ஜனவரி 28ம் தேதி அகில இந்திய கோரிக்கைகளை முன்னிறுத்தியும், கடைநிலை ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்வதில் உள்ள கோளாறுகளை களைந்திட வலியுறுத்தியும் ஒருநாள் நாடு முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்திற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. வேலை நிறுத்தம் இந்த நிர்வாகத்தை எதிர்த்து இல்லை என்று ஊழியர்கள் தெளிவுபடுத்தி கொஞ்சம் தைரியம் கூடியிருந்தார்கள். சங்கத்தலைமைக்கு பெரிய ஆதரவு இருந்தாலும் வெளிப்படையாக நிர்வாகத்தை எதிர்த்து வெளிவருவதில் பயம் இருந்தது. அந்த பயத்தை உயர் அதிகாரிகளும், தோற்றுப்போன சங்கத்தலைமையில் இருந்த சிலரும் திட்டமிட்டு உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். பொதுவாகவே ஊழியர்கள் மத்தியில் ஒரு மனோநிலை குடியிருக்கிறது. கிருஷ்ணகுமாரை தேர்ந்தெடுத்துவிட்டோம், எல்லாவற்றையும் இனி அவர் பார்த்துக்கொள்வார் எனவும், தங்கள் வேலை வேடிக்கை பார்ப்பது எனவுமாக பாவித்துக் கொள்கிறார்கள். சுற்றிலும் இரண்டு குழுவாய் நின்று ஆரவாரிக்க, அவர்கள் சார்பாக எம்.ஜி.ஆரும், வீரப்பாவும் மட்டும் தாவித் தாவி வாள் சண்டை போடுகிற போட்டியாக கருதிக்கொள்கிறார்கள்.
உடனடியாக கிளைகளுக்கு பிரச்சாரம் செல்வது எனவும் திருநெல்வேலியில், சாத்தூரில்,காரைக்குடியில் வட்டாரக் கூட்டங்கள் நடத்துவது எனவும் திட்டமிட்டு புதிய செயற்குழு முழுமூச்சோடு இறங்கியது. தலைமையலுவகத்திற்கு வந்து ஒவ்வொரு ஊழியர்களிடமும் பேசினார்கள். நாங்கள் பணிபுரிந்த அலுவலகம் இருந்த அதே தெருவில் அந்த ஆக்ஸ்போர்டு பள்ளியில் வைத்து வட்டாரக்கூட்டம் நடத்தப்பட்டது. கிருஷ்ணகுமார் உணர்ச்சி பூர்வமாக பேசினார். 'மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மாயிருக்க விடாது" என்று நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னால் இருக்கிற ஆணவத்தையும், அதன் பாதிப்புகளையும் விளக்கினார். எவ்வளவோ செலவு செய்கிற நிர்வாகம், கிளைகளில் கழிப்பிட வசதி கூட செய்து தராத அவலத்தையும், கடைநிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித் தராத போக்கையும் வலியோடு உணரவைத்தார். "தலைமை மட்டுமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளாது, நாம் எல்லோரும் சேர்ந்துதான் சங்கம், தனிமரம் தோப்பாகாது" என்று புரிய வைத்தார்."உறங்கிக் கொண்டிருக்கும் போர்வாளை விட ஊர்ந்து கொண்டிருக்கும் புழு மேலானது. புழுக்களை விடவா நாம் கேவலமாகிவிட்டோம். உறைவிட்டு வெளிவந்த போர்வாளாக உயர்ந்து நிற்போம்" என்று ஒவ்வொருவரின் நரம்புகளிலும் தீயை பற்ற வைத்தார். அவரது பேச்சில் அனாயசமாக தெறித்து வரும் இலக்கியமும், பொதிந்து கிடந்த உண்மைகளும் எல்லோரையும் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது.
அசிஸ்டெண்ட் லேபர் கமிஷனரோடு தொடர்ந்த பேச்சுவார்த்தையில், சங்கத்தின் பொதுச்செயலாளருக்கும், தலைவருக்கும் டிரான்ஸ்பர்கள் தருவதற்கு நிர்வாகம் மீண்டும் ஒப்புக் கொண்டது. சில கோரிக்கைகள் வாபஸ் பெறப்பட்டன. சில கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை தொடர்ந்தது. கிருஷ்ணகுமாருக்கு சாத்தூர் கிளையும், பரமசிவத்திற்கு உப்பத்தூர் கிளையும் டிரான்ஸ்பர்கள் போடப்பட்டன. ரோஹிணி எங்கள் துறையில் மாறுதலாகி பணியாற்றத் தொடங்கினார்கள். பரமசிவமும், ரோஹிணியும் தலைமையலுவலகம் இருந்த சிவன் கோவில் தெற்குரத வீதியில் தலைமையலுவலகத்திற்கு ஏழு எட்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வாடகைக்கு குடிவந்தார்கள். வழக்கறிஞர் மாரிமுத்து அவர்களிடம் ஜூனியராக இருந்த சையது அகமதுவின் அலுவலகத்திலேயே ஒரு போர்ஷனில் தங்கிக் கொண்ட கிருஷ்ணகுமார் அதையே சங்கத்தின் முகவரியாக சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நாங்கள் மீண்டும் எங்கள் குடியிருப்பை மாற்றிக்கொண்டோம். ஊருக்கு வெளியே இருந்ததால் ஆத்திர அவசரத்துக்குக் கூட ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது. மீண்டும் ஊருக்குள் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து ஆற்றுக்குப் பிரியும் ஒரு சந்தில் மிகச் சின்ன அறையொன்றில் தங்கிக் கொண்டோம். நாகராஜும், அழகர்சாமியும் எங்களோடு வந்து தங்கிக்கொள்ளவில்லை. காரைக்குடி அருகில் இருந்து வந்த கடைநிலை ஊழியர் அழகப்பன், எப்போதும்வென்றானைச் சேர்ந்த தங்கமாரியப்பன், பெருமாள்சாமி, நான், ஜீவலிங்கம், முருகன் என நாங்கள் இப்போது உருமாறியிருந்தோம். ஜீவலிங்கம் வேலைபார்த்த டெவலப்மண்ட் டிபார்ட்மெண்டின் சூப்பிரண்டட் ரவீந்திரன் வயது வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் பிரியத்துடன் பழகுகிறவராக இருந்தார். அவரது வீட்டில் மனைவியும், மக்களும் ஊருக்குச் சென்றிருந்தனர். நாங்கள் நான்கைந்து பேர் அவர் வீட்டில் போய் தங்கிக்கொண்டு அட்டகாசம் செய்தோம். “ஏலே... இந்த காம்பவுண்டுல மத்தவங்களும் குடியிருக்காங்க. கொஞ்சம் மெதுவா பேசுங்கலே” என்பார்.
ஒருநாள் சாயங்காலம் மெயின் ரோட்டில் எதற்காகவோ நடந்து போய்க்கொண்டு இருந்தபோது ஒரு இடத்தில் சின்னதாய் கூட்டம் நின்றிருந்தது. பாம்பை வைத்துக் கொண்டு ஒரு வித்தைக்காரன் தெளிவாக, வேகமாக, அவர்களுக்கே உரிய சுருதியோடு பேசிக்கொண்டு இருந்தான். தள்ளி சென்று கொண்டிருந்த எனக்கு அந்த கூட்டத்தில் கிருஷ்ணகுமார் நின்று கொண்டிருந்தது ஆச்சரியத்தை தந்தது. பின்னால் சென்று அந்த உயரமான மனிதரின் முதுகில் தட்டி "ஹலோ" என்றேன். திரும்பிப் பார்த்தவர் முகமெல்லாம் சட்டென மலர்ந்தவராய் "நீங்க மாதவராஜ்தான... ஏ.சி.டில வேலை பாக்குறீங்க இல்ல.." என ஒன்றிரண்டு தடவை பார்த்திருந்தாலும் மிகச் சரியாக சொன்னார். "நீங்க இங்க நிக்குறீங்க..?' சின்ன கேள்வியோடு நான் இழுக்க, "நின்னா என்ன..அவனோட பேச்ச கவனிங்க.. அது ஒரு கலை. கூட்டத்தை எப்படி தன் பக்கம் வைத்திருக்கிறான் பாருங்க" என்றார். சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பி ஒருமுறை பார்த்துக் கொண்டார். தோளில் ஜோல்னாப்பை தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி "வாங்க ஒரு டீ சாப்பிடலாம்" என்று பதிலை எதிர்பாரமலேயே நடக்கத் தொடங்கினார். கூடவே சென்றேன்.
அந்தக் கடையிலேயே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அவரே பேசினாலும், அவ்வப்போது நான் பேசியதையும் ரசித்துக் கொண்டார். என்னிடம் இருந்த இலக்கிய ஆர்வத்தை புரிந்து கொண்டவராக பாரதியை, இந்திராபார்த்த சாரதியின் குருதிப்புனலை, பாலைவனச்சோலை படத்தை, செம்மீனை, கந்தர்வனின் மீசைக் கவிதையை, சிவாஜி கனேசனை என உரையாடல் பற்றி படர்ந்து சென்று கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஓவ்வொரு விஷயத்திலும் அவரிடம் தெரிந்த தீர்க்கமும், நுட்பமும் முற்றிலும் என்னை வசப்படுத்தியிருந்தன. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாமே என்றுதான் பிரிந்தேன்.
சில தினங்களில் மீண்டும் அவரைப் பார்த்தேன். எங்கள் அலுவலகத்திற்கு விஸ்வநாதன், மணி, சோலைமாணிக்கம், கணேசன் ஆகியோரோடு வந்திருந்தார். மிக சினேகமாய் சிரித்துக் கொண்டு "கோழிக்கோடு வர்றீங்களா" என்றார். கோழிக்கோட்டில் அகில இந்திய சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 2, 3 தேதிகளில் நடப்பதாக சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. செல்வதற்கு மனமிருந்தும் வேறொரு விஷயம் முக்கியமாகப் பட்டது. வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு முடிந்து பத்தாவது ஆண்டு பிறப்பதையொட்டி அதை கொண்டாடுவதாக சேர்மன் சர்க்குலரும் வந்திருந்தது. தொடர்ந்து இரண்டு ஞாயிற்றுக்கிழமை எட்வர்ட் பள்ளியில் வைத்து விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கலைநிகழ்ச்சிகள் இருந்தன. கோழிக்கோட்டிற்குச் சென்றுவிட்டு கலைநிகழ்ச்சிகளுக்கு வந்துவிடலாம்தான். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றிருந்தது. வரமுடியாததை வருத்தத்தோடு தெரிவித்தேன். சிரித்துக்கொண்டே சென்றார்.
சாத்தூரிலிருந்து ஒரு இரவில் அகில இந்தியச் சங்கத்தின் செந்நிறக்கொடிகள் கட்டிய வேன்களில் உற்சாகமாய் மக்கள் கோழிக்கோட்டிற்கு பயணமானது தலைமையலுவலகத்தில் முக்கிய விஷயமாக கருதப்பட்டது. யார் யாரெல்லாம் சென்றது என்று கணக்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். செல்லாதவர்கள் எல்லாம் நல்ல பிள்ளைகளாய் கருதப்பட்டர்கள். லாங் ஜம்ப், ஹை ஜம்ப், ஷார்ட் புட், கபடி, டேபிள் டென்னிஸ் என்று பரிசுகள் குவித்திருந்தேன். ஆனாலும் செஸ் விளையாட்டில் ஒரு தவறான அசைவில் தோற்றது வருத்தத்தை தந்தது. அங்குதான் கண்ணன் பழக்கமானார். செஸ் விளையாட்டில் என்னை வென்றவரை அவர் வென்றிருந்தார். அந்த சாயங்காலத்தில் இன்குலாப் கவிதைகளையும், இளவேனில் கட்டுரைகளையும் கால்பந்து மைதானத்தில் வைத்து சொல்லிக்கொண்டிருந்தார்.
கோழிக்கோடில் இருந்து மிகுந்த உற்சாகத்தோடு திரும்பிய மக்கள் அந்த பயணத்தைப் பற்றி கதை கதைகளாய் சொன்னார்கள். போகாமல் போனதற்கு வருத்தம் வந்தது. சங்கம் குறித்து இப்போது நிறையவே பேச ஆரம்பித்தார்கள். கூடி நிறைகிற இது போன்ற தருணங்கள் மனிதர்களுக்குள் நெருக்கத்தையும், பற்றையும் உருவாக்கிவிடுகிறது. நிர்வாகமும் அதே எண்ணத்தில்தான் பத்தாவது ஆண்டை கொண்டாடத் தீர்மானித்திருக்க வேண்டும். மார்ச் 9ம் தேதி நடக்கும் அந்த விழாவில் சங்கத்தின் சார்பில் "பாம்பும் பஞ்சாயத்தும்" என்னும் நிஜ நாடகம் நடக்க இருப்பதாக சங்கத்தின் சுற்றறிக்கை வந்தது. அன்று சாயங்காலம் எங்கள் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணகுமார் "தோழர்.மாதவராஜ்..! நீங்களும் பாம்பும் பஞ்சாயத்தும் நாடகத்துல நடிக்கலமே" என்றார். சரியென்று சொல்லிவிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் சாயங்காலம் கிருஷ்ணகுமாரோடு இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒத்திகை பார்க்கிற இடத்தில் இருந்த சகஜமும், அரட்டையும் அலாதியாக இருந்தது. பழையபேட்டை மணி அடித்த ஜோக்குகளில் விழுந்து விழுந்து எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சட்டென்று தீவிரம் கொண்டு கிருஷ்ணகுமார் எழுந்து "வாங்க" என எல்லோரையும் தயார் படுத்துவார்.
விழா மிகுந்த உற்சாகமாகவும், சத்தமாகவும் இருந்தது. ஆள் ஆளாளுக்கு மிமிக்ரி, பாட்டு,சேர்மன் புகழ் என தங்களால் ஆனதைச் சொல்லி மகிழ்ந்தார்கள். சேர்மன் திருமலை கூட்டத்தைப் பார்த்து பார்த்து மிகுந்த உற்சாகமயிருந்தார். நானும் ஜாலியாக டான்ஸ் ஆடினேன். கணேசனும், பழையபேட்டை மணியும் ஆடிக்கொண்டு இருக்கும் போதே அரங்கத்தில் வந்து என்னைத் தூக்கியும், ருபாய் நோட்டுகளை சட்டையில் குத்தியும் விட்டார்கள். சங்கடமாக இருந்தாலும் எதோ பெருமையகவும் இருந்தது அப்போது. அடுத்த சில நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பாம்பும் பஞ்சாயத்தும் நாடகம் அறிவிக்கப்பட்டது. அதுவரை இருந்த சத்தம் எல்லாம் நின்று மொத்த இடமும் அமைதியானது. திருமலை புன்னகை களைந்து, நெற்றியில் சுருக்கங்கள் விழ உற்றுப்பார்த்தார். அங்கங்கே நின்றிருந்தவர்கள் அரங்கம் நோக்கி பார்வையை திருப்பி நெருங்கி வந்தனர்.
(இன்னும் இருக்கிறது.....)
முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
1 , 2 , 3 , 4, 5