19.8.12

அப்போது பைத்தியங்களே திருடுவார்கள்!


நம்மோடு பணிபுரிந்தவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி,  சஸ்பென்ஷன் செய்து, அவ்வப்போது நிர்வாகம் ஒழுக்க விதிகளை கறாராக அமல்படுத்துவதைப் பார்க்கிறோம்.  சிலரைப் பார்த்து ‘அய்யோ பாவம்’ என்றும், சிலரைப் பார்த்து ‘ அவருக்கு இது வேண்டும்’ என்றும் குரல்கள் கேட்கின்றன. அவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் போய் நிற்கக் கூடாது என்றும் அது சங்கத்திற்கு நல்லதல்ல எனவும் போதிக்கப்படுகிறது. ஆனாலும் தொழிற்சங்கங்கள் அவர்கள் தரப்பில் வாதிட்டு, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தவே முயற்சிக்கின்றன. இது குறித்த புரிதலை ஒரு உண்மைச் சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட கட்டுரை இது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் Bank workers unity பத்திரிகையில் எழுதியது.

- J.மாதவராஜ்



அவன் தலைமையலுவலகத்தில் வேலை பார்த்து வரும் தற்காலிக கடைநிலை ஊழியன். இரண்டு வாரம் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி நிர்வாகம் அவ்னை வீட்டுக்கு அனுப்பி விட்டது. விஷயத்தை அறிந்தவுடன் பொதுமேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சங்கத்தின் செயற்குழு முடிவு செய்தது.

காரணத்தை கேள்விப்பட்டதும் அந்தக் கடைநிலை ஊழியன் மீது முதலில் கோபம்தான் வந்தது. ஸ்டேஷனரி டிபார்ட்மெண்டிலிருந்து கம்ப்யூட்டர் பிரிண்டிங் பேப்பர் பண்டல் இரண்டை திருடிவிட்டானாம். அவனிடம் நாங்கள் அதட்டிக் கேட்ட போது ஒத்துக் கொண்டான். வங்கியின் பேர் இருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விட்டு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் செய்யும் நோட்டுப் புத்தகங்களாக பைண்டிங் செய்து கொடுத்திருக்கிறான்.

எந்த முகத்தோடு பொது மேலாளரிடம் போய் பேசுவது என்று தெரியவில்லை. ஒழுக்கம் கெட்டுப் போவதற்கும், ஊழியர்கள் தரம் தாழ்ந்து போவதற்கும் தொழிற்சங்கங்கள் இது போன்ற காரியங்களை ஆதரித்து கொடி பிடிப்பதுதான் காரணம் என்று எல்லா நிர்வாகங்களும் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

இப்படிப்பட்டவர்களுக்காக முயற்சிகள் எடுப்பதால் சங்கத்திற்கும் அவப்பெயர் வருகிறது என்று ஊழியர்கள் தரப்பிலும் நேர்மையானவர்கள் விமர்சனம் வைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடியில் அவனுடைய் முகம் பரிதாபமாக தெரிகிறது. அது மெய்யப்பனின் முகமாக மாறி என்னமோ செய்கிறது.

மெய்யப்பனும் இந்த வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வந்தவர்தான். ஆனால் பணிநிரந்தரம் செய்யப்பட்டவர். கடைநிலை ஊழியர் போல தெரிய மாட்டார். எப்போதும் இன் பண்ணி, ஷூ போட்டு படு பந்தாவாக இருப்பார். இதே மிடுக்கோடு கல்யாணமும் செய்து அவரது சொந்த ஊர்ப்பக்கம் மாறுதல் வாங்கிச் சென்று விட்டார்.  ஒரு சனிக்கிழமை சாயங்காலம் சங்க அலுவலகத்தின் வாசலில் வந்து நின்றார். கையில் சஸ்பென்ஷன் ஆர்டர். ஒரு அறுநூறு ருபாய்க்காக நகைக்கடன் கார்டில் மேனேஜர் மாதிரி கையெழுத்துப் போட்டிருப்பதாக குற்றப்பத்திரிகை.

வாழ்வின் பயமில்லாமல் சிரித்துக் கொள்ள அவரால் முடிந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு "கேஸ் முடிய எவ்வளவு நாளாகும்" எனக் கேட்டார்.
அப்படி இப்படி என்று எல்லாம் முடிய இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. விசாரணைக் காலங்களிலும் திடமாகவே இருந்தார். சவரம் செய்து திருநீறு பூசிய கோலத்தில் திவ்யமாகவே இருந்தார்.

கொஞ்ச நாளில் சிகரெட் பிடிப்பதை விட்டிருந்தார். இரண்டாவது குழந்தை பிறந்ததை முன்னிட்டு என்று அவரால் சொல்லிக் கொள்ள முடிந்தது. சாட்சிகள் ஒன்றும் அவருக்கு எதிராக இல்லை. மேனேஜர் போல போடப்பட்டிருந்த கையெழுத்தை யார் வேண்டுமானாலும் போட்டிருக்கலாம். வழக்கு ஜோடிக்கப்பட்டிருந்த முறையிலும் கோளாறுகள் இருந்தன. நேரடியாக குற்றம் நிருபீக்கப்படவில்லை. நிர்வாகம் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. மிகத் தெளிவாக வங்கியிலிருந்து நீக்குவதாக ஒரு பக்கத் தாளில் சொல்லிவிட்டது.

"அடுத்து என்ன செய்யலாம்" என நடுக்கத்தோடு கேட்டார். அன்றுதான் மெய்யப்பன் முகமே கலைந்து போனது. "இல்லை...இந்த நிர்வாகங்கள் இப்படித்தான். நாம் கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயிக்கலாம்" என்றெல்லாம் நம்பிக்கையளிக்கப்பட்டது. அவர்  தனக்கு முன் நின்றிருந்தவர்களையெல்லாம் பரிதாபமாக பார்த்தார்.

வழக்குக்குத் தேவையான பேப்பர்களை தயார் செய்யும் போதும், வக்கீலை சென்னை சென்று பார்க்கும் போதும், இரண்டு தடவை மெய்யப்பனை பார்க்க முடிந்தது. இயல்பாகக் கூட குடும்பம், குழந்தைகளைப் பற்றி விசாரிக்க முடியாத அளவுக்கு மௌனம் ஒன்று தயங்க வைக்கும். மூத்தப் பையன் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு போக பை ஒன்றை பர்மா பஜாரில் கடுமையாக பேரம் பேசி வாங்கி, பாசத்தோடு நெஞ்சில் அணைத்து வைத்துக் கொண்டார். அன்று வழியனுப்பும் போது அவரை பஸ்ஸில்  பார்த்ததுதான்.

இன்னொரு கேஸ் சம்பந்தமாக வக்கீலைப் பார்க்கச் சென்ற போது மெய்யப்பன் வரவில்லையென்றும், வழக்கை நடத்த அவர் கையெழுத்து போட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அவரைப் பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் ஊரைக் காலி செய்து போய்விட்டதாக சொன்னார்கள். தற்போதைய விலாசமும் தெரியவில்லை.

அதற்குப் பிறகு அவரைப் பார்த்தது சில வருடங்களுக்குப் பிறகுதான். பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டில் தெருவில் நின்று கூவிக் கொண்டிருந்தார். "எதையெடுத்தாலும் ரெண்டு ருபா....ரெண்டு ருபா.." அதிர்ச்சியாய் இருந்தது. அருகில் சென்று தோளில் கைவைத்ததும் ஒரு கணம் உற்றுப்பார்த்தார். சந்தோஷத்தை மீறிய அவமானம் அவர் முகத்தில் தெரிந்தது. சட்டென சமாளித்தபடி, "ஏ..வாப்பா..." என்றார். பக்கத்துக் கடையில் டீ சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டேன். பீடி பற்றவைத்துக் கொண்டார். "பையன் என்ன படிக்கிறான்" கேட்ட போது "அஞ்சு" என்றார். வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவருக்குள் ஒடிக்கொண்டிருந்தது. கண்கள் கலங்குவதை அப்படியொரு பாவனையில் மறைக்க முயற்சித்தார். 'வழக்கை நடத்தியிருக்கலாம்' என்று மெல்லச் சொன்ன போது "ஆமாம்...நடத்தி..." என்று அழுதார். "இல்ல கேஸ் நமக்குச் சாதகமாகவும் வாய்ப்பிருக்கு" சொன்னவுடன் லேசாய் சிரித்தார். "அவங்க என்னத் தண்டிச்சு ஒழுக்கத்தக் காப்பாத்திக்கிடட்டுமப்பா. விடு" என்றார். அதற்கு மேல் அவரோடு பேச முடியவில்லை.

அந்த வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பு ஒழுக்கமாக தன்னை காட்டிக் கொள்வதற்கு ஒரு பலிபீடம் வைத்திருக்கிறது. அதில் மெய்யப்பன்களின் தலைகளே உருளுகின்றன. ஒழுக்கத்தின் காவலர்கள் அந்தத் தலைகளை கோர்த்து மாலையாக்கி போட்டுக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். அமைப்பையும், ஒழுக்கத்தையும் காலில் போட்டு மிதிப்பவர்கள் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் காமிராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும் அவர்களுக்கு இங்கே மகிமை இருக்கிறது. நாட்டையே கபளிகரம் செய்தாலும் மரியாதை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டையும் தாண்டிய செல்வாக்கு இருக்கிறது. நடத்தை விதிகள் என்பது இங்கே கீழே உள்ளவர்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசன், தெய்வம், நீதி எல்லாம் சாமானியர்கள் அஞ்சுவதற்காகவும், பூஜிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

சாதாரண, எளிய மனிதர்கள் தவறு செய்யவும், ஒழுக்கம் தவறவும் இந்த வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறது. கஷ்டங்ளைக் கொடுக்கிறது. ஆனாலும் அரிச்சந்திரனாய் இருக்க வேண்டும் என போதிக்கிறது. பலியிடப்பட்ட மெய்யப்பன்களை சாட்சியாக வைத்து ஒழுக்கத்தை பறைசாற்றிக் கொள்கிறது. ஒழுக்கம் கெட்டவர்களே ஒழுக்கத்தைப் பற்றி சத்தம் போட்டு பேசுகிறார்கள். ஒழுக்கமும் எல்லோருக்கும் சமமானதுதான் என்னும் பிரக்ஞையற்ற மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒழுக்கம் என்பது கீழிலிருந்து மேல் செல்வது அல்ல. மேலிருந்துதான் கீழே வரவேண்டும்.

இந்த கம்ப்யூட்டர் பேப்பர்களை இந்தக் கடைநிலை ஊழியர்தான் எடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே எடுத்திருந்தாலும், அந்த அளவுக்கு அவனுக்கு என்ன நெருக்கடி என அவன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிற மனது யாரிடம் இருக்கிறது? இரக்கமும், கருணையும் ஒழுக்கமற்றவர்களுக்குத்தான் இல்லாமல் போகும். நமக்கென்ன...?

எந்த தயக்கமுமில்லாமல் பொது மேலாளரின் அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த நுழைந்தோம்.



இப்படி நான் எழுதியவுடன்,  ‘ஒரு தொழிற்சங்கத் தலைவருக்கு இருக்கக்கூடிய புரிதலை சமூகம் முழுமைக்குமாக விரிவுபடுத்தி பார்த்திட முடியாது’ என்று ஒருவர்  விமர்சனம் எழுதியிருந்தார். ‘தனிநபர்கள் திருந்தாமல் சமூகம் எப்படி திருந்தும்’ என ஒருவர் கேட்டிருந்தார். இதற்கெல்லாம் மேலாக “ஒழுக்க மீறலை உங்களைப் போன்றவர்களே ஆதரிக்கலாமா’ என நெருங்கிய நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக அடுத்து எழுதிய பகுதி இது.

J.மாதவராஜ்


முதலில் ஒரு ஒழுக்க மீறலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன்வைத்ததாக நான் கருதவில்லை. இந்த அமைப்பு ஒழுக்கத்தை எப்படி பார்க்கிறது, அதற்கு என்ன மரியாதை கொடுக்கிறது என்னும் கேள்விகளை மட்டுமே முன்வைத்திருந்தேன். இங்கே ஒழுக்க மீறலையே வாழ்க்கையாகயும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பவர்களை குறிப்பிடவில்லை. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறியவர்களை ஆதரவோடு பார்க்க வேண்டியிருக்கிறது என்றுதான் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த அமைப்பின் அவலட்சண முகத்தின் மீது வெளிச்சம் காட்டுவது மட்டுமே அதில் முக்கியமானதாக இருந்தது. ஒழுக்கம் குறித்தும், ஒழுக்கமீறல் குறித்தும் பேசவில்லை. இப்போது அவைகளை பற்றியும் பேசுவது நமது பார்வையையும், சிந்தனைகளையும் மேலும் தெளிவாக்கும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சமூக அமைப்பை ஆளுகின்ற கருத்துக்கள் அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்று அனைத்தின் மீதும் படரும் அதன் மூளையின் உன்மத்தம் பிடித்த செல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனது வர்க்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்களுடைய ஆயுதங்களாக்கும் பணியை செய்துகொண்டே இருக்கிறது. மக்களை வெல்வதற்கும், அவர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான தேவை அந்த ஆளும் அமைப்புக்கு இருக்கிறது. அதில் மிக நுட்பமாகவும், அரூபமாகவும், வலிமை மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாச்சாரம். இந்த கலாச்சாரம்தான் இந்த அமைப்பு தங்களுக்கு எதிரானதாய் இருந்தபோதும் அதனை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தையும், ஒப்புதலையும் மக்களிடமிருந்தே பெற்றுவிடுகிற சாமர்த்தியம் கொண்டதாய் இருக்கிறது.

கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும். மாதச்சம்பளக்காரர்களிடம் கெடுபிடி காட்டும். சங்கராச்சாரியாருக்கு சிறைக்குள் சகல பணிவிடைகளும் செய்யும். பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் பணமுதலைகளிடம் நிதியமைச்சர் மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகள் அறிவிப்பார். வருங்கால வைப்புநிதிக்கு வட்டியை உயர்த்த பத்து தடவை தொழிற்சங்கங்கள் நிதியமைச்சகத்தின் வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது.

கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது. அடுக்கிக்கொண்டே போகலாம். நாளொரு நியாயமும், பொழுதொரு தர்மமுமாக நீதிதேவதையின் வாள் சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த பிரஜையும் ஒழுக்க மீறல்களிலிருந்து தப்பித்துவிடாதபடிக்கு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டிருக்கின்றன.

இதெல்லாம் வர்க்கச்சார்புடைய ஒழுக்க நெறிகளும், ஒழுக்க மீறல்களும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் எல்லாக் காலத்துக்கும் எல்லா வர்க்கத்துக்கும் பொதுவான சில ஒழுக்கங்கள் இருப்பதாகவும் அவைகளே சமூகத்தை இயங்க வைப்பதாகவும் புரிந்துகொள்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக திருடாமல் இருப்பது குறித்து அப்படிப்பட்ட கருத்து இருக்க முடியுமா? சமூகத்தின் காரணிகளை தனிநபர்கள் மீது நாம் சுமத்திப் பார்த்திட முடியாது. சமூகத்தின் ஒழுக்கத்தை தனிநபர் ஒழுக்கத்தோடு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இந்த அமைப்பு மனிதர்களை மேலும் மேலும் சுரண்டுகிறது. அதேவேளை தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் தந்து கொண்டே இருக்கிறது. மயானக்கரை வரைக்கும் அரிச்சந்திரர்களை விரட்டி விரட்டிப் பார்க்கிறது. நேர்வழியில் எதிர்த்து போராடுகிற மனோபலமற்றவர்கள் எப்படியாவது இந்த ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறுக்கு வழி தேடுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாகிறார்கள். இதுவும் அமைப்பின் ஏற்பாடே. அந்த மனிதர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. சிறு தேங்காய்த்துண்டுக்காக எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட அவர்கள் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா. அந்த மனிதர்களை திருத்துவதா அல்லது தண்டிப்பதா?

பலீவனமான அந்த மனிதர்களை ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக நாமும் புறக்கணித்துவிட முடியாது. சமூக அக்கறை மனிதாபிமானத்தோடு வெளிப்படும்போதுதான் புதிய பரிணாமம் பெறுகிறது. அந்த மனிதர்களுக்காக நாம் பேசுவதும், இந்த பலிகள் ஏன் நடக்கின்றன என்பதை விவாதிப்பதும் பாவிகளை இரட்சிப்பது ஆகாது. இதயமற்ற ஒழுக்கத்தின் பலிபீடங்களை உலகுக்கு காட்டும்போது மக்கள் தங்கள் நிபந்தனையற்ற ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிப்பார்கள். எதொவொரு நேரத்தில், எதொவொரு நெருக்கடியில் ஒழுக்கம் மீறியவர்களை எப்போதும் ஒழுக்கம் மீறிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக நாம் பிரயோகிக்கிறோம். ஒழுக்கத்தை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விதிக்க முடியாது. கூடாது என்பதுதான் நமது பார்வை. அதனால் மேலும் மேலும் ஒழுக்க மீறல்கள் பரவத்தான் செய்யும்.

ஒழுக்கம் என்பது வலியுறுத்துவது மட்டும் ஆகாது. ஒருவழிச் சாலையும் ஆகாது. ஒரு பகுதியினர் விதிகளை கடைப்பிடிக்க ஒரு சிலர் கடைப்பிடிக்காமல் போனாலும் விபத்துக்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கும். இங்கு எல்லா தினப்பத்திரிக்கைகளின் எழுத்துக்களிலும் ஒழுக்க மீறல் குறித்த செய்திகளே கொலைகளாகவும், கொள்ளைகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றன. இத்தனை சட்டங்களும், தண்டனைகளும் இருந்தும் ஏன் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த அமைப்பு எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கான அளவுகோல்களே அவை.

அடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது. ஒழுக்கம் என்பது அமைப்பின் தன்மைகளை பொறுத்து மனிதர்களுக்கு தன்னியல்பாக வரக் கூடியது. எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம்.

"தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள்" என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது.



இதுகுறித்து விவாதிக்க விரும்புபவர்கள், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

8 comments:

  1. Well said. Indecipline is always considered as one sided and it is for socially, economically and in modern world,low in status are expected to act more faithfully and others may not so sincere to rules. But at every moment this society say " mistakes are admissible to what extent you are able to conceal or escape smartly even if you get caught". This may sound negative. But study of each case reveal just this fact. Only who doesn't have the ability to come across are being punished. Hence union has a role of a lawyer who never justify his party as a good or bad and blindly think of the way of rescue smartly. This world is only to who is able.

    ReplyDelete
    Replies
    1. தோழா.... ஒரு முற்போக்கு தொழிற்சங்கமானது நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஒருபோதும் அணுகாது.... அணுகவும் கூடாது. ஏனெனில் நல்லவைகளும், தீயவைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகம் சார்ந்தும் மாறும் இயல்புகள் உடையது.

      மாறாக ஒரு முற்போக்கு தொழிற்சங்கமானது பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை பார்த்து அவர்களுக்காக தோள் கொடுப்பதே தன் முதற் கடமையாக கொள்ளும்.

      பொதுவாக ஒரு தொழிலாளிக்கு வர்க்கம் சார்ந்த புரிதல் அவசியம். இந்திய சமூகத்தை போன்ற ஜாதிய அமைப்பில் கட்டமைக்கப்பட்ட சமூகத்திலும் அந்த ஜாதிய கட்டமைப்பை வடிவமைக்க ஆரியர்களுக்கு தொழிற் சார்ந்த பிரிவினைகளே ஆதாராமாக இருந்துள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      ஆதாலால் இங்கு வர்க்கப் புரிதலுடன் கூடிய சமூக பார்வையே இந்தச் சமூக அவலகங்களை நமக்கு விளங்கச் செய்ய உதவும் கண்ணாடியாக இருக்கும்.

      Delete
    2. ep raja!

      ஆம், பரிதி. எல்லாவற்றையும் சரியாகச் சொன்ன தாங்கள், “Hence union has a role of a lawyer who never justify his party as a good or bad and blindly think of the way of rescue smartly” என்று சொல்வதில்தான் சில குழப்பங்கள் இருக்கின்றன. யூனியன் நிச்சயமாக லாயர் கிடையாது. மிகச்சரியாகவே ‘defence counsel' என அந்தப் பொறுப்பை சொல்கிறார்கள். நாம் பாதுகாக்கத்தான் செய்கிறோம். அதுவும் ‘blindly'யாக பாதுகாப்பதில்லை. எல்லாம் தெரிந்தே பாதுகாக்க முயற்சிக்கிறோம்.பாதிக்கப்பட்ட தொழிலாளி தவறு செய்திருந்தால் அதனை திருத்தவும் முயற்சிகள் மேற்கொள்கிறோம். தண்டித்து ஒழிப்பது என்பது அதிகாரவர்க்கத்தின் மூர்க்கத்தனம்.

      Delete
    3. It must be of my poor linguistic skill. I did mean it. But in our practical sense people are obesed with many noble qualities in their mind.Hence they are usually not ready to heed us. They always expecting some "saint souls " for their rescue. We union people are expected to act as if the saint souls. Can we deliver such a service? Moreover the ideal principles laid down by management is
      not exhaustI've. Hence our members should know what is what.Atleast we should teach them those things.







      not exhaustive

      Delete
    4. இங்கு எல்லாம் தெரிந்தவர்கள் என யாரும் இல்லை தோழா.... அறியாமையில் இருந்து தான் ஆச்சர்யங்கள் பிறக்கிறது. இங்கு நாம் கற்றுக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து அறிந்து கொள்ளவும் ஏராளம் உண்டு தோழா....

      இரட்சகர்களுக்காக காத்திருக்கும் இதே மக்கள் தான் அடிமைதனங்களும் அடக்குமுறைக்களும் அளவுக்கு அதிகமாக கட்டவிழ்த்து விடப்படும் போது ஆர்பரித்து எழுகிறார்கள்.

      ஒரு தொழிற்சங்கவாதியாக இன்றைய முக்கியமான பணியாக நம்முன் காத்திருப்பது சக தோழர்களை அரசியல்படுத்துவதே ஆகும். ஒரு ஜனநாயக தேசத்தில் ஒவ்வொரு குடிமகனும்/மகளும் அரசியல்வாதியே ஆகும்.தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட உயிரினம் என நினைப்பவர்களால் தான் இந்த தேசத்திற்கு ஆகப்பெரும் கேடுகள் விளைந்து வருகிறது என்னும் இந்த யதார்தத்தை தான் நாம் நம் தோழர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

      Delete
    5. I do agree. From the point of us it is right. But the view of the co-comrades always different. They are already pre-occupied with many ideas about the politics. I want to stress it now because during the Soviet revolution the prime headache to Lenin was to get his fellows understand Marxism. They tried to give new meaning to that. In a country which was enslaved for decades politically and socially, principles are easily diluted and misspelled. Our comrades are one from that society. It is irrefutable such misunderstanding occur for core issues within the leaders itself. It is true that we have the responsibility but hardly can be executed.

      Delete
  2. iam really admired after reading this story.As a Trade Union leader it is very difficult to take any decision or favour with? but i believe my fav tag sathyamavae jeyathae..A trade union must see all angles of every member . i can able to see this in this case as a unionist. but every union member must have self discipline & Social interest to survive in this world.Union has the responsible to appreciate good activity and reprimand the bad activity as a mother status.

    ReplyDelete
    Replies
    1. ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு மெம்பருக்கும் சுய ஒழுக்கமும், சமூகப் பார்வையும் முக்கியம். அதையும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தவேச் செய்கின்றன. ஏனென்றால், அப்படிப்பட்ட தோழர்களால்தான் நிர்வாகத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்க முடியும். நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு அவர்கள் பயந்து சாக மாட்டார்கள். எதையும் நேர்கொள்ளும் தெம்பு அவர்களிடம் இருக்கும். தொழிற்சங்கங்கள் அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பதும், அங்கீகரிப்பதும் அவசியமான ஒன்று.

      Delete

Comrades! Please share your views here!