தோழர்.குருநாதனுக்கு Compulsory Retirementக்கு show cause notice கொடுத்ததை எதிர்த்து PGBOUவும், PGBEAவும் 28.9.2012 வெள்ளிக்கிழமை மாலை தலைமையலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஒரே ஒருநாள் அவகாசம் இருந்த போதிலும், அரையாண்டின் இறுதி வேலை நாளாக இருந்த போதிலும், 70 தோழர்களுக்கும் மேலாக திரண்டனர். தோழர்கள் எழுப்பிய கோஷங்கள் ஆவேசமாய் இருந்தன. தோழர்கள் மாதவராஜ், சங்கரலிங்கம், டி.கிருஷ்ணன், சோலைமாணிக்கம் ஆகியோரது பேச்சுக்கள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன.
“தோழர். குருநாதனுக்கு அளிக்கப்பட்ட இந்த முறையற்ற show-cause notice மூலம் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இதுதான் மற்றவர்களுக்கும் என்னும் ஒரு எச்சரிக்கையை, அபாயச் சங்கை அறிவித்திருக்கிறது. அதற்கான பதிலே இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இதன் மூலம், தோழர்.குருநாதனின் பின்னால் இந்த வங்கியின் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் திரண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிவிக்கிறோம். தவறு செய்யாதவர்களுக்கு capital punishment அளிக்கப்படும் அநீதிகளை எதிர்த்து தெருவிலிறங்கிப் போராட சித்தமாயிருக்கிறோம் எனபதையும் அறிவிக்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை இனி இந்த வங்கியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்” இதுதான் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசிய கருத்துக்களின் மையப்புள்ளியாக இருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இரண்டு சங்கங்களின் சார்பிலும் வங்கியின் சேர்மன் அவர்களை சந்தித்துப் பேசச் சென்றோம். சேர்மனும் நம்மை அழைத்து, நம் கருத்துக்களை அமைதியாகக் கேட்டார்.
தொடர்ந்து இந்த வங்கியில், அலுவலர்களும், ஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் கடுமையாக பாதிக்கப்படுவதையும், ஒரு தவறும் செய்யாத குருநாதன் போன்றவர்களுக்கு capital punishment கொடுக்கப்படுவதையும் எடுத்துரைத்தோம். இத்தனை வருடமாக இந்த வங்கியிலும், வெளியிலும் ஒருவர் சம்பாதித்த பேர் அனைத்தையும் ஒரு காகிதத்தைக் கொடுத்து அழிப்பதில் இருக்கும் வலியையும் வேதனையையும் விளக்கினோம்.
இதற்கு பதிலளித்த சேர்மன் அவர்கள், இதில் தனக்கு எந்த பங்கும் இல்லையென்றார். இந்த கேஸ்கள் எல்லாம் 2007ம் ஆண்டில், அப்போதிருந்த நிர்வாகத்தால் எடுக்கப்பட்டவை என்றார். இந்த கேஸ் vigilance சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஓ.பியில் இருக்கும் CVO (Chief Vigilance officer)வின் ஆலோசனைகள், பரிந்துரைகள்படிதான் நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது என்றார். Vigilance சம்பந்தப்பட்ட கேஸ்கள் என்றால், முதலில் investigation நடத்தப்பட்டவுடன், அதுகுறித்த விபரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து first stage reportஐ நமது வங்கி CVOவுக்கு அனுப்பி வைக்கும். அதை ஆராய்ந்து CVO குறிப்பிட்ட கேஸ், major penaltyக்கு உரியதா, minor penaltyக்கு உரியதா என்று முடிவு செய்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரைப்பார். என்கொயரி முடிந்து, அது சம்பந்தமான அனைத்து டாக்குமெண்ட்களையும் திரும்பவும் இரண்டாவது முறையாக, second stage report ஐ வங்கியிலிருந்து CVOவுக்கு அனுப்பி வைப்போம். அவற்றையெல்லாம் பார்த்து CVO ஏற்கனவே (first stage) எடுத்த முடிவை confirm செய்து தெரிவிப்பார். அதன்படிதான் நாங்கள் முடிவு எடுக்கிறோம். vigilance கேஸ்களைப் பொறுத்த வரையில், நாங்கள் CVOவின் முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நாங்கள் முடிவெடுப்பவர்களாக இல்லை என்று தங்கள் தரப்பை விளக்கினார்.
“என்கொயரி ஆரம்பிப்பதற்கு முன்பே, investigation reportன் அடிப்படையிலேயே, major penalty என தீர்மானிக்கப்படுமானால், எதற்கு enquiry? எதற்கு defence Counsel? எதற்கு Disciplinary Authority? எதற்கு Staff service Regulation எல்லாம்?" எனக் கேட்டோம்.
“அந்த கேஸில் உள்ள நிலைமைகளை கண்டறிவதற்குத்தான் என்கொயரி.” என்றார் சேர்மன்.
“தோழர்.குருநாதன் கேஸில் உண்மைகள் வேறாக இருக்கின்றனவே. குறிப்பிட்ட நகைகள் காணாமல் போகவே இல்லையே. அதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும், காணாமல் போகாத நகைகளை சுந்தரவடிவேலு safeலிருந்து எடுத்துவிட்டதாகச் சொல்வது எப்படி சார்? அதற்கு குருநாதன் உடந்தை எனச் சொல்வது எதன் அடிப்படையில் சார்? இதை எப்படி ஒரு என்கொயரி ஆபிஸர், ‘proved' எனச் சொல்ல முடிகிறது. அதையும் Disciplinary authorityயான நீங்கள் எப்படி ஒப்புக்கொண்டு இப்படி ஒரு தண்டனையளிக்கிறீர்கள்?” என்றோம்.
இதற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து பதில் இல்லை.
“அடுத்ததாக, யாருக்கும் புரியாத ஒரு ஆங்கிலத்தில் என்கொயரி ஆபிஸர் ஒரு findings எழுதுகிறார். அது புரியவில்லை, தெளிவாகவில்லை என நாங்கள் சொல்கிறோம். எங்களுக்கு விளக்கம் அளித்துத் தானே தாங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் அதையும் விளக்கமளிக்காமலேயே, நாங்கள் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள் குறித்து ஆராயாமலேயே தாங்கள் ஒப்புக்கொண்டு விடுகிறீர்களே?” என வருத்தப்பட்டோம்.
இதற்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து பதில் இல்லை.
ஆனால், “CVOவின் முடிவை அமல்படுத்தக் கூடியவர்களாகத்தான் தாங்கள் இருக்கிறோம்” என்பதே திரும்ப திரும்பச் சொல்லப்பட்டது. “Appellate authorityயாக இருக்கக் கூடிய போர்டுக்கும் கூட CVOவின் முடிவை மாற்றுவதில் சிரமங்கள் இருக்கின்றன. Major penalty என்று CVO சொல்லிவிட்டால், அந்த major penaltyக்குரிய punishmentற்குள் வேண்டுமானால் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் major penaltyக்குரியதை minor penaltyக்குரியதாக போர்டு கூட மாற்ற முடியாது. அப்படித்தான் நியதிகள் இருக்கின்றன” என சேர்மன் மேலும் விளக்கினார்.
“இதுதான் நிலைமை என்றால், விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தண்டனை குறித்து வைக்கப்படுமானால், அடிப்படை நீதியும், நியாயமும் இங்கு ஒருவருக்கு மறுக்கப்படுகிறது என்பதே அர்த்தமாகிறது. எனவே, எங்கள் போராட்டம் இந்த நிர்வாகத்துக்கு எதிராக மட்டுமல்ல, CVOவுக்கும் எதிராக அமையும்” என நாம் உறுதிபடத் தெரிவித்து, சேர்மனிடமிருந்து விடைபெற்றோம்.
தோழர்களே!
நாமும் central vigilance commission, central vigilance officer குறித்த நெறிமுறைகள், விதிகளைப் படித்து விவாதம் செய்தோம். அதிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறோம்.
1.Vigilance கேஸ்களுக்கு, Investigating reportதான் அடிப்படையாய் இருக்கிறது. வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் இல்லாமல், ஆதாரங்களுடனும், நேர்மையுடனும் Investigation இருந்தால் பல குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லால் போகும். ஆனால், CVOவின் கடுமையான முடிவுகளுக்கு ஏதுவாக ரிப்போர்ட்டை தயார் செய்வது நமது வங்கிதான். First stage reportல் அனுப்பப்பட வேண்டியவைகளில் ‘ A self-contained note clearly indicating the facts on which the commission's advice is sought' என்பது முக்கியமானது. அதை இங்கு எழுதி வைப்பவர்களாக மிஸ்டர் சங்கர நாராயணனும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும்தான் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இருவரையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் அர்த்தமுள்ளதாகிறது.
2. CVOவின் முடிவால் என்கொயரி ஆபிஸர்கள் மண்டையில் ஆரம்பத்திலேயே major penalty தான் என்பது ஏற்றி வைக்கப்படுகிறது. எனவே அவர்கள் கண்மண் தெரியாமல் எதையாவது சொல்லி, ‘proved' என முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தாங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையோடு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தோடு விளையாடுகிறோம் என்கிற சிந்தனை மரத்துப் போனவர்களாகிறார்கள். கடந்த சில வருடங்களில் மட்டும் எத்தனை குற்றச்சாடுக்கள் 'not proved' என எழுதப்பட்டு இருக்கின்றன என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் அவர்கள் தங்கள் தீர்ப்பினை எழுத வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் வலுவாகிறது.
3.CVO வின் முடிவு, மொத்த விசாரணையின் மீதும் நிர்ப்பந்தங்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அடிப்படை நியாயங்களையும், உரிமைகளையும் மறுப்பதாக இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்டி, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் நமது சங்கங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.
4. இவற்றையெல்லாம் மீறி, நியாயங்களும், அடிப்படை ஆதாரங்களும் இருந்தால் CVOவின் முடிவுகளைலிருந்து Chairman / Disciplinary Authority மாறுபடலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருக்கிறது. நமது சேர்மன், அந்த உரிமையையும் வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் எனவும் நாம் கோரிக்கை வைக்கிறோம்.
தோழர்களே!
நமது இயக்கம் தொடர்கிறது.
அக்டோபர் 10ம் தேதி ஒருநாள் தர்ணாவை, சகோதரத் தொழிற்சங்கங்களையும் திரட்டி ஒரு மகத்தான பிரச்சார மேடையாக்குவோம்.
அதே நேரத்தில் கிளைகளில் நமது போராட்டத்தை தீவீரப்படுத்துவோம்.
கிளைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் எந்த ஊசலாட்டமும், சஞ்சலங்களும் வேண்டாம். அதுதான் நமது குரலுக்கு மதிப்பளிக்கும்.
மேலும், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து ஒரு மாபெரும் கருத்தரங்கம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.
நியாயங்கள் கிடைக்கும் வரை நமது முயற்சிகள் ஓயாது.
வெற்றி நமதே!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!