22.9.12

Gate meeting on 21.9.2012




நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிரான நமது இயக்கம் ஆரம்பித்து விட்டது. திட்டமிட்டபடி நமது இரு சங்கங்களின் வாயிற்கூட்டம் 21.9.2012 அன்று நமது தலைமையலுவலகம் முன்பு நடந்தது. மிகக் குறைந்த அவகாசத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டிருந்தார்கள். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆவேசம் அனைவரிடமும் தென்பட்டது.

“workers unity zindabad!"
"working class unity zindabad!"

PGBEA  பொதுச்செயலாளர் தோழர் சோலைமாணிக்கம் முதற்குரல் எழுப்ப, தொடர்ந்து முழங்கிய தோழர்களின் குரல்கள் தலைமையலுவலகம் முழுவதும் எதிரொலித்தன. வாயிற்கூட்டத்தின் நோக்கங்களே கோஷங்களாய் ஆக்ரோஷத்துடன் தெறித்தன.


PGBEA தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் வாயிற்கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நிர்வாகத்தின் சமீபத்திய ஒழுங்கு நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை விளக்கினார். அதிகாரத்தின் கோரப்பசி, சார்ஜீ ஷீட்களும், சஸ்பென்ஷன்களும், டிஸ்மிஸ்ஸலுமாக பாண்டியன் கிராம வங்கியில் தாண்டவமாடுவதை அம்பலப்படுத்தினார். அதிலிருந்து அலுவலர்களையும், ஊழியர்களையும் காப்பாற்றுவதே நமது சங்கங்களின் நோக்கம் என்பதை எடுத்துரைத்தார். “நாம் நிர்வாகத்தின்  ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு வருடமாகப் பேசியும், விமர்சனம் செய்தும் வந்திருக்கிறோம். அதற்கு நிர்வாகம் செவி மடுக்காத போது, நாம் தெருவில் இறங்க வேண்டியிருக்கிறது” என சுட்டிகாட்டினார்.




தொடர்ந்து பேசிய PGBEA தலைவர்.மாதவராஜ், “இதுவரை நாம் எத்தனையோ இயக்கங்களை, போராட்டங்களை நடத்தியிருக்கிறோம், ஆனால் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக பிரத்யேகமான ஒரு இயக்கத்தை நடத்துவது இதுவே முதல் முறை, அதற்கான தேவையை நிர்வாகம்தான் உருவாக்கியிருக்கிறது” என ஆரம்பித்தார். “PAD, AIVDயின் கடந்த இரண்டு வருடங்களின் சர்க்குலர்களை புரட்டிப் பார்த்தால் cancellation of power of attorney சர்க்குலர்களாகத்தான் இருக்கும். அதில் retirement தவிர எத்தனை சஸ்பென்ஷன்கள், எத்தனை டிஸ்மிஸ்ஸல்களை இந்த நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்பது புரியும். ஒரு சிறிய வங்கியில், இத்தனை ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது விநோதமானது, அதனை வங்கியின் நிர்வாகத்தில் உள்ள கோளாறாகத்தான் பார்க்க முடியும்” என்றார்.  “இப்போதெல்லாம் ஒன்று,  இரண்டு என்று ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை. கிளையின் ஒட்டுமொத்த ஊழியர்கள், அலுவலர்கள் மீதும் சார்ஜ் ஷீட்கள் பாய்கின்றன. மேலப்பாளையம், கூடன்குளம், தென்கலம், செட்டிக்குளம், கீழவெளி வீதி, மூலக்கரைப்பட்டி, கீழக்கரை, மைக்கேல்பட்டினம் ஆகிய கிளைகளில் நடந்ததாகச் சொல்லப்படும் தவறுகளுக்காக மட்டும் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சார்ஜ் ஷீட்கள் வழங்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதுதான் நிலைமை என்றால், இந்த வங்கியில் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது” என எச்சரித்தார்.


“இந்த நிர்வாகம்தான் அலுவலர்களையும், ஊழியர்களையும் விதிகளை மீற வைக்கிறது, பிறகு விதிகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது. இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம்  எப்படியாவது கொண்டு வா என ஒரு சேர்மன் சொன்னார். அந்த மேலாளரும் எப்படியோ கொண்டு வந்தார். அந்த சேர்மன் போய்விட்டார். இன்று அப்படி டெபாசிட் கொண்டு வந்ததில் முறைகேடுகள் இருக்கின்றன என அவர் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முஸ்தீபு செய்து வருகிறது. இதே கதைதான் மேலப்பாளையத்திலும். நகைக்கடன் கொடு நகைக்கடன் கொடு என விரட்டியது இந்த நிர்வாகம் தான். பிறகு சார்ஜ்ஷீட்கள் வழங்கியதும் இந்த நிர்வாகம்தான். இதே கதைதான் கன்னியாகுமரியில் கொடுத்த SHG லோன்களிலும் நடந்தது. அந்த அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என தூக்கி வைத்துக் கொண்டாடியது, இந்த நிர்வாகம்தான். பிறகு காலில் போட்டு மிதித்ததும் இந்த நிர்வாகம்தான்” என்பதை நினைவுகூர்ந்தார்.



“இப்போதெல்லாம் negligence of duty போன்ற தவறுகளையும் பூதாகரமாக்கி, capital punishment கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது நிர்வாகத்தின் வாடிக்கையாகி இருக்கிறது என்றும் ஒட்டு மொத்த ஊழியர்களும் ஒரு அச்சம் கலந்த, பதற்றமான சூழலில் பணி புரிய வேண்டும் என்பதே நிர்வாகத்தின் நோக்கமாய் இருக்கிறது” என தோழர்.மாதவராஜ் தெளிவு படுத்தினார். அடுத்ததாக, நிர்வாகத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக எதையெடுத்தாலும் proved என எழுதும் என்கொயரி ஆபிஸர்களின் தரங்கெட்ட findingsஐ கடுமையாகச் சாடினார்.  உதாரணங்களோடு சிலரை சுட்டிக்காட்டிய போது வந்திருந்த தோழர்கள் கேலியாகவும், ஆவேசமாகவும் அதனை ஆமோதித்தனர். “இனி இந்த என்கொயரி ஆபிஸர்களின் யோக்கியதைகள் பற்றியும், என்கொயரிகளை அவர்கள் நடத்தும் விதம் பற்றியும்  அப்படியே ஆதாரங்களோடு நமது வெப்சைட்டில் வெளியிடுவோம்” எனச் சொன்னபோது தலைமையலுவலகம் அதிரும்படி தோழர்கள் ஆரவாரித்தனர்.





அடுத்து பேசிய PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம், “ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டும். அது இங்கு இல்லை.” என ஆரம்பித்து அதற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தினார். சுற்றறிக்கையில் நாம் சொல்லியிருப்பது போல சம்பந்தப்பட்ட  இரு அதிகாரிகளை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றும் வரை நமது போராட்டங்கள் தொடரும்” என உறுதிபட தெரிவித்தார்.




இறுதியாக நிறைவுரையாற்றிய PGBEA பொதுச்செயலாளர் தோழர். சோலைமாணிக்கம், கிளைகளில் அலுவலர்களும் ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணிபுரிவதையும், அதை மதிக்காமல் நிர்வாகம் இங்கு வெறியோடு ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அராஜகங்கள் செய்வதையும் குறிப்பிட்டார்.  இதே நிலைமை தொடர்ந்தால் , இனி வங்கி ஸ்தம்பிக்கும், வங்கியின் வணிகம் பாதிக்கும் என கடுமையாக எச்சரித்தார்.  23.9.2012 அன்று நடக்கவிருக்கும்ம் இருக்கும் நமது இரு சங்கங்களின் கூட்டு செயற்குழு அடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்து  விவாதித்து, அறைகூவல் விடுக்கும் என அறிவித்தார்.





மீண்டும் கோஷங்கள் முழங்க, வாயிற் கூட்டம் நிறைவு பெற்றது. நாம் நிர்வாகத்திடம் கொடுப்பதற்கு நமது நிலைபபாட்டை விளக்கி மெமொரெண்டம் ஒன்று தயார் செய்திருந்தோம். தலைமையலுவலகத்தில் சேர்மன் இல்லாததால், பொதுமேலாளர் திரு.சிதம்பரம் அவர்களிடம் அளித்தோம்.





1 comment:

  1. In a time when the atrocities of the management and the government are going high, when the little hope of coming across the hurdles shrinking, when the people of this nation keep on going prey for the political tactics and lose their livelihood, the only hope of retaining the confidence on truth is the unity of comrades and the struggles. It is the only need of time. Let the barriers be blown away.

    ReplyDelete

Comrades! Please share your views here!