22.4.12

PGBEA - PGBOU circular 5/2012 dt 22.4.2012



சுற்றறிக்கை எண் : 5/2012 நாள்:22.04.2012


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

அண்ணல் அம்பேத்கரின் 121வது பிறந்த தினமாக ஏப்ரல் 14 வந்திருக்கிறது. காலம் காலமாக இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரது வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இந்த தேசத்தின் மனசாட்சியை பிடித்து உலுக்கியவர் அவர். புழுதியில் எறியப்பட்டு இருந்த மக்களைத் திரட்டி அதிகார பீடங்களுக்கு எதிராக நிற்கச் செய்தவர் அவர். வருண பேதங்களை போற்றிய அத்தனை புனிதங்களையும் தன் கேள்விச் சம்மட்டிகளால் நொறுக்கியவர் அவர். அவரது கலகக்குரல் மேலும் மேலுமாய் உயர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரளவும், தங்கள் மீதான கொடுமைகளை எதிர்த்துப் போராடவும் அவரே உத்வேகமளித்துக் கொண்டு இருக்கிறார். அவரை நினைப்பதும், வழி நடப்பதுவும் மனிதருக்குள் இருக்கும் பேதங்களை அகற்றும் மகத்தான காரியத்தை தீவீரப்படுத்தும். அண்ணல் அம்பேத்கரை போற்றுவோம்!

கம்யூட்டர்களுக்கு மின்சாரம் உண்டு; மனிதர்களுக்கு இல்லை!

கோடை உக்கிரமடைந்திருக்கிறது. மின்வெட்டு என்பது தமிழகத்தின் சாபமாய் பீடித்திருக்க, கிளைகளில் படும் துயரத்தை முதலில் சொல்லியாக வேண்டும். யுபிஎஸ் மூலம் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, பழுதடைந்த, காலாவதியான ஜெனரேட்டர்களோ மனிதர்களுக்கு மின்சாரத்தைத் தர முடியாமல் மூலையில் முடங்கிக் கிடக்கின்றன. வேர்வை வழிய, வெக்கையிலும் புழுக்கத்திலும் அவிந்து கிடந்து நாம் வேலை பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்பிக்கொண்டு வரும் கஸ்டமர்களும் இதே அவஸ்தைப்பட மாறி மாறி ஒருவருக்கொருவர் வார்த்தைகளில் எரிச்சலைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. கடிதங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் ஜெனரேட்டரை மாற்ற வேண்டும், சரி பண்ண வேண்டும் என தகவல் தெரிவித்த பின்னும் தலைமையலுலவகத்தில் யாருக்கோ வந்தது என இருக்கிறார்கள். மேலே இருப்பவர்களுக்கு நமது அன்றாடப் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் பொருட்டில்லை. நமது உழைப்பை உறிஞ்சுவதில் கறாராக இருக்கும் இந்த புண்ணியவான்களுக்கு, நமக்கு ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. தலைமையலுவலகத்தில் ஏசியும், மின்விசிறியும் வேலை செய்யாவிட்டால் இந்த உயரதிகாரிகள் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார்கள். மண்ணென்ணெய், பெட்ரோல், காதைக்கிழிக்கும் சத்தம் இல்லாத இன்வெண்டர் வசதியை அனைத்துக் கிளைகளுக்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இல்லையென்றால் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்துப் பணியாற்றும் சூழல் ஏற்படும். நவீனத்துவமும், தொழில்நுட்பமும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் சரியான அணுகுமுறை.

இப்படி நமது எரியும் பிரச்சினைகளைப் பேசினால், 'யாரும் இங்கே நிம்மதியாக இருக்கக் கூடாது' என்றும், 'தொழிற்சங்கம் என்பதை மறந்து நாம் நிர்வாகம் போல செயல்படுகிறோம்' என்றும் PGBWU நம்மைப் பழித்துச் சர்க்குலர் போடும். நமது பிரச்சினைகளை நாம் பேசினால் தப்பா? அதற்குத்தானே தொழிற்சங்கம். 'எல்லோரும் இன்புற்று இருப்பதையன்றி யாமொன்றையும் அறியோம் பராபரமே' என இருக்க நாமென்ன சன்மார்க்க சங்கமா? எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு சிரிக்க, நாமென்ன அவர்களைப் போல காமெடிப் பீஸா?

தலைமையலுவலகத்திற்கு வந்த அனாமதேய இ-மெயில்!

சில நாட்களுக்கு முன் தலைமையலுவலகத்திற்கு ஒரு அனாமதேய இ-மெயில் வந்துள்ளது.  CPPC, LRD, ARD, Advances என தலைமையலுவலகத்தின் பல துறைகளில் இருக்கும் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதனை உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சுட்டிக்காட்டி, "சரி பண்ணுங்கள்' என்று வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. ரகசியமாக வந்த மெயிலை, 'நான் ஒரு திறந்த புத்தகம்' என்று நிர்வாகம் தலைமையலுவலக்த்தின் நோட்டீஸ் போர்டில் அனைவரின் பார்வைக்கும் வைத்தது. அதன் போட்டோ நகலை நாம் நமது வெப்சைட்டில் வெளியிட்டு இருக்கிறோம்.

இந்த அனாமதேய இ-மெயிலில் காணப்படும் விஷயங்களில் சில அதிர்ச்சியளிப்பவையாய் இருக்கின்றன. சில முக்கியமானவையாய் இருக்கின்றன. அவை உண்மையாய் இருக்குமெனில், நிச்சயம் உடனடியாக அதனைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் முயல வேண்டும். எல்லோரின் பார்வைக்கும் இப்படி வைத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடாது. அதை சரிசெய்வதால் மட்டுமே, நேர்மையை பறைசாற்றிக்கொள்ள முடியும்.

நாம் இதுபோன்ற அனாமதேயங்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. எதையும் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, அதைத் தீர்ப்பதே, நேர்வழியென்று கருதுகிறோம். முகத்துக்கு நேராக பேச முடியாதவர்களே இதுபோன்ற காரியத்தில் இறங்குகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை, நமது சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்தால், இன்னும் அழுத்தமாக அம்பலப்படுத்தவும், தீர்க்கவும் நிச்சயம் முயலுவோம் நாம்.

அதிகரிக்கும் பணிச்சுமை தரும் அவஸ்தையும், ஆபத்துக்களும்!

சமீபமாக, கிளைகளில் பணிகள் சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று No frill அக்கவுண்ட்! Business correspondentகள் மூலம் வந்து குவியும் SB account opening formகளை கம்ப்யூட்டரில் ஏற்றி மாள முடியவில்லை. இதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு கிளைகளில் கூடுதல் மனிதசக்தி தேவைப்படுகிறது. அதற்கு வழிசெய்யாமல், இருக்கும் ஊழியர்களை வைத்தே செய்ய வைப்பதில்தான் சிரமங்கள் கூடுகின்றன. மேலும் இந்த Business correspondentகள் கொண்டு வரும் அப்ளிகேஷன்கள் சிலவற்றில்தான் கையெழுத்து காணப்படுகின்றன. பெரும்பாலும் கைரேகைகள்தான். இந்த கைரேகைகளை கணிணியில் பதிவதற்கு HCL  என்னும் பன்னாட்டு நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்து வருகிறவர்கள் "ஆத்தைக் கண்டோமா, அழகரை சேவிப்போமா?" என இருக்கிறார்கள். அவர்கள் பிடிப்பதுதான் ரேகைகள். காட்டுவதுதான் வாடிக்கையாளர்கள். ஆள் மாறாட்டங்களுக்கும், ரேகை மாற்றங்களுக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் போய் சரிபார்க்க இங்குள்ள அலுவலர்களுக்கு நேரம் இல்லை. வசதியும் இல்லை. எனவே இதில் ஏற்படும் முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும் நமது ஊழியர்களும், அலுவலர்களும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை நாம் இங்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

அடுத்தது IBSA என்று ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதற்கான வழிகாட்டும் விளக்கங்கள், பயிற்சியென எதுவுமில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் IBSAவை போஸ்ட் செய்ய வேண்டும் என விதிகளும் இல்லை. 4.30 மணிக்கு மேலும் கேஷ் வாங்கி, சரிபார்த்து, அப்பாடா என கேஷை முடிக்க கிட்டத்தட்ட 6 மணி ஆகிவிடுகிறது. அப்போதுதான் வேறு ஒரு கிளையில் இருந்து வந்திருக்கும் IBSA transactionகளை வரிசையாய் கம்ப்யூட்டர் காட்டுகிறது. அதையெல்லாம் கணக்கு வழக்குப் பார்த்து Day end போட்டு முடித்து, சீட்டிலிருந்து எழுந்திருக்க சாதாரணமாக ஏழுமணி ஆகிவிடுகிறது.

இப்படி வேலை பார்த்தாலும் இங்கு மதிப்பில்லை. மரியாதையில்லை. எந்த நேரத்தில் என்ன தவறு நம்மையறியாமல் நடந்திருக்குமோ என பயமே ஆக்கிரமிக்கிறது. இதனால் ஏற்படும் stress நம் ஊழியர்களையும், அலுவலர்களையும் கடுமையாய் பாதிக்கிறது. அதுதான் வங்கியின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கிறது. இவ்விஷயத்தில் நமக்கு ஆதரவாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டிய நிர்வாகம் நம்மை எப்போதுமே எதிரிகளாய் பாவிக்கிறது. இது இன்றைய PGBயில் காணப்படும் பொதுவான மனநிலை. இதுகுறித்து தீவீரமாக உரையாடவும், தீர்ப்பதற்கான வழிகாணவும் வேண்டி இருக்கிறது.

இப்படியெல்லாம் நடைமுறை பிரச்சினைகளை விவாதித்தால், "வங்கி ஊழியர்கள் அனைவரும் நிம்மதியற்று நோய்நொடியுடன் வாழ வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நாம் செயல்பட்டு வருவதாக' PGBWU சர்க்குலர் போடுகிறது. கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை. ஊழியர்களும், அலுவலர்களும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் இதையெல்லாம் நாம் பேசுகிறோம். இது 'தொழிற்சங்க வியாதிகளுக்கு' ஒருபோதும் புரியப் போவதில்லை.

பதவி உயர்வு, பணிநியமனம், மாறுதல்கள்:

Offcers scale II  மற்றும் Scale IIIக்கும் பதவி உயர்வு நடக்க இருக்கிறது. பங்குபெறும் அனைவரையும் நமது சங்கங்கள் வாழ்த்துகின்றன. குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர, பொதுவாக சென்ற முறை நடந்த பதவி உயர்வு நன்றாகவே இருந்தது. சீனியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதவி உயர்வு இருக்க வேண்டும் என்பதே நமது குரலாக எப்போதும் இருந்து வருகிறது. நிர்வாகம் அதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம். மேலும் பதவி உயர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டுமென்று நாம் கோரிக்கை வைக்கிறோம். அது தேவையற்ற சந்தேகங்களை, வதந்திகளை தீர்ப்பதோடு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர் பதவி உயர்வும், எழுத்தரிலிருந்து ஆபிஸர் பதவி உயர்வும் காலதாமதமாகும் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது. எழுத்தர்களுக்கான புதிய பணிநியமனத்தையொட்டி, பதவி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய பணி நியமனத்திற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்திற்கு நிர்வாகம் பொறுப்பில்லை. அரசுத்தரப்பில் இருந்து முடிவு எடுக்கப்படாமலும், பதில் வராமலும் இருக்கிறது. ஆனால் இந்தத் தாமதம் ஊழியர்களின் மனோநிலையையும், பணியையும் கடுமையாய் பாதிக்கும் என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.

பதவி உயர்வு, பணி நியமனம் போன்றவற்றில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை, மாறுதல்களிலும் எதிரொலிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களும், புதிய பணி நியமனம் பெற்றவர்களும், அருகாமையில் உள்ள கிளைகளுக்கு மாறுதல்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சங்கத் தலைமைகள் இதுகுறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றன. நிர்வாகத்துடனும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில், சாத்தியமான முடிவுகள் எட்டப்படும்.

PGBWU என்னும் தொழிற்சங்க வியாதியை விரட்டுவோம், PGBEANகளை பாதுகாப்போம்!

பன்றிக்காய்ச்சலுக்கு எதிராக தமிழகம் முடக்கிவிடப்பட்டு இருக்கும் வேளையில், நாம் PGBயிலும் அதுபோல ஒரு ஆபத்தை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். PGBWU என்னும் அந்த நோய்க்கிருமி (வைரஸ்) பரவாமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. டிரான்ஸ்பர் என்னும் ஆசை காட்டி அந்த வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸ் பிடித்தால், எதிர்ப்பு சக்தியை மூளையிலிருந்து மெல்ல மெல்ல மழுங்கடித்துவிடும். நம் பிரச்சினைகளைப் பேசாமல், கோரிக்கைகள் வைக்காமல், அடிமை மனோபாவத்தை ஏற்படுத்திவிடும். நாமே நம் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனோவலிமை இழந்து 'அண்ணன் பார்த்துக்கொள்வார்', 'அண்ணன் செய்து முடிப்பார்' என பரிதாபமாக முடமாக்கிவிடும். அதனால்தான் PGBWUவை நாம் தொழிற்சங்கவியாதி என்கிறோம்.

ஆறு பக்கத்திற்கும் மேலாக கிருமிகளை நிரப்பி சமீபத்தில் PGBWU ஒரு சர்க்குலர் விட்டிருக்கிறது. அதில் ஒரு வரி கூட, இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சினைகளைப் பேசவில்லை. இதுதான் அவர்களின் லட்சணம். 30 வருடங்களாக இந்த வங்கிக்கு பணிபுரிந்து ஓய்வு பெறுகிறவர்களின் அவலம், கிளைகளில் வாட்டும் பணிச்சுமை, நிறைவேறாத பொருளாதாரக் கோரிக்கைகள் என எவ்வளவோ பிரச்சினைகள் நம்முன் இருக்கின்றன. அதுபற்றிப் பேசுவது நம் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் ஆகாது என்று உபதேசம் வேறு! நோய் வந்தால் "சிகிச்சை எடுக்காதே, மருந்து சாப்பிடாதே' என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். அதனால்தான் PGBWUவை நாம் தொழிற்சங்கவியாதி என்கிறோம்.

நமக்கு AIRRBEA என்னும் அகில இந்திய சங்கம் இருப்பதுபோல், இவர்களுக்கு என்று ஒரு அகில இந்திய சங்கமே கிடையாது. கிராமவங்கிகளின் ஜீவாதாரமான பிரச்சினைகளை அகில இந்திய அளவில் பேசுவதற்கு ஒரு அமைப்பே கிடையாது. இதனால்தான் சவுத் மலபார் கிராம வங்கியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி இணைப்பிலுள்ள ஒரு குட்டிச் சங்கத்திலிருந்து (குட்டிச்சுவரிலிருந்து என்றும் வாசிக்கலாம். தப்பில்லை) காங்கிரஸ்காரரான கே.ராஜீவ் என்பவரை அழைத்து வந்து மாநாட்டில் பிலிம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சி என்றால் ஆகவே ஆகாது என்று ஜன்னி கண்டவர்கள் போல புலம்பவும் செய்வார்கள். அதுபோல மாநில அளவில் தங்களுக்கு இருக்கும் தொடர்பைக் காட்டுவதற்கு ஏ.கலியுல்லா என்று ஒருவரை வரவழைத்திருக்கிறார்கள். பல்லவன் கிராம வங்கியில் AIBEA  இணைப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர். இவர்களுக்கு மாநில அளவில் அமைப்பு இல்லாததால் கலியுல்லாவை வைத்து அடுத்த பிலிம் ஓட்டியிருக்கிறார்கள். அதுசரி. தியேட்டர் வைத்து, சினிமா வினியோகிப்பவர்களுக்கு அதுதானே தெரியும்!

அந்த கலியுல்லா, தங்களது AIBEA சங்கமோ, AIGBEA சங்கமோ கூட கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷனுக்காக போராடியதாகக் குறிப்பிடவில்லையாம். அகில இந்திய அளவில் பென்ஷனுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் இந்த சோட்டா PGBWU முன்னிற்பதைத்தான் பாராட்டினாராம். அய்யோ, அய்யோ. சமீபத்தில் பென்ஷனுக்காக நடந்த பிப்ரவரி 28 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் AIGBEA கூட பங்கு பெற்றதே, இந்த சோட்டா PGBWU பங்கு பெற்றதா? இதில் பெரும் வேடிக்கை என்ன வென்றால், இவர்களது ஆகப்பெரும் தலைவர் எல்.பாலசுப்பிரமணியன் சொன்னதாக அவர்களது சர்க்குலரிலேயே இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது: 'அகில இந்திய அளவில் தான் குரல் கொடுத்து, கிராம வங்கி ஊழியர்களுக்கு வங்கித்துறை ஓய்வூதியம் விரைவில் கிடைத்திட பாடுபடப் போவதாக கூறினார்'. ஆக, இனிமேல்தான் பாடுபடப்போகிறார்கள். இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்ரைசர்களுக்காக உளப்பூர்வமாகவும், செயல்பூர்வமாகவும் குரல் கொடுத்தது PGBOUவும் PGBEAவும். அவர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடர்ந்து, நிர்வாகத்தின் சர்க்குலரை நிறுத்தி வைத்து, இன்று பணிபுரியும் அனைத்து அப்ரைசர்களின் எதிர்காலத்தையும், வாழ்வையும் காப்பாற்றியது சி.ஐ.டியூ சங்கம். அந்த வழக்குச் செலவைக் கூட, அப்ரைசர்களிடமிருந்து யாரும் பெறவில்லை. ஆனால் அவர்களுக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காமல், கூச்சநாச்சமில்லாமல் பத்தாயிரம், ஐயாயிரம் என PGBWU மாநாட்டு வசூல் செய்ததைத்தான் நமது சென்ற சர்க்குலர்களில் சுட்டிக்காட்டியிருந்தோம். எதையுமே செய்யாமல் என்று நாம் குறிப்பிட்டதைப் பற்றிப் பேசாமல் மாநாட்டு நிதி வசூல் செய்வதை நாம் குறை சொன்னதாக தொழிற்சங்க வியாதி பொங்கி எழுந்திருக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள் என்றால் அப்ரைசர்களுக்காக இதையெல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம் என சொல்லட்டுமே. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!

அதை விட்டு விட்டு, நமது பொதுச்செயலாளர் உடல்நலக்குறைவுற்றிருந்த போதும், அவரது மகள் திருமணத்தின் போதும் உறுப்பினர்களிடமிருந்து மிரட்டி, ஏமாற்றி, நிர்ப்பந்தப்படுத்தி வசூல் செய்யப்பட்டதாம். அவர் வேண்டவே வேண்டாம் என மறுத்தும், அவர் மீது அன்பும், தோழமையும் கொண்ட உள்ளங்கள் தானாக முன்வந்து செய்த உதவியை இழிபுத்திகளால் மட்டுமே இப்படி கொச்சைப்படுத்த முடியும். நம் பொதுச்செயலாளரின் கால்தூசிக்கு பெறுவார்களா? தொழிற்சங்கத்துக்காக அவர் செய்திருக்கும் அர்ப்பணிப்பு, தியாகத்தில் ஒரு துளியையாவது கடைந்தெடுத்த அந்த சுயநலவாதிகளும், வியாபாரிகளும் தங்கள் வாழ்நாளில் செய்திருப்பார்களா?

நாம் சங்கமாக வைத்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள்தாம் முதலில் தனிநபர்கள் மீது அவதூறுகளை வீசியிருக்கிறார்கள். எனவே நாம் அவைகளை உண்மைகளால் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வங்கியில் பத்து வட்டி என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவது யாராம்? நல்லூர் கிளையில் சாதாரண கிளர்க்காய் இருந்த ஒருவருக்கு இன்று கோடிக்கணக்கான சொத்துக்களும், தியேட்டர்களும் எப்படி சொந்தமாயின? நேற்று வரை பஸ்ஸுக்கு நாற்பதும், ஐம்பதுமாய் கிளை மேலாளரிடம் கடன் வாங்கிக்கொண்டு இருந்த ஒருவர் இன்று பனிரெண்டு லட்சம் வேகன் வண்டியில் திடீரென்று வந்து இறங்குவது எப்படி? கையை கையைப் பிசைந்து கொண்டு இருந்த இன்னொருவர் இன்று தன் வீட்டில் மூன்றாவது காராக பதிமுன்று லட்சம் ஷைலோவை நிறுத்தி வைத்திருப்பது எப்படி? அவர்கள் எல்லாம் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா? ஊரார் வயிற்றில் அடித்து, உலை வைத்ததால் வந்தவைதானே? அந்தக் கதைகளை எல்லாம் பேசுவோமா? சுயநலமே உருவான அவர்கள் எங்கே? இத்தனை வருடம் பணிபுரிந்தும் தனக்கென்று ஒரு சொந்த வீடு இல்லாமல், தொழிற்சங்கப் பணிகளுக்காய் ஆயிரம் நாட்களுக்கு மேல் லீவு போட்டு இழப்புகளை தாங்கிக்கொண்டு இருக்கும் நமது பொதுச்செயலாளர் எங்கே?

ஜாக்கிரதை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, நிலமோசடி செய்தது என பெரும் தலைகள் வழக்குகளை சந்தித்து வரும் காலமிது. போனால் போகிறது என இந்த தொழிற்சங்க வியாதிளை விட்டு வைத்திருக்கிறோம். இதற்கு மேலும் சீண்டினால், அவர்கள் குறித்த கணக்கு வழக்குகள் என ஆரம்பித்து, நமது வெப்சைட்டில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டி வரும். அதுகுறித்து பகிரங்க விசாரணைக்குத் தயாரா?

இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை எங்கள் பணியாக செய்து வருகிறோம். இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களின் சுய மரியாதையையும், உரிமைகளையும் பேணி நிறுத்த வேண்டியது எங்கள் பொறுப்பாக உணர்ந்திருக்கிறோம். தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக எங்களை முன்னிறுத்தியிருக்கிறோம்.  நியாயங்களுக்காக எந்த சமரசமும் அற்றுப் போராடுவதை எங்கள் மூச்சாகக் கொண்டு இருக்கிறோம். அதற்காக எந்த தியாகத்தையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். இதற்கு இடையூறாய் இருப்பவர்களையும், சமரசப் பார்வை கொண்டு தொழிற்சங்க இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறவர்களையும் வேரோடும், வேரடி மண்ணோடு வீழ்த்தவும் சித்தமாயிருக்கிறோம்.

கோடிக்கால் பூதமடா! கோபத்தின் ரூபமடா!!
தொழிலாளி வர்க்கமடா!!! - அது தோற்றதில்லை தெரியுமாடா?

பென்ஷனை முன்வைத்து நமது அகில இந்திய இயக்கம்:

(1) பென்ஷன் (2) தேசீய கிராமப்புற வங்கி (3) தற்காலிக ஊழியர்களின் பணிநிரந்தரம் (4) ஸ்பான்ஸர் வங்கி அலுவலர்கள் டெபுடேஷனை ரத்து செய்தல் (5) வங்கியின் நிர்வாகக்குழுவில் அலுவலர்கள், ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நமது அகில இந்திய சங்கம் AIRRBEA தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது.

முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் பெற்று நிதியமைச்சருக்கு சமர்ப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. நாமும் பத்துக்கும் மேற்பட்ட எம்.பிக்களிடம் கடிதம் வாங்கி அனுப்பி இருக்கிறோம். அடுத்ததாக, மாநிலத் தலைநகரில் ரிசர்வ் வங்கி, நபார்டு அலுவலகங்களில் மெமோரெண்டம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. PGBEA , PGBOUவின் பொதுச்செயலாளர்கள் சென்னை சென்று மெமொரெண்டம் அளித்து வந்திருக்கின்றனர்.

வரும் 26ம் தேதி டெல்லியில் நமது அகில இந்திய சங்கம் தர்ணாவும், கருத்தரங்கமும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் இருந்து டெல்லி நோக்கி பல்லாயிரக்கனக்கில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் திரளும் மகத்தான போராட்டம் அது. தமிழகத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருக்கிறோம். கிராம வங்கிகளின் வரலாற்றில், கிராம வங்கி ஊழியர்களின் வாழ்க்கையில் AIRRBEAவே காற்றாகவும், வெளிச்சமாகவும் இருக்கிறது!

இரண்டு நாளைக்கு முன் உடல்நலக்குறைவால் சிசிச்சை பெற்றிருக்கிறார் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.திலீப் குமார் முகர்ஜி. மருத்துவர்கள் அவர் திரவ உணவுதான் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் டெல்லி தர்ணாவுக்கு நான் வருவேன் என அவர் செய்தி அனுப்பியிருக்கிறார். ‘கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வாங்கித் தந்துவிட்டுத்தான் என் உயிர் போகும்' என்று சொல்கிறவர் அவர். உண்மையான தொழிற்சங்கத் தலைவர் அவர்!

தோழமையுடன்
 
(J.மாதவராஜ்)                        (P.S.போஸ்பாண்டியன்)
தலைவர் - PGBEA               தலைவர்- PGBOU

4 comments:

  1. Yen tholar ivvalu aokkrosam, pgbyila yaru yaru yenna yenna enpathu ellarukkum theriyum, anthisayura neraththil palpodi vikkira kostikalai naam
    kandukkamave irrukkanum

    ReplyDelete
    Replies
    1. thus numberi bewakoob!

      நாம் சங்கமாகப் பேசியதற்கு, தனிநபர் தாக்குதல்கள் அவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அவர்கள் என்ன சொன்னாலும் கண்டுக்காம விடுறதுதான் நாம் செய்கிற தப்பாகத் தெரிகிறது. இனி அப்படி இருக்க முடியாது.

      இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்கிற காரியத்தை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். நிர்வாகத்துடன் இணக்கம் என்ற பெயரில், பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்கிறார்கள். கூட்டுபேர உரிமைக்கு வேட்டு வைத்து,
      நாம் இன்று பல உரிமைகளை இழந்து நிற்பதற்கும் அவர்களே காரணம்.

      அதை அம்பலப்படுத்துவதும், எதிர்ப்பதும், தோழர்களுக்கு சரியான திசை காட்டுவதும் ஒரு தொழிற்சங்கத்தின் கடமை. அதைத்தான் நாம் செய்கிறோம்.

      Delete
  2. அருமை.தொடர்ந்து செயல்படுவோம்.

    ReplyDelete

Comrades! Please share your views here!