14.6.12

Meeting for Retired PGB Staff



இன்று பாண்டியன் கிராம வங்கி, நவீன காலத்தின் மாற்றங்களோடு தன்னைப் பொருத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதன் அடித்தளமாகவும், வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களாகவும் இந்த வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். நிர்வாக இயந்திரம் அந்த அனுபவங்களை பதிவு செய்து வைத்திருக்கிறதோ இல்லையோ, நாம் அவைகளை பத்திரமாக வைத்திருக்கிறோம்.


இந்த வங்கியிலிருந்து அவர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஏறத்தாழ, இதன் தொடர் கண்ணியிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள். மறக்கவே முடியாத நாட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விடுகிறார்கள். வாழ்வின் ஒட்டத்தில் நடக்கிற வலி மிகுந்த யதார்த்தமாக இது இருக்கலாம். ஆனால் நம் உறவுகளையும், தொடர்புகளையும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.


கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் சாத்தியமாக இருக்கிற, இந்த கணத்தில் அப்படியொரு அவசியம் இருப்பதாக உணர்கிறோம். ஓய்வு பெற்ற தோழர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக்க வேண்டும் என நமதுஅகில இந்திய சங்கம் AIRRBEA நமக்கு அறிவுறுத்தியிருக்கிறது. நாளை பென்ஷன் அமல்செய்யப்படும் போது எழும் அவர்களது பிரச்சினைகளை represent  செய்ய அவர்களுக்கு ஒரு சங்கம் தேவை. அதுமட்டுமல்ல, நம்மோடு நல்லது கெட்டதுகளில் பங்குபெறும் ஒரு PGBEAN ஆக, அவர்கள் தொடர்ந்து பயணிக்கவும் முடியும்.


இந்த பின்னணியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நமது வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற அத்தனைத் தோழர்களையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைத்து, சங்கமாக்குவது என்னும் உயர்ந்த நோக்கத்தில் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். 15.06.2012, வெள்ளிக்கிழமை அன்று விருதுநகரில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் காலை 12 மணிக்கு கூட்டம் துவங்குகிறது. சிறிதுநேரம் மனம் விட்டுப் பேசி, மதிய உணவருந்தி, முறையாக கூட்டத்தை 3 மணிக்கு துவக்கி 6 மணிக்குள் முடிப்பது என திட்டமிடப்பட்டு இருக்கிறது.


இதுவரை பணி ஓய்வு பெற்ற 100க்கும் மேற்பட்ட தோழர்களில் ஏறத்தாழ 70 தோழர்களை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசியிருக்கிறோம். முகவரி பெற்று அழைப்பிதழ்கள் அனுப்பி இருக்கிறோம். மிகுந்த நெகிழ்வோடும், சந்தோஷத்தோடும் அவர்கள் வருவதாக உறுதியளித்து இருக்கிறார்கள்.

இன்னும் சிலரது தொலைபேசி எண்களும், முகவரிகளும் கிடைக்காமல் இருக்கின்றன. நமது தோழர்கள் தங்களுக்குத் தெரிந்த, ஓய்வு பெற்ற தோழர்களுக்கு இந்தக் கூட்டம் பற்றி தெரிவித்து, அவர்களையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கடந்துபோன காலங்களின் பசுமையான நினைவுகளோடு, கூட்டம் பற்றிய சிந்த்னைகள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

1 comment:

  1. வாழ்த்துக்கள். நல்ல துவக்கமாய் இருக்கட்டும்.

    ReplyDelete

Comrades! Please share your views here!