1.7.12

பணி ஓய்வையே பலி கேட்கும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்!



தோழர். திருவேங்கடத்தான் பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டது. விளைவு? அவருக்கு ஓய்வூதியச் சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. 1977ல் JACயாக பணிக்குச் சேர்ந்து, படிப்படியாக பதவி உயர்வு பெற்று, முப்பத்தைந்து வருடகாலம் இந்த வங்கியில் பணி புரிந்து, ஓய்வு பெறும்போது அவர் வெறுங்கையோடு நின்றிருக்கிறார். "எல்லாவற்றையும் அந்த பெருமாள் கேப்பார்” எனக் கோபமும், கண்ணீருமாய் கதறியபடி, தோழர்.திருவேங்கடத்தான் 30.4.2012 அன்று தென்கலம் கிளையை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மத நம்பிக்கைகளைத் தாண்டி, அவரது வேதனையும், வலியும் அலைக்கழிக்கிறது. நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்கள் உருவாகின்றன. இப்படியொரு அவலத்தை சரிசெய்திருக்கக்கூடிய அனைத்து சாத்தியங்களும் இருந்தும், கல்லாய் இருந்த நிர்வாகத்தின் மீது நமக்கு ஆத்திரம் ஏற்படுகிறது. திருவேங்கடத்தான் பணிபுரிந்த முந்தைய கிளையொன்றில் நடந்ததாய் நிர்வாகம் சந்தேகிக்கிற குற்றங்களுக்கு விளக்கம் கேட்கவும், அதற்கு அவருக்கு பதில் சொல்லவும் தேவையான கால அவகாசங்கள் இருந்த போதும், நிர்வாகம் காலதாமதாய் சார்ஜ் ஷீட் செய்தது. அவரது பணி ஓய்வுக்கு முன்பே, ஒழுங்கு நடவடிக்கைகளை முடித்திட வேண்டும் என்கிற முனைப்பு நிர்வாகத்திடம் கொஞ்சமும் இல்லை. ஓய்வூதியச் சலுகைகளை திருவேங்கடத்தான் பெற்றால் என்ன, பெறாவிட்டால் என்ன என்கிற நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற அலட்சிய மனோபாவமே இதற்கு மூல காரணம்.

அதே தென்கலம் கிளையில், தோழர். திருவேங்கடத்தானுக்கு ஏற்பட்ட நிலை அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, தோழர்.விஸ்வநாதனுக்கும் ஏற்பட்டது. தோழர்.விஸ்வநாதன் அவர்களும் இந்த வங்கியில் 1977ம் வருடம் பணிக்குச் சேர்ந்தவர். PGBOUவின் முன்னணித் தலைவராய் பலகாலம் இருந்தவர். தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தாண்டி, அவரது சர்வீஸீல் எந்த குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டதில்லை.  ‘மேலப்பாளையம் நகைக்கடன்’ விவகாரத்தில் நிர்வாகம் அவர் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. அந்த விவகாரத்தின் மையத்தையும், பரிமாணங்களையும் விட்டு விட்டு, நிர்வாகம் திசை திருப்பல்களில் இறங்கியது. பொய்யாய், போலியாய் நகைகள் வைத்து கடன் பெற்றவர்கள் மீது எந்த புகாருக்கும், விசாரணைக்கும் ஏற்பாடு செய்யவில்லை. மாறாக, கிளையின் பிஸினஸை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில், வங்கியின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் பேரில், கடன்கள் வழங்கிய அப்பாவிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஒவ்வொருவரையும் அவர்கள் அளித்த நகைக்கடன்களின் தொகைக்கு லட்சக்கணக்கில் பொறுப்பாக்கியது. தாதாக்களுக்கு மரியாதை கொடுத்து, கட்டப்பஞ்சாய்த்து செய்து, அப்ரைசர்களை மிரட்டி வசூலித்த பணத்தில் அந்தத் தொகைகள் அடைக்கப்பட்டன. குற்றச்சாட்டுகளை சரிசெய்ய விதிகளை மீற நிர்வாகம் உடந்தையாய் இருந்தது. ஆனால் தோழர்.விஸ்வநாதனைப் போன்ற நிமிர்ந்த பார்வையும், நேர்மையும் கொண்ட தோழர்கள், “நாங்கள் என்ன குற்றம் செய்தோம், அந்தப் பணத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல. பணத்தைக் கட்ட மாட்டோம்.” என்று உறுதியாய் இருந்தனர். அதற்கு நிர்வாகம் அளித்த மரியாதைதான், 31.03.2012 அன்று தோழர்.விஸ்வநாதன் பணி ஓய்வு பெறும்போது, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்ற காரணம் காட்டி, அவரை வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பியது. குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக உலா வருகிறார்கள்.

அதே 31.03.2012ல் தோழர்.ராமமூர்த்தி (அரசரடி) அவர்களும் வெறுங்கையோடுதான் பணி ஓய்வு பெற்றார். அவர் கீழவெளிவீதியில் பணிபுரிந்த காலத்தில் ஒரு நகை காணாமல் போனதற்காக, பணி ஓய்வு பெறுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சார்ஜ்சீட் கொடுக்கப்பட்டது. ஜூலை 2011லேயே, நகை காணாமல் போனது நிர்வாகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதுகுறித்து ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, தோழர்.ராமமூர்த்தி பணி ஓய்வு பெறுகிற நாளுக்காக நிர்வாகம் காத்திருந்தது போலும்!

இவர்களுக்கு எல்லாம் முன்பாக, நிர்வாகம் தனது கோர விளையாட்டை, கோவில்பாட்டியைச் சேர்ந்த தோழர்.G.முருகேசனிடம் ஆடித் தீர்த்திருந்தது. அவர் கொடுத்த டிராக்டர் லோனில், அந்த வண்டியை RTO ஆபிஸில் ரிஜிஸ்டர் செய்யவில்லை, அதனால் அந்த கடன் தொகை 4, 88,000/-க்கும் அவரே பொறுப்பு என்று 20.12.2011 தேதியிட்ட ஒரு expalanation அவருக்கு நிர்வாகத்தால் அனுப்பப்படுகிறது. அந்த டிராக்டர் லோனுக்காக ரூ.8,00,000 மதிப்புள்ள சொத்தை வங்கியில் Registered mortgage  செய்திருப்பதாகவும், மேலும் கடன் பெற்றவரின் பெயரில் ரூ.1,50,000/- வங்கியில் MIDயாக போட்டு அதை discharge செய்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்து அவர் 29.12.2011 அன்று பதிலளிக்கிறார். அதேநாளில் அவரது பதிலை எதிர்பார்க்காமலேயே, அவருக்கு ஒரு சார்ஜ் ஷீட் நிர்வாகத்தால் அனுப்பபடுகிறது. 31.12.2011 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர்.G.முருகேசனுக்கு ஓய்வூதியச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. அவரும் வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினார்.

ஆக, இந்த தோழர்களின் வாழ்க்கையில் நிர்வாகம் கோரமாய் விளையாடியதிலிருந்து, ஒரு உண்மை அப்பட்டமாய்த் தெரிகிறது. இந்த நிர்வாக முறையில் நடந்த காலதாமதங்களுக்கும், தவறுகளுக்கும், இழப்புகளுக்கும் வங்கியின் ஊழியர்களையும் அலுவலர்களையும் பொறுப்பாக்கி எப்படியாவது பணத்தை வசூலிப்பது என்பதுதான் அது. அதற்கு அவர்களது பணி ஓய்வையே பலிகேட்பதுதான் அது.

ப்படி பணி ஓய்வு பெறுகிறவர்களின் வாழ்க்கையை சிதைக்கிற, அவர்களது சிந்தனைகளில் அச்சத்தை ஏற்படுத்துகிற காரியங்களில், கடந்த ஐந்தாறு வருடங்களாக நிர்வாகம் பெரிதும் முனைப்பு காட்டி வருகிறது. ஒருவர் பணி செய்த கிளைகளில், வங்கிக்கு ஏற்படும் இழப்புகளை, அந்த ஒருவரது ஓய்வூதிய சலுகைகளில் எப்படியாவது வசூல் செய்து சரிசெய்வது என்று வெறிபிடித்து நிற்கிறது. வராக்கடன், time-barred போன்ற ஆயுதங்கள் அதனிடம் இருக்கின்றன.

கடந்த சில வருடங்களில் ரிடைய ஆன பலரும், இப்படி எதாவது ஒரு வகையில், எதாவது ஒரு தொகையை தங்கள் ஓய்வுகாலச் சலுகைகளில் இருந்து வங்கிக்கு கொடுத்துவிட்டு ‘விட்டால் போதும்’ என்று சென்றவர்களாகவே இருக்கின்றனர். PGBOUதான் இவ்விஷயத்தை முதலில் கையிலெடுத்தது. தொடர்ந்து பல வருடங்களாக, PGBEAவுடன் சேர்ந்து நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறது. கடுமையாக தலையிட்டு, அலுவலர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி வருகிறது. நிர்வாகம் ஆரம்பத்தில் ஒருவர் பணிசெய்த காலம் முழுமைக்கும் பொறுப்பாக்கி வசூல் செய்து வந்தது. அதை, அவரது சர்வீஸின் ‘இறுதி ஆறு வருடங்களுக்குள்’ என்று நிர்வாகத்தை இறங்கி வரச் செய்தது PGBOU, PGBEAவின் தொடர்ந்த முயற்சியால்தான். இது மிகச் சிறு வெற்றி. அவ்வளவே.

அதற்குப் பிறகு, நிர்வாகம் இன்னொரு தந்திரத்தைக் கையாள ஆரம்பித்தது. ஒரு கிளையில் நிர்வாகம் ஒருவரைப் பொறுப்பாக்கி, அதுகுறித்து கேட்கும் அவரிடம் விளக்கங்கள் கேட்கும் போது, அதை சரிசெய்வதற்கான கால அவகாசத்தை அவருக்கு அளிப்பதில்லை. அவர் ரிடையர் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னரே தெரியப்படுத்தும். உதாரணமாக 20 time barred accountகளை பட்டியலிட்டு, அதற்கு இரண்டு லட்சம் ருபாயை பொறுப்பாக்கிவிடும். ரிடையர் ஆகப் போகிறவர், சம்பந்தப்பட்ட கிளைகளுக்குச் சென்று RL வாங்க வேண்டும். அதுவும் அவரது செலவிலேயே செல்ல வேண்டும். ஆனால் அவருக்கான கால அவகாசமோ ஒரு வாரத்துக்கும் குறைவாக இருக்கும். தனது ஓய்வூதியச் சலுகைகளில் இருந்து இரண்டு லட்சம் ருபாயைப் பிடித்து விடுவார்களே என்று, அவரும் பதறி பதறி அலைவார். சில RLகளை வாங்குவார். சிலர் இறந்து போயிருப்பார்கள். சிலர் இடம் பெயர்ந்து போயிருப்பார்கள். அவைகளுக்கு பொறுப்பாக்கி, ஒரு லட்சம் போல தனது ஓய்வூதியச் சலுகையிலிருந்து வங்கிக்குக் கட்டிவிட்டு, வீட்டுக்குப் போவார். அடைபடாத சில கடன்கள் வந்துவிட்டதாய் நிர்வாகம் புன்சிரித்து, அடுத்து ரிடையர் ஆகப் போகிறவர் ஃபைலை புரட்ட ஆரம்பிக்கும்.

PGBOUவும், PGBEAவும் திரும்பவும் கடுமையாகத் தலையிட்டன. குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பாக, ரிடையர் ஆகப் போகிறவர்களுக்கு நிர்வாகத் தரப்பிலிருந்து இதுபோன்ற விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இயக்கத்தை ஆரம்பித்தோம். அதன் விளைவாகவே, நிர்வாகம் ‘குறைந்த பட்சம் ரிடையர் ஆவதற்கு மூன்று மாதங்களுக்குள்’  விளக்கக் கடிதங்கள் கேட்பதாய் ஒப்புக்கொண்டது. இதுவும் நாம் நம் பயணத்தில் அடைந்த ஒரு சிறு வெற்றிதான். இன்னும் அதிக அவகாசம் வேண்டும் என்பதே நமது கோரிக்கை. ஆனால் இந்த மாதம் வரை அந்த முறையும் கையாளப்படவில்லை.

இந்த மாதம் ரிடையர் ஆகிற அலுவலர்கள் சம்பந்தமான பிரச்சினைகளை கேட்டு, AIVDயிலிருந்து 15.6.2012 அன்றுதான் கிளைகளுக்குக் கடிதம் எழுதப்பட்டது. அதற்குப் பிறகு, கிளைகளிலிருந்து வந்த பதில்களை வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வசூல் செய்ய நிர்வாகம் எத்தனித்தது. சங்கங்களின் தரப்பில் நாம் AIVD, GM மற்றும் சேர்மன் அனைவரிடம் இவ்விஷயத்தைக் கொண்டு சென்று, எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் ஓய்வு பெறுகிறவர்களிடம் வசூல் செய்வது சரியல்ல என்றோம். அப்படி நிர்வாகம் வசூல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று பலதடவை தெரிவித்து விட்டோம். காலதாமதத்திற்குக் காரணமான AIVD SM - யிடமிருந்து பிடித்துக் கொள்ளுங்கள் எனவும் தெளிவுபடுத்திவிட்டோம்.

அதற்குப்பிறகும், இந்த மாதம் 30.6.2012 அன்று ரிடையர் ஆன தோழர்.கருணாகரன் (ராஜபாளையம் கிளை) அவர்களிடமிருந்து, ரூ.46,000/-க்கும் மேலே பிடிக்கப் போவதாக நிர்வாகம் 26.4.2012 அன்று கடிதம் அனுப்பியிருந்தது. அவர் பணி புரிந்த கிளையொன்றில், SHG உறுப்பினர்களிடமிருந்து இன்சூரன்சு பிடித்ததன் காரணமாக, அந்த உறுப்பினர்கள் கடனைக் கட்டாமல் விட்டு விட்டார்களாம். அதனால், அதற்குப் பொறுப்பேற்று, அந்த இன்சூரன்சு தொகையினை, தோழர்.கருணாகரன் கட்ட வேண்டும் என அதில் எழுதப்பட்டு இருந்தது. செய்தியறிந்து, நாம் நிர்வாகத்திடம் சென்று கடுமையாக நமது எதிர்ப்பைத் தெரிவித்தோம்.’இன்சூரன்சு பிடிக்க வலியுறுத்தியது யார், அதனால் லாபங்களும், கேடயங்களும் பெற்றது யார்? நட்டம் வந்தால் மட்டும் நாங்களா காரணம்? முறையாக, தீர்மானம் நிறைவேற்றிப் பிடிக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகைக்கு தோழர்.கருணாகரன் எப்படிப் பொறுப்பாக்குவது? அப்படியே தவறு கண்டாலும் அதனைச் சொல்லும் நேரமா இது? ரிடையர் ஆவதற்கு நான்கு நாட்களுக்கு முன் தெரிவித்தால், தவறு இருந்தாலும் எப்படி சரிசெய்ய இயலும்?” என சரமாரியாக கேள்வி கேட்டோம். அதற்குப் பிறகு நிர்வாகம் தனது முடிவை மாற்றிக் கொண்டது. நமது சங்கங்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி இது. ஆனாலும் சும்மா விட மனம் வரவில்லை போலும். எதோ ஒரு RL வாங்கவில்லை என்று ரூ1251/-ஐ அவரது terminal benefitலிருந்து பிடித்திருக்கிறது. 30 வருடங்களாக உழைத்து, எவ்வளவோ சேவை செய்த ஒரு மனிதரிடமிருந்து ஒரு ஆயிரம் ருபாயை பிடிக்காமல் விடக் கூட இந்த நிர்வாகத்திற்கு மனம் வரவில்லை! இதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற மனோபாவமாக இருக்கிறது!

சரி, இதுபோன்று Recovery செய்வது என்பது, நமது சர்வீஸ் விதிகளின் படி, நிர்வாகம் அளிக்கும் punishmentதான். ஆனால் அதற்குரிய formality, விதிகள் எதையும் நிர்வாகம் கடைப்பிடிப்பதில்லை. ஒரு கடிதத்தில் ஒற்றைவரியில், அதன் தர்ம நியாயங்களை எழுத முனைகிறது. இதையும் இப்போது PGBOU கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறது.

சமீபத்தில் கல்குறிச்சி கிளையில் ரிடையர் ஆன தோழர்.வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து, அவரது வீட்டுக் கடன், இன்காம் டாக்ஸ் மற்றும் அவர் முன்னர் பணிபுரிந்த கிளையின் time-barred கணக்குகளுக்கான தொகையை, வெங்கட்ராமன் அவர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகள் அளிக்கு முன்பாக, வசூல் செய்யுமாறு நிர்வாகம், கல்குறிச்சி கிளை மேலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. (நிர்வாகத்தின் கடிதங்களில், ரிடையர் ஆகும் தோழர்.வெங்கட்ராமனின் Roll number தவறாக இருக்கிறது. அவருக்கு creditல் இருக்கும் லீவு நாட்கள் குறைவாக காட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் வசூல் செய்ய வேண்டிய தொகையில் மட்டும் கறாராக இருக்கிறது). கிளை மேலாளரான தோழர்.போஸ்பண்டியன், “வீட்டுக் கடன், இன்காம் டாக்ஸ் ஆகியவற்றை நான் வசூல்செய்து விடுகிறேன். ஆனால் timebarred accountக்காக பிடிப்பது என்பது நிர்வாகம் அளிக்கும் punishment. அதை இப்படி வசூல் செய்வது முறையல்ல. என்னை எப்படிப் பொறுப்பாக்குகிறீர்கள்?” என நிர்வாகத்திடம் எதிர்க்கேள்வி கேட்டார். அவ்வளவுதான். எதோ விதிகள் அனைத்தையும் தோழர்.போஸ்பாண்டியன் மீறுவதாக குதிக்க ஆரம்பித்திருக்கிறது. இவ்விஷயத்தை வங்கியின் சேர்மனின் பார்வைக்கு PGBOUதலைவர் தோழர்.போஸ்பாண்டியன் கொண்டு சென்ற பிறகும், முறையான, நியாயமான தீர்வுகள் எட்டப்படவில்லை. இங்கு நிர்வாகத்தின் விதிமீறல்களுக்கு எதிராக கேள்வி கேட்பதே ‘விதி மீறல்களாக’ கருதப்படுகின்றன.

அப்படியானால், இனி நாம் இப்படிப்பட்ட ‘விதிமீறல்களையே’  இங்கு விதிகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. சகலத்தையும் கேள்வி கேட்கத் துவங்க வேண்டியிருக்கிறது. அப்படி நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி இதுதான். வங்கிக்கு ஒருவரால் ஏற்படுவதாய் சொல்லப்படுகிற நஷ்டத்திற்கு, அவர் பொறுப்பு என்றால், இந்த வங்கி அவரால் அடைந்திருக்கும் லாபத்திற்கு யார் பொறுப்பு? அதற்கு மட்டும் சேர்மன்கள் முதற்கொண்டு உயரதிகாரிகளே அடையாளம் காட்டப்படுகிறார்கள். அவர்களுக்குத்தாம் கேடயங்கள் வழங்கப்படுகின்றன. பதவி உயர்வுகள் உறுதியாகிவிடுகின்றன. இந்த முரண்பாட்டில்தான் இந்த முதலாளித்துவ அமைப்பின் அழுகிப்போன முகம் அம்பலமாகிறது. கீழே இருப்பவர்கள்தான் நஷ்டங்களுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். மேலே இருப்பவர்கள் எப்போதுமே லாபங்களுக்குப் பொறுப்பானவர்களாய் இருக்கிறார்கள்.

இந்தக் கேள்வியோடுதான் PGBOUவும், PGBEAவும் இந்த விஷயத்தை அணுகுகின்றன. ஓய்வு பெற்றவர்களிடம், அவர்களது ஓய்வூதியச் சலுகைகளில் இருந்து பணத்தை நிர்வாகம் வசூலிப்பதை PGBOUவும், PGBEAவும் இந்தப் பார்வையோடுதான் எதிர்க்கின்றன. மூன்று முக்கியமான அம்சங்களை நாம் முன்வைக்கிறோம்.

1. இங்கு நிர்வாக முறையால் நடந்த தவறுகளுக்கும், தனி மனிதத் தவறுகளுக்கும் தெளிவான வரையறை வேண்டும்.
2. தனிமனிதத் தவறுகள் இருப்பதாய்க் கருதும் பட்சத்தில், அதைச் சரி செய்ய அல்லது விளக்கமளிக்க போதிய அவகாசம் வேண்டும்.
3.Recovery  என்பது ஒரு தண்டனை. அதை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள் கையாளப்பட வேண்டும்.

இதில் சமரசம் இல்லாமல் நாம் நமது இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

“தோழர்.திருவேங்கடத்தான்! பெருமாள் கேக்கிறாரோ இல்லையோ, PGBOUவும், PGBEAவும் நிச்சயம் கேட்கும். தோழர்களைத் திரட்டி பெருங்குரல் எழுப்பும். தேவைப்பட்டால் களம் இறங்கிப் போராடும்!”

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!