28.9.12

தோழர் குருநாதனுக்கு கட்டாய ஓய்வாம்! PGB நிர்வாகத்தின் அட்டூழியம்!!



“உங்களுக்கு compulsory Retirement முடிவு செய்திருக்கிறோம். உங்கள் பதில் என்ன? “ என்று கேட்டு கோட்டையூர் கிளையில் பணிபுரியும் தோழர்.குருநாதன் அவர்களுக்கு நேற்று நிர்வாகம் show cause notice அனுப்பியிருக்கிறது. எந்த தவறும் செய்யாத, அப்பழுக்கற்ற ஒரு அலுவலருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை கண்டு மொத்த வங்கியுமே அதிர்ச்சியடைந்திருக்கிறது. கேள்விப்பட்ட நண்பர்களும், தோழர்களும் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கடும் ஆத்திரம் கொண்டிருக்கின்றனர்.

நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி நமது இரு சங்கங்களும் இயக்கம் நடத்துவது என முடிவு செய்து சுற்றறிக்கை விட்டிருந்தோம். இப்படி ஒரு அசாதாரண சூழலுக்குக் காரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். பொதுமேலாளரிடம் பேசியிருந்தோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருந்தோம். மேலும் நமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது என இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு முடிவு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில், தோழர்.குருநாதனுக்கு அனுப்பியிருக்கும் Compulsory Retirementக்கான show cause notice மூலம் இந்த வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் நிர்வாகம் சொல்கிற செய்தி தெளிவானது.  "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், நாங்கள் தொடர்ந்து ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடருவோம்” என்பதுதான் அது. ஊழியர்களின், அலுவலர்களின் குரலுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல், மனிதாபிமானமும் இரக்கமும் சிறிதும் இல்லாமல்,  நிர்வாகம் நடத்தும் காட்டு தர்பார் இது.

தோழர்.குருநாதன் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு capital punishment? தோழர்கள் இதுபற்றி தெரிந்துகொண்டால்தான் நிர்வாகத்தின் அடாவடித்தனமும், அராஜகமும், அட்டூழியமும் புரியும்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, மிஸ்டர் முருகேசனை நிர்வாகம் கீழக்கரை கிளைக்கு snap audit  என்று அனுப்பி வைக்கிறது.   “அந்தக் கிளையில் இரண்டு நகைகள் காணாமல் போனதா?” என அங்கிருக்கும் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரிடமும்  அவர் விசாரணை நடத்துகிறார். நகை காணாமல் போனதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும், புகார்களும் இன்றி அவர் விசாரணை நடத்தினார் என்பது இங்கு முதலில் கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.

அந்தக் கிளையின் மேலாளராக அப்போது தோழர்.குருநாதன் இருந்தார். அவருக்கு மேலகரம் கிளைக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு இருந்தது. புதிய மேலாளராக திரு.சுந்தர்சிங் சார்ஜ் எடுத்துக்கொண்டு இருந்தார். அந்த வங்கியில் தோழர்.முத்துசிவன் அலுவலராக இருந்தார். கிளர்க்குகளாக தோழர்கள் சுந்தரவடிவேலு, வெங்கடாச்சலம், சுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர். அனைவரிடம் மிஸ்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். தோழர்.சுந்தரவடிவேலுவின் மனைவி பேரில் வைக்கப்பட்டு, 28.6.2006ல் திருப்பப்பட்ட இரண்டு நகைகள் குறித்தே அவரது கேள்விகள் இருந்தன.

திரு.சுந்தர்சிங் அவர்களிடம், சார்ஜ் எடுப்பதற்காக நகைகள் எண்ணப்பட்ட போது சரியாக இருந்தனவா என கேள்வி கேட்கப்பட்டது. அவர் அதற்கு கீழ்க்கண்டவாறு எழுதிக்கொடுத்தார்.

“As per PAD order, I joined duty on 26.6.2006 at our keelakkarai branch. When I was counting the jewel pockets in the presence of the then manager Mr.Gurunathan on 26.6.2006, there was a difference of two pockets in AJL a/cs. Then I move to online of computer work for AJL. On 29.6.06 again I verified in the presence of Mr.Gurunathan with concerned loan a/cs computer sheet and found correct."

(26.6.2006 அன்று கீழக்கரை கிளையில் AJL அக்கவுண்ட் கம்ப்யூட்டரில் ஆன்லைன் செய்யப்படவில்லை என்பதும், இரண்டு நாள் கழித்து  கம்ப்யூட்டர் ஷீட்டோடு  சரிபார்க்கப்பட்டபோது, நகைகளின் எண்ணிக்கை சரியாக இருந்தன என்பதும் இந்த வாக்குமூலத்திலிருந்து புரிய வருகிறது. மேலும் திரு.சுந்தர்சிங்,நகைகளின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்ததாகச் சொல்கிறாரே தவிர எந்த இரண்டு நகைகள் காணாமல் போயின என்று சொல்லவில்லை. குறிப்பிட்ட நகைகள் இல்லை என்று சொன்னால் மட்டுமே ‘நகைகள் காணவில்லை’ என்பது ஊர்ஜிதமாகும்.)

அடுத்து தோழர்.குருநாதன் அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதித் தந்தார்:

“I hereby inform you that no discrepancy was noted in jewel pockets when completion of handling over charge to my successor Mr.sundersing, senior manager. This is for your kind information."

(சார்ஜ் கொடுத்து முடிக்கும்போது  எந்த குறைபாடுகளும்  நகைக்கணக்குகளில் இல்லை என்கிறார் குருநாதன்.)

அலுவலராக இருக்கும் திரு.முத்துசிவன் கீழ்க்கண்டவாறு எழுதித் தந்தார்:

“நகையை சரிபார்க்கும்போது நான் எனது பணியைச் செய்து கொண்டிருந்தேன். நகை வித்தியாசம் பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை.”

காசாளராக பணியாற்றி வந்த வெங்கடாச்சலம் அவர்களிடம் நகைகளை எடுக்க யார் செல்வார்கள் என்றும், 28.6.2006 அன்று திருப்பப்பட்ட தோழர்.சுந்தரவடிவேலுவின் மனைவியின் பெயரில் இருந்த நகைகளை யார் எடுக்கச் சென்றது என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கீழ்க்கண்டவாறு எழுதித் தந்தார்.

“கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் யாராவது இருவர் ரிடம்சன் நகைகளை எடுத்து வருவார்கள். நான் பணம் பட்டுவாடா செய்துகொண்டிருப்பதால் எனது சாவியை மற்றவர்களிடம் கொடுத்து அனுப்புவேன். அந்த நாளில் நகை எடுக்க நான் செல்லவில்லை.”

(இவரது வாக்குமூலத்தில், ‘யாராவது இருவர் ரிடம்சன் நகைகளைச் செல்வார்கள்’ என தெளிவாய் சொல்லப்படுகிறது. எனவே யாரும் தனியாக நகைகளை எடுக்கச் செல்வதில்லை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.)

அடுத்து, திரு சுப்பிரமணியன் கீழ்க்கண்டவாறு எழுதித் தருகிறார்:

“மேற்கண்ட நகைகளை நான் சேப்பிற்கு சென்று எடுத்துத் தரவில்லை. திருமதி.மணிமேகலை சுந்தரவடிவேலுவின் மனைவி என்பது பற்றியும் எனக்குத் தெரியாது. நான் AJL tally செய்து, online சம்பந்தமான வேலையில் இருந்ததால் மேற்கண்ட விபரங்கள் என் கவனத்திற்கு வரவில்லை.”

(இவரது வாக்குமூலத்தில், அவர் நகைகளை எடுக்கச் செல்லவில்லை என்றதோடு இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லப்படுகிறது. AJL அக்கவுண்ட் tally ஆகாமல் இருந்ததுவும், அதை tally செய்து online செய்ய பணிகள் நடந்துகொண்டு இருந்ததுவும் சொல்லப்படுகிறது.)

Investigation Officer திரு.முருகேசன், கீழக்கரை கிளையில் நகைக்கடன் டாக்குமெண்ட்களை, வருகைப்பதிவேட்டை, cash transactionகளை ஆராய்ந்தார். பிறகு இராமநாதபுரம் கிளைக்குச் சென்று அங்கும் நகைக்கடன் டாக்குமெண்ட்களை பார்த்தார். அங்கு யாரிடமும் விசாரிக்கவில்லை.  சந்தேகங்களின் அடைப்படையில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்தார்.

“திரு சுந்தரவடிவேலு அவரது மனைவியின் பேரில் கீழக்கரை கிளையில் வைக்கப்பட்ட இரண்டு நகைக்கடன் பாக்கெட்டுகளை safeலிருந்து எடுத்து, இராமநாதபுரத்தில் கொண்டு போய், சுந்தரவடிவேலுவின் உறவினரான திருமதி.விமலாவதி என்பவர் பேரில் மீண்டும் நகைக்கடன் வைத்திருக்கிறார். அதற்கு மேலாளர் திரு.குருநாதன் உடந்தையாக இருந்திருக்கிறார்.”

இதன் அடிப்படையில் நிர்வாகம் தோழர்கள்.சுந்தரவடிவேலு அவர்களுக்கும், குருநாதன் அவர்களுக்கும் சார்ஜி ஷீட்களை வழங்கியது. என்கொயரி நடத்தப்பட்டது. என்கொயரி ஆபிஸர் யாரென்றால் மாபெரும் அறிவாளியான மிஸ்டர் முகைதின் பிச்சைமணி. பிரசெண்டிங் ஆபிஸர் மிஸ்டர் முருகன். தோழர்கள் சுந்தரவடிவேலுவுக்காக தோழர்.மாதவராஜ் defence counsel ஆகவும், தோழர்.குருநாதனுக்காக தோழர்.செல்வகுமார் திலகராஜ்  defence counsel ஆகவும் இருந்தனர்.

என்கொயரியில், investigation officer திரு முருகேசனிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின் மிக முக்கியப் பகுதிகள்:

கேள்வி: தாங்கள் தங்களது reportல் குறிப்பிட்டு இருக்கும் நகைகள் குறித்து ஏதேனும் எழுத்துப்பூர்வமான complaint பெறப்பட்டு அதன் அடிப்படையில் தங்கள் ஆய்வை நடத்தினீர்களா?”
பதில்: எந்தவிதமான complaintம் வரவில்லை. Departmentக்கு வந்ததா என்று தெரியாது.

*****
கேள்வி: “jewel loan பாக்கெட் ரிஜிஸ்டரை verify செய்தீர்களா?  அதில் ஏதும் discrepancies இருந்ததா?
பதில்: “நினைவில் இல்லை.”

***
கேள்வி: jewel loan pockets counting செய்யும்போது எண்ணிக்கையில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் முதற்கட்டமாக கிளையில் அதை trace செய்ய முயற்சிப்பார்களா? அல்லது தலைமையலுவலகத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமல் தெரிவிப்பார்களா?
பதில்: எண்ணிக்கையில் மாறுபாடு இருந்தால் documentடனும், ledger printout உடனும் சரிபார்க்கப்பட வேண்டும். அப்படியும் மாறுபாடு இருந்தால் தலைமையலுவலக்த்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
கேள்வி: சில சமயங்களில் AJL  பாக்கெட்டுகள் தெரியாமல் JLO பாக்கெட்டுகள் உள்ள trayவிலோ, JL பாக்கெட்டுகள் AJL trayவிலோ வைக்கப்பட்டு, அதனாலும் கூட எண்ணிக்கையில் வித்தியாசம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?
பதில்: இருக்கலாம். ஆனால் குறைகிறது என்று தெரிய வந்தால், உடனே சரிசெய்யப்பட வேண்டும்.
கேள்வி: தாங்கள் மேலே கூறியுள்ளபடி டாக்குமெண்ட்களோடு சரிபார்ப்பது, டிரேக்களில் பாக்கெட்டுகள் மாறி இருப்பது, இவை அனைத்தையும் 26.6.2006 அன்று கீழக்கரை கிளையில், AJL பாக்கெட்டில் வித்தியாசம் வரும்போது அதிகாரிகள் செய்து விட்டிருந்தனரா?
பதில்: அது எனக்குத் தெரியாது.

*****
கேள்வி: இராமநாதபுரம் கிளையில் நகைக்கடன் பெற்ற திருமதி.விமலாவதி, திரு.சுந்தரவடிவேலு அவர்களுக்கு உறவினர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இதற்கு ஏதேனும் ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறீர்களா?
பதில்: இல்லை.

*******

கேள்வி: கீழக்கரையில் திருப்பபட்ட நகைகளும், இராமநாதபுரத்தில் வைக்கப்பட்ட நகைகளும் ஒரே மாதிரியானவை என்று உங்கள் ரிப்போர்ட்டில் குறிப்ப்ட்டு இருக்கிறீர்கள். இதற்கு ஏதேனும் ஆதாரங்களை ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருக்கிறீர்களா?
பதில்: தங்கள் கேள்வியில் சொன்னபடி ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை.

(இந்தக் கேள்வி பதில்களில் மொத்த விஷயங்களும் தெளிவாகியிருக்கும். Investigation officer  எந்த ஆதாரங்களின் அடிப்படையிலும் ரிப்போர்ட் கொடுக்கவில்லை. ஊகங்களின், சந்தேகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. மேலும், jewel loan register பிரகாரம் எவ்வளவு நகைகள் இருந்திருக்க வேண்டும். டாக்குமெண்ட்களின் பிரகாரம் எவ்வளவு இருந்தன, trayவில் எவ்வளவு இருந்தன என்பது போன்ற அடிப்படையான விஷயங்கள் கூட மொத்த விசாரணையிலும் சொல்லப்படவே இல்லை.)

அடுத்து திரு.சுந்தர்சிங் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், பதிலும் இந்த மொத்த குற்றசாட்டையும் ஆதாரமற்றதாக்குகிறது.

கேள்வி: 26.06.2006 ஆம் தேதியன்று, AJL பாக்கெட்டுகளை எண்ணும்போது, எண்ணிக்கையில் இரண்டு பாக்கெட்டுகள் குறைந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். எந்தெந்த பாக்கெட்டுகள் என்று பார்த்தீர்களா?
பதில்: எந்தெந்த பாக்கெட்டுகள் என்று தெரியாது.

எந்தெந்த பாகெட்டுகள் என்று தெரியாவிட்டால் நகைகள் காணாமல் போயின என்று சொல்வதற்கு இடமில்லாமல் போகிறது. நகைகள் காணவில்லை என்றால் தோழர்.சுந்தரவடிவேலுவின் மனவியின் பேரிலுள்ள நகைகள் யாருக்கும் தெரியாமல் எடுக்கப்படவில்லை என்றாகிறது.

எப்போதும் யாராவது இருவர் ரிடம்சன் நகைகளை எடுக்கச் செல்வார்கள் என்று திரு.வெங்கடாச்சலம் சொல்வதால், தோழர்.சுந்தரவடிவேலு மட்டும் தனியாக இரண்டு சாவிகளையும் கொண்டு போய் நகைகளை எடுக்க வாய்ப்பில்லை என்றாகிறது.

மூன்றாவது இராமநாதபுரத்தில் நகைகளை வைத்த விமலாவதி என்பவர் தோழர்.சுந்தரவடிவேலுவுக்கு உறவினர் என்று நிர்வாகம் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இராமநாதபுரத்தில் வைக்கப்பட்ட நகைகளும், கீழக்கரையில் திருப்பப்பட்ட நகைகளும் எண்ணிக்கைகளில், எடையில், காரட்டில் வித்தியாசமானவை. அதற்கு இரண்டு கிளை நகைக்கடன் பத்திரங்களே ஆதாரங்களாய் இருக்கின்றன.

இவைகளின் அடிப்படையில் நாம் தோழர்.சுந்தர வடிவேலுவின் மீதான மொத்தக் குற்றச்சாட்டையும் மறுத்து வாதிட்டோம். அதுபோல், இதில் தோழர்.குருநாதனுக்கு எந்த ரோலும் இல்லை. அவர் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பதையும் ஆதாரங்களுடன் முன்வைத்தோம்.

ஆனாலும் என்கொயரி  ஆபிஸர் மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி என்னும் அறிவாளி, நமது தரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் எதையும் கணக்கிலெடுக்காமல் கீழ்க்கண்டவாறு தனது findings ஐ எழுதுகிறார். அதனை ஒரு  எழுத்து மாறாமல் அப்படியே இங்கு தருகிறோம். (படித்து யாராவது புரிந்து அர்த்தம் சொன்னால், அவரையும் ‘அறிவாளி’ லிஸ்ட்டில் சேர்க்கலாம்.)

“Hence it is proved that to what the incoming manager of the regular manager of keelakkarai branch found missing of TWO AJL packets, and to what Mr.A.Subramanian denied of getting the subjected 2 jewels from the safeon 26.6.2006, and to what Mr.N.Venkatachalam, denied the access of safe due to heavy customer rush, was unauthorisedly and clandestinely removed, from the keelakarai branch and pledged with (R) branch. The fact was came to light when Mr.M.Sundersingh took over charge from Mr.K.Gurunathan, Had discussions, among themselves made known to all staff, arranged for moke closure, money given from manager cabin -entries inserted in cash scroll & receiving counter cash book. All the matter was closed."

இத்தகு தெளிவான, மிக ஆழமான, பண்டித்துவம் பெற்ற வார்த்தைகளோடு மிஸ்டர்.முகைதின் பிச்சைமணி  ‘மிக நேர்மையான’  findingsஐ கொடுத்தார்.

என்கொயரி ஆபிஸரின் findings சரியில்லை, defence தரப்பிலான எந்த வாதத்தையும் கணக்கிலெடுக்காமல், அவர் இஷ்டத்திற்கு ஒரு கதையை எழுதி இருக்கிறார், வெறும் சந்தேகங்களாலும், ஊகங்களாலும் நீதி எழுதப்படக்கூடாது என நாம் நிர்வாகத்திடம் முறையிட்டோம்.

ஆனால், நிர்வாகம் அறிவாளியான மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி சொல்வதுதான் சரி, குற்றச்சாட்டுகள் நிருபீக்கப்பட்டன  என்று தோழர்.சுந்தரவடிவேலுவுக்கு இரண்டு வாரங்களுக்கும் முன்பு dismissalக்கான show cause notice கொடுத்தது. நேற்று தோழர்.குருநாதனுக்கு compulsory retirementக்கான show cause notice  கொடுத்திருக்கிறது.


மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற இந்த வங்கியின் அதிகாரிகள் சிலரால், அவர்களைப் சீராட்டி வளர்க்கும் இந்த நிர்வாகத்தால் இங்கு அப்பாவித் தோழர்கள் வங்கியை விட்டு வெளியே அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஒன்று தெளிவாகிறது. இந்த என்கொயரிகள் அனைத்தும் ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் இங்கு முடிவுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. ஊகங்களும், வதந்திகளும், சந்தேகங்களும் இருந்தால் போதும். நிர்வாகம்  எந்தக் குற்றச்சாட்டையும் யார் மீதும் சுமத்தி, என்கொயரி என்ற பேரில் ஒன்றை நடத்தி, ஊழியர்களையும், அலுவலர்களையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றாகிறது. பயத்தையும் பதற்றத்தையும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் விதைக்கிறது.

இதுதான் நடைமுறை என்றால், இதுதான் விதி என்றால், இனி வருங்காலத்தில் பல அப்பாவித் தோழர்கள் இதுபோல வங்கியை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள்.

இதை நாம் அனுமதிக்க முடியாது.

நேற்று இரவே  நமது இரு சங்க செயற்குழுக்களும் அவசரம் அவசரமாகக் கூடி விவாதித்தன.

PGBEAவும், PGBOUவும் நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் முழுமூச்சோடும், முழு வீச்சோடும் களமிறங்குவதென முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே நாம் அறிவித்திருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (28.9.2012) மாலை  தலைமையலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் நமது இயக்கத்தைத் தீவீரப்படுத்தி இரண்டொரு நாட்களில் நமது முன்னணி ஊழியர்கள் களமிறங்குவார்கள்.

இனி-
எந்த சமரசமுமில்லை.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!