23.7.13

EA circular 2/2013 dated 22.7.2013


சுற்றறிக்கை எண்: 2/2013 நாள்:  22.7.2016

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நமது வங்கியின் புதிய சேர்மனாக திரு.கார்த்திகேயன் பொறுப்பேற்று இருக்கிறார்.  நமது வங்கியில் ஏற்கனவே பொதுமேலாளராய் இருந்து நம் வங்கியையும், இங்குள்ள அனைவரையும் அறிந்தவர் அவர். வெளிப்படையான, பாரபட்சமற்ற, நேர்மையான, நட்புமிக்க அணுகுமுறையோடு பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை அவர் தலைமையேற்று நடத்திட விரும்புகிறோம். வங்கியின் வளர்ச்சி குறித்த சிந்தனைகளில், திட்டங்களில் ஊழியர்கள் நலனையும் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறோம். பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அவரை வாழ்த்தி வரவேற்கிறது.

பல்வேறு விஷயங்கள் நிர்வகத்திடம் பேச வேண்டி இருந்தன. நேற்று நமது வங்கியின் பொதுமேலாளரை சந்தித்துப் பேசினோம்.

1. Drought Relief Loan:  ஐந்து வருடத்திற்கும் குறைவான சர்வீஸ் உள்ளவர்களுக்கு Drought relief Loan-ன் முழுக் கடன் தொகை கொடுக்கப்படாமல், சர்வீசுக்கு ஏற்றாற் போல் குறைக்கப்பட்டு வந்தது. நாம் முழுத்தொகை கொடுக்க வேண்டும், instalment தொகையை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளுங்கள் என நிர்வாகத்திடம் பேசி வந்தோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கிளரிக்கலிலிருந்து, ஆபிசராக பதவியேற்று,  இன்னமும் கிளரிக்கலாகவே இருக்கும் தோழர்களுக்கு Drough Relief Loanம் - கிளரிக்கலுக்கு உள்ளது போல ரூ.50000/- கொடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. நாம் ரூ.75,000/- கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, நிர்வாகம் இந்த இரண்டு விஷயங்களிலும்  நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிவித்தார். நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

2. சில தோழர்களுக்கு லீவு எடுத்ததற்கு  சம்பளப்படித்தம் செய்யப்பட்டு இருந்தது. மேலசெவல் கிளையில் பணிபுரியும் தோழர்.செல்வராஜ் இம்மாதம் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு ரொம்ப காலமாக லீவு ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்து வருகிறது. தொடர் விடுப்பில் சென்றிருந்த ஒரு தோழர் மீண்டும் பணியில் சேர அனுமதிக்கப்படவில்லை. கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்ற தோழர்.புதியம்பூ ராஜா அவர்களை ஒருவருடம் முடிந்த பிறகும்  கன்பர்ம் செய்யாமல் இருந்தது நிர்வாகம். நாம் இவைகள் குறித்து பேசினோம். அனைத்துப் பிரச்சினைகளிலும் ஓரிரு நாட்களில் சாதகமான முடிவுகள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

3. Transfers:  இந்த வருடத்திற்கான பொது மாறுதல்கள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஏப்ரல் மாதம் பேசும்போது, clerical recruitment-உடன் சேர்த்து போடுகிறோம், அரசு recruitmentக்கு அனுமதி வழங்கவில்லை  என்றது நிர்வாகம்.  மே  மாதம் இறுதியில், அரசு ஒப்புக்கொண்டு விட்டதாகவும், உடனடியாக சங்கத்தின் சார்பில் டிரான்ஸ்பர் லிஸ்ட் கொடுங்கள் என்றது நிர்வாகம். நாம் 1.6.2013 அன்று நம் சங்கத்தின் சார்பில் லிஸ்ட் கொடுத்தோம். ஆனால் ஜூன் மாதங்களில் நடந்து முடிந்த recruitment-உடன் நிர்வாகம் சொன்னது போல டிரான்ஸ்பர் போடப்படவில்லை. தொலைதூரங்களில் அவதிப்படும் நம் தோழர்கள் தங்கள் வேதனைகளை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வந்தனர். நாம் நிர்வாகத்திடம் சென்று, அனைவருக்கும் உடனடியாக டிரான்ஸ்பர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். பொதுமேலாளர், சேர்மன் இருவரையும் சந்தித்துப் பேசினோம். இப்போது clerical -ல்  waiting list வெளியிடும்போது, தொலைதூரங்களில் அவதிப்படும் தோழர்களின் பாதிப்புகளை சரி செய்வதாக நிர்வாகம் சொல்லி வருகிறது. ஜூலை 6ம் தேதிதான்  waiting listலிருந்து புதிய கிளரிக்கல் அப்பாயிண்ட்மெண்ட்டிற்கான லிஸ்ட்  இறுதிபடுத்தப்பட  வேண்டிய நாள். ஆனாலும் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. நாம் பொது மேலாளரிடம் நம் வருத்தங்களை தெரிவித்தோம். அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள், பெரும்பாலும் மாறுதல்கள் இருக்கும் எனவும் பொதுமேலாளர் தெரிவித்தார்.

Graduation increment and original certificates to new Clericals:

ஆடிக்கு ஒரு சர்க்குலர், அமாவாசைக்கு ஒரு சர்க்குலர் போடும் PGBWU சங்கம் சமீப காலமாக வேக வேகமாக உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதவும், சர்க்குலர்கள் போடுவதுமாக இருக்கிறது.

நாம் புதிய தோழர்களுக்கு graduation increments கொடுக்காமல், குறைத்து ஊதிய நிர்ணயம் செய்து இருப்பதை அம்பலப்படுத்தி, அதுகுறித்து பிரச்சினைகள் எழுப்பிய உடனே, அதுவரை பேசாமல் இருந்த PGBWU  சட்டென்று விழித்துக்கொண்டு, உடனே  தாங்களும் அப்பிரச்சினை குறித்து பேசுவதாக புதிய தோழர்களுக்கு கடிதம் எழுதியது.

மெஸஞ்சர்த் தோழர்களுக்கு நாம் பதவி உயர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம், கலந்துகொள்ளுங்கள்  என அந்தத் தோழர்களுக்கு  அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தோம். அடுத்த நாளே நாங்களும் அதே நாட்களில்  பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்  வாருங்கள் என  கடிதம் எழுதியது PGBWU.

புதிய தோழர்களின் அப்பாயிண்ட்மெண்ட்டின் போது  original certificateகளை வாங்கிய நிர்வாகம் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதை சமீபத்தில் அறிந்தோம். இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்பதை நாம் இணையதளத்தில் எழுதினோம். சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு கடிதம் எழுதி, original certificateகளை விரைவில் வாங்கித் தருவோம் என நம்பிக்கையளித்திருந்தோம். அடுத்த நாளே, நாங்கள் உங்களுக்கு வாங்கித் தருகிறோம் என PGBWU கடிதம் எழுதியது.

நம்மால், PGBWUவும் ஒரு தொழிற்சங்கமாக செயல்பட முயற்சிகள் செய்வது ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும், பிரச்சினைகள் குறித்த அடிப்படை அறிவும், தெளிவும் இல்லாமல் அவர்கள் இவ்விஷயங்களில் தலையிடுவது ஆபத்தானதாகவும் படுகிறது.

நபார்டிலிருந்து வந்த கடிதத்தை PGBWU தலைவர்களுக்கு நமது நிர்வாகம் காட்டியதாம். நிர்வாகம் பதிலுக்கு நபார்டுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், விரைவில் கிடைத்துவிடும் என்று நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டதாம். அதை அப்படியே தங்கள் சுற்றறிக்கையில் இவர்கள் எழுதுவார்களாம். புதிய தோழர்கள் இனி இரண்டு இன்கிரிமெண்ட் குறித்து கவலைப்படாமல் அவர்கள் பாட்டுக்கு வேலை பார்க்கலாமாம். என்னய்யா ஜீபூம்பா வேலை இது!

24.7.2010ம் தேதி, மத்திய அரசு ஒரு ஆணை வெளியிடுகிறது. அதில் கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும்  ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தம் வழங்குவதற்கான ஒப்புதல் இருக்கிறது. அதில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டு இருக்கிறது:
“Pay scales and Dearness allowances of RRB employees as on 1.11.2007 would be equal to the corresponding categories of employees of the nationalised commercial banks. Pay for the purpose of DA, HRA and superannuation benefits shall mean basic pay, stagnation increments, specail pay,  graduation pay, professional qualification pay and officiating pay, if any."

இந்த அரசு ஆணையை குறிப்பிட்டுத்தான் நமது வங்கியில்  PAD/31/2010-11 எண்ணுள்ள சர்க்குலர் 21.9.2010ம் தேதி வெளியிடப்பட்டு, நம் வங்கியில் உள்ள அனைவருக்கும் 9வது இருதரப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 2008, 2011ம் ஆண்டு இங்கு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation pay வாக இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இப்போது 2013ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்  எப்படி கொடுக்காமல் இருக்க முடியும் என்பதுதான் நமது கேள்வி. மத்திய அரசிலிருந்து 24.7.2010ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஆணையை மீறி, இன்னொரு ஆணை வெளியிடப்பட்டதாக எந்த அறிகுறியுமில்லை. நம் வங்கியிலும் 21.9.2010ம் தேதி வெளியிடப்பட்ட சர்க்குலரை மீறி இதுகுறித்து வேறு சர்க்குலர்கள் வெளியாகவில்லை. பிறகு எப்படி இந்த நிர்வாகத்தால் முறையான அறிவிப்பு இல்லாமல் திடுமென graduation payவை நிறுத்த முடியும்? இங்கே இடையில் நபார்டு எங்கே வரும், எப்படி வரும்? மத்திய அரசின் ஆணையை விட , ஒரு நபார்டின் கடிதத்திற்கு சக்தி அதிகமா? இந்தக் கேள்விகளைத் தானே நாம் எழுப்புகிறோம்.

சரி. அந்த நபார்டு கடிதத்தில் என்ன இருக்கிறது? ‘graduation pay குறித்து சில கிராம வங்கி நிர்வாகங்கள் விளக்கங்கள் கேட்டு வருவதாகவும், அதுகுறித்து நபார்டு ஆராய்ந்து வருவதாகவும், அதுவரை காத்திருங்கள்' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.  இதற்கு ஏன் graduation payவை நிறுத்த வேண்டும். மற்ற கிராம வங்கி நிர்வாகங்கள் நபார்டின் இந்தக் கடிதத்தை கண்டு கொள்ளாமால், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation pay கொடுத்திருக்கிறார்களே! நம் வங்கியில் மட்டும் ஏன் கொடுக்கவில்லை? இந்தக் கேள்வியைத்தானே நாம் எழுப்புகிறோம்.

இதுபோலத்தான் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் original certificateகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த நிர்வாகம் இன்னமும் கொடுக்காமல் இருப்பதுவும். PGBWUவிலிருந்து நிர்வாகத்தை சந்தித்துப் பேசினார்களாம். அடுத்த பயிற்சி வகுப்பின்போது நிர்வாகம் அனைவரும் திருப்பிக்கொடுக்கிறோம் என்றதாம். அதை அப்படியே சர்க்குலரில் போட்டுவிட்டு, ‘இனி புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் அனைவரும் கவலைப்படாமல் அவர்கள் வேலையைப் பார்க்கலாம்” என அருள்வாக்கு வேறு.

இந்தப் பிரச்சினையில் இருக்கிற தார்மீக நெறிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தில்  original certificate களை கொடுக்காமல் வைத்துக்கொண்டால், அந்த நிறுவனம் அந்த ஊழியர்களை  bonded labor ஆக நடத்துகிறது என்பதுதான் சட்டரீதியான விளக்கமாகும். பெருத்த அநியாயம் என்னவென்றால், இந்த original certificateகளை  வாங்கி வைத்துக்கொண்ட நிர்வாகம், அதற்கான acknowledgementஐக்கூட புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கவில்லை. இதுவா முறை?

நாம் இப்போதும் சொல்கிறோம். ஒருநாள் கூட நிர்வாகம் இந்த original certificateகளை தங்களிடம் வைத்திருக்க உரிமையில்லை. அதிகாரமில்லை. சட்ட ரிதியாக அனுமதியுமில்லை. எல்லாவற்றையும் புரிந்துகொண்டு நிர்வாகம் இதனை சரிசெய்யும் என விரும்புகிறோம். நிர்வாகத்திற்கு தர்மசங்கடங்கள் எதையும் நாங்கள் கொடுக்க விரும்பவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது செயற்குழுக் கூட்டமும் முடிவுகளும்:

அகில இந்தியச் செய்திகள், BEFIயின் நடவடிக்கைகள், மாநாடு குறித்த பரீசீலனைகள் என பல அஜெண்டாக்களில் விவாதங்கள் நடந்தன. அவைகளில் முக்கிய முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.

பணிச்சுமையும், பணி நெருக்கடிகளும்:

ஏறத்தாழ அனைத்துத் தோழர்களும் பங்கெடுத்த அர்த்தமுள்ள, ஆரோக்கியமான விவாதமாக இருந்தது. புதிய தோழர்களின் பார்வையில் இருந்த தெளிவும், நுட்பமும் வெளிப்பட்டது. அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன. தலைமையலுவலகத்தில் இருக்கும் பணிச்சூழல், ஒரே கிளையில் 10 business corespondent இருப்பது, கோடிக்கணக்கில் பணத்தை இரு பெண் ஊழியர்கள் மட்டும் பல கீ.மீ பயணம் செய்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்,கேஷ் பார்த்துக்கொண்டு NRGES அக்கவுண்டுகளுக்கு Batch posting போட வேண்டிய நிர்ப்பந்தம், Jewel loan திருப்புவதற்கு ஒருநாளைக்கு 250க்கும் மேற்பட்ட நோட்டிஸ் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் என பல்வேறு விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. புதிதாக பணிக்கு ஒருபக்கம் ஆளெடுத்தாலும், புதிய புதிய பணிகள் கிளைகளில் கூடி, ஆள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாவதும் உணரப்பட்டது. நிர்வாகம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் வங்கியின் வணிகம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்துவது சரியல்ல என்பதும் புரிந்தது. இந்நிலையில் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, முதலில், அவரவர்க்கான ‘Duties and responsibilities'ஐ வரையறுத்து நிர்வாகம் சர்க்குலர்கள் வெளியிட வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மாறுதல்கள்:

மாறுதல்களில் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள், நிர்வாகம் காலதாமதம் செய்யும் போக்கு அனைத்தும் விவாதிக்கப்பட்டது.  தொலைதூரங்களில் அவதிப்படும் தோழர்களுக்கும், பாதிக்கப்பட்ட தோழர்களுக்கும் உடனடியாக மாறுதல்கள் செய்ய வலியுறுத்துவது, இல்லையென்றால், உடனடியாக, எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதே வேளையில், இருதரப்பு ஒப்பந்தகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் முறையான ஒரு டிரான்ஸ்பர் பாலிசியை வரையறுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைத்து, நிர்வாகத்தை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. நம் தரப்பில் ஒரு பாலிசியை முன்வைப்பதற்கு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் தோழர்கள் சங்கர சீனிவாசன், மாதவராஜ், சோமசுந்தரம், சுப்பிரமணியன், கோபால் சுப்பிரமணியன் ஆகியோர் இருப்பார்கள்.

கோரிக்கைகள்:

கீழ்கண்ட கோரிக்கை சாசனம் ஒன்றை உருவாக்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதரக் கோரிக்கைகள்:-

1)புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு இரண்டு graduation இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும்.
2) Transport Allowance  வணிக வங்கிகளில் உள்ளது போல ரூ.225/-, 275/- கொடுக்க வேண்டும்.
3) வணிக வங்கிகளில் உள்ளது போல Housing Loan வழங்க வேண்டும்.
4) வணிக வங்கிகளில் உள்ளது போல வாகனக் கடன் வழங்க வேண்டும்.
5) இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் உள்ளது போல, Petrol reimbursement, House maintenance allowance வழங்க வேண்டும்.
6) LFC/LTC  ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல உயர்த்தப்பட வேண்டும்.
7) 5 மணிக்குப் பிறகு வேலை பார்ப்பதற்கு Overtime allowance வழங்கப்பட வேண்டும்.
8) 2012, 2013 வருடக்கணக்கையொட்டி லீவு நாட்களில் வேலை பார்த்த தினங்களுக்கு compensatory allowance வழங்க வேண்டும்.
9) 2008ம் வருடம் பணியில் சேர்ந்த office Assistantகளுக்கு probation period -ல், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்க வேண்டும்.
10) 2008ம் வருடம் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கு maternity leaveக்குரிய salary வழங்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு தவறுதலாக probation period extend செய்யப்பட்டதும் சரிசெய்யப்பட வேண்டும்.
11) தற்காலிக கடைநிலை ஊழியர்களின்  தினசரி ஊதியம், நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தில் 1:30 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
12) Local chargesஐ கூட்ட வேண்டும்
13) Sweeping chargesஐ கூட்ட வேண்டும்.

கொள்கை ரீதியான கோரிக்கைகள்:

14) கிளரிக்கல், மெஸஞ்சர்த் தோழர்களின் Duties and responsibilities வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும்.
15) வணிக வங்கியில் இருதரப்பு ஒப்பந்தகளில் சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி ஒரு முறையான Transfer policy வரையறுக்கப்பட வேண்டும்.
16) புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் வாங்கி வைத்திருக்கும் ஒரிஜினல் சர்டிபிகேட்களை உடனடியாக நிர்வாகம் அவரவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.
17) ஒரு கிளர்க்/கேஷியர், ஒரு நாளைக்கு அதிக பட்சமாக எத்தனை வவுச்சர்கள் / டிரான்சாக்ஷன்கள் Post செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக வரையறுக்க வேண்டும்.

அடிப்படை வசதிக்கான கோரிக்கைகள்:

18) புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக திறந்த கிளைகளுக்கும் Ready Referenceஆக முக்கிய பழைய சர்க்குலர்களை தொகுத்து வெளியிட வேண்டும்.
19) அனைத்துக் கிளைகளிலும் ஏ.சி வசதி செய்யப்பட வேண்டும்.
20அனைத்துக் கிளைகளிலும், பெண் ஊழியர்களுக்கு என்று தனி கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
21 தலைமையலுவலகத்தில் பெண் ஊழியர்/அலுவலர் பிரச்சினைகளை முன்வைத்து பேசுவதற்கு, அரசு விதிப்படி, உடனடியாக Women cell அமைக்கப்பட வேண்டும்.
22 பழுதான பிரிண்டர்கள், கவுண்டிங் மெஷின்கள், கள்ள நோட்டு கண்டு பிடிக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டும்.

Regional Committee:

சங்கத்தின் நடவடிக்கைகளை பரவலாகக் கொண்டு செல்ல நான்கு Regional committee கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி: 

1. தோழர்.சுகுமார், தருவைக்குளம் (கன்வீனர்)
2. தோழர். சோமசுந்தரம், ஆறுமுகனேரி
3. தோழர். கனகராஜ், எட்டையபுரம் ரோடு
4. தோழர்.அருளானந்தம், பொட்டகவயல்
5. தோழர். சதீஷ் , பழையகாயல்
6. தோழர்.சந்தான செல்வம், கீழக்கரை
7. தோழர். காளிராஜன் , முதுகுளத்தூர்

விருதுநகர்:

1. தோழர். ராஜ்குமார், காரியாப்பட்டி (கன்வீனர்)
2. தோழர். சங்கர், சங்கரலிங்கபுரம்
3. தோழர்.சுப்பிரமணியன், எம்.ரெட்டியாப்பட்டி
4.தோழர்.ராமநாதன், கீழடி
5.தோழர்.ராஜா கார்த்திகேயன், கன்னிவாடி
6. தோழர்.கணேசன், திருத்தங்கல்
7.தோழர்.சமுத்திரக்கனி, ராஜபாளையம்.

சிவகங்கை: 

1. தோழர்.கலைசெல்வன், புதுக்கோட்டை (கன்வீனர்)
2. தோழர்.சுவாமிநாதன், தேவகோட்டை
3. தோழர்.அழகப்பன், திருவாடனை
4. தோழர்.வைரவன், அன்னவாசல்
5. தோழர்.வெள்ளைச்சாமி, கல்லுப்பட்டி
6. தோழர்.பழனியப்பன், ராயவரம்
7. தோழர்.வள்ளியப்பன், பெருமாள்மலை.

திருநெல்வேலி:

1. தோழர்.அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம் (கன்வீனர்)
2. தோழர். சுப்பிரமணியன், பழைய பேட்டை
3. தோழர். மகரபூஷணம்
4. தோழர்.ராஜமனோஹர், அம்பாசமுத்திரம்
5. தோழர்.சகிதாராமன், வள்ளியூர்
6. தோழர்.ஓ.சண்முகம், ராதாபுரம்
7. தோழர். செல்வகுமரேசன், பரப்பாடி.

வங்கியில் நிலவும் மந்த நிலையும், 
ஊழியர்கள்  அலுவலர்களின் மனோநிலையும்:

பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மிகுந்த வருத்தத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். நடந்து முடிந்த clerical to officers  பதவி உயர்வில் மொத்தம் 103 இடங்களுக்கு, 13 பேரே எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டதையும், இது ஆரோக்கியமான நிலைமை இல்லையே என ஆதங்கப்பட்டார். நாமும் அதே கருத்தைத்தான் தெரிவித்தோம். இதுகுறித்து நமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம்.

ஆபிஸர் பதவி என்பது கிளரிக்கலாக பணிபுரியும் பலருக்கும் கனவாக இருக்கும். அதற்கு  பொருளாதார ரீதியான உயர்வு மட்டும் காரணமில்லை, சமூக ரீதியான அந்தஸ்தும் முக்கியமான காரணம். இந்த ஆபிஸர் பதவிக்கு இதே வங்கியில் எவ்வளவோ போட்டிகள் நடந்திருக்கின்றன. நாலு பேர் தன்னை ‘கிளர்க்' எனச் சொல்வதை விட, ‘ஆபிஸர்' எனச் சொல்லும்போது கிடைக்கும் மரியாதைக்கும், மதிப்புக்கும் ஏங்கிய மனோபாவம் அது. ஒருமுறை கிளர்க் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “நமக்காக இல்லை என்றாலும், நம் குழந்தைகளுகாகவாது ஆபிஸர் ஆகணும். அவர்களது திருமண அழைப்பிதழில் தன் தந்தை ஆபிஸர் என குறிப்பிட வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார். இப்பேர்ப்பட்ட ஆபிஸர் பதவி வேண்டாமென்று பலரும் இன்று ஒதுங்கி நிற்க என்ன காரணம்?

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறவருக்கு, அந்த வேலை மீது ஒரு பற்றும், பிடிப்பும் இருக்கும். அந்த வேலை தரும் ஆத்ம சுகம், திருப்தி, அந்த வேலை மூலம் தன் வாழ்வில் மேலும் முன்னேற முடியும் என்னும் நம்பிக்கை என எதோ ஒருவகையில், அந்த ஊழியருக்கு வேலை பார்ப்பதற்கான உந்துசக்தி ஒன்று இருக்கும். இந்த உந்துசக்தி அவரின் வளர்ச்சிக்கு மட்டுமில்லை, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது. வேலைபார்ப்பதில் ஈடுபாட்டையும், திறனையும் வளர்ப்பதற்கு இந்த உந்துசக்தியே அடிப்படையாகிறது. ஊதிய உயர்வு பதவி உயர்வு என்பதெல்லாம் அந்த உந்துசக்தியின் சில வடிவங்கள் அல்லது அடையாளங்களாய் இருக்கின்றன. ஆபிஸர் பதவி வேண்டாமென்று புறக்கணிப்பதன் மூலம், பலருக்கும் இந்த வங்கியில் உந்துசக்தியாக எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டு இருக்கிறது. ஒருவகையான வெறுமையின்  குறியீடாகவே இதனை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் நம்மை கவலை கொள்ள வைக்கிற விஷயமாகவும் இருக்கிறது.

“என்ன வேலை பார்த்து என்ன?”, “ இருக்கிற வரைக்கும், இப்படியே இருந்து எந்த பொல்லாப்பும் இல்லாம சீக்கிரம் ரிடையர் ஆயிரணும்”, “முழுசா என் கிராஜுவிட்டியை நான் வீட்டுக்கு கொண்டு போக முடியுமான்னு தெரியல..” “லோன் கொடுத்தாலும் தப்பு, கொடுக்கலன்னாலும் தப்பு...”  “பிராஞ்ச்சில் என்ன நடக்குமோ, எது நடக்குமோன்னு  தினம்தினம் கழிக்க வேண்டியிருக்கு..”, “வேலை பாக்குறவங்களுக்கு என்ன  மரியாதை இருக்கு?” இப்படியான குரல்களை அடிக்கடி கேட்க முடிகிறது. இதன் பின்னணியில் நாம் மேலே குறிப்பிட்ட ‘வெறுமை'க்கான அர்த்தங்கள் விளங்குகின்றன.

இந்த வங்கியில் பணிபுரிகிற ஊழியர்களையும், அலுவலர்களையும் motivate செய்வதற்கு பதிலாக இந்த நிர்வாகம் அவர்களை terroriseசெய்து கொண்டு இருக்கிறது. Friendlyயான சூழல் இல்லை. எல்லாமும் எல்லோரும் நெகடிவ்வாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், வெறுமைதான் சூழும். இதனால் வங்கியின் வளர்ச்சியும் கேள்விக்குறியாக்கி விடும்.

புதியவர்கள் நம் வங்கியில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிற சூழலில், இங்கு ஏற்கனவே  வேலை பார்ப்பவர்கள்  சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தால்தான், அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். புதியவர்களுக்கு தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

சகலத்தையும் அடைத்துக்கொண்டு, இறுகிப்போய் இருக்கிற போக்குகளை விட்டொழித்து தலைமையலுவலகம் தன்னை புனரமைத்துக் கொள்ளாவிடில், நிலைமை இன்னும் மோசமாகும்.  நட்பும், பிரியமுமாய் மனம் இருந்தால்தான் உறவுகள் விரிவடையும். உந்துசக்திகள் ஏற்படும். இல்லையென்றால் யாருக்கோ வந்ததாய் ஒரு பிடிப்பற்ற, விட்டுப்போன மனோபாவாங்களே தலைதூக்கும். மரங்கள் துளிர்க்கும் இடங்களில் வெறுமை சூழ்வதில்லை. இதை எச்சரிக்கையாக மட்டுமில்லை, மிகுந்த வருத்தத்தோடும் சொல்லிக் கொள்கிறோம்.

ஒரு சந்தோஷமான, உற்சாகமான மனநிலையை இங்கு பணிபுரிகிறவர்களுக்கு ஏற்படுத்துவது குறித்து தீவீரமாக யோசிக்க வேண்டிய நேரமிது.

தோழமையுடன்


(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!