6.6.12

PGBEA - PGBOU circular 8/2012 dt 04.06.2012



சுற்றறிக்கை எண்: 8/2012
நாள்: 4.6.2012

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர்களுக்கான பதவி உயர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதிக அளவில் சீனியாரிட்டிக்கு மதிப்பளிக்கப்பட்டு இருப்பதை முதலில் வரவேற்கிறோம். PGBEA, PGBOU சங்கங்களின் நிலைபாட்டினை இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது அவசியம். இந்தப் பதவி உயர்வுக்கு, கல்வித்தகுதியாக 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்லியது. அதனை நாம் மட்டுமே இங்கு கடுமையாக ஆட்சேபித்தோம். நிர்வாகத்திடம் நமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். நமது உறுதியால், நிர்வாகத்தின் முடிவு சரி செய்யப்பட்டது. அதன் விளைவாக தோழர்கள் பயனடைந்திருகிறார்கள், பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜூன் 8- அகில இந்திய வேலை நிறுத்தம்!

நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் அறைகூவலை ஏற்று, (1) பென்ஷன் , (2) தேசீய கிராமப்புற வங்கி, (3) வங்கி நிர்வாகக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடம், (4) அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்குதல், (5) ஸ்பான்ஸர் வங்கி டெபுடேஷன் முறையை ரத்து செய்தல் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நமது மண்டலக் கூட்டங்களில் இதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாகவும், அழுத்தமாகவும் சொல்ல வேண்டுமானால், இந்த வேலை நிறுத்தம் நமது எதிர்கால வாழ்வுக்கான போராட்டம்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என உரிமைக்குரல் எழுப்பி, பெரும் போராட்டங்கள் நடத்தி, வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை நாம் இப்போது பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் அந்தக் கோரிக்கை முழுமை பெறாமல் இருக்கிறது. கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இணையான பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து பணி ஓய்வு பெறுகிற மற்றும் பெற இருக்கிற நம் தோழர்களின் எதிர்காலத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பென்ஷன் இன்று பூதாகரமாக எழுந்து நிற்கிறது. நமது குழந்தைகள் கல்வி கற்று ஓரளவுக்கு நல்ல நிலைமையிலிருந்தாலும், முதுமைக்காலத்தில் நமது கால்களில் நாமே சுயமாய் நிற்கவும், ஒரு மரியாதையைப் பெற்றுதரவும் பென்ஷன் நம் அனைவருக்கும் வேண்டியதிருக்கிறது.

நமது அகில இந்திய சங்கம் இதனைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடி வருகிறது. முதலில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பென்ஷன் நமது உரிமையென்பதை நிலைநாட்டியது. நமது இயக்கங்களின் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து, கிராம வங்கிகளில் பென்ஷனை அமல்படுத்தும் சாத்தியங்களை உருவாக்கியது. அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்று, பாரளுமன்றத்தில் பென்ஷனுக்கான நமது குரலை ஒலிக்கச் செய்தது. இப்போது அரசின் காலதாமதத்தை முறியடித்து, கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் விரைவில் பென்ஷனை வழங்கும் உத்தரவைப் பிறப்பிக்க போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான நாள்தான் ஜுன் 8!

வேலை நிறுத்தத்திற்கான போஸ்டர்களும், துண்டுப்பிரசுரங்களும் கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. போஸ்டர்களை பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டி வையுங்கள். பிரசுரங்களை அவர்களிடம் விநியோகியுங்கள்.

தோழர்களே!
‘ஜுன் 8ம் தேதி வேலை நிறுத்தம்’  கிராம வங்கிகளில் பணிபுரிகிற ஒவ்வொரு ஊழியருக்கும், அலுவலருக்குமான போராட்டம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்னும் கனவுகள் நிரம்பிய வேலைநிறுத்தம். இந்த வேலைநிறுத்தத்தில் நமது தோழர்கள் அனைவரும்  உறுதியுடனும், உற்சாகத்துடனும் பங்கு பெறுவதன் முலமே  நமக்கு பென்ஷன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்!

இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.  உள்நோக்கங்கள் அற்று, இந்த வேலை நிறுத்தத்தின் நியாயத்தையும், அவசியத்தையும் உணர்ந்த மாற்றுச் சங்கத் தோழர்கள், தங்கள் ஆதரவுக்கரங்களை நீட்ட வேண்டும் என விரும்புகிறோம். தங்கள் தலைமையின் முடிவினால், இந்த வேலை நிறுத்ததில் பங்கேற்க முடியாத நிலைமையில் இருந்தாலும், ‘நமக்காக அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது  வங்கிக்கிளைகளை நாம் திறக்கிறோமே’ என  அவர்களில் பலருக்கு மனசாட்சி உறுத்த வருத்தங்கள் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் வேலைநிறுத்தத்தை முறியடிக்க நிர்வாகத்தோடு அவர்கள் கைகோர்த்து, கூட்டு சேர்ந்து நிற்க மாட்டர்கள் எனவும் நம்புகிறோம்.

அதேவேளையில் எந்தவித வருத்தங்களுமில்லாமல், மெனக்கெட்டு கிளைகளை இயக்கி யாராவது மார்தட்டிக் கொள்வார்களேயானால்,  அவர்கள் தங்கள் சாப்பாட்டிலும், தங்கள் எதிர்காலத்திலும் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் மட்டுமல்ல. பென்ஷன் என்னும் நமது வாழ்வாதாரத்தைப் பறிக்கிற, வரலாறு ஒருபோதும் மன்னிக்காத  துரோகிகளும் ஆவார்கள்.

இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை நமது சங்கங்கள் முடிவு செய்து இருக்கின்றன. வேலை நிறுத்தத்தை முறையாகவும், முழுமையாகவும் நடத்துவதற்கே இந்த ஏற்பாடுகள்.
1) புதிதாக பணிக்குச் சேர்ந்து, Probationary perioid-ல் இருக்கும் தோழர்களுக்கு இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


2) முன்னரே முறையாக தெரிவிக்கப்பட்டு, 5 மணிக்குள் கிளைகளுக்கு வந்து key registerல் கையெழுத்துப் போட்டு சாவி வாங்க யாராவது வந்தால் மட்டுமே Keyகளை ஒப்படையுங்கள். 5 மணிக்குப் பிறகோ, கிளைகளுக்கு வெளியேவோ சாவி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டால் மறுத்து விடுங்கள்.

3) வேலைநிறுத்தம் முடிந்து 9.6.2012 அன்று தங்கள் கிளைகளில் keyஐப் பெறும்போது, அலுவலர்கள் jewel packetகளை முறையாக count செய்து வாங்குங்கள். அதுபோல எழுத்தர்கள் cash check செய்து key  வாங்குங்கள்.

4) வேலைநிறுத்தத்தில் பங்கு பெறும் ஊழியர்களும், அலுவலர்களும் தங்கள் paswordகளை மாற்றிக் கொள்ளுங்கள். அதை யாரிடமும் கொடுத்துவிட வேண்டாம். 


இவை யாவும் வங்கி விதிகளுக்குட்பட்டவைகளே! இதில் எந்த சமரசமும் வேண்டாம். இவைகளை மீறச் சொல்லி நெருக்கடிகளும், மிரட்டல்களும் மேலிருந்து வரலாம். உடனடியாக சங்கத் தலைமையை தொடர்பு கொள்ளுங்கள்.

தோழர்களே!
ஜுன் 8ம் தேதி வேலை நிறுத்ததை வெற்றிகரமாக்கி, அனைவரும் மதுரைக்கு வந்துவிடுங்கள். அன்று வடக்கு மாசி வீதியில், சொக்கநாதர் திருமண மண்டபத்தில் ‘கிராம வங்கிகளின் எதிர்காலம்’ குறித்து ஒருநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தோழர்கள் விக்கிரமன் (CITU), சி.பி.கிருஷ்ணன் (BEFI), கிரிஜா (AIIEA) மற்றும் நமது சங்கத்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்களை அழைத்து மரியாதை செய்யவும் இருக்கிறோம். அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தக் கருத்தரங்கத்தில் தோழர்கள் கலந்து கொள்ளும் எண்ணிக்கையும், எழுச்சியுமே வேலைநிறுத்தத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்.

வாருங்கள், வாருங்கள் தோழர்களே!
நமக்கான வாழ்வில் ஒளியேற்றுவோம், வாருங்கள்!

தோழமையுடன்

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!