அருமைத் தோழர்களே!
வணக்கம்.
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. தருமபுரியில் அதனைப் பெறுவதற்கு ஏராளமான பட்டதாரிகள் வந்திருக்கின்றனர். ஆனால் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனைத் தட்டிக்கேட்ட கணவன் மனைவி இருவரையும் ஒரு டிஎஸ்பி நடு ரோட்டில் வைத்து தாக்கியிருகிறான். பத்திரிகையில் வந்த இச்செய்தி ஆத்திரத்தை ஊட்டுகிறது. நியாயம் கேட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை இதுதானா? அந்த டிஎஸ்.பிக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், படிக்காத நம் நாட்டின் சாதாரண மனிதர்களை வெறி பிடித்த இதுபோன்ற ஏவல்கள் என்ன பாடுபடுத்தும்? அதிகாரத்திமிரும், சட்டம் ஒழுங்கின் காப்பாளர்கள் தாங்கள் என்ற தெனாவெட்டுமே இந்தக் காரியங்களுக்கு பின்புலமாக இருக்கின்றன. இங்கு சட்டம், ஒழுங்கு எல்லாம் அடிபடும் மக்களுக்கு மட்டுமே இருக்கிறது. அடிக்கிறவர்களுக்கு இல்லை. இவர்களை அரசு விசாரிப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் தங்கள் கைகளை நீட்டி விசாரிக்க வேண்டும்.
முடிவுக்கு வரும் கணக்கும், முடிவுக்கு வராத கணக்குகளும்:
இந்த சர்க்குலர் தங்கள் கைகளில் கிடைக்கும்போது வங்கியின் இந்த வருடக் கணக்கு முடிந்திருக்கும். நமது உழைப்பால் இந்த வங்கியை மென்மேலும் உயர்த்த வேண்டும் எனும் வேகமும், தாகமும் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் உழைப்பைச் செலுத்துகிற நம்மை இந்த வங்கி நிர்வாகம் மதிப்பதில்லை. இந்த மனநிலையோடு நமது கணக்குகளை சரிபார்க்க வேண்டியது இருக்கிறது. 26.3.2012 அன்று நமது சங்க அலுவலகத்தில் கூடிய நமது இரு சங்கங்களின் சப் கமிட்டிகளும் இதுகுறித்து ஆழமாக பரிசீலனை செய்தன. பல்வேறு குறைபாடுகளும், கோளாறுகளும் நிர்வாக நடவடிக்கைகளில் இருப்பதையும், ஊழியர்கள்/ அலுவலர்களின் பிரச்சினைகளை நியாயமாக புரிந்துகொள்வதிலும் தீர்ப்பதிலும் இந்த நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்பதையும் நமது சங்கங்கள் உரக்கச் சொல்வது என முடிவு செய்திருக்கின்றன.
பதவி உயர்வுகள்:
வங்கியின் அனைத்துக் கேடர்களிலும் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. ஆனால் கடைநிலை ஊழியர்களிலிருந்து எழுத்தராகும் பதவி உயர்வு தவிர மற்ற அனைத்துக்கும் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. கடைநிலை ஊழியர்களிலிருந்து, எழுத்தர் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வந்ததைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை.
கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்வது சரியல்ல என்பதை நமது சென்ற சர்க்குலரிலேயே சுட்டிக்கட்டி இருந்தோம். கூடவே, அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் 17 என்பதை அதிகரிக்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கை வைக்கிறோம். மொத்தம் தேவைப்படும் கிளரிக்கல் கேடரில் 25 சதவீதம், பிரமோஷம் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என பிரமோஷன் விதிமுறை சொல்கின்றது. அப்படியானால் மொத்தம் தேவைப்படும் காலியிடங்கள் (17X4) 68 என முடிவுக்கு வரலாம். இந்த 68 உடன், சென்ற வருடம் பூர்த்தி செய்யப்படாத காலியிடங்களும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும். அதனை இந்த நிர்வாகம் செய்யவில்லை.
எழுத்தருக்கான பணிநியமனக் காலியிடங்கள் 139அறிவிக்கப்பட்டு, பணிநியமனம் நடத்தப்பட்டு, அதில் பலர் வேலைக்குச் சேர்ந்து, ராஜினாமா செய்து விட்டுப் போயிருக்கின்றனர். அப்படிப்பட்ட காலியிடங்கள் ஏறத்தாழ 50 இருக்கும் என கருதுகிறோம். அந்த காலியிடங்களை நிர்வாகம், அடுத்த வருடக் காலியிடங்களோடு சேர்த்து புதிய பணி நியமனமும், பதவி உயர்வும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், அந்தக் காலியிடங்களை அப்படியே வைத்து, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து நிரப்ப அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது. பல மாதங்கள் ஆகியும் அரசிடமிருந்து பதிலில்லை. ஆனால் இந்த பிரமோஷன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருந்தால் நமக்கு கேள்விகள் எழுந்திருக்காது. இப்போது அந்த 50 காலியிடங்களையும் அந்தரத்தில் வைத்துவிட்டு, கிளரிக்கலுக்கான பதவி உயர்வும், பணிநியமனமும் செய்ய நிர்வாகம் முடிவு செய்கிறது.
இந்த பழைய 50 காலியிடங்கள், ஒட்டு மொத்தமாக கிளரிக்கல் கேடருக்குத் தேவைப்படும் காலியிடங்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டால், மொத்தம் கடைநிலை ஊழியர்களிலிருந்து கிளரிக்கல் கேடர் பதவி உயர்வுக்கான காலியிடங்கள் 17லிருந்து 30 ஆக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்ட நிர்வாகமாக இருக்குமானால், நிச்சயம் இந்தக் கணக்கை போட்டு இருக்கும். மேலும் இதன்மூலம் கிளரிக்கல் கேடர் எண்ணிக்கையில் விழுகிற பெரிய பள்ளத்தைக் கொஞ்சம் சரி செய்ய முடியும்.
எனவே, இவ்விஷயத்தில் நாம் மூன்று அம்சங்களை முக்கியமாக வலியுறுத்துகிறோம்.
1. கடைநிலை ஊழியரிலிருந்து கிளரிக்கல் கேடர் பதவி உயர்வுக்கான காலியிடங்கள் 30 என உயர்த்த வேண்டும்.
2. கடைநிலை ஊழியரிலிருந்து கிளரிக்கல் கேடர் பதவி உயர்வுக்கான கல்வித்தகுதியை பழைய முறையில் உள்ளது போலவே (பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது கிடையாது) அறிவித்து உடனடியாக பதவி உயர்வுகான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
3. ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அனைத்து கேடர்களுக்கும் பதவி உயர்வுகளும் நடத்தப்பட்டு முடிக்க வேண்டும். தனிதனியாக நடத்துவதை அனுமதித்தால், வங்கிப்பணிகள் பெரிதும் பாதிக்கும்.
ஒழுங்கேயில்லாத ஒழுங்கு நடவடிக்கைகள்:
கடந்த சில வருடங்களில், இந்த வங்கி நிர்வாகம் எடுத்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் பலவும், நகைக்கடன் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கின்றன. வங்கியில் நடக்கும் ஒரே பிஸினஸாக நகைக்கடனை ஆக்கியது இந்த நிர்வாகம்தான். அதனுடைய விளைவுகள்தாம் இவை. இதுகுறித்து ஆராய்ந்து, அதைச் சரிசெய்வதற்கு நிர்வாகம் தயாரில்லை. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ தன் இஷ்டத்திற்கு அலுவலர்கள்/ஊழியர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது.
ஒரு கிளையில் முகாந்திரம் இருந்தும் போலீஸ் கம்ளைண்ட்டே கொடுக்க மாட்டார்கள். ஒரு கிளையில் முகாந்திரம் இல்லையென்றாலும் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தே ஆக வேண்டும் எனறு ஒற்றைக்காலில் நிற்பார்கள். சில கிளைகளில் ஒப்புக்கு கொடுத்து எஃப்.ஐ.ஆர் போடாமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஒரு கிளையில் சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவரை ஒன்றுமே செய்யாமல் அவரது ரிடையர்மெண்ட்டை பத்திரமாக பாதுகாத்து அனுப்பி வைப்பார்கள். மற்றவர்களை சஸ்பென்ஷன் செய்வார்கள். இன்னொரு கிளையில் ரிடையர் ஆகப்போகிறவருக்கு மட்டும் சார்ஜ் ஷீட் கொடுத்து, அவரது ஓய்வு காலச் சலுகைகளில் மண்ணள்ளிப் போடுவார்கள். மற்றவர்களை விட்டு விடுவார்கள்.
யாரோ செய்த தவறுக்கு அந்த கிளையில் பணிபுரியும் ஊழியர்களையும் அலுவலர்களையும் ‘பணத்தைக் கட்டிவிட்டால் ஒன்றுமில்லை’, ‘எழுதிக் கொடுத்துவிட்டால் ஒன்றுமில்லை’ என கண்காணிப்புத்துறை சீனிய மேலாளரே சம்பந்தப்பட்டவர்களோடு இறங்கி ‘கட்டப்பஞ்சாயத்து’ பேசுவார். பணம் கட்டிவிட்டால் ஒருவிதத் தண்டனை. பணம் கட்டாவிட்டால் அதோகதிதான்.
ஆதாரபூர்வமான கம்ப்ளைண்டுகள் நிர்வாகத்திடம் இருந்த போதிலும், சில பேர் மீது எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்காது. ஆனால், நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லையென்றால், மாதக்கணக்கில் ஆட்களை மாறி மாறி அனுப்பிவைத்து ‘அது நொட்டை’, ‘இது நொட்டை’ என சேகரித்துப் பழிவாங்கும்.
இப்படிப் பட்டியலிட்டால் ஊரே சிரிக்கவும், ஆத்திரம் கொள்ளவும் நிறைய நிறைய இருக்கின்றன. இந்த நிர்வாகத்தின் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் தகவல் திரட்டி, ஒரு ‘வெள்ளை அறிக்கை’ சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்மீது மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை விரைவில் தீர்மானிப்போம். நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்புகளும் இந்தியாவில் இருக்கின்றன என்பதை மட்டும் இப்போது நினைவுபடுத்துகிறோம்.
கோரிக்கைகள்:
நமது எழுப்பிய பல கோரிக்கைகள் இங்கு நிறைவேறாமலேயே இருக்கின்றன. எப்போது கேட்டாலும், ‘இதோ’, ‘அதோ’ என காரணங்கள் சொல்லிக்கொண்டு, ‘ஸ்பான்ஸர் வங்கியை’ கைகாட்டிக்கொண்டு நிர்வாகம் தன் காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறது. ஊழியர்கள்/அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்றால் காலம் நேரமில்லாமல் வெறிபிடித்து வேலை செய்பவர்கள், ஊழியர்களின் நலன் குறித்த வேலைகளில் மெத்தனம் காட்டுவது எப்படிச் சரியாய் இருக்க முடியும்?
Newspaper allowance, Petrol allowance, House maintanence allowance, Ex-servicemen payfitment, Halting allowance for holidays, Regularisation of leave for the officers participated strike on 10th december 2009, computer operating allowance for the new recuitees joined in the bank during 2008 என பல கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
இவைகளோடு, நிர்வாகத்தின் ஊழியர் விரோத நடவடிக்கையால் மேலும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அனைவருக்கும் 12 நாட்கள் கேஷூவல் லீவு இங்கு உண்டு என்பது தெரியும். நிரந்தமான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருமே 12 நாட்கள் லீவையும் ஒரே மாதத்தில் கூட எடுத்துக் கொள்ளலாம் என்பதும் தெரியும். இதுதான் நியதி. ஆனால் இந்த வங்கியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெறுகிறவர்கள் அப்படி மொத்தமாக கேஷுவல் லீவு எடுத்துக் கொள்ளக் கூடாதாம். அவர் அந்த வருடத்தில் எத்தனை மாதங்கள் பணியில் இருக்கிறாரோ, அத்தனை நாட்கள்தாம் எடுக்க முடியுமாம். அதற்கு மீறி எடுத்திருந்தால், அவரது ஓய்வுகாலச் சலுகைகளிலிருந்து பிடித்தம் செய்கிறது நிர்வாகம். இப்படி அல்லும் பகலும் ஊழியர்களுக்கு விரோதமாக சிந்திக்கும் மூளைகளால் நிர்வாகத்தின் கூடாரம் நிரம்பி வழிகிறது. எங்கும் இல்லாத நடைமுறை இது. இந்த நிர்வாகத்தின் அக்கிரமங்களுக்கு ஒரு எல்லை இல்லை என்பதைச் சொல்ல இதுபோன்ற நடவடிக்கைகளே சாட்சி. இப்போது இதையும் ஒரு கோரிக்கையாக எழுப்பி நிர்வாகத்துடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிர்வாகத்துடன் நாம் தொடர்ந்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் கொண்டு இருக்கிறோம். நமது சர்க்குலர்களில் கடுமையாக சுட்டிக்காட்டியும் இருக்கிறோம். ஆனால் இணக்கமாகப் பேசி, சுமூகமான தீர்வுகளை நோக்கி நகரமுடியும் என நம்பினோம். அவைகள் யாவும் பொய்த்துப்போன நிலையில் நாம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இதனைப் புரிந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி, வங்கியில் அமைதியும், சகஜமும் நீடிக்க வைப்பது நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது.
மீண்டும் அந்த சீனக்கவிதையே நினைவுக்கு வருகிறது....
மரம் சும்மா இருந்தாலும்
காற்று சும்மா இருக்க விடுவதில்லை.
தோழமையுடன்
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!