சுற்றறிக்கை: 17/2012 நாள்: 06.11.2012
அருமைத் தோழர்களே!
தொடர்ந்து வந்த விடுமுறைகள், அலுவலர்கள் மாறுதல்களையொட்டி, தோழர்களோடு விஷயங்களை பரிமாறிக்கொள்வதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விட்டது. வருகிற நாட்கள், பல முக்கியச் செய்திகளையும், நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கொண்டதாய் இருக்கப் போகிறது. அவைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், நம் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
ஓழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான நமது இயக்கம்:
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக 19.10.2012 அன்று, மதுரை ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்திருக்கிறது. மதுரையைச் சுற்றிய பாண்டியன் கிராம வங்கிக் கிளைகளில் பணிபுரியும் நமது தோழர்களோடு, சி.ஐ.டி.யூ, BEFI. அரசு ஊழியர் சங்கம், இன்சூரன்சு ஊழியர்கள் சங்கங்களிலிருந்து திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். நமது இயக்கத்தை வலியுறுத்தியும் தெளிவு படுத்தியும் தோழர்கள் T.கிருஷ்ணன், மாதவராஜ், சோலைமாணிக்கம், சங்கரலிங்கம் பேசினர்.ஆதரவாகப் பேசிய சகோதரத் தொழிற்சங்கத் தலைவர்களின் வார்த்தைகளில் ஆவேசமும், வெப்பமும் வெடித்தன.
ஆர்ப்பாட்டம் முடித்து, அனைத்துச் சங்கத் தலைவர்கள் பனிரெண்டு பேர் மொத்தமாக, மண்டல அலுவலகத்தின் உயரதிகாரிகளை சந்தித்து மெமொரெண்டம் கொடுத்து, உடனடியாக ஐ.ஓ.பி நிர்வாகம் தலையிட்டு நிலைமையை சரி செய்யுமாறு வலியுறுத்தினார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் காரணமாய் இருக்கிற AIVD முதுநிலை மேலாளர் மிஸ்டர் சங்கர நாராயணனையும், அலுவலர் மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் அவர்களது பொறுப்பிலிருந்து மாறுதல் செய்வதாக இல்லை. நிர்வாகம் வெளியிட்டு இருக்கிற சமீபத்திய அலுவலர் மாறுதல் உத்தரவுகள் அந்த செய்தியைத்தான் சொல்வதாக இருக்கின்றன.
அதே வேளையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்த தோழர்கள் ஜீவலிங்கம், பழனியப்பன் இருவரும் reinstate செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் நடத்திக்கொண்டு இருக்கும் இயக்கத்தின் விளைவே இது. நமது சர்க்குலர்களில், ‘வங்கிக்காக உழைத்தவர்களை பயன்படுத்தி, பாராட்டிவிட்டு, பிறகு பழிவாங்குகிறது நிர்வாகம்' எனக் குறிப்பிட்டு இருந்தோம். நமது ஆர்ப்பாட்டங்களில், இந்த இரு தோழர்களையும் குறிப்பிட்டு, “அவர்களை முதலில் இந்த நிர்வாகம், நபார்டு எல்லாம் பாராட்டியதையும், பிறகு விதிகளை மீறிவிட்டார்கள் என சஸ்பெண்ட் செய்ததையும் விவரித்து கடுமையாக சாடியிருந்தோம். நமது மெமொரெண்டங்களில், இவ்விஷயங்களை தெளிவாக சுட்டிக்காட்டி, நிர்வாகம், நிலுவையிலிருக்கும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
என கோரிக்கை வைத்திருந்தோம். சென்ற முறை சேர்மனை சந்தித்தபோது, நமது மெமொரண்டத்தை ஐ.ஓ.பிக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், ஐ.ஓ.பியின் உயரதிகாரிகளோடு அதுகுறித்து விவாதித்ததையும் குறிப்பிட்டார்.
இப்போது நல்லது நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். இது தொடர வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்விஷயத்தில் நாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நமது நமது இயக்கமும் தொடரும்! நமது இயக்கத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, வரும் 16ம் தேதி, வெள்ளிக்கிழமை ஐ.ஓ.பி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் முன்பாக மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தோழர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
கிளைகளில் நாம் தொடர வேண்டிய விதிப்படி வேலையை தோழர்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வேண்டுகிறோம்.
தற்காலிக ஊழியர்களுக்கான மாநாடும், பேரணியும்:
தற்காலிக ஊழியர்களுக்காக பிரத்யேகமாக விருதுநகரில் நவம்பர் 4ம் தேதி ஒரு மாநாடும், பேரணியும் நடத்துவதென முடிவு செய்து, அதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த மாநாடு நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் சரியாக காலை 10 மணிக்கு மாநாடு துவங்கும். முக்கியமான அரசியல் தலைவர்களிடம், தற்காலிக ஊழியர்களின் பிரச்சினைகளை விளக்கி, மாநாட்டிற்கும், பேரணிக்கும் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். நமது வங்கியில் பணிபுரியும் அனைத்துத் தற்காலிக ஊழியர்களும் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.
Amalgamation, Recruitment and Promotion:
இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் amalgamate ஆவதற்கான அறிவுப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கு முன் அந்தந்த வங்கிகளில், நிலுவையில் இருக்கும் புதிய பணி நியமனங்கள், பதவி உயர்வுகளை முடித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
கிராம வங்கிகளில் பணி நியமனம் செய்வதற்கு IBPS நடத்திய தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. உடனடியாக நமது வங்கியில், பணி நியமனத்திற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்தோடு எழுத்துத் தேர்வு முடிந்து, நேர்முகத் தேர்வு நடத்தப்படாமல் இருக்கும், எழுத்தரிலிருந்து அலுவலர்க்கான பதவி உயர்வையும் நிர்வாகம் உடனடியாக முடிக்க வேண்டும்.
மேலும், நடந்து முடிந்த பதவி உயர்வுகள், 2011ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட காலியிடங்களுக்கானவை. எனவே 2012 காலியிடங்களுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகளை நிர்வாகம் உடனே துவக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
நமது பாதையில் தொடர்ந்து பயணிப்போம். புதிய செய்திகளோடு சந்திப்போம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
cant able to read sir. ru sure tamil software works well now?
ReplyDelete