பாண்டியன் கிராம வங்கியில் 2012ம் வருடத்திற்குரிய Recrutiment இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. தங்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட்டு இருக்கிறது என்னும் நம்பிக்கையோடும், கனவுகளோடும் இளைஞர்கள் நம் வங்கிக்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிற வேளை இது. அவர்களை வரவேற்று, கிராம வங்கிகள் குறித்த நல்ல அபிப்பிராயங்களையும், அவர்களுக்கு இந்த வங்கியில் இருக்கும் நல்ல எதிர்காலத்தையும் எடுத்துச் சொல்லி, அவர்கள் தோளில் கை போட்டு நட்புரீதியாக நிற்க வேண்டிய தருணம் இது. செய்யும் வேலைகளில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, கிளைகளில் அவர்கள் இயல்பாகவும், சகஜமாகவும் பழகுவதற்கு ஏற்ற சூழல்களை அவர்களுக்கு உருவாகித்தர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இந்த நியாயமான பிரக்ஞைகளிலிருந்து திசை தவறி, குறி தவறி, நாம் விலகிச் சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது. நமக்கான தரத்திலிருந்தும், மரியாதையிலிருந்தும் இறங்க ஆரம்பித்திருக்கிறோமோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது. மிகுந்த வருத்தத்துடன் இதனை பகிர்ந்து கொள்கிறோம்.
கடந்த ஒரு வாரமாக புதிய Office Assistantகளுக்கான Record verification , Training முடிந்து posting நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இரண்டு Batchகள் நடந்து முடிந்திருக்கின்றன. நமது PGBEA சங்கத்திலிருந்து தலைவர்களும், முன்னணித் தோழர்களும் entranceல் அமர்ந்து அவர்களை வரவேற்று, வாழ்த்திக்கொண்டு இருந்தோம். புதியவர்களுக்கு, ”know Your Work, Know your Right' என்னும் புத்தகத்தைக் கொடுத்து அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு இருந்தோம். நமது சங்கத்தை பற்றி எடுத்துச் சொல்லி நம்மிடம் உறுப்பினராய் ஆக வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
இன்னொரு சங்கமான workers unionகாரர்கள் கொஞ்சம் தள்ளி, உள்ளே இருந்துதான் அவர்களிடம் முதலில் பேசினார்கள். அவர்கள் ஏற்கனவே புதியவர்களின் வீடுகளுக்குச் சென்று பேசியிருக்கிறார்கள். Training-ன் போது விருதுநகரில் தங்குவதற்கு லாட்ஜ், ரூம் போட்டுத் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். நமது சங்கத்தை தீவீரவாதிகள் சங்கம் என்றும், அரசியல் சார்பு யூனியன் என்றும் கன்னா பின்னாவென்று படம் போட்டு இருக்கிறார்கள். தாங்கள்தான் யோக்கியமான சங்கம் என்று membership formகளில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இவ்வளவையும் நடத்தி முடித்துவிட்டு, இங்கேயும் நம்மை முந்திகொண்டு, தலைமையலுவலகத்திற்கு வெளியே. சேர், பெஞ்ச் எல்லாம் போட்டு அமர்ந்து கொண்டார்கள். இதில் போய் போட்டி போட்டுக்கொண்டு நாமும் நமது இடத்தை மாற்றிக் கொள்ளவா முடியும்? எப்போதும் போல் ஒரே இடத்தில்தான் இருந்தோம் நாம் .
தாங்கள்தான் முதலில் புதியவர்களிடம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல workers unionகாரர்களின் நோக்கம். வெளியே புதியவர்களிடம் பேசி முடித்ததும், workers unionகாரர்கள் இருவர் புதியவர்களின் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக நடந்து வந்து தலைமையலுவலத்தின் உள்ளே வரைக்கும் கொண்டு சென்று விட்டு வருவார்கள். இடையில் நாம் அவர்களிடம் பேசிவிடக் கூடாதாம். எப்பேர்ப்பட்ட தொழிற்சங்க சிந்தனை இது! இருந்தாலும் நம் தோழர்கள், புதியவர்களை அணுகி, ‘know Your Work, Know your Right' புத்தகத்தைக் கொடுத்து அறிமுகப்படுத்தினார்கள். இதையும் தாங்க முடியாமல், workers unionகாரர் ஒருவர், “வாங்க, நேரமாகுது. சீக்கிரம் உள்ளே போங்க “ என விரட்டவும் செய்தார். எதோ ஒரு கலகம் நடக்கிற இடத்தில் மாட்டிக்கொண்டது போல புதியவர்கள் மிரண்டு போனார்கள். அமைதியாகவே இருந்தோம் நாம்.
“நாமும் அவர்களைத் தாண்டி வெளியே போய் சேர், பெஞ்ச் களை போட்டு உட்காருவோம்”
“நாமும் வீடுகளுக்கு போய் செக்-ஆப் பார்மில் கையெழுத்து வாங்குவோம்”
“நாமும் லாட்ஜ், ரும்கள் போடுவோம்”
இதுபோன்ற குரல்கள் நம் தோழர்களிடமிருந்தும் கேட்க ஆரம்பித்தன. “வாயை மூடுங்கள்” என அவர்களை சத்தம் போட்டு, அடக்கினோம். இந்த ‘நாமும்’ என்கிற வார்த்தையில் ஒலிக்கும் தொனியும், அர்த்தங்களும் அவமானத்தைத் தந்தன.
தேசம் முழுவதும் உள்ள கிராம வங்கி ஊழியர்களில், ஆபிசர்களில் 80 சதவீதத்திற்கும் மேலாய் உறுப்பினர்களாய் கொண்ட All India Regional Rural Bank Employees Association (AIRRBEA) என்னும் மகத்தான சங்கத்துடன் இணைந்தவர்கள் நாம். வஞ்சிக்கப்பட்ட கிராம வங்கி ஊழியர்களைத் திரட்டி அவர்களுக்கு வணிக வங்கி ஊதியத்தைப் பெற்றுத் தந்தவர்கள் நாம். இந்த வங்கியில் பணிபுரிபவர்களுக்கான மரியாதையையும், அடிப்படை வசதிகளையும் நிலைநாட்டியவர்கள் நாம். ஊழியர்களைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலமாகவோ, நீதிமன்ற மூலமாகவோ, போராட்டங்களின் மூலமாகவோ அவைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்றியவர்கள் நாம். இதோ, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷனை மிக விரைவில் பெற்றுத் தர இருப்பவர்கள் நாம்.நமக்கென ஒரு சொந்தக் கட்டிடம் உருவாக்கி அதில் நமது சங்க அலுவலகத்தை பராமரிப்பவர்கள் நாம். நமக்கென்று ஒரு வலைத்தளம் உருவாக்கி, தோழர்களோடு தொடர்ந்தும், துரிதமாகவும் தொடர்பு கொண்டு இருப்பவர்கள் நாம். தங்கள் சொந்த வாழ்வின் அருமையான நேரங்களையும், தருணங்களையும் சங்கத்திற்காகவும், உறுப்பினர்களுக்ககவும் இழக்க நேர்ந்த தலைவர்களைக் கொண்டவர்கள் நாம்.
இப்போது, மேலே சொன்ன ‘நாம்’ என்பதற்கும் அதற்கு மேலே சொன்ன ‘நாமும்’ என்பதற்குமான இடைவெளிகளையும், சுருதிபேதங்களையும் உணர முடியும்.
புதியவர்களை நம் தொழிற்சங்கமான Pandyan Grama Bank Employees Association (PGBEA) வில் உறுப்பினர்களாய் சேர்க்க வேண்டும் என நாம் நினக்கிறோம். தங்கள் சங்கமான Pandyan Grama Bank Workers Union (PGBWU)வில் உறுப்பினர்களாய் சேர்க்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. அவரவர்க்கான நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்காக கைக்கொள்ளும் நடைமுறைகளும், கைவிடும் தார்மீக நெறிகளும் வேதனையளிக்கின்றன.
இந்த வங்கியை அறிந்து, தங்கள் பணிகளை அறிந்து, பிரச்சினைகளை அறிந்து, சங்கங்களை அறிந்து அதன் பின்னர், ஒரு புதிய தோழர் தனக்கான சங்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என நாம் நினைக்கிறோம். அதற்கான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், workers unionக்கு அதில் நம்பிக்கை இல்லை. எங்கே வங்கிக்கு வந்தால் தங்களைப் பற்றிய வண்டவாளங்கள் தெரிந்துவிடுமோ, நம்மிடம் உறுப்பினர்களாய் ஆக மாட்டார்களோ என தங்கள் மீதே நம்பிக்கையில்லாமல், பயம் காரணமாக முந்திக்கொண்டு வீடுகளுக்குச் சென்று, செக் ஆப் பார்மில் கையெழுத்து வாங்குகிறார்கள். அவர்கள் கையெழுத்து வாங்கி விட்டார்களே என ‘நாமும்’ வாங்க வேண்டும் என ஒரு போட்டி உணர்வு எழ ஆரம்பிக்கிறது.
புதியவர்களுக்கு, வங்கியில் என்ன வேலை, எப்படி இருக்கும், எவ்வளவு சம்பளம், என்ன லீவு, பிரமோஷன் எப்படி என்பதெல்லாம் குறித்து ஏராளமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கும். அதுகுறித்து விளக்கங்கள் அளித்து, அவர்களுக்கு ஆதரவாய் நிற்க வேண்டியது நம் கடமை. அதனை நாம் செய்கிறோம். இப்படி புதியவர்களை அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்க workers unionக்கு எந்த வழியுமில்லை. எனவேதான் அவர்கள் புதியவர்களுக்கு லாட்ஜ், ரூம்கள் போட்டு, போக வர கார்களும் வேன்களும் ஏற்பாடு செய்து, பணிவிடைகள் செய்து, அவர்களை தன் பக்கம் தக்க வைப்பதில் குறியாய் இருக்கிறார்கள். யாராவது நம்மிடம் ‘விருதுநகரில் தங்குவதற்கு இடமிருக்கிறதா’ என்று கேட்டால் நமது சொந்த சங்க அலுவலகத்தில் தங்க அனுமதிக்கிறோம் நாம். அவர்கள் போட்டுத் தந்த லாட்ஜில் தங்கி, அவர்கள் வாங்கிக்கொடுக்கும் உணவைச் சாப்பிட்ட பிறகு எப்படி நம் சங்கத்தில் அவர்கள் சேர்வார்கள் எனவே அவர்களைப் போல ‘நாமும்’ லாட்ஜில் ரூம்கள் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்னும் போட்டி உணர்வு எழ ஆரம்பிக்கிறது.
இப்போது PGBEAவுக்கும், PGBWUக்கும் உள்ள வித்தியாசத்தையும், முரண்பாட்டையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். வங்கியில் சேர்ந்து புதியவர்கள் நம்மைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நாம் நினைக்கிறோம். புதியவர்களை வீடுகளுக்குப் போய் கவர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். நாம் புதியவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான விஷயங்களை புத்தகமாக கொடுக்கிறோம் அவர்களோ லாட்ஜ் போட்டு தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள். நாம் சங்கம் நடத்துகிறோம். அவர்கள் வியாபாரம் நடத்துகிறார்கள். இதுதான் வித்தியாசம்.
வியாபாரத்தில் லாபம் அடைய வேண்டுமானால் எதற்கும் துணிவார்கள். லஜ்ஜை, இங்கீதம், சூடு, சொரனை என்கிற மனித குணங்களை இழந்து போவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தால் கோபமும், வெறியும் ஏற்படும். கன்னா பின்னாவென்று மோத ஆரம்பிப்பார்கள். அதுதான் இங்கு நடக்கிறது.
“ஒரு போட்டியின் வெற்றியை உங்கள் தகுதியையும், தரத்தையும் மட்டும் வைத்து எடை போடாதீர்கள். போட்டியாளர்களின் தரத்தையும், தகுதியையும் வைத்து எடைபோடுங்கள். ஏனென்றால் நீங்கள் அவர்கள் தரத்துக்கு இறங்கவோ, ஏறவோ வேண்டியிருக்கும். அது உங்களால் முடியுமா என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்” என்பார்கள் அனுபவசாலிகள். “பகுத்தறிவு கொண்டவர்களோடு, பக்குவம் பெற்றவர்களோடு மோதுவது சிறப்பு. மூர்க்கத்தனமான மூடர்களோடு மோதுவது இழிவு” என்பார் தந்தை பெரியார்.
நாம் அவர்களின் தரத்துக்கு இறங்கிப் போகவும் முடியாது. அவர்களால் நம் தரத்துக்கு ஏறி வரவும் முடியாது. நமக்கென்று மகத்தான வரலாறு இருக்கிறது. நமக்கென்று அற்புதமான தோழர்கள் உறுப்பினர்களாய் இருக்கிறார்கள். நமக்கென்று ஒரு செல்வாக்கும், மரியாதையும் இருக்கிறது. அவைகளை இந்த போட்டி உணர்வால் இழந்துபோக வேண்டிய அவசியமில்லை.
தங்கள் வாழ்க்கை, எதிர்காலம், சொந்தப் பிரச்சினைகள். கல்லூரி வாழ்க்கை நினைவுகள் என எவ்வளவோ சுமந்து வரும் புதியவர்களை இடைமறித்து, நமது சங்கத்திலிருந்து தொந்தரவு செய்வதாக யாரேனும் ஒருவர் உணர்ந்தாலோ, உணர்ந்திருந்தாலோ வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். புதியவர்களின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைகளை அறிந்து நம் பக்கம் நிச்சயம் வருவார்கள்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!