6.6.12

போஸ்டர் என்பது...




கடந்த இரண்டு மூன்று நாட்களும், பழைய 42-பி எல்.எப் தெரு காலங்களை நினைவுபடுத்துவதாய் இருந்தன. சங்க அலுவலகம் முழுக்க தோழமையும் தோழர்களுமாய் நிரம்பியிருந்தனர். வரும் 8ம் தேதி வேலைநிறுத்தத்திற்கான ஆயத்த வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. இந்த நாட்களில் வந்து கூடவே இருந்த நமது தோழர் S.K.V.மூர்த்தி (மெட்டுக்குண்டு கிளை) அவர்கள், அந்த அனுபவத்தை மெயிலில் பகிர்ந்திருந்தார். அதனை நம் தோழர்கள் அனைவரும் அறிய இங்குத் தருகிறோம்.


                 
ஒரு சிறு குழந்தையின் மென் ஸ்பரிசத்தைப்போலவும், விரிந்து மலந்திருந்த பூவை தொட்டது போலவுமாய் உணர முடிகிறது . போராட்ட காலங்களை அறிவுறுத்துகிற போஸ்டர்களை அப்படித்தான் பார்ப்பதற்கு கற்றுத்தந்திருக்கிறது பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், அலுவலர் யூனியனும். மீண்டும் எனக்கு அப்படி ஒரு பாக்கியம் வாய்த்தது.

வருகிற 8 ஆம் தேதி நடக்க இருக்கிற எங்களது அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க வேலைநிறுத்ததிற்கான முன் தயாரிப்பு வேலைகளை செய்வதற்காக நமது தொழிற்சங்க நிர்வாகிகள் அழைப்பினாலும், மனந்தொட்ட கூப்பிடலாலும் எங்களது சங்க அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். பொதுவாகச்சொல்கிறார்கள். கட்டிடம் என்றாலே வெறும் செங்கலும், சிமெண்டும் மட்டும் கலந்து சுமந்து நிற்பது என. அப்படியில்லை நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையும், ரத்தமும் உணர்வும் கலந்து எழுப்பப்பட்டதே அது என்பேன் நான்.

இப்போது பரவாயில்லை, நாங்கள் எங்களது சங்க அலுவலத்தை அங்கு பதியனிட்டிருந்த காலங்களில் வீடுகள் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் சிதறிப்போய்தான்காணக்கிடைத்தது. கிளையிலிருந்து வரும் பொழுதே அன்பின் மனிதர் எங்களது சங்கப்பொதுச்செயலாளர் அவர்களிடமிருந்து போன். “இதோ வந்துர்ரேன்னா”  ஆம் அவரை நான் மற்றும் எனது வயதை ஒத்த அனைவரும் அப்படித்தான் கூப்புடுகிறோம்.

எங்களுக்குள் மலர்ந்து சிரித்துக்கிடந்த அன்பும்,நெசவிட்டிருந்த பிரியமும் எங்களை அப்படி அழைக்க வைத்தது. அவரும் அதை மனமார ஏற்றுக்கொள்கிறார். மனம் தொட்ட மனிதராக இந்த கணம் வரை திகழ்கிற அவருக்கு ஒரு ராயல் சல்யூட் இந்த நேரத்தில்.

போய் விட்டேன் சங்க அலுவலகம் இருக்கிற இடத்தை நெருங்கி. அந்தப்பக்கம் போய் விட்டாலே மாரியப்பன் டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டு விட்டு செல்வதுதான் எனது வழக்கம்.இன்றும் அப்படியே.    பின்னே அவர் கோபித்துக்கொண்டால்?

தொழிற்சங்க அலுவகத்திற்குள் தோழமை மனதுடன் அன்பின்மனிதர்கள்  சோலைமாணிக்கம் அண்ணா(பொதுச்செயலாளர்), தோழர்.மாதவராஜ்(தலைவர்), பழையபேட்டை மணி அண்ணா, முதலாளி சங்கர சீனி, கோவில்பட்டி பாலு சார், கிருஷ்ணன் சார், சங்கர் பரதன் சார், ஆண்டோ அண்ணன், அருண், சுந்தர், வெகுமுக்கியமாக எங்களது ரெங்கண்ணா, மற்றும் பலர் என பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இரண்டு ரூம், ஒரு ஹால் என காட்சிப்பட்ட எங்களது சங்க அலுவலகத்தின் மைய ஹாலில் அமர்ந்து எல்லோரும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரின் கையும் பிணைந்திருந்த வேலை ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்திற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தது,

மனம்,உடல்,கை எல்லாம் வேகமெடுக்க, அவசர,அவசரமாக போஸ்டர்களை மடிக்கிறார்கள், கவருக்குள் போடுகிறார்கள், அட்ரஸ் எழுதுகிறார்கள், கவரின் வாயை பசை தடவி ஒட்டுகிறார்கள். இதற்கு இடையே அவரவருக்கு வருகிற போனை அட்டென் பண்ணிக்கொள்கிறார்கள். இரவு வீடு வர தாமதமாகும், சங்கப் பணியாக விருதுநகரில் இருக்கிறேன் என்கிறார்கள்.

நான் ,அந்தபோஸ்டர்களையே உற்றுப்பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன் நினைவுகள் சூழ. நான் பணி புரிகிற அலுவலகத்திலிருந்து கிளம்பியது முதல் சங்க அலுவலகம் வருகிற வரை நான் பார்த்த இடங்கள், காட்சிகள், மனிதர்கள , இன்னபிறவென எல்லாம் மறந்து போக காலங்களுக்குள் பயணித்துக் கொண்டு இருந்தேன்.

ரொம்பவும்தான் நாளாகிப்போனது போஸ்டர்களைத்தொட்டுத்தடவி. அதன்  வாசனை நுகர்ந்து. அதன் வண்ணத்தை ரசித்து. அதை தோள்  மீதும்,மார்மீதுமாய் தூக்கி சுமந்து. பசைதடவி ஒட்டி.

- S.K.V  மூர்த்தி (மெட்டுக்குண்டு கிளை)

2 comments:

  1. மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  2. கவிதையாய் ஒரு கடிதம்..... அதில் ”ஆண்டோ அண்ணன்” என்பதெல்லாம் குசும்பின் உச்சம்!!!!!- வாழ்த்துக்கள்ண்ணே!!!

    இனிவரும் தலைமுறையினருக்கு இது போன்ற அனுபவங்கள் வாய்க்க வேண்டும்.... வாய்க்கும்!!!!- நம்பிக்கையோடு அண்டோ.

    ReplyDelete

Comrades! Please share your views here!