28.3.15

எழுச்சிமிக்க அகில இந்திய தர்ணா!

பாண்டியன் கிராம வங்கியின் தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு முக்கியமான நாள் 27.3.2015!

கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்தும், ஆட்குறைப்பு செய்யும் Manpower குறித்த மித்ரா கமிட்டியின் அறிக்கையை எதிர்த்தும் அகில இந்திய கிராம வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பாக தேசம் முழுவதும் 56 கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்களின் முன்பாக தர்ணா நடத்தும்படி அழைப்பு விடுத்திருந்தது.

அதனை ஏற்று, பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக நேற்று 27.3.2015 அன்று AIRRBEAவின் இணைப்புச் சங்கங்களான PGBWUவும், PGBOUவும் தர்ணா நடத்தின.

இன்றைக்கு இருக்கும் கிளைகளின் விரிவாக்கம், தொலைதூரக் கிளைகள், கிளைகளில் இருக்கும் manpower shortage, ஆண்டு இறுதிக் கணக்கு முடிக்கும் சமயம் எல்லாம் தாண்டி 150க்கும்  மேற்பட்ட தோழர்கள் தர்னாவில் கலந்து கொண்டனர்.

அதில் சரிபாதியாக 2008க்குப் பிறகு பணிக்குச் சேர்ந்த புதிய தோழர்களும், 20 க்கும் மேற்பட்ட பெண் தோழர்களும் கலந்துகொண்டனர். உணர்வு பூர்வமாகவும், ஈடுபாட்டோடும் அவர்கள் கலந்துகொண்டது மொத்த தர்ணாவுக்கும் சிறப்பு சேர்த்த விஷயம். இளம் தோழர்கள் அருண் பிரகாஷ்சிங், சந்தான செல்வம், அண்டோ கால்பர்ட்டின் உரத்த குரல்களில் கோஷங்கள் எழும்ப தர்ணாப் பந்தல் எழுச்சியும், உற்சாகமும் பெற்றது.

தர்ணாவுக்கு, PGBWU தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தோழர்.கிருஷ்ணன் (AIRRBE-TN president), தோழர்.போஸ்பாண்டியன் (VP- PGBOU), தோழர்.தேனீவசந்தன் (CITU).  தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் (WP - PGBWU),  தோழர்.சங்காலிங்கம் (GS-PGBOU), தோழர்.சங்கரசீனிவாசன் (JS-PGBWU), தோழர்.பாலன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), தோழர்.முத்துவிஜயன் (EC- AIRRBEA, TN) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கியும், ஆதரித்தும் பேசினர். போராடாமல் இங்கு வாழ்க்கையில்லை என்பதை உணர்த்தினர்.

இறுதியாக நிறைவுரையாற்றிய தோழர்.மாதவராஜ் (GS - PGBWU) கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கினார். நிர்வாகக்குழுவில் இடம்பெறும் தனியார்களுக்கு, லாபத்தை உயர்த்தி அவர்களது டிவிடெண்டுகளை அதிகரிக்கும் எண்ணம் மட்டுமே மேலோங்கும், அதனால் பாதிக்கப்படுவது கிராம வங்கிகளில் பணிபுரிகிற ஊழியர்களும், அலுவலர்களும் என்பதை விளக்கினார். லாபத்தை அதிகரிக்கும் வெறியில் தனியார்கள் ஊழியர்களின் சலுகைகளிலும், உரிமைகளிலும்தான் கை வைப்பார்கள். பென்ஷன் திட்டத்தை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். வணிக வங்கியின் ஊதியம் கிராம வங்கிகளுக்கு கொடுப்பதை எதிர்ப்பார்கள். சகலத்தையும் அவுட்சோர்சிங் செய்து கடும் உழைப்புச் சுரண்டலை அரங்கேற்றுவார்கள். காலச்சக்கரத்தை பின்னுக்கு இழுப்பார்கள் என தனியார் மயமாக்கலின் கொடூர முகத்தை தெளிவுபடுத்தினார்.

மித்ரா கமிட்டியின் அறிக்கையின் மூலம் கிளைகளில் கடுமையான shortage of manpower ஏற்படும் என்பதையும், பணிச்சுமையினாலும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவதாலும் நாம் பாதிக்கப்படுவோம் என்பதையும் எடுத்துரைத்தார்.

தோழர்.சாமுவேல்ஜோதிக்குமார் (President - PGBOU) நன்றி கூற தர்ணா மீண்டும் உரத்த கோஷங்களோடு நிறைவடைந்தது. இரு சங்கத்தின் தலைவர்களும் பொதுமேலாளரை சந்தித்து மெமோரண்டம் சமர்ப்பித்தனர்.

மறக்க முடியாத - அற்புதமான தர்ணாவின் தருணங்கள் இங்கு காட்சிக்கு...



















No comments:

Post a Comment

Comrades! Please share your views here!