சுற்றறிக்கை: 13/2012 நாள்: 15.09.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
நிர்வாகத்தின் முறையற்ற, ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து கடந்த ஒரு வருடமாகவே நாம் விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறோம். நமது சர்க்குலர்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறோம். அவைகளை நம் தோழர்களின் பார்வைக்கும் நினைவுக்கும் மீண்டும் கொண்டு வருகிறோம்.
- "இந்த நிர்வாகத்தின் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் தகவல் திரட்டி, ஒரு 'வெள்ளை அறிக்கை' சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்மீது மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை விரைவில் தீர்மானிப்போம். நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்புகளும் இந்தியாவில் இருக்கின்றன என்பதை மட்டும் இப்போது நினைவுபடுத்துகிறோம்" (PGBEA - PGBOU circular 3/2012 dt 31.03.2012)
- "இதுகுறித்து நாம் ஏற்கனவே ‘வெள்ளை அறிக்கை' வெளியிடப் போவதாக அறிவித்திருந்தோம். அதற்குப் பிறகும் நிர்வாகம் நிறுத்திக் கொள்ளவில்லை, திருத்திக்கொள்ளவில்லை. எனவே நாமும், அதுகுறித்த உண்மைகளை உரக்கப் பேச வேண்டி இருக்கிறது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், இந்த நிர்வாகம் புதிதாக குவித்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளும் சேர்த்து இந்த வங்கியின் பல நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. சதாநேரமும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தே யோசித்துக்கொண்டு, அந்த ஃபைல்களை மட்டுமே புரட்டி புரட்டிக் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருக்கும் நிர்வாகத்தால் எப்படி புதிய திசைகளில் வங்கியை செலுத்த முடியும்.
ஒரு குறிப்பிட்ட தவறு, மீண்டும் நடக்காமல் இருப்பதே ஒழுங்கு நடவடிக்கைகளின் நோக்கம். ஆனால் இங்கு அப்படி இல்லை. அப்படியானால், அது நபர் சார்ந்த குற்றங்கள் இல்லை. system சார்ந்த குற்றம். அதை சரிசெய்ய, நிர்வாகம் தன் பக்கம் இருக்கும் தவறுகளை முதலில் சரி செய்ய வேண்டும்.
நகைகள் விஷயத்தில் நடந்த சில அசம்பாவிதங்களில் நிர்வாகம் நடத்திக்கொண்டு இருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் கேலிக்கு உரியவை. நமது system குறித்து மறுபரிசீலனை செய்யவும், அதற்கான அடிப்படையான காரணங்களை ஆராயவும் ஒரு நேர்மையான நிர்வாகம் முற்படும். இங்கு அப்படியில்லை. யாரையாவது பலிகிடாவாக்கி, தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறது." (PGBEA - PGBOU circular 6/2012 dt 07.05.2012)
- "கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்". (17.5.2012 அன்று புதிய சேர்மனோடு நடந்த courtesy meetingல் பேசிய விஷயம். PGBEA - PGBOU circular 7/2012 dt 28.05.2012)
- "நம் தரப்பு: கடந்த சில ஆண்டுகளில் நகைக்கடன் சம்பந்தமாக மிக அதிக அளவில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சில ஒழுங்கு நடவடிக்கைகள், வருடக்கணக்கில் முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஒரு கால வரையறை செய்து அவைகளை விரைவாகவும், நியாயமாகவும் முடித்துத் தர வேண்டும்.
நிர்வாகத்தரப்பு: ஒழுங்கு நடவடிக்கைகள் ஸ்பான்ஸர் வங்கியின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்படுகின்றன. நடத்தப்படுகின்றன. இருந்தாலும், இந்த யோசனைகள் குறித்து ஆராய்கிறோம்." (14.6.2012 அன்று நிர்வாகத்தோடு நடந்த பேச்சுவார்த்தை. PGBEA - PGBOU circular 9/2012 dt 18.06.2012)
தொடர்ந்த நமது வலியுறுத்தல்களால், நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்த்தோம். ஒழுங்கு நடவடிக்கைகளை நியாயமாகவும், மென்மையாகவும் அணுகும் என நம்பினோம். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. மூன்று தோழர்கள் வங்கியை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஒரு தோழர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் சிலர் மீது பாயக் காத்திருக்கின்றன ஒழுங்கு நடவடிக்கைகள் . வங்கியில் ஒரு அசாதாரணமான பணிச்சூழலை உருவாக்கி இருக்கிறது நிர்வாகம். இந்த பின்னணியில்தான் நமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி சென்ற சுற்றறிக்கையை வெளியிட்டு இருந்தோம்.
"The Success of vigilance in an organisation should be judged by its effectiveness in prevention of corrupt practices/ vigilance cases rather than by a number of cases detected and punished"ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஐ.ஓ.பியின் vigilance departmentலிருந்து வெளியிடப்பட்ட நெறிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும் வார்த்தைகள்தான் மேலே சொல்லப்பட்டவை. ஆனால் நமது வங்கியில் நடக்கும் நிகழ்வுகள் இதற்கு நேர்மாறாய் இருக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு capital punishment அளிக்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ 40 தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் அளிக்கப்பட்டு என்கொயரிகள் நடந்து வருகின்றன. இன்னும் பலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க அங்கங்கு investigation என்ற பெயரில் அத்துமீறல்கள் அவிழ்த்துவிடப்பட்டு இருக்கின்றன. 900 பேர் பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் இவ்வளவு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் அதன் நோக்கங்களையும், விளைவுகளையும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது.
ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை முற்றிலுமாக சீர்குலைக்கிற காரியம் இது. Business என்றும் Target என்றும் நெருக்கடிகள் கொடுப்பது, அவைகளை achieve செய்ய முனைந்தால் விதிகள் மீறப்பட்டன என குற்றம் சுமத்துவது ஒருபுறம். சரி, விதிகளை சரியாக பின்பற்றி பணி புரிந்தால், 'Business என்னாச்சு, Target என்னாச்சு, நீ எதற்கும் லாயக்கில்லை' என முத்திரை குத்துவது இன்னொரு புறம். இரண்டு பக்கமும் செல்ல விடாமல் வங்கியில் பணிபுரியும் அனைவரும் சதாநேரமும் பயத்தில் உறைந்து போக வேண்டும் என்பதே இந்த ஒழுங்கு நடவடிக்கைகளின் மையப்புள்ளியாக இருக்கிறது . கிளைகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வைத்திருக்கும் நம்பிக்கைகள் அனைத்தையும் சிதைத்துப் போட்டு அனைவர் மீதும் சந்தேகம் கொண்டு பணிபுரிய வேண்டும் என்பதே நிர்வாகத்தின் செயல் திட்டமாக இருக்கிறது.
இதுகுறித்து நாம் நிர்வாகத்தோடும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் பேசும்போதெல்லாம், "ஒழுங்கு நடவடிக்கைகள் இப்போது நமது கைகளில் இல்லை. ஐ.ஒ.பியின் vigilance department தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது" என்றும், " CVOவின் பரிந்துரைகள் அப்படி இருக்கின்றன. நாங்கள் என்ன செய்ய முடியும்." என்றும் ரொம்ப யோக்கியமாக விளக்கமளிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் நாம் தயாரில்லை. அருகில் இல்லாத ஒருவர் மீது பழியைப் போட்டு விட்டு அநியாயங்களைத் தொடர்ந்து செய்வது என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் ராஜதந்திரமாக கையாளப்படுவதை அறியாதவர்களா நாம்?
நமக்குத் தெரியும். எல்லா ஒழுங்கு நடவடிக்கைகளையும் CVOவின் பார்வைக்கு அனுப்ப வேண்டியதில்லை. மோசமான, சிக்கலான மற்றும் முற்றிலும் புதிய வகையில் எழுந்துள்ள பிரச்சினைகளை கொண்டு சென்று, வழிகாட்டுதல்களைப் பெறவுமே Vigilance department இருக்கிறது. அப்படிக் கொண்டு செல்லும்போதும், இங்கிருப்பவர்கள் எப்படி ஒரு விஷயத்தை முன்வைக்கிறார்களோ அதற்கேற்பத்தான் vigilance departmentன் பரிந்துரைகளும் இருக்கும். எனவே, இங்கு இருப்பவர்களின் நோக்கங்களும், காரியங்களுமே இவை என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. நாம் கேள்விப்படுகிற விஷயங்களும் இதையே ஊர்ஜிதம் செய்கின்றன. அதுபோல punishmentஐ vigilance department பரிந்துரைக்காது. பரிந்துரைக்கவும் முடியாது. அதை Disciplinary Authorityதான் முடிவு செய்ய முடியும். அதற்கும் note வைப்பது இங்குள்ள டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்கள்தான்.
குறிப்பாக இரண்டு நபர்களின் கைவரிசைதான் இத்தனை ஒழுங்கு நடவடிக்கைகளின் ஆணி வேராக இருக்கிறது. ஒருவர், AIVD சீனியர் மேனேஜர் மிஸ்டர் சங்கரநாராயணன். இன்னொருவர் vigilance training பெற்று CVO கண்ட்ரோலில் இருப்பதாக சொல்லப்படும் மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியா. இவர்கள் இருவரும் Inspection Departmentல் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை ஒரு பெரிய hit list ஆக தொடர்கிறது. இவர்கள் இருவரின் காலத்தில்தான் உச்சபட்ச தண்டனையான capital punishmentஐ சர்வசாதாரணமாக நிர்வாகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. பக்குவமும், நிதானமும் அற்றவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் கிடைத்துவிட்டால், இப்படித்தான் விபரீதங்கள் நடக்கும்.
இவர்கள் இருவரின் கூட்டணி இரு சேர்மன்களைக் கடந்து மூன்றாவது சேர்மன் காலத்திலும் வெ(ற்)றி நடை போட ஆரம்பித்திருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைகளைக் கையாள்வதற்கான அடிப்படை ஒழுக்கங்கள் இவர்கள் இருவருக்கும் இருக்கிறதா என்பது இங்கு முதல் கேள்வியாக எழுகிறது.
இதே மிஸ்டர் சங்கரநாராயணனை "இவர் அலுவலர் பதவிக்கு லாயக்கில்லை, இவரது பதவியை Revert செய்ய வேண்டும்" என இதே வங்கியில் ஒரு சேர்மன் எழுதிய குறிப்புகள் உண்டு. இவர் பணிபுரிந்த மைக்கேல்பட்டினம் கிளையில் spurious என அடையாளம் காணப்பட்ட நகைகளில் இவரது காலத்தில் வைக்கப்பட்ட நகைக்கடனும் இருந்தது. என்ன மாயமோ, அந்த நகை spurious listக்கே வரவில்லை. ஆனால் அந்தக் கிளையில் மற்றவர்களுக்கெல்லாம் சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டது. இவர் எப்படி இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்டின் சீனியர் மேனேஜராக இருக்க முடியும்?
மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவுக்கும் ‘இப்படிப்பட்ட' சாதனை வரலாறுகள் உண்டு. ஓட்டப்பிடாரம் கிளையில் இவர் மேலாளராய் இருந்தபோது, இவரது custodyயில் இருந்த ரசீது புத்தகங்களை பயன்படுத்தி NVN ஏஜண்ட் தன் இஷ்டத்திற்கு பொதுமக்கள் பணத்தை பல லட்சங்கள் மோசடி செய்தது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்தான் இன்று ஒழுங்கு நடவடிக்கைக்கு CVOவின் நேரடி கண்ட்ரோலில் இருக்கும் அலுவலராம்! Can a law breaker be a law maker? சமீபத்தில் இந்த ரூபன் அங்கலாய்த்த வார்த்தைகள்தான் அவரது சுயரூபத்தைக் காட்டியது. ஒருவரை வங்கியை விட்டு வெளியேற்றும் office noteல் சேர்மன் கையெழுத்துப் போட தயக்கம் காட்டி இருக்கிறார். அதற்கு இந்த ரூபன், "சேர்மன் கையெழுத்துப் போட ஏன்தான் இவ்வளவு யோசிக்கிறாரோ? வெட்டணும்னா, வெட்டிரணும்." என சொல்லி இருக்கிறார். எப்பேர்ப்பட்ட இதயம் அவருக்கு!
இவர்கள் இருவருக்கும் performance என்றால் என்ன வென்று தெரியாது. கிளைகளில் இருக்கும் பணி நெருக்கடிகள் தெரியாது. Staff Relations என்றால் என்னவென்று தெரியாது. Human value தெரியாது. அதெல்லாம் தெரியாததால் யாரையும் வீழ்த்தி சாய்க்கும் சிந்தனைகள் மூளையெங்கும் வியாபித்து இருக்கின்றன.
நேர்மையும், இரக்கமும், மனிதாபிமானமும் அற்ற இந்த இருவரும் Inspection Departmentல் தொடர்வது சரியல்ல. 13.9.2012 அன்று நமது இரு சங்கங்களின் சார்பில் பொதுமேலாளரை சந்தித்து இந்த இருவரையும் Inspection department லிருந்து மாறுதல் செய்வதுதான் வங்கிக்கும், இங்கு பணிபுரிகிறவர்களுக்கும் நல்லது என்பதை எடுத்துரைத்தோம். பதற்றமான சூழலிருந்து, ஆரோக்கியமான நிலைமை உருவாக வழிபிறக்கும் என்பதையும் விளக்கினோம். அவர்கள் இருவரும் வெளியேற்றப்படும் வரை PGBEAவும், PGBOUவும் போராட்டப் பாதையில் இறங்கும் என்பதையும் தெரிவித்தோம். சேர்மனிடம் இதுகுறித்து விவாதிப்பதாக பொதுமேலாளர் சொல்லி இருக்கிறார்.
நமது இரு சங்கங்களின் சப் கமிட்டியை 13.9.2012 அன்று மாலை அவசரமாகக் கூட்டி விவாதித்தோம். ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிரான நமது பிரச்சாரத்தைத் துவக்கும் விதமாக 21.9.2012 அன்று மாலை 5.30 மணிக்கு தலைமையலுவலகம் முன்பாக வாயிற்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் விதமாக 23.9.2012 அன்று இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழுவை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தோழர்களே!
பொருளாதாரக் கோரிக்கைகள், மாறுதல்கள் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இவைகளோடு இனி ஒழுங்கு நடவடிக்கைகளில் காணப்படும் அநீதிகளைக் களைவதும் நமது இயக்கத்தின் முக்கியப் பணியாகிறது. இவ்விஷயத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை வலியுறுத்துகிறோம்.
1. மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக Inspection Departmentலிருந்து மாறுதல் செய்ய வேண்டும்.
2. நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
3. இருதரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்களின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தீர்ப்பு எழுதுவதை எந்த enquiry officerம் கடைப்பிடிப்பதேயில்லை. கண்ணை மூடிக்கொண்டு ‘Proved' என்று சொல்வதே வழக்கமாகியிருக்கிறது. நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் செயல்படுவது தெளிவாய்த் தெரிகிறது. அவர்கள் சுதந்திரமாகவும் திறந்த மனதோடும் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் வரை நமது போராட்டங்களைத் தொடருவோம். Investigation என்ற பேரில் நடக்கும் அத்து மீறல்களை அம்பலப்படுத்துவோம். எதையெடுத்தாலும் ‘proved' என எழுதி, சக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி பிறவிப்பயன் அடையும் என்கொயரி ஆபிஸர்களின் முகத்திரைகளை கிழிப்போம். ஒவ்வொரு ஒழுங்கு நடவடிக்கையையும் விலா வாரியாக வெளியிட்டு உண்மைகளை ஊருக்கு எடுத்துரைப்போம். ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் அரணாக சங்கம் நிற்கும் என ஓங்கி குரல் எழுப்புவோம்.
வரும் வெள்ளிக்கிழமை, 21.9.2012 அன்று நாம் வாயிற்கூட்டத்தில் சந்திப்போம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
our physical body may be here. but our hearts will stand by your side in all kinds of struggles. we will win.
ReplyDelete