அருமைத் தோழர்களே!
வணக்கம்.
நடந்து முடிந்த Thrift Society தேர்தலில் நம் இரு சங்கத்தின் ஆதரவு பெற்ற 11 தோழர்களுமே வெற்றி பெற்றிருக்கின்றனர்.
1. தோழர். புஷ்பராணி , 2. தோழர்.தமிழ்மலர், 3.தோழர்.விஜயலட்சுமி, 4.தோழர்.சண்முகம், 5.தோழர்.ஸ்ரீராமச்சந்திரன், 6.தோழர்.பாலசுப்பிரமணியன், 7.தோழர்.பரதன், 8.தோழர்.நடராஜன், 9.தோழர்.ரெங்கநாதன், 10.தோழர்.செல்வராஜ், 11.தோழர்.விஜயராகவன் ஆகியோர் Thrift Societyயின் டைரக்டர்களாகியிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நம் சங்கங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றிகள் மூலம் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் நம் இரு சங்கங்களின் செல்வாக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது, நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. நம் சங்கங்கள் மீது தோழர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் வெளிப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தோழர்கள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாய் இருந்து சொஸைட்டியின் வளர்ச்சியையும் அதன் உறுப்பினர்களின் நலனையும் முன்னிறுத்தி செயல்படுவார்கள் என PGBEAவும், PGBOUவும் இந்த நேரத்தில் உறுதியளிக்கின்றன.
பாண்டியன் கிராம வங்கியில் Clerks to Officers, Scale III to Scale IV officers பிரமோஷன்கள் நடந்து முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ கலந்துகொண்ட அனைவருக்குமே பதவி உயர்வுகள் கிடைத்திருக்கின்றன. அந்தத் தோழர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் சில தோழர்களுக்கு Scale IV பிரமோஷன் வழஙக்கக்கூடாது என்று வேண்டுமென்றே அவர்கள் மீது தொடரப்பட்ட கடந்தகாலத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கிறது என்னும் விமர்சனத்தையும் வைக்க வேண்டியதிருக்கிறது. பாரபட்சமற்ற, பழிவாங்கும் நோக்கங்களற்ற, வெளிப்படையான நிர்வாகத்தைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
மே முதல் வாரத்தில் புதிய பணி நியமனங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என தலைமையலுவலகத்தில் சொல்லப்படுகிறது. மே இறுதி வாரத்தில் அதன் முடிவுகள் வெளியாகும் என்றும் அதையொட்டி அனைத்து நிலைகளிலும் மாறுதல்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தொலைதூரக்கிளைகளில் அவதிப்படும் தோழர்களுக்கு, அருகில் உள்ள கிளைகளுக்கு மாறுதல்கள் பெறுவதற்கான முயற்சிகளில் நம் சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.
தோழர்களே!
'பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் உருவாகும்' என்பதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு திரும்பத் திரும்ப ஊர்ஜிதம் செய்து கொண்டு இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை காவு கொடுப்பதற்கென்றே அவதாரம் எடுத்திருக்கும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசின், ஈவிரக்கமற்ற நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது வெறிகொண்ட பார்வையை இப்போது கிராம வங்கிகள் பக்கம் திருப்பி இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை 22.4.2013 அன்று, பாராளுமன்றத்தில் கிராம வங்கிகளில் தனியார்கள் முதலீடு செய்யும் வகையிலான ஒரு மசோதாவை அறிமுகம் செய்திருக்கிறார். அதற்கேற்ப, RRB ACT 1976ன் 6வது ஷரத்தை திருத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுவரை, கிராம வங்கிகளில் தனியார் முதலீடு செய்வதற்கான எந்த ஷரத்தும் RRB ACTல் இல்லை. இனி, மத்தியரசு, மாநில அரசு, ஸ்பான்ஸர் வங்கி தவிர தனியார்களிடமிருந்தும் முதலீடுகளை பெறலாம் என்றும், மத்திய அரசும், ஸ்பான்ஸர் வங்கியும் சேர்ந்து குறைந்த பட்சம் 51 சதவீதம் பங்குகளை வைத்திருக்க வேண்டுமென்றும் RRB ACTன் 6வது ஷரத்தை திருத்தம் செய்யப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மாநில அரசின் பங்குகள் இனி தேவையில்லை என்பதும், அதிகபட்சமாக கிராம வங்கிகளின் 49 சதவீதம் பங்குகளை இனி தனியார்களுக்கு கொடுக்கலாம் என்பதும் நடைமுறையாக்கப்படும். கிராம வங்கிகளின் நிர்வாகக்குழுவில் தனியார்கள் இடம் பெறுவார்கள். கிராமப்புற வங்கிகளின் நோக்கம் முற்றிலும் சிதைக்கப்படும். 'முற்றிலும் அரசுக்கு சொந்தமானது' என்று சொல்லிக்கொள்ள முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் காற்றில் விடப்படும். பிரமோஷன், மாறுதல்கள் எல்லாம் நிர்வாகத்திற்கு அனுசரணையாய் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதிகளை புறம் தள்ளும். மெல்ல மெல்ல அரசு, தன் கட்டுப்பாட்டை தளர்த்தி, ஒருநாள் 49 சதவீதத்திற்கும் மேலாக தனியார்களுக்கு பங்குகளை விற்று, ஒரு மகத்தான அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும்.
இந்த ஆபத்துக்களை உணர்ந்த நமது அகில இந்திய சங்கம் AIRRBEA உடனடியாக தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. நமது அருமைத் தோழர்.திலிப் குமார் முகர்ஜியின் மறைவையொட்டி, புதிய Secretary Generalஆக மத்தியக்கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற தோழர்.சையத் கான், தேசம் முழுவதும் இருக்கிற கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் ஏப்ரல் 29ம் தேதி தலைமையலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அறைகூவல் விடுத்திருக்கிறார். மேலும் அதே நாளில் டெல்லியில் நமது அகில இந்தியத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களை சந்தித்து, பாராளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
நமது வங்கியில் ஏப்ரல் 30ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். தோழர்கள் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமையலுவலகம் முன்பாக திரண்டு வருமாறு நம் இரு சங்கங்களும் கேட்டுக்கொள்கின்றன.
தோழர்களே!
அரசின் விபரீத நடவடிக்கையினால், நமது எதிர்காலமும், கிராம வங்கிகளின் எதிர்காலமும் ஒருசேர கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. நாம் நமது குரலை கடுமையாக எழுப்பி, அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமே இதனை தடுத்து நிறுத்த முடியும். கிராம வங்கிகள் தனியார் மயமாவதை, ஆரம்பத்திலேயே முறியடிக்க முடியும்.
வாருங்கள்.
புகையும் தீயை அணைக்க புறப்படுவோம், வாருங்கள்.
எந்த சமரசமும் இல்லாமல் போராடுவோம், வாருங்கள்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!