1.9.11

அழக்கூட திராணியற்று அவர்கள் இருந்தார்கள்



“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தோழர் அர்விந்த் சின்ஹா , நேற்று (31.8.2011) காலை 8 மணிவாக்கில் PGBOU தலைவர்  தோழர்.போஸ்பாண்டியனிடமும், PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்திடமும் சொன்ன தகவல்.  நேற்று காலையில் திருச்சியில் AIRRBEA-TN கமிட்டி மீட்டிங்கிற்கு நமது முக்கிய தலைவர்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் திருமங்கலம் கிளையில் பணிபுரியும் PGBEAவின் செயற்குழு உறுப்பினர் தோழர்.சுரேஷ்பாபுவிடமும், திண்டுக்கல் கிளையின் மேலாளராக பணிபுரியும் PGBOUவின் செயற்குழு உறுப்பினர் தோழர். சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயம் சொல்லப்பட்டது.

தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்தார்கள். என்ன செய்வதென்று அறியாமல் உருக்கமாய் காட்சியளித்தார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும்.  இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே இருந்தார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும்,  மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்தன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல் இருந்தது.  ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொன்னார். 30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னார் டிரைவர்.

பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு தனித்து விடப்பட்டிருந்தனர். அழக்கூட திராணியற்றுப் போயிருந்தனர். அருகில் சென்று,  “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றார் அவர்.  கைகளைப் பற்றிக்கொண்டனர் நம் தோழர்கள். அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்தது. எதுவும் சொல்ல முடியாமல் கொஞ்ச நேரம் நின்றார்கள். அவரது மகள்களும், மகனும் நிலைகுத்திபோய் இருந்தார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம்.  மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள்.  சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொன்னார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியவில்லை. வலித்திருக்க வேண்டும்.

இந்தி தெரியததால், அவர்களோடு இயல்பாக பேச முடியவில்லை. அவர்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணும் அவர்களுக்குத் தேவையாய் இருந்தது. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றார் வினோத் ஸ்ரீவத்சவா. இரண்டாவது பெண் அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, அவளது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டினார். அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர்.  “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்றனர்.  “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தினர். அப்போது மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்தது. அங்கு சென்று விசாரித்தார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்றனர். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.  அவரவர் துயரங்களோடும், உற்சாகங்களோடு வேகமாக இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்தார் அவர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டது. வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்தார்.

சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு,  ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்தது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க,  எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொன்னார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கினார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னார். அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னார். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருந்தனர்.

இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்தனர். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.  கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்தார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டார் . விருந்தினர்கள் அதற்கு மேல் செல்ல முடியாத பகுதிக்கு அவர்கள் செல்ல புறப்பட்டார்கள்.  மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார்.  வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ?  நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம் எல்லாம் மனுஷங்கதானே. நாம் எல்லாம் AIRRBEA men  தானே” என்று சொன்னார். வினோத் ஸ்ரீவத்சவா இருவரது கைகளையும் பிடித்து,  விடைபெற்றார்.

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றனர். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்தார்கள். திருச்சியில் AIRRBEA-TN  கமிட்டி மீட்டிங்கில் இருந்த தோழர் சோலைமாணிக்கத்திற்கு போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “சோலை! தாங்க முடியல” என்று குரல் தழுதழுத்தார்.

8 comments:

  1. Com pitchamuthu sent the following sms:

    "Bihar tholarin sogathai pathivu panniavithamum nam tholarkalin pankalippai sollia vithamum kanneerai varavalaithu vittathu."

    ReplyDelete
  2. வாசிக்க முடியவில்லை... அழுகை வந்து விட்டது...

    மனித நேயம் இன்னும் இருக்கிறது...

    அது நம் மனதில்தான் இருக்கிறது...

    சாமுவேல் ஜோதிக்குமார் மற்றும் சுரேஷ் பாபுவுக்கும் எனது நன்றிகள்..

    ஜெபஸ்டின் ரொட்ரிகோ..
    பல்லவன் கிராம வங்கி
    அடரி கிளை
    கடலூர் மாவட்டம்

    ReplyDelete
  3. மனம் இதமாக இருந்தால்தான் மனிதன்.மனிதம் தான் மேன்மையானது.மனம் கனிந்த தோழர்களுக்கு நன்றி.மனிதத்துவம் போற்றுவோம்.தோழமையுடன் ம.பி.மெய்யப்பன்.பாண்டியன் கிராம வங்கி.அ.சிறுவயல் கிளை.

    ReplyDelete
  4. தோழர்.வினோத் ஸ்ரீவத்சவாவின் மனநிலையும், அவரது குழந்தைகளின் நிலைமையும் எப்படி இருந்திருக்கும் என்பதை எழுதி தீர்த்துவிட முடியாது. ஆதரவற்று அவர்கள் நின்றிருந்த இடத்தில் நம் தோழர்கள், அவர்களுக்கு கைகொடுத்து இருக்கின்றனர். சொந்த ஊரில், சொந்த மனிதர்கள் நடுவே அவர்கள் அழுது தீர்த்து, நம்பிக்கையோடு நாட்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்க முடியும். அதற்கான மெழுகுவர்த்திகளை நம் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் ஏற்றி வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete
  5. இவ்விஷயத்தை எனது ‘தீராத பக்கங்கள்’ வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தேன். கூகிள் பஸ்ஸில் வந்த comments:

    5 comments
    jackie sekar - அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ?---//

    இதற்கு மேல் படிக்க முடியாமல் கண்களில் நீர்த்திவளைகள் என் கண்ணை மறைக்கின்றன... வெகு நாட்களுக்கு பிறகு அடைத்து வைத்த சோகங்கள் பீரிட்டு கிளம்புகின்றன...

    தோழர் சாமுவேல் மற்றும் ஜோதிகுமார் நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தினருடன் நீடுடி வாழ வேண்டும்..

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்
    11:09 AM


    முரளி கண்ணன் - தங்கள் தோழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    11:32 AM


    mohamed sultan - மனிதனுக்கு மனிதன் உதவுவதுதான் நல்ல பண்பாடு. மனித நேயம் குறைந்து விட்ட இன்றைய சூழலில் முகம் தெரியாதவர்களாயினும் உதவிக்கு யாருமற்றோருக்கு உதவுவதுதான் அவசியத் தேவையாகிறது. உதவிய அந்த நல்லுள்ளங்கள் மிகுந்த போற்றுதலக்குரியன.
    12:00 PM

    அபி அப்பா - மனிதம் செத்துவிடவில்லை. உங்களுக்கும் உங்கள் இயக்க தோழர்களுக்கும் என் நன்றிகள்."நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்" லிஸ்டிலே நீங்க இருக்கீங்க. இப்ப இன்னும் தீவிரமா உங்களை சந்திக்கும் நாள் எப்போன்னு நினைச்சுகிட்டேன். நன்றி மாதவ் அண்ணா!
    2:02 PM

    kaveri ganesh - கண்களில் கண்ணீர் வர எழுதுகிறேன், தோழர் சாமுவேல், ஜோதிகுமார் , கடவுள் என்னய்யா கடவுள், மனிதரூபத்தில் நிற்கிற நீங்க தான் கடவுள். உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன்
    2:18 PM

    ReplyDelete
  6. தீராத பக்கங்கள் வலைத்தளத்தில் வந்த கருத்துக்கள்:



    Lakshmi says:
    September 3, 2011 11:21 AM
    மனித நேயம் இன்னும் உயிர்ப்புடந்தான் இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.

    -------------------------------------------
    இரா.எட்வின் says:
    September 3, 2011 12:55 PM
    மதுரை வரும்போது தோழர்களை அவசியம் பார்க்க வேண்டும் மாதவராஜ்.

    -------------------------------------------------
    pasupasu says:
    September 3, 2011 1:10 PM
    VANTHARAI VAZAVAIKKUM TAMIL NADU. NOW VANTHARAI KAPATTIYA TAMIL NADU. THANKS TO GOOD HEARTED TAMILIZANS

    -----------------------------------


    Kousalya says:
    September 3, 2011 2:01 PM
    ஒருசிலருக்கு மட்டும் இருக்கும் மனித நேயம் மற்றவர்களுக்கு ஏன் இல்லாமல் போகின்றது...?!

    இது போன்ற சூழ்நிலையில் தோள்கொடுத்த தோழர்களை எண்ணி பெருமிதமாக இருக்கிறது.

    ReplyDelete
  7. facebookல் கமெண்ட் தெரிவித்தவர்கள்:



    Natarajan Krishnan:
    sharing your sorrow

    ------------------------------------------

    Bala Ji:
    Had tears at end... Avargal amma vin elappu perum thuyaram... avargal anaivarum viraivil gunamadaya manamaara vendugiren..
    ------------------------------------------

    Sathish Mani:
    அண்ணா பாதி பக்கத்துக்கு மேல என்னால ...படிக்கவே முடியல
    அவ்வளவு வேதனையா இருக்கு
    ------------------------------------------

    Arun Raj:
    great job
    ------------------------------------------

    ReplyDelete
  8. மேலும் வந்திருக்கும் கருத்துக்கள்:
    --------------------------------------
    saambaldhesam says:
    September 3, 2011 4:02 PM
    என்ன சொல்வது...? துயரக்கடலில் வீழ்ந்தவனுக்கு கண்ணீரும் வாய் தன்னை அறியாமல் கொட்டும் சொற்களும்தான் வடிகாலாய் இருக்கும், சொற்களின் அர்த்தம் அறிந்தவர்கள் கூடவே கண்ணீர் சிந்தி அழ முடியும், ஆனால் அந்த சொற்களின் அர்த்தம் பிடிபடாத ஒரு அந்நிய பிரதேசத்தில் இதயங்கள் அழும் ஒலிதான் மொழிகளும் பிரதேசங்களும் போடுகின்ற கோடுகளை அழித்து மனிதாபிமானம் என்ற ஒற்றை இழையில் மனிதர்களை பிணைத்து......இக்பால்
    --------------------------------------

    venu's pathivukal says:
    September 3, 2011 4:32 PM
    அன்புத் தோழர் மாதவ்

    அதிர்ந்து போனேன்..உங்கள் பதிவைக் கண்டு..

    ஊர் தெரியாத ஊரில் வந்த இடத்தில் துணியை இழந்து திசையைப் பறிகொடுத்து

    உணர்வுகள் முடங்கி உணர்சிகள் தத்தளிக்கத் தடுமாறிய தோழருக்கு அரவணைப்பு தந்த பாண்டியன் கிராம வங்கி தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

    இந்த நேரம் நினைவுக்கு வந்தவர் கவியரசு கண்ணதாசன் தான்:

    அவரது இந்தக் கவிதையை எப்போதோ எழுபதுகளில், குமுதம் இதழில் அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான போது வாசித்த நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன்..


    சாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்
    தனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்
    வேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்
    வேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்
    ஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்
    உறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்
    காலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன
    கண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன.....

    எஸ் வி வேணுகோபாலன்
    --------------------------------------

    ஓலை says:
    September 3, 2011 7:01 PM
    அதிர வைக்கும் பதிவு. உதவிய நண்பர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.

    இழவு வீட்டுல கூட ஆதாயம் தேடற மக்கள் ஏர்லைன்ஸ் இல்லாத இடம் கிடையாது. பிணம் திண்ணிக் கழுகுகள்.
    --------------------------------------

    S.Raman,Vellore says:
    September 3, 2011 10:01 PM
    வெளி மாநிலம் வந்து மொழி தெரியாத இடத்தில் வந்து உறவுகளை இழப்பது என்பது மிகப் பெரிய சோகம். தொழிற்சங்க இயக்கம் என்ற பந்தமே பல முறை
    கை கொடுத்துள்ளது என்பது எனது சொந்த அனுபவம்.

    திரிவேணி சங்கமத்தில்
    குளிக்கச் சென்று ஒரு தோழரது தாயார் இறந்த போது, அவரை அங்கேயே அடக்கம் செய்ய எங்களது அலகாபாத் கோட்டத் தோழர்கள் உதவியுள்ளனர்.

    அதே போல் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு பலரும் சிகிச்சைக்கு வருவார்கள்.இறப்பு என்பது சில சமயம் தவிர்க்க இயலாததுதான். சொந்த
    ஊருக்கு எடுத்துச் செல்ல வழியில்லாமல் வேலூரிலியே அடக்கம் செய்வது
    என்ற கனத்த முடிவை எடுக்கிற போது உறவினர் என யாருமே இல்லாத போது சங்கத்தோழர்கள் தான் கூட இருக்க ேண்டியிருக்கும்.

    யாருமே இல்லை, நீங்கள் வாருங்கள் என அழைக்கிற போது யார் என்ன என்று தெரியாமலே பல தோழர்கள் வந்துள்ளனர். தோழமை உணர்வின்
    மகத்துவத்தை உணர்த்தும் தருணங்கள் அவை .
    --------------------------------------

    vimalavidya says:
    September 3, 2011 10:46 PM
    an EXCELLENT help our union comrades have done..no words to share the sorrows of that comrades and their families..It can be only felt..your writings brought tears in my eyes.heart became heavy Madhav...
    --------------------------------------

    ஹரிஹரன் says:
    September 3, 2011 11:37 PM
    எங்கே மனிதம் என்று கேட்பவர்களுக்கு இதோ தோழர்கள் சுரேஷ்பாபு சாமுவேல் ஜோதிகுமார் என்று மனம் சொல்கிறது.அந்த தோழர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    அடுத்தவர்களின் துயரத்திலும் காசு பார்க்கிறது தனியார் விமான நிறுவனக்கள்.
    --------------------------------------

    சீனி மோகன் says:
    September 4, 2011 1:01 AM
    தோழர் மாதவ்,
    உங்கள் பதிவு கண்ணீர் வரவழைத்து விட்டது. தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு இருவரையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். வெறும் பொருளாதாரப் போராட்டங்களைத் தாண்டி தொழிற்சங்கங்கள் மனித நேயத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete

Comrades! Please share your views here!