நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தை அல்லது அமைப்பை நிர்வகிப்பது என புரிந்துகொள்ளலாம். நிர்வகிப்பது என்றால் அந்த நிறுவனத்தின் சகல காரியங்களும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக பொருள். இந்த `கீழ்` என்கிற வார்த்தையை அழுத்தத்தோடு பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது நிர்வகிப்பவர்கள் மேலேயும், நிர்வகிக்கப்படுகிறவர்கள் கீழேயுமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால்தான் Management என்பதற்கு அர்த்தம் `மேலாண்மை` என்பதாக இருக்கிறது. `மேல்` என்று வந்துவிட்டாலே அதனோடு அதிகாரமும் மரியாதையும் சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தையும், மேலான இடத்தையும் அவர்களுக்குத் தருவது முதலீடு. அதாவது மூலதனம். இந்த நிர்வாகிகள் முதலீட்டாளர்களின் சார்பானவர்களாக இருக்கிறார்கள். அவர்களே வேலை வாங்குபவர்களாகவும், லாபநட்டங்களை கணக்கிடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களே சட்ட திட்டங்களை உருவாக்குபவர்களாகவும், கண்காணிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களே குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாகவும், தண்டனை வழங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது முதலீட்டை / மூலதனத்தை பாதுகாக்கிற, வளர்க்கிற கருவியே நிர்வாகம். அது மேலே இருக்கிறது.
கீழ் இருப்பவர்கள் நிர்வகிக்கப்படுகிறவர்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். அதாவது உழைப்பை செலுத்துகிறவர்கள். அவர்களுக்கு மரியாதையும், அதிகாரமும் கிடையாது. மேலிருப்பவர்கள் சொன்னதை அப்படியேச் செய்ய வேண்டியவர்கள். அவர்கள் மீது மேலும் மேலும் வேலைப்பளு சுமத்தப்படுகிறது. பணிபுரியும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை. அவர்களுக்கு ஏற்படும் பணி நெருக்கடிகளை மேல் இருப்பவர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்களது முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. சலுகைகள் மறுக்கப்படுகின்றன. ஒழுங்கற்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளாகிறார்கள். மொத்தத்தில் அடிமைகளாகக் கருதப்படுகிறவர்கள்.
இந்த மேல், கீழ் ஏற்றத்தாழ்வுதான் நாம் வாழும் அமைப்பின் விதியாக இருக்கிறது. அதுதான் இந்த நிறுவனங்களில் பிரதிபலிக்கிறது. மூலதனம் அதிகாரம் கொண்டதாகவும், உழைப்பு அடிமைத்தனம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இந்த விதி இயல்பானதாகவும், மாற்றமுடியாததாகவும் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகிறது. எனவே இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், நாம் என்ன செய்ய முடியும் என்றும் ஒரு மனோபாவம் ஏற்படுகிறது.
இந்த ஏற்றமும் தாழ்வும், அதிகாரமும் அடிமைத்தனமும் சரியல்ல என்று ஆவேசத்துடன் உருவானவைதான் தொழிற்சங்கங்கள். உழைக்கிறவர்கள் பக்கம் நின்று, எல்லோரும் சமம் என்னும் நியாயத்தை தொழிற்சங்கங்கள் பேச ஆரம்பித்தன. `எல்லாவற்றையும் மாற்ற முடியும்` என்னும் நம்பிக்கையோடு வேலைசெய்கிறவர்களின் நலன்களுக்காக போராட ஆரம்பித்தன. அவர்கள் வேலைக்கு உத்திரவாதமும், எதிர்காலத்திற்கு உறுதியும் செய்கிற சட்டங்களுக்காக பெரும் இயக்கங்கள் நடத்தின. 19ம் நூற்றாண்டில் பிற்பகுதிகளில் இரத்தம் சிந்தி நடத்தப்பட்ட மாபெரும் தியாகங்களின் மூலம் ஓரளவு வெற்றி கிட்டியது. அடிப்படையான உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.
ஆனால் இந்த அமைப்பும் அதன் கருவிகளாக இருக்கின்ற நிர்வாகங்களும் உழைப்பவர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் மெல்ல மெல்ல நீர்த்துப் போய் வைப்பதில் குறியாக இருந்தன. அவை சிரித்துக்கொண்டே கழுத்தையறுக்கும் தந்திரங்களை கற்றிருந்தன. `நமக்கு வேலை தருகிற நிறுவனம்`, `நமக்கு சோறு போடுகிற நிறுவனம்` `இது நமது நிறுவனம்` என்று சொல்லி உழைப்பவர்கள் முதலில் அந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், நன்றியோடு இருக்க வேண்டும் என்னும் கருத்தை விதைக்க ஆரம்பித்தன. உழைப்பவர்களின் நிறுவனமாக இருந்தால், நிறுவனத்தின் நடைமுறைகளை செயல்திட்டங்களை வகுப்பதில் உழைப்பவர்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடம் கொடுப்பதே சரியானதாய் இருக்க முடியும். ஆனால் அதனை இந்த நிர்வாகங்கள் செய்ய தயாராயில்லை. அடிமைத்தனத்தை விசுவாசம் என்ற பெயரில் நீருற்றி வளர்ப்பதுதான் அவர்களது நோக்கம். நிறுவனம் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்று திரும்பத் திரும்ப மந்திரம் போல சொல்லிக்கொண்டே இருந்தன. அதற்கு சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. நிர்வாகத்துக்கு ஆதரவான, சமரச குணம் கொண்ட தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. உழைப்பாளர்களிடையே பிரிவும், ஒற்றுமையின்மையும் ஏற்பட்டது. கூட்டுபேர உரிமை என்பது கரைய ஆரம்பித்தது. பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் உழைப்பாளர்கள் இழக்க ஆரம்பித்தனர். நிர்வாகங்கள் அதில் குளிர் காய்கின்றனர். உழைப்பாளர்களோ வெந்து புழுங்குகின்றனர்.
எனவேதான் நாம் இந்த அமைப்பு, இந்த நிர்வாகங்கள் குறித்த ஒரு தெளிவான புரிதல் கொண்டாக வேண்டியிருக்கிறது. தந்திரங்களும், சூழ்ச்சிகளும் செய்து உழைப்பாளர்களை பலவீனப்படுத்தும் நிர்வாகத்தை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நிர்வாகம் என்பதும் மனிதர்களால் ஆனதுதான். ஆனால் மனிதத்தன்மையற்று ஒரு இயந்திரம் போல செயல்படுகிறது. அதனால்தான் `நிர்வாக இயந்திரம்` என அழைக்கப்படுகிறது. உழைப்பவர்களின் நலனில் அக்கறை உள்ளது பாவனைகள் செய்கிறது. அவ்வப்போது எதாவது சின்னச் சின்னச் சலுகைகள் செய்து கொடுத்து மார் தட்டிக் கொள்கிறது. உழைப்பாளிகளில் காட்டிக் கொடுக்கும், தாஜா செய்யும் இழிந்த குணம் கொண்டவர்களை அடையாளம் கண்டு தன் பக்கத்தில் வைத்துக் கொள்கிறது. உழைப்பவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே முன்னுரிமை கொடுக்கிறது.
தொழிற்சங்கங்களோ, நிர்வாகத்தின் சுய உருவத்தை அம்பலப்படுத்தி, உழைப்பவர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்றன. ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை ஆயுதமாக்கி போராட்டத்துக்கு தயார் செய்கின்றன.
இந்த முரண்பாடுகள் உலகமெங்கும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. பாண்டியன் கிராம வங்கியில் இந்த முரண்பாடு எப்படி இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.
(தொடரும்)
When such a small capitalistic ideologies can win this world,why the mass of workers can not do so?
ReplyDeleteGood and best Explanation.
ReplyDelete