சுற்றறிக்கை: 2/2013 நாள்: 16.2.2013
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
திட்டமிட்டபடி பிப்ரவரி 5 ம்தேதி, நமது அகில இந்திய தர்ணா எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. பென்ஷன், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல், ஆட்குறைப்பை நியாயப்படுத்தும் மத்திய அரசின் HR பாலிசிக்கு எதிர்ப்பு போன்ற முக்கிய கோரிக்க்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த தர்ணா நம்மை அடையாளப்படுத்தும் ஒரு இயக்கம். ஏறத்தாழ நூறு தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்.
அடுத்தக் கட்டமாக, பிப்ரவரி 25ம் தேதி சென்னை நோக்கி நமது பயணம் நடக்க இருக்கிறது. அறிவித்தப்படி, திருநெல்வேலி, மதுரை, காரைக்குடி பகுதிகளிலிருந்து மினி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவரை 50க்கும் மேற்பட்ட தோழர்கள் வருவதாக தெரிவித்து இருக்கின்றனர். வர இருக்கும் தோழர்கள் உடனடியாக தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை:
14.2.2013 அன்று நமது இரு சங்கங்களும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். சேர்மனும், இரு பொது மேலாளர்களும் கலந்துகொண்ட இந்த பேச்சுவார்த்தையில் நாம் பிரதானமாக வலியுறுத்தியது, Recruitment- ஐத்தான். இன்று வங்கியில் ஒரு அசாதாரண, மோசமான பணிச்சூழல் நிலவுகிறது. வேலைப்பளு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் பணி செய்ய போதுமான ஆட்கள் இல்லை. லீவு, டெபுடேஷன் என அனைத்தும் பெரும் சிரமமாய் இருக்கிறது. நமது ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் கடுமையான, வலிநிறைந்த பணியினால் அது சரிக்கட்டப்படுகிறது என்பதே உண்மை. ஆனால் இதுவே தொடர்கதையாகிவிடக் கூடாது. உடனடியாக Recruitment நடத்தப்பட வேண்டும். ஆனால் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து ‘இதோ Recrutiment வந்துவிடும்' என சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இன்னும் வந்தபாடில்லை. மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லை என முதலில் சொல்லப்பட்டது. இப்போது மத்திய அரசு அனுமதித்துவிட்டது, ஐ.ஓ.பியிலிருந்து கடிதம் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பல்லவன் கிராம வங்கியிலோ Recruitment நடந்து முடியும் தறுவாயில் இருக்கிறது.
நமக்கு வாய்த்த ஸ்பான்ஸர் வங்கி நம்மீது காட்டும் அக்கறை, ஈடுபாடு மீது கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நமது பிரச்சினைகள் குறித்து ஐ.ஓ.பிக்கு எழுதப்பட்ட கடிதங்களுக்கு உடனடியாகவும் முறையாகவும் பதில்கள் எப்போதுமே வருவதில்லை. ஆனால் ஐ.ஓ.பியின் உயரதிகாரிகள் இங்கு வரும்போதெல்லாம் அவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பிற்கும், தடபுடல் மரியாதைகளுக்கும் எந்த குறைவுமில்லை. இந்த முரண்பாடு விசித்திரமாயிருக்கிறது.
நமது தரப்பை பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சேர்மன் அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் Recrutiment குறித்த அனுமதி கிடைத்துவிடும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
தொடர்ந்து leave regularisation, Enhancement of Staff housing loan, Enhancement of Staff vehicle loan, Solor power loan to staff, DPN loan to charge sheeted employees and officers, Reimbursement of fuel expenses to officers and employees, Physically Handicapped Allowance, Disciplinary Actions என பல விஷயங்களைப் பேசினோம். அனைத்திற்கும் நிர்வாகம் சாதகமான பதிலைச் சொல்லி நம்பிக்கையளித்திருக்கிறது. அவைகள் குறித்து விரிவாக இனி வரும் சர்க்குலர்களில் விவாதிப்போம்.
பிப்ரவரி 20, 21 இரண்டு நாள் வேலை நிறுத்தம்:
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக பிப்ரவரி 20, 21 இருநாள் வேலைநிறுத்தம் குறித்து சென்ற சர்க்குலரில் தெரியப்படுத்தி இருந்தோம். ஏறத்தாழ 10 கோடி பேர்களுக்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் ஒரு மகத்தான போராட்டம் இது. இந்திய சுதந்திரத்திற்குப் பின், இத்தனை பெரும் அளவில் தொழிலாளர்களின் அணிவகுப்பை நாடு சந்தித்ததில்லை என சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
நமது அன்றாட வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகளை முன்வைத்துத்தான் இந்த இரண்டுநாள் வேலை நிறுத்தம் நடக்க இருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால், நமது ஊதியமும், ஊதிய உயர்வும் அர்த்தமில்லாமல் போய்விடும். தொழிற்சங்க சட்டங்கள் மீறப்பட்டால், தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிடும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது என்பது நமது எதிர்காலத்தை உறுதிசெய்து கொள்ளும் ஒரு மகத்தான காரியம். போனஸ், பிராவிடண்ட் பண்ட் மற்றும் கிராஜுவிட்டியில் உள்ள உச்ச வரம்புகளை நீக்க வேண்டும் என்பதும், அனைவருக்கும் பென்ஷன் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் அவுட்சோர்சிங் நிறுத்தப்பட்டு தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும் நமது கோரிக்கைளே. இவைகளுக்கு நாம் போராடாமல் யார் போராடுவது?
எனவேதான் பிப்ரவரி, 20, 21 இருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமக்குவோம் என அழைக்கிறோம். இதுகுறித்து விருதுநகர், இராமநாதபுரம், காரைக்குடி ஆகிய மையங்களில் வேலை நிறுத்தத்திற்கான ஆயத்தக் கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. வேலை நிறுத்தத்தில் முழுவீச்சோடு கலந்துகொள்வது எனமுடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வங்கித்துறையில் ஏற்கனவே AIBEA, BEFI, AIRRBEA போன்ற அகில இந்திய சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள தீர்மானித்திருந்தன. இப்போது இந்த கோரிக்கைகளின் நியாயம் உணர்ந்து வங்கித்துறையில் உள்ள AIBOC, NCBE, AIRRBOFபோன்ற சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கின்றன. நமது வங்கியில் PGBOAவும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வதாக சர்க்குலர் வெளியிட்டு இருக்கிறது. இதனை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிக்கிளைகளும் பிப்ரவரி 20, 21 தேதிகளில் மூடப்பட்டு விடும்.
அதுபோல், பாண்டியன் கிராம வங்கியிலும் அனைத்துக் கிளைகளும் மூடப்படுவதற்கு தோழர்கள் களமிறங்குவோம். இரண்டுநாள் ஊதியத்தை ஒரு பொருட்டாக கருதாமல் தேசத்தின் நலனை முன்னிறுத்துவோம்.
நாம் விழித்துக் கொள்ளாமல் தேசம் விழித்துக்கொள்ளாது. வாருங்கள் தோழர்களே, தேசம் காக்க வேலை நிறுத்தம் செய்வோம், வாருங்கள்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!