இந்த ‘தரையிறங்கும்’ வார்த்தை மிக மிகச் சரியானதாக இருக்கிறது. அவர்கள் கிராம வங்கிகளின் தேவமைந்தர்கள் போலவும், கடவுள்கள் போலவும்தான் வருகிறார்கள். இந்தக் கடவுள்களின் கைகளில்தான் தங்கள் எதிர்காலமே இருப்பதாய் எப்போதும் ஒரு கூட்டம் அவர்களை வழிபட்டுக் கொண்டும், அவர்களின் துதிபாடிக்கொண்டும் இருக்கிறது. இந்தக் கடவுள்களின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளவே தாங்கள் படைக்கப்பட்டவர்களாய் அவர்கள் பூஜை நமஸ்காரங்கள் செய்கிறார்கள். கடவுள்களின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டுவிடாதா, அதன் மூலம் தங்கள் ஜென்மம் சாபல்யம் பெற்றுவிடாதா என தவம் கிடக்கிறார்கள்.
தரையிறங்கி வந்த கொஞ்ச நாட்களிலேயே இந்தக் கடவுள்களின் சுயரூபம் தெரிந்து விடுகிறது. சாயம் வெளுத்து விடுகிறது. தங்களுக்காக அவர்கள் எதையும் செய்யப் போவதில்லை என்பது புரிந்து விடுகிறது. தரையிறங்கி வந்தவருக்கு சாபம் கொடுத்தபடி, இன்னொரு கடவுள் தரையிறங்குவதற்காகக் காத்திருக்கத் தொடங்குகிறார்கள். ஒரு முதலமைச்சரை ஒரு மாநிலம் எதிர்பார்ப்பது போல, ஒரு பிரதம மந்திரியை ஒரு தேசம் எதிர்பார்ப்பது போலத்தான் இதுவும். ஆனால் எந்த தேவமைந்தர்களும் அவர்களுக்காக தரையிறங்குவதில்லை என்பதுதான் எப்போதும் கசப்பான உண்மையாக இருக்கிறது.
இதை எல்லோரிடமும் உடைத்துப் பேசியவர் பா.கிருஷ்ணகுமார். பாண்டியன் கிராம வங்கியின் முன்னாள் பொதுச்செயலாளர். “சேர்மனும் கூலிதான். நாமும் கூலிதான். அவர் அதிகக் கூலி வாங்குபவர். நாம் குறைந்த கூலி வாங்குபவர்கள்.” என்பார். “திறமையற்ற ஸ்பான்ஸர் வங்கியின் உயரதிகாரிகளுக்கு கிராம வங்கியில் சேர்மன் பதவி என்பது ஒரு training centre. ஊழல் செய்வதில் ஊறிப்போனவர்களுக்கு இது ஒரு business centre" என்று 1980களின் இறுதியில் அப்போதைய PGBEA பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் கூட்டங்களில் பேசுவார். கேட்டுக்கொண்டு இருக்கும் ஊழியர்களும், அலுவலர்களும் ஆமோதித்து ஆரவாரிப்பார்கள்.
கட்டமைக்கப்பட்ட இந்தச் சேர்மன்கள் குறித்த பிரமைகளையும், பிம்பங்களையும் தவறு என்று புரிய வைத்ததில் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கு ஒரு பங்கு உண்டு. இதை ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு. ஏற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு. ஏற்றுக் கொண்டவர்கள் வீரம் கொண்டவர்களாயும், நேர்மை மிக்கவர்களாயும், முக்கியமாக சங்கமாகவுமிருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிர்வாகத்திற்கு அனுசரனையாகவும், கோழைகளாகவும், பொய்களை பரப்புபவர்களாயும் இருக்கின்றனர். ஏற்றுக்கொண்டவர்களுக்கும், ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளும், நடவடிக்கைகளும் இங்கு ஒரு தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இதில் சேர்மனை ஆதரிக்கும் அல்லது வழிபடும் கூட்டம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு சேர்மன்களுக்கும் என்று ஒரு கூட்டம் சேர்கிறது. அது சுயநலம், விசுவாசம், ஜாதி குறித்த அந்தந்த சேர்மன்களின் பார்வைகளுக்கும், புரிதல்களும் ஏற்ப மாறுகிறது. அவரே அந்தக் கூட்டத்தைச் சேர்க்கிறவராகவும், வழி நடத்துகிறவராகவும் இருக்கிறார். முந்தைய சேர்மன்களின் காலடியில் வாலாட்டிக் கிடந்தவர்கள், அடுத்த சேர்மன்களின் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போவது வாடிக்கையாக நிகழ்கிறது. ஆனாலும் ஒவ்வொரு சேர்மனிடமும் குழைந்து கிடக்கும் சந்தர்ப்பத்திற்காக அவர்கள் தங்கள் வால்களோடு பரிதாபமாக காத்திருக்கவே செய்கிறார்கள். “நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி”எனும் மகாகவிபாரதியின் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன.
ஊழியர்களின், அலுவலர்களின் நியாயமான பிரச்சினைகளை முன்னிறுத்தி பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் (PGBEA), பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனும் (PGBOU) கோரிக்கை வைக்கும் போதெல்லாம் இந்த சேர்மன்கள் தங்கள் ஆதரவு சக்திகளை ஏவி விடுவதும், அவர்கள் பெரும் குரலெடுத்து குரைப்பதும் நடக்கிறது. தங்கள் நலன்களுக்கு எதிராக தாங்களே நிற்கிறோம் என்பது கூடத் தெரியாத எஜமான விசுவாசம் அது. சேர்மன்கள் தூக்கிப் போடும் டிரான்ஸ்பர் போன்ற ரொட்டித் துண்டுகளால் இந்த ஆதரவுக் கூட்டம் திருப்தி கொள்கிறது. பெரும்பான்மையான ஊழியர்கள் நலன்கள் இதனால் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை. தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தி (bargaining power) இதனால் பாதிக்கப்படுவது குறித்து அவர்களுக்கு கவலையுமில்லை. ஆனால் இந்தக் காலக்கட்டங்களில்தான் கடுமையாக தொழில் அமைதி பாதிக்கப்படுவதும், வங்கியின் வளர்ச்சி தடைபடுவதும் நிகழ்கிறது. திருவாளர்கள் வி.திருமலை, பி.பி.தியாகராஜன், ஆர்.கிருஷ்ணன், இ.சுந்தராஜு ஆகியோர் சேர்மன்களாக இருந்த காலங்கள் இப்படிப்பட்டவை.
கிராம வங்கிகளின், அதன் ஊழியர்களைப்பற்றி யோசிக்கும்போது ‘கடவுள்களாகிய’ இந்த சேர்மன்களும் கூடவே வருகிறார்கள். அவர்கள்தாம் கிராம வங்கிகளின் குறுநில மன்னர்களாய் இருக்கின்றனர். மத்திய அரசு, மாநில அரசு, ஸ்பான்ஸர் வங்கிகளின் கட்டுப்பாடுகளில் கிராம வங்கிகள் இருந்த போதும் ஸ்பான்ஸர் வங்கியில் இருந்து வருகிற சேர்மன்களே கிராம வங்கிகளை நேரடியாக ஆட்சி நடத்திய கனவான்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கும், சிந்தனைப் போக்குகளுக்கும், திறமை மற்றும் திறமையின்மைக்கும் இடையே கிராம வங்கிகளும் அதன் ஊழியர்களும் பெரும்பாலும் சிக்கித் தவிக்கின்றனர் . தேசம் முழுவதும் உள்ள கிராம வங்கிகளின் வளர்ச்சி, வரலாறு என ஆராய்ந்து பார்த்தால் அதன் சாதக, பாதகங்களுக்கு இந்த சேர்மன்களும் காரணமாய் இருக்கின்றனர். அவர்களின் அக்கறை, நேர்மை, ஈடுபாடு, தொழிலாளர்கள் மீதான பார்வைகளுக்கு ஏற்ப எல்லாம் மாறுகிறது.
இந்த சேர்மன்கள், ஸ்பான்ஸர் வங்கியில் நாலு பேரை போல ஒரு சாதாரண உயரதிகாரிகள். அவ்வளவுதான். ஸ்பான்ஸர் வங்கியில் கிடைக்காத மரியாதை அவர்களுக்கு கிராம வங்கிகளில் கிடைக்கிறது. ஸ்பான்ஸர் வங்கியில் இல்லாத சக்தி இங்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஆடித் தீர்த்துவிட்டு ஒருநாள் திரும்பவும் ஸ்பான்ஸர் வங்கிக்கு சாதாரண உயரதிகாரியாய் செல்கிறார்கள். அங்கு அவர்கள் கார் கதவைத் திறந்துவிட யாரும் வந்து நின்று காத்திருப்பதில்லை. கடவுள்கள் தாங்களே ‘தரையிறங்கும்’ கசப்பான வேளை அது.
இந்தப் பின்னணியோடும், உண்மைகளோடும் நமது பாண்டியன் கிராம வங்கியில் வந்து தரையிறங்கிய ஒவ்வொரு சேர்மன்களைப் பற்றியும் நாம் கொஞ்சம் நிதானமாய் பேசலாம் போலிருக்கிறது. முதலாவதாக டி.ஆர்.கே என்னும் திரு.கள்ளபிரான் .
(டி.ஆர்.கே பற்றி விரைவில்...)
கருத்து சொல்பவர்கள் Feedback மூலம் சொல்லலாமே!
From FEEDBACK:
ReplyDelete"Article about PGB Chairman is an eye-opener. Paaraattukkal"