பிப்ரவர் 10, 11 தேதிகளில் நாடு முழுவதும் 48 மணி நேர வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நியாயமான ஊதிய உயர்வுக்காகவும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நடந்து முடிந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் 14 லட்சம் கோடி மதிப்புள்ள பண வர்த்தனைகள் முடங்கியிருக்கின்றன என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இவை யாவற்றுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் வலியப் போய் நடத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே முயற்சித்தன. அரசும், ஐ.பி.ஏ வும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் பிடிவாதம் பிடித்ததால்தான் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ` வங்கியின் லாபம் முழுவதையும் ஊதியங்களுக்குச் செலவிட முடியாது எனவும், அதன் ஒரு பகுதியை முதலீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்` என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். எதோ லாபம் முழுவதையும் நாம் கேட்பது போல ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்திருக்கிறார். நாம் நியாயமான ஊதிய உயர்வினைத்தான் கேட்கிறோம். இந்த நாட்டில் பெரு முதலாளிகள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு துப்பில்லை. அப்படி செய்தாலே, வங்கிகளின் லாபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
மத்திய அரசும், ஐ.பி.ஏவும் பிடிவாதம் தளர்த்தி நியாயமான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இணக்கமான சூழல் ஏற்படவில்லையென்றால், சங்கங்கள் இன்னும் விரிவடைந்த, தீவீரமான போராட்டங்களுக்குத் தயாராகும். அதற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
நாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் இணைந்து கலந்து கொண்டனர். பண்டியன் கிராம வங்கியில் 233 கிளைகளில் 192 கிளைகளில் வங்கிச் சேவை நடைபெறவில்லை. வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட PGBEA, PGBOU, PGBOA தோழர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நாம் பெறப் போகும் ஊதிய உயர்வில், நமது பங்கு இருக்கிறது என பெருமை கொள்வோம்.
வீர வணக்கம் தோழர்களே!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!