சுற்றறிக்கை எண்: 14/2012 நாள்: 25.9.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
டீசல் விலையை மேலும் ரூ.5/-க்கு ஏற்றியதோடு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதியும் அளித்து, "நாம் பெரும் மாற்றங்களை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!' என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் நமது பாரதப் பிரதமர் திருவாளர் மன்மோகன்சிங். இதுவரை எந்த மக்களவைத் தேர்தலிலும் நின்று ஜெயிக்காமல், நமது நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து நீடிக்கும் பாக்கியம் பெற்று இருக்கும் மன்மோகன்சிங் "இந்தியா எனும் நமது தேசம், இங்கு வாழும் சாதாரண, எளிய மக்களுக்கானது அல்ல" என்று தெளிவுபடுத்திவிட்டார். கொதித்தெழுந்த இடதுசாரிக் கட்சிகளும், இதர எதிர்க்கட்சிகளும் செப்டம்பர் 20ம் தேதி விடுத்த 'பந்த்திற்கு' பேராதரவு கிட்டியிருக்கிறது. மக்களின் எதிர்ப்பை சிறிதும் மதிக்காமல், 'நான் பின் வாங்க மாட்டேன்' என வீர சபதம் செய்கிறார் மன்மோகன்சிங். மக்களை மதிக்காதவர்கள் மகுடம் தரித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் நெருங்கியிருக்கிறது.இந்த தேசத்தின் தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் நின்று, இந்த அரசின் இறுதி அத்தியாயத்தை நிச்சயம் எழுதுவார்கள்.
நமது வாயிற்கூட்டம்:
நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக நமது இரு சங்கங்களின் வாயிற் கூட்டம் 21.9.2012 அன்று தலைமையலுவலகம் முன்பு நடந்தது. மிகக் குறைந்த அவகாசத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டிருந்தார்கள். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆவேசம் அனைவரிடமும் தென்பட்டது. "workers unity zindabad!" "working class unity zindabad!" என PGBEA பொதுச்செயலாளர் தோழர் சோலைமாணிக்கம் முதற்குரல் எழுப்ப, தொடர்ந்து முழங்கிய தோழர்களின் குரல்கள் தலைமையலுவலகம் முழுவதும் எதிரொலித்தன.
PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் வாயிற்கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நிர்வாகத்தின் சமீபத்திய ஒழுங்கு நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை விளக்கினார். அதிகாரத்தின் கோரப்பசி, சார்ஜ் ஷீட்களும், சஸ்பென்ஷன்களும், டிஸ்மிஸ்ஸலுமாக பாண்டியன் கிராம வங்கியில் தாண்டவமாடுவதை அம்பலப்படுத்தினார். அதிலிருந்து அலுவலர்களையும், ஊழியர்களையும் காப்பாற்றுவதே நமது சங்கங்களின் நோக்கம் என்பதை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், "இப்போதெல்லாம் ஒரு கிளையின் ஒட்டுமொத்த ஊழியர்கள், அலுவலர்கள் மீதும் சார்ஜ் ஷீட்கள் பாய்கின்றன. மேலப்பாளையம், கூடன்குளம், தென்கலம், செட்டிக்குளம், கீழவெளி வீதி, மூலக்கரைப்பட்டி, கீழக்கரை, மைக்கேல்பட்டினம் ஆகிய கிளைகளில் நடந்ததாகச் சொல்லப்படும் தவறுகளுக்காக மட்டும் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சார்ஜ் ஷீட்கள் வழங்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதுதான் நிலைமை என்றால், இந்த வங்கியில் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது" என எச்சரித்தார். "இந்த நிர்வாகம்தான் அலுவலர்களையும், ஊழியர்களையும் விதிகளை மீற வைக்கிறது, பிறகு விதிகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது. Negligence of duty போன்ற தவறுகளையும் பூதாகரமாக்கி,capital punishment கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது நிர்வாகத்தின் வாடிக்கையாகி இருக்கிறது. ஒட்டு மொத்த ஊழியர்களும் ஒரு அச்சம் கலந்த, பதற்றமான சூழலில் பணி புரிய வேண்டும் என்பதே நிர்வாகத்தின் நோக்கமாய் இருக்கிறது" என தெளிவு படுத்தினார். மேலும் நிர்வாகத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக எதையெடுத்தாலும் proved என எழுதும் என்கொயரி ஆபிஸர்களின் நேர்மையற்ற findingsஐ கடுமையாகச் சாடினார். இனி இந்த என்கொயரி ஆபிஸர்களின் யோக்கியதைகளையும், என்கொயரிகளை அவர்கள் நடத்தும் விதங்களையும் ஆதாரங்களோடு நமது வெப்சைட்டில் வெளியிடுவோம்" எனச் சொன்னபோது தலைமையலுவலகம் அதிரும்படி தோழர்கள் ஆரவாரித்தனர்.
அடுத்து பேசிய PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம், "ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டும். அது இங்கு இல்லை." என ஆரம்பித்து அதற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தினார். சுற்றறிக்கையில் நாம் சொல்லியிருப்பது போல சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றும் வரை நமது போராட்டங்கள் தொடரும் என உறுதிபட தெரிவித்தார்.
இறுதியாக நிறைவுரையாற்றிய PGBEA பொதுச்செயலாளர் தோழர். சோலைமாணிக்கம், கிளைகளில் அலுவலர்களும் ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணிபுரிவதையும், அதை மதிக்காமல் நிர்வாகம் இங்கு வெறியோடு ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அராஜகங்கள் செய்வதையும் குறிப்பிட்டார். இதே நிலைமை தொடர்ந்தால் , இனி வங்கி ஸ்தம்பிக்கும், வங்கியின் வணிகம் பாதிக்கும் என கடுமையாக எச்சரித்தார். 23.9.2012 அன்று நடக்கவிருக்கும் நமது இரு சங்கங்களின் கூட்டு செயற்குழு அடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து, அறைகூவல் விடுக்கும் என அறிவித்தார்.
மீண்டும் கோஷங்கள் முழங்க, வாயிற் கூட்டம் நிறைவு பெற்றது. நாம் நிர்வாகத்திடம் கொடுப்பதற்கு நமது நிலைபபாட்டை விளக்கி மெமொரெண்டம் ஒன்று தயார் செய்திருந்தோம். தலைமையலுவலகத்தில் சேர்மன் இல்லாததால், பொதுமேலாளர் திரு.சிதம்பரம் அவர்களிடம் அளித்தோம்.
நமது கூட்டுச் செயற்குழு முடிவுகள்:
(a) System Generated NPA:
இன்று நமது வங்கியில் ஒரு பெரும் பிரச்சினையாக System Generated NPA முன்வந்திருக்கிறது. அனைத்து கிராம வங்கிகளிலும் இது ஒருபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இப்படி ஒரு நிலைமை வரும் என நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி அவர்கள் 17.1.2012 அன்றே எச்சரித்திருந்தார். "கிராம வங்கிகளில் CBS அமல்படுத்தப்பட்டபோது, அனைத்து head களும் tally ஆகியது மட்டுமே பார்க்கப்பட்டது. NPAவை கணக்கிடுவதற்கான gestation period, Harvesting season, number of instalments போன்றவை முறையாக சரிசெய்யப்பட வில்லை.‘இதனால் கிராம வங்கிகளில் system generated NPA பெரும் அளவுக்கு அதிகரிக்கும். கடும் விளைவுகள் ஏற்படும். எனவே வரும் 2012ம் ஆண்டில் மட்டுமாவது கிராம வங்கிகளை systmen generated NPAவிலிருந்து விலக்கி, சரிசெய்வதற்கான அவகாசம் அளிக்க வேண்டும்' என நபார்டுக்கும், வங்கித்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தார். AIRRBEAவின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவை இன்று கிராம வங்கிகள் எதிர்கொண்டு வருகின்றன.
நமது வங்கியில் செப்டம்பர் 2011வரை CBSக்கு மாறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தும், தனக்கு பேர் வேண்டும் என்பதற்காக முந்தைய சேர்மன் மார்ச் 2011க்குள் CBSக்கு மாற்ற அவசரம் காட்டினார். இந்த வேகம் சரியல்ல, குழப்பங்கள் ஏற்படும் என்று நாம் எச்சரிக்கை செய்தோம். இன்று அதன் விளைவுகள், system generated NPAஎன பூதாகரமாக வந்திருக்கிறது. இந்த நிலைமைக்கு நமது வங்கியின் அலுவலர்களும், ஊழியர்களும் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.
கடந்த காலத்தில் 'NPAவை குறைத்துக் காட்டுங்கள், NPAவை குறைத்துக் காட்டுங்கள்' என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தவர்களே, இன்று அதிகரித்திருக்கும் NPAவை சமாளிக்க வியூகங்கள் அமைக்கிறார்கள். இவர்களின் குளறுபடிகளுக்கும், குழப்பமான செயல்களுக்கும், இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும் அலுவலர்களும் பொறுப்பாக மாட்டார்கள். மொத்தத்தில் தெளிவற்ற, ஒரு தொலை நோக்குப் பார்வையற்ற நிர்வாகமே பொறுப்பு. இப்போதும் system generated NPAவை சரிசெய்ய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. இன்றைய பிரச்சினையை, நாளைக்கு கடத்தி விடுகிற காரியங்கள்தான் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஒரு நிலையான, கொள்கை பூர்வமான நியதிகளை உருவாக்கி அதை அமல் செய்யும் முனைப்புகள் இல்லை. ஒவ்வொரு வருடமும், நாம் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த லாபத்திலிருந்து எடுத்து NPAவை NIL என ஆண்டறிக்கையில் காட்டி மார் தட்டியவர்கள், கடந்த நான்கைந்து வருடங்களில் அந்த நிதியிலிருந்து வராத கடன்களை write off செய்ய எப்படி, எவ்வளவு பயன்படுத்தினார்கள் என்பது மிகப் பெரும் கேள்வி. இப்படி பல கேள்விகள் முன்னுக்கு வருகின்றன.
இப்போது அவசரம் அவசரமாக Rescheduling நடக்கிறது. அதற்கென அலுவலர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிரண்டு நாளில் கம்ப்யூட்டரில் மாற்றியமைக்கப்படுகிறது. அத்தோடு பிரச்சினை முடிந்து விடாது. சம்பந்தப்பட்ட கடன் பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த Reschedule தெரிவிக்கப்பட்டு, கடன் பத்திரங்களிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அது ஓரிரு நாட்களில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை. போதிய கால அவகாசம் வேண்டும். நிர்வாகம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது. நாம்தான் கவலைப்பட வேண்டும். எனவே அந்தந்த கிளையின் மேலாளர்கள் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதத்தை தலைமையலுவலகத்திற்கு அனுப்பி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என சங்கம் அறிவுறுத்துகிறது.
To
The General Manager (o)
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar
Sir
Rescheduling of loan accounts in regard to System Generated NPA
With reference to the above, we wish to inform the following for your kind perusal and favourable consideration.
The following loan accounts were rescheduled in our branch:
Sl no. Type of loan Date of Reschedule No.of Accounts
1.
2.
3.
In this regard, we request your goodselves to grant adequate time to our branch to inform the concerned borrowers and get the consent from them.
Thanking You
Yours faithfully,
(b) Revamping of Head Office:
தலைமையலுவலகத்தில் சில நபர்களுக்கே தொடர்ந்து பல முறை மாறுதல்கள் அளிக்கப்படுவதும், சில நபர்களே தொடர்ந்து பல வருடங்களாக பணிசெய்ய அனுமதிப்பதும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல என எச்சரித்திருக் கிறோம். ஆனால் நிர்வாகம் இவ்விஷயத்தில் கடுமையான பிடிவாதத்தை கடைப்பிடிக்கிறது. எதோ அந்த நபர்கள் இல்லாவிட்டால், தலைமையலுவலகமே ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், அவர்கள்தான் நிர்வாக நடைமுறைகளை கவனிப்பதற்கென்றே பிறந்தவர்கள் போலவும் பிரஸ்தாபிக்கிறது. இன்று வங்கியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு 'மாற்றமில்லா தலைமையலுவலகம்'தான் காரணமாக இருக்கிறது.
இது நபர் சார்ந்த பிரச்சினையல்ல. நாம் அப்படிப் பார்க்கவுமில்லை. ஒரு சில நபர்களே தலைமையலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிப்பது, நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் புதுமைகளையும், துடிப்பையும், தேவையான மாற்றங்களையும் அனுமதிக்க மறுப்பது ஆகும். நிர்வாக இயந்திரத்தில் துருப்பிடித்திருக்கும் கோளாறுகளையும், பலவீனங்களையும் சரிசெய்யாமல் தொடர்ந்து அவை நீடிப்பதற்கு வழி செய்யும். வறட்டுப் பிடிவாதங்களுக்கும், கரடு தட்டிய வழக்கங்களுக்குமான இடமாக தலைமையலுவலகம் மாறிப்போகும். இதனை நாம் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது.
இன்றுவரை net connectivity போனால் என்ன செய்ய வேண்டும் என ஒரு சர்க்குலர் இல்லை. Singleman கிளைகளில் funds செல்வதற்கு என்ன ஏற்பாடு என்று சர்க்குலர் இல்லை. இப்படி பல முக்கியப் பிரச்சினைகளில் நிர்வாகத்தின் நெறிமுறைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படியே வெளியிடப்படும் சர்க்குலர்கள் பலவும் தப்பும் தவறுமாகவும் அரையும் குறையுமாகவும் இருக்கின்றன. NEFTக்கு கமிஷன் பிடிக்கும் சமீபத்திய சர்க்குலரிலிருந்து, தலைமையலுவலகம் வெளியிட்டு இருக்கும் பல சர்க்குலர்கள் இப்படிப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. அவரவர் இஷ்டத்திற்கு interpret செய்வதற்கு இடமளிப்பதாக இருக்கின்றன. அடுத்ததாக, தலைமையலுவலகத்தின் கடிதங்களுக்கு கிளைகளிலிருந்து உடனடியாக பதிலை எதிர்பார்க்கும் இவர்கள், கிளைகளில் இருந்து வரும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதில்லை. இவைகளைச் சுட்டிக் காட்டினால் டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்களுக்கு அதை சரிசெய்கிற மனோபாவமில்லாமல் எரிச்சலும், வன்மமும்தான் வருகிறது. கேள்விகள் கேட்க மட்டுமே தாங்கள் பிறந்தவர்களாகவும், தங்களை யாராவது கேள்வி கேட்டால் இதயமும், முகமும் சுருங்கிப் போகிறவர்களாகவும் ஒரு அதிகாரத் திமிர் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் மொத்த சீர்கேடுகளின் ஆரம்பம்.
இதனை சரிசெய்ய வேண்டுமென்றால் தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும். எனவேதான் நாம் revamping of head officeஐ வலியுறுத்துகிறோம். நிர்வாகம் இதில் மேலும் பிடிவாதமோ, காலதாமதோ செய்யுமானால், நிலைமைகள் மேலும் மோசமாகும் என எச்சரிக்கிறோம்.
(c) Demands:
இந்த நிர்வாகம், நாம் முன்வைத்த பல கோரிக்கைகளில் சிலவற்றை அமல்படுத்தியிருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அதே வேளையில் பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
(1) அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல பெட்ரோல் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.
(2)அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல house maintanence allowance வழங்கப்பட வேண்டும்.
(3) Housing loan மற்றும் vehicle loanக்கு கடன் தொகை உயர்த்தப்பட வேண்டும்.
(4) Net connectivity இல்லாமல் போவதால், பணிகள் தாமதமாகின்றன. பணிநேரம் நீட்டிக்கப்படுகிறது. அது போன்ற சமயங்களில் அனைவருக்கும் over time allowance வழங்கப்பட வேண்டும்.
(5) 2009 டிசம்பரில் சங்கத்தின் அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் சஸ்பென்ஷன் செய்யப்பட்ட அலுவலர்த் தோழர்களுக்கு இன்னும் லீவு regularise செய்யப்படவில்லை. சஸ்பென்ஷனில் இருந்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவை சரிசெய்யப்பட வேண்டும்.
(6) வணிக வங்கிகளில் உள்ளது போல ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி அவசியம் வேண்டும்.
(7) 2008ல் பணிக்குச் சேர்ந்த எழுத்தர் தோழர்களுக்கு probationary periodல் கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்படவில்லை.
(9) 2008ல் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கு maternity leave with pay வழங்கப்படவில்லை. மேலும் probationary period extend செய்யப்பட்டு இருக்கிறது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
(10) 31.3.2012 மற்றும் 7.4.2012 ஆகிய இரு தினங்களுக்கும் ஓவர்டைம் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.
(11)வணிக வங்கியில் உள்ளது போல அலுவலர்களுக்கு reimbursement of Lodge expenses வழங்கப்பட வேண்டும்.
(12) தொழிற்சங்கப்பணிகளுக்காக லீவு எடுத்த சங்கத் தலைவர்களுக்கு, அதிகநாள் லீவு எடுத்துவிட்டதாக சார்ஜ் ஷீட் கொடுத்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருடக்கணக்கில் அவர்களுக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் இன்கிரிமெண்ட்களை உடனடியாக வழங்க வேண்டும்.
இவைகள் குறித்து கடிதங்கள் மூலம் நமது நிலைபாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறோம். பலமுறை நிர்வாகத்திடம் பேசியும் இருக்கிறோம். நிர்வாகம் இவைகளை சாதகமாகத் தீர்த்து வைக்க முன்வராத பட்சத்தில் நாம் போராட்டத்தில் இறங்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கிறோம்.
(d) Transfers:
அலுவலர்களுக்கு பதவி உயர்வு நடந்து முடிந்து மாதங்கள் பலவாகிவிட்டன. நிர்வாகம் இன்னும் டிரான்ஸ்பர்களுக்கு ஏர்பாடு செய்யவில்லை. system generated NPAவை காரணம் காட்டி தள்ளிப் போட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் டிரான்ஸ்பர்கள் கண்டிப்பாக இருக்கும் என சேர்மன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அவை நியாயமாகவும், பாதிப்புகளை சரி செய்யும் விதமாகவும் இருக்கும் என நம்புகிறோம்.கடந்த ஏப்ரலில் கிளரிக்கலிலிருந்து ஆபிஸராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விருப்ப மாறுதல்கள் அளிக்கப்பட வேண்டும்.
(e) Disciplinary Actions:
வங்கியில் யார் யார் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என ஒரு பட்டியல் தயாரிக்கபட்டு அது செயற்குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஏறத்தாழ இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களில் 15பேருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டவராய் இருக்கிறார் என்னும் உண்மை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. jewel loan சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருந்தன. நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்த்து நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி எடுத்த நிலைபாட்டை கூட்டுச் செயற்குழு அங்கீகரித்ததோடு மேலும் போராட்டத்தை தீவீரப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறது.
விதிகளை ஒருபுறம் ஒப்புக்கு அறிவித்துவிட்டு, ஆனால் நிஜத்தில் அவைகளை மீறுகிற நிர்ப்பந்தங்களை நிர்வாகமே இன்னொரு புறம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. துரிதமான வாடிக்கையாளர் சேவை தர வேண்டும், வங்கியின் வணிகத்தை உயர்த்த வேண்டும் என்கிற வேகத்தில் விதிகள் மீறப்படுகின்றன. அதை கண்டும் காணாத நிர்வாகம், பாதிப்புகள் நிகழ்ந்தால் மட்டும், "ஏன் விதிகளை மீறினாய்?' என குற்றச்சாட்டுகளை சுமத்தி கையை முறுக்குகிறது. இங்கு முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி யாரென்றால், அது PGB நிர்வாகமே! எனவேதான் கீழ்க்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.
1. இவைகளுக்கு மூலகாரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக Inspection Departmentலிருந்து மாறுதல் செய்ய வேண்டும்.
2. நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
3. இருதரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்களின் அடிப்படையில் ஆராயாமல், கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் ‘Proved' என்று சொல்வதே வழக்கமாகியிருக்கிறது. நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் செயல்படாமல், சுதந்திரமாகவும் திறந்த மனதோடும் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இது குறித்து தெளிவாக பொதுமேலாளரிடம் பேசியிருக்கிறோம். சர்க்குலர் வெளியிட்டு இருக்கிறோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருக்கிறோம். ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் எந்த அசைவும் இல்லை. எனவே நாம் இங்கு பெரும் அசைவுகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
வங்கிக்காக, வங்கியின் வளர்ச்சிக்காக என்று விதிகளை மீறி வேலை பார்த்து பார்த்து நமக்கு நாமே குழி தோண்டிக்கொண்டது போதும். நாம் முதலில் நம்மை காப்பாற்றிக்கொள்வோம் . இனி இந்த வங்கியில் விதிகளை முழுமையாக பின்பற்றுவது என முடிவுக்கு வருவோம்.
நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் இங்கு வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அவைகளை நடைமுறைக்கு அர்த்தப்படுத்தி பின்பற்றத் தயாராவோம். இந்த சர்க்குலரில் ஒரு சில முக்கிய விதிகளை மட்டுமே தெரிவிக்கிறோம்.
(1) அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். லீவு எடுத்தால் தங்கள் பாஸ்வேர்டை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
(2) KYC norms கடைப்பிடிக்கப்படாமல் புதுக்கணக்குகள் ஆரம்பிக்க வேண்டாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாமல் jewel loan கொடுக்க வேண்டாம்.
(3) Jewel loan document அடிக்கப்பட்டு, transaction முறையாக பதிவு செய்து வவுச்சர் வந்த பிறகே கடனுக்கான தொகையை கொடுங்கள்.
(4)மேலாளரும், காசாளரும் மட்டுமே jewel எடுக்கச் செல்லுங்கள்.
(5) messengerகள் இல்லாத single man கிளைகளில் Funds போவதற்கு சாத்தியங்கள் இல்லை. Nodal officesக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர்கள் அறிவுறுத்துகிற ஏற்பாட்டை கடைப்பிடியுங்கள்.
தோழர்களே, முதற்கட்டமாக இவைகளை கடைப்பிடிப்போம். அடுத்தக் கட்டத்தை விரைவில் அறிவிப்போம். நாம் இப்படி விதிப்படி வேலை செய்வதால் வாடிக்கையாளருக்கு சேவை செய்வதில் காலதாமதங்களும் சிரமங்களும் ஏற்படலாம். அதற்கு இந்த நிர்வாகம்தான் பொறுப்பு. இதனை தெரிவிக்கும் விதமாக கீழ்க்கண்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு அதனை ஒட்டி வையுங்கள்.
அன்புமிக்க எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களே!
எங்கள் வங்கியின் கிளைகளில் போதுமான நிரந்தர ஊழியர்கள் இல்லை. கம்யூட்டர்களை இயக்குவதற்கு தேவையான பாஸ்வேர்டுகள் இல்லை. இவைகளை சரிசெய்ய எங்கள் நிர்வாகம் தயாரில்லை. எனவே வாடிக்கையாளர்களாகிய தங்களுக்கு சேவை செய்வதில் ஏற்படும் அசௌகரியங்களுக்கும், காலதாமதங்களுக்கும்பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவண்பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
இந்த போஸ்டர்களைப் போலவே, நோட்டீஸ்களும் அச்சடித்து கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு வினியோகியுங்கள். விஷயங்களைத் தெரிவியுங்கள்.
வட்டாரக்கூட்டங்களுக்கான தேதிகள் மற்றும் இடம் குறித்து கிளைகளுக்கு தபால்கள் வரும். விதிகளை பின்பற்றி வேலைபார்ப்பது குறித்து விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
தோழர்களே!
நமது போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக, அக்டோபர் 10ம் தேதி தலைமையலுவலகம் முன்பாக ஒருநாள் தர்ணா நடத்த கூட்டு செயற்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த நிர்வாகத்துக்கு எதிராக பெருங்குரல் எழுப்பி முழக்கமிடுவோம், வாருங்கள். இந்த நிர்வாகத்தின் சீர்கேடுகள் அனைத்தையும் தெருவில் வைத்து அம்பலப்படுத்துவோம், வாருங்கள்.
இந்தப் பிரச்சினைகள் நம் அனைவரையும் பாதிப்பவை என்பதால், நமது போராட்டத்திற்கு சங்க வித்தியாசமின்றி அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.
கேள்விகளும் வரைமுறைகளும் அற்று, அதிகாரம் மட்டுமே செலுத்துவது நிர்வாகம் என்றால் அதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நிர்வாகம் தனது மவுனத்தையும், இறுக்கத்தையும் களைந்து, நமது கோரிக்கைகளை ஏற்று, வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் சாதகமான நிலைபாட்டை எடுக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!