோது அவர்கள் சோமுவையும், ராதாகிருஷ்ணனையும், கிருஷ்ணகுமாரையும் சொன்னார்கள். 'இந்த சோமு நம்ம கமிட்டியில இவ்வளவு நாள் இருந்துட்டு இன்னிக்கு அவங் கட்சிக்காரன் ஒருத்தன் நிக்கிறான் என்றவுடன் அவன சப்போர்ட் பண்றான் பாரு" என்றார்கள். கோவில்பட்டிக்கு நிஜநாடகங்கள் பார்க்க அழைத்துச் சென்ற ராதாகிருஷ்ணனும், மகரபூஷணம் இருக்கும்போது மணிசங்கர் லாட்ஜுக்கு ஒரு இரவில் வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த சோமுவும், கிருஷ்ணகுமாரும் இப்போது மிகுந்த அர்த்தமுள்ளவர்கள் போலத் தோன்றினார்கள். கூட்டத்தில் எல்லோரிடமும் கலந்து நின்று அவர்கள் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
பொதுக்குழு ஆரம்பிக்க பதினோரு மணிக்கும் மேலாகியது. முன்னூறு பேருக்கும் மேலே வந்திருந்தார்கள். கனத்த அமைதி நிலவியது. தீர்மானங்கள், செயலாளர் அறிக்கை, வரவு செலவு கணக்கு எல்லாம் எந்த விவாதங்களுமின்றி வேக வேகமாக நிறைவேற்றப்பட்டன. ஆளுக்கு முதலில் கிருஷ்ணகுமார் கைதட்டி அங்கீகரித்துக் கொண்டிருந்தார். தேர்தலை நோக்கி காரியங்கள் வேகமாக நகற்றப்பட்டன. இரண்டு அணிகளாக அறிவிக்கப்பட்டன. பழையபேட்டை ரோஹிணியின் கணவர் பரமசிவம் தலைவராகவும், கிருஷ்ணகுமார் பொதுச்செயலாளராகவும், சோமுவும், கணேசனும் உதவிப் பொதுச்செயலாளர்களாகவும், சுப்புராஜ் பொருளாளராகவும், சோலைமாணிக்கம், விஸ்வநாதனையும் உள்ளடக்கி பதினைந்து பேர் கொண்ட கமிட்டி ஒரு பேனலாக முன்மொழியப்பட்டது. பரிமளச்செல்வம் தலைவராகவும், சிதம்பரம் பொதுச்செயலாளராகவும், மாரியப்பன், ரெங்கநாதன், சூரியப்பிரகாசத்தை உள்ளடக்கிய பதினைந்து பேர் கமிட்டி இன்னொரு பேனலாக அறிவிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று ஒட்டு போட்டார்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஒட்டுப் போட்டவர்கள் டீ குடிக்க, மரத்தடியில் உட்கார்ந்து கூட்டமாய் பேசிச் சிரிக்க என்று பொழுதை கழித்தார்கள். அவ்வப்போது யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் சிலர் வந்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கும் மேலாகியது. நேற்று இரவே வந்து மணிசங்கர் லாட்ஜில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட இன்னும் கலைந்து போகாமல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள காத்திருந்தார்கள். எல்லாம் ஒரு பரபரப்பாகவும், முழுமையான ஒரு போட்டியாகவும் தென்பட்டது.
கிருஷ்ணகுமார் அணி அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரம் அணியில் சூரியப்பிரகாசம் மட்டுமே அதிக வாக்குகளோடு குறைந்த வித்தியாசத்தில் தோற்றிருந்தார். பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் கிருஷ்ணகுமார் எல்லோர் முன்பும் வந்து நின்றார். வெற்றி பெற்ற வேகம் எதுவும் இல்லாமல் மிக நிதானமாக பேசினார். இது வெற்றி, தோல்வி என மட்டும் பார்க்காமல் சங்கத்தை நடத்துகிற பொறுப்பு என்று பார்க்க வேண்டும் என்றார். நிறைய கோரிக்கைகள் ஊழியர்களின் புழுக்கத்தில் புதைந்து கிடப்பதாகவும் அவற்றிற்கு உருவம் கொடுத்து வென்றெடுப்பதே சங்கத்தின் முக்கிய பணியாக இருக்கும் என்றார். எல்லோருக்கும் தன்மானம், சுயமரியாதையை இந்த சங்கம் உறுதி செய்யும் என்ற போது கரவொலி எழும்பி அடங்க நேரமானது. அனுபவம் வாய்ந்த தோழர்கள் சூரியப் பிரகாசம், மாரியப்பன், சிதம்பரம் ஆகியோர் சங்கத்தின் புதிய தலைமைக்கு வழிகாட்ட வேண்டும், ஆலோசனைகள் தரவேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என முடித்தார். புதிய உற்சாகத்தோடு எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டார்கள். சிதம்பரத்தை பார்க்க கஷ்டமாயிருந்தது. அணைந்து போன தெரு விளக்குக்கு அடியில் அவரும், மாரியப்பனும் அமைதியாக நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மட்டும் எட்டு சர்க்குலர்களுக்கு மேல் சங்கத்திலிருந்து வெளி வந்தன. இந்திரா காந்தியின் படுகொலை கண்டிக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலையும் வன்மையாக கண்டித்திருந்தது. கோரிக்கைகள் குறித்த ஆலோசனைகள் தெரிவிக்குமாறு கேட்டு, அனுப்பியவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சங்கத்திலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதும், பொதுச்செயலாளரை சாத்தூருக்கு மாறுதல் செய்ய நிர்வாகம் ஒப்புக் கொண்டதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சங்கத்தை நடத்திய முந்தைய செயற்குழு எந்த கணக்குகளையும், பேரேடுகளையும், ஃபைல்கலையும் ஒப்படைக்கவில்லை என்பது அம்பலமாக்கப்பட்டது. ‘சம வேலைக்கு சம ஊதியம்' என்று சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய சங்கம் தொடுத்த வழக்கிற்கு நிதியாக அலுவலர்களுக்கு ரூ.15/-, எழுத்தர்களுக்கு ரூ.10/-, கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.5/- நிர்ணயித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
ஏராளமான விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது. ஆந்திராவில் உள்ள நாகார்ஜுனா கிராம வங்கியில் உள்ள கடைநிலை ஊழியர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியது, அதையே ரிட் பெட்டிஷனாக ஏற்றுக் கொண்டு விசாரணை நடந்து வருவது போன்ற முக்கிய செய்திகளை எல்லோரும் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு கிளையின் வியாபார அளவை பொறுத்து கடைநிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என மத்திய அரசும், நபார்டும் வெளியிட்ட சுற்றறிக்கைகளை கண்டித்து அகில இந்திய சங்க பொதுச் செயலாளர் திலீப் குமார் முகர்ஜி எழுதிய கடிதம் அப்படியே வெளியிடப்பட்டு அரசின் நயவஞ்சகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எட்டு வருட காலம் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்களின் பணிநிரந்தரத்துக்கும் கிளையின் வர்த்தகத்துக்கும் என்ன சம்பந்தம் என்னும் கேள்வி அனைவருக்குள்ளும் எழ ஆரம்பித்தது. சங்க உறுப்பினர்கள் தங்கள் சம்பந்தப்பட்டவைகளையும், தங்களைச் சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை சர்க்குலர்களில் இருந்தன. கிருஷ்ணகுமாரின் தலைமையில் சங்கம் புதிய அர்த்தங்களோடும் , புதிய பரிமாணங்களோடும் எழுந்தது. தொழிற்சங்கம் என்பது சாதாரண விஷயம் என்னும் நினைப்பும் யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்னும் கருத்தும் எனக்குள் வேகமாக தகர்ந்து கொண்டிருந்தன.
இதுதான் எல்லோருக்குமான பொதுவான உணர்வாக இருந்திருக்க வேண்டும். சங்க சுற்றறிக்கைகளை தலைமையலுவலகத்தில் சுவராஸ்யத்தோடு படிக்க ஆரம்பித்தார்கள். மிகுந்த வரவேற்பு இருந்தும் தைரியத்தோடு வெளிப்படையாக சங்க நடவடிக்கைகளில் பங்கு பெற எல்லோருக்குள்ளும் தயக்கங்கள் இருந்தன. நிர்வாகத்துக்கு எதிராக தங்களைக் காண்பித்துக்கொள்ள பயம் இருந்தது.
இந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு வருடத்திற்கு மேலாக வாசம் புரிந்து வந்த மணிசங்கர் லாட்ஜை இன்னொருவர் வாங்கியதும், அவர் அதனை குடியிருப்புகளாய் மாற்றப் போவதாகக் கூறி வேறு இடத்திற்கு எங்களை வெளியேறச் சொன்னதும் நிகழ்ந்தது. அவசரம் அவசரமாக பைபாஸில், ரோட்டோரத்தில் ஒன்றின் மீது ஒன்றாக தீப்பெட்டிகளை அடுக்கி வைக்கப்பட்டது போன்ற ஒரு இடத்தில் குடியேறினோம். ஒவ்வொரு தளத்திலும் ஒரே அறைதான். இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் தங்கிக் கொண்டேன். அது மொட்டைமாடியோடு இணைந்தது. இதே நேரத்தில்தான் சென்னையிலிருந்த அண்ணனும் பாண்டிச்சேரியில் என்.டி.சியில் வேலைக்குச் சேர்ந்து இடம்பெயர்ந்து விட்டிருந்தான். இனி அம்முவைப் பார்ப்பது என்பதெல்லாம் கிட்டத்தட்ட முடிந்துபோன விஷயமாகவேத் தோன்றியது. நிலாவையும், நட்சத்திரங்களையும் அண்ணாந்து பார்த்தபடி கிடந்தேன்.
சில மாதங்களில் அந்தக் கட்டிடத்தையும் வீட்டுக்காரர் தனக்குத் தெரிந்த ஒருவருக்காக வாடகைக்கு விடத் தீர்மானித்திருந்தார். சாத்தூருக்கு வெளியே மின்சார வாரியத்தின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் போய் தங்கிக் கொண்டோம். வீட்டிற்கு நேர் எதிரே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்போது வெட்ட வெளியாய் இருந்தது. தொலைவில் ஆர்.ஆர்.நகரில் இருக்கிற மெட்ராஸ் சிமெண்ட்ஸின் உயர்ந்த குழாய்கள் தெளிவாகத் தெரியும். அதிலிருந்து புகை காற்றுவெளியில் படர்ந்து கொண்டிருக்கும். பார்க்கமுடியாத வலியெடுக்கும். யூனியன் கார்பைட் விஷம் கக்கி ஒரு நள்ளிரவில் போபால் மக்களை அப்படியொரு நாளில்தான் கொன்று குவித்திருந்தது. பத்திரிக்கைகளில் பார்த்த காட்சிகள் சகிக்க முடியாமலிருந்தன. அந்த ரணமான நாட்களில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டு தினமும் கூட்டங்களும், பிரச்சாரமுமாய் இருந்தது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருக்க, காங்கிரஸ் அ.தி.மு.கவோடு கூட்டு வைத்து இந்திரா காந்தி மரணத்தை மக்கள் முன் வைத்துக் கொண்டிருந்தது. சிதம்பரமும் டிரான்ஸ்பரில் திருநெல்வேலி சென்று விட்டபடியால், கூட்டங்களைக் கேட்கப் போவதுதான் பொழுது போக்காய் இருந்தது. எம்.ஜி.ஆர் திரும்ப வந்து முதல்வராவார் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்ய, டி.ராஜேந்தர் செத்துப்போன கன்னுக்குட்டியை வைத்து பால் கறக்க நினைக்கிறார்கள் என்று தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்தார். எல்லாம் வேடிக்கையாக இருந்தது.
புதிதாக மாற்றலாகியிருந்த அழகர்சாமியும், நாகராஜும் எங்களோடு வந்து தங்கியிருந்தனர். ஜீவலிங்கம் ரூமிலிருக்கும் போதெல்லாம் பாடிக் கொண்டிருப்பார். வாசலில் வந்து குளிருக்கு சாக்கு மூடி உட்கார்ந்திருக்கும் ஆடு மேய்க்கிறவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பார். இரவின் பூச்சி சத்தங்களோடு எங்களுக்குள் பேசுவதற்கு அரசியலும், சங்கம் குறித்த செய்திகளுமே பெரும்பாலும் அப்போது முன்வந்து நின்றன. அழகர்சாமி எம்.ஜி.ஆர் பக்தர். அ.தி.மு.கவும் காங்கிரஸும் ஜெயித்ததற்கு நாடார் மெஸ்ஸில் பிரியாணி வாங்கித் தந்தார்.
வங்கியில் நிகழ்ச்சிகள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. நிர்வாகம் ஒப்புக்கொண்ட மாதிரி சங்கத்தின் பொதுச்செயலாளர். கிருஷ்ணகுமாருக்கு தலைமையலுவலகத்திற்கு மாறுதல் அளிக்கவில்லை. கிளைகளுக்கு அடிப்படை வசதிகள், கடைநிலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, என்று இன்னும் சில கோரிக்கைகளை முன்னிறுத்தியும், தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஊழியர்களை பந்தாடுகிற மாறுதல் உத்தரவுகளை எதிர்த்தும் 1985 ஜனவரி 23ம் தேதி தர்ணா என்றும், 24ம் தேதி அடையாள உண்ணாவிரதம் என்றும் சங்கத்திலிருந்து சுற்றறிக்கை வந்தது. எங்கும் அமைதி நிலவியது. திருமலையின் கார் என்றையும்விட அதிகமாக உறுமிக்கொண்டு வங்கிக்கு வந்து போனது. தர்ணாவுக்கு வர வேண்டாம் என பகிரங்கமாக பிரச்சாரமும் செய்யப்பட்டது. அந்த தர்ணாவுக்கு உண்மையில் மொத்தம் பத்தொன்பது பேர்களே வந்திருந்தார்கள். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இருவரே வரவில்லை. தலைமையலுவலகத்திலிருந்து யாரும் செல்லவில்லை.
(இன்னுமிருக்கிறது...)
முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
1 , 2 , 3 , 4
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!