14.2.14

மனிதாபிமானமற்ற PGB நிர்வாகம்!


நேற்றைய தொடர்ச்சி....

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் குறித்து நமது இரு சங்கங்களும் தொடர்ந்து கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம்.

1. மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது
2.வெளிப்படைத்தன்மையற்றதாகவும், இறுக்கமானதாகவும் இருக்கிறது.
3.ஊழியர்களின் பணிநெருக்கடிகளுக்கு தீர்வு காணாமல் இருக்கிறது.
4.வங்கிப்பணிகளில் அவரவர்க்கான விதிகளை வரையறுத்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தாமல், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நடத்தைகளில் மட்டுமே ஒழுங்கை பார்க்கிறது.
5.சம்பளப்பிடித்தம் என்றால் அதிவேகமாகச் செயல்படுகிறது. அதே வேளையில் உரிய சலுகைகளையும், உரிமைகளையும் வழங்குவதென்றால் காலம் தாழ்த்துகிறது, தட்டிக் கழிக்கிறது.
6. ஊழியர்களோடும், அலுவலர்களோடும் நட்பு ரீதியான நல்லுறவு வைத்துக்கொள்ளாமல், அனைவரையும் எதிரிகளாகவும், குற்றவாளிகளாகவும் பார்க்கிறது.
7.ஓய்வு பெறப் போகும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடிவயிற்றில் பயத்தையும், படபடப்பையும் உருவாக்கி, வங்கிப்பணியில் அவர்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடுவதை குறைக்கிறது.
8.புதிதாக பணிக்குச் சேர்ந்த இளம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை அரவணைத்து அவர்களுக்கு இந்த வங்கியின் மீது பிடிப்பையும் பற்றையும் உருவாக்குவதற்கு பதிலாக அதிகாரம் செலுத்தி இந்த வங்கியை விட்டு வெளியேறும் எண்ணத்தை  ஏற்படுத்துகிறது.

இந்த விமர்சனங்களை எதோ மேலோட்டமாக நமது சங்கங்கள் சொல்லவில்லை. அனுபவங்களிலிருந்துதான் நாம் இதனை முன்வைக்கிறோம். கடந்த காலமே இவைகளுக்கு சாட்சியாக இருக்கிறது. இந்த விமர்சனங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உதாரணங்களாக நம் தோழர்களின் வாழ்க்கையும், உண்மைக்கதைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை நினைவுபடுத்துவது அவசியம் என நினைக்கிறோம். எனவே ஒவ்வொன்றாக  பேசுவோம்.

1. பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் மனிதாபிமானமற்றதாக இருக்கிறது:

ஒரு நிர்வாகம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். அவர்களின் துயரங்களையும், காயங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது அதை பரிவுடன் கவனிக்க வேண்டும்.  அதனை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஆனால் நிர்வாகங்கள் அப்படி இருப்பதில்லை. சட்ட திட்டங்களால்தான் நிர்வகிக்க முடியும் எனவும், அங்கு கருணைக்கும் இரக்கத்திற்கும் இடமில்லை எனவும் உறுதியாய் இருக்கின்றன. ஏனென்றால் உழைக்கும் மக்களை அவர்கள் சகமனிதர்களாக கருதுவதேயில்லை.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இவ்விஷயத்தில் விதிவிலக்கல்ல என்பது மட்டுமல்ல, சகிக்க முடியாத உதாரணமாய் மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிர்வாகம் மிக விரைவில் `மனிதாபிமானமற்ற` தன்மையில் முதலிடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் தென்படுகின்றன.

முதலில் தோழர்.கிருஷ்ணசாமியைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு நம் வங்கியிலிருந்து 2013 பிப்ரவரி மாதம் ரிடையர் ஆனார். அதற்கு சில மாதங்கள் முன்புதான், தன் வாழ்நாளின் ஒரேயொரு பதவி உயர்வு பெற்று ஆபிஸராயிருந்தார். அவர் 2010ம் ஆண்டு கிளரிக்கலாயிருந்த போது ஒரு மூன்று நாட்கள் கூடலூர் கிளைக்கு டெபுடேஷன் போயிருந்தார். அப்போதுதான் CBS  ஆகியிருந்தது. ஒரு கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தொகை வேறு கணக்கில் தவறுதலாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் நடந்தது. பின்னாளில் அது சரி செய்யப்பட்டுவிட்டது என்பது வேறு கதை. ஆனால் இந்த நிர்வாகம் அவர் பணி ஓய்வு பெற சில நாட்கள் இருந்தபோது இதுகுறித்து ஒரு சார்ஜ் ஷீட் கொடுத்தது. நாம் நிர்வாகத்திடம் உடனடியாக பேசினோம்.  உடனே ஒரு பதிலைக் கொடுங்கள், சாதகமாக முடித்து விடலாம் என்றது. நாம் பதிலை சில நாட்களிலேயே கொடுத்து விட்டோம். இதோ ஒரு வருடமாகப் போகிறது. இன்று வரை அந்த சார்ஜ் ஷீட் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வைத்திருக்கிறது.  ஆனால் சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டதை முன்னிறுத்தி அவருடைய ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி விட்டது. மூன்று நாட்கள் டெபுடேஷன் சென்றதற்காக, 12 மாதங்களாக அவர் கிராஜுவிட்டியையும், லீவு சரண்டரையும் பெறாமல் இருக்கிறார். 30 வருடங்களாக இந்த வங்கியில் உண்மையாக பணிபுரிந்தவருக்கு கிடைத்திருக்கும் மரியாதையா இது?

நிர்வாகத்துடன் நமது சங்கங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. இதோ முடித்து விடுகிறோம், அதோ முடித்து விடுகிறோம் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில்  ஒவ்வொரு நாட்களையும் எவ்வளவு வேதனையுடன் தோழர்.கிருஷ்ணசாமி கழித்திருப்பார்? பொருளாதார ரீதியாக என்ன சிரமங்களுக்கு ஆளாகியிருப்பார்?  ஆனால் நிர்வாகத்துக்கு அது புலப்படுவதேயில்லை.

அதுபோலத்தான் மேலசெவல் கிளையில் மெஸஞ்சராக பணிபுரிந்த தோழர்.செல்வராஜ் அவர்களின் நிலைமையும்.  2013 ஜூலை மாதம் அவர் பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் 2013 ஆரம்பத்தில் தொடர் விடுப்பில் இருந்ததாகவும், முறையாக தெரிவிக்கவில்லையென்றும் ஒரு சார்ஜ் ஷிட் கொடுத்தது. லீவு எடுக்கிற அந்தந்த மாதங்களிலேயே அது குறித்து விளக்கம் கேட்டு, பிரச்சினையை எப்போதோ முடித்திருக்க முடியும். ஆனால் நிர்வாகம் அவர் ஓய்வு பெற காத்திருந்திருக்கிறது.

நிர்வாகத்துடன் அப்போதும் பேசினோம். ‘சார் லீவு எடுத்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?’ என கேட்டோம். நிர்வாகம்  “ஒரு பதிலைக் கொடுங்கள். அதை வைத்து சுமூகமாக முடித்து அவருக்கு கிராஜுவிட்டி கொடுக்கிறோம்’ எனச் சொன்னது. ஆனால் சொன்னது போல முடிக்கவில்லை. சாதாரண லீவு விஷயத்திற்கு என்கொயரி ஆர்டர் செய்தது. ஈவு இரக்கமில்லாமல் தன் கோரப்பல்லைக் காட்டியது. சார்ஜ் ஷீட்டைக் காரணம் காட்டி அவருடைய கிராஜுவிட்டி ஏழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எந்த வருமானமும் இல்லாமல், கிராஜுவிட்டியும் இல்லாமல், ஓய்வுக்குப் பிறகு அவருடைய நாட்கள் எப்படியிருக்கும்?

இதுபோல பல உதாரணங்களையும் கண்ணீர்க் கதைகளையும் சொல்ல முடியும். நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர்களுக்கு இதயமே இல்லை என்பது மட்டும் நடக்கும் சம்பவங்கள் நிச்சயம் செய்கின்றன.

பல பெண் தோழர்கள்  குடும்பத்தைவிட்டு கைக்குழந்தைகளோடு தொலைதூரங்களில் பணிபுரிகிறார்கள். நாம் சென்ற வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அவர்களுக்கு மாறுதல்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் இரக்கமேயில்லாமல் இறுக்கமாய் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமை மதியங்களும் அவர்கள் நான்கைந்து மணி நேரங்கள் பயணம் செய்து தங்கள் குடும்பத்தைப் பார்த்துவிட்டு, திங்கட்கிழமை அதிகாலையில் வேதனையுடன் கிளைகளுக்கு புறப்படுவது இந்த நிர்வாகத்துக்கு ஒரு பொருட்டாகவேத் தெரிவதில்லை. சமீபத்தில் ஒரு பண்டிகையின் போது பஸ் கிடைக்காமல் கைக்குழந்தையோடு பல மணிநேரம் அல்லாடி வீட்டுக்கு வந்த ஒரு பெண் தோழர் போன் செய்து `சார் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் சார். தாங்க முடியாமல்தான் போன் செய்கிறேன்` எனச் சொல்லும்போது வாய்விட்டு ஓவென்று கதறிவிட்டார். ஆனால் நிர்வாகத்தின் இரும்புக் காதுகளுக்கு இந்த அவலக்குரல்கள் கேட்பதேயில்லை.

போதிய பயிற்சிகள் இல்லாமல் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களையும், மெஸஞ்சராயிருந்து பதவி உயர்வு பெற்றவர்களையும் கேஷ் பார்க்க வைக்கிறது நிர்வாகம். கடுமையான வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், அங்கங்கு தோழர்கள் பணத்தை விட்டு விடுகின்றனர். சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் ரூ.50000/- வரை பணம் விட்டுவிட நேர்ந்திருக்கிறது. நிர்வாகம் அடுத்த நாளே சம்பந்தப்பட்ட தோழர்களிடம் பணத்தைக் கட்டுமாறு நெருக்கடி கொடுத்திருக்கிறது. சங்கத்திலிருந்து தலையிட்டுப் பேசினோம்.  நான்கைந்து தவணைகளில் கட்டி விடுவதாக யோசனையை முன்வைத்தோம். நிர்வாகம் ஒப்புக் கொள்ளவேயில்லை. அவர்கள் எங்கே ஒடிவிடப் போகிறார்கள். நம் ஊழியர்கள்தானே. வங்கிக்காக பணிபுரிந்தபோது ஏற்பட்ட இழப்புதானே. பாதிப்படைந்த தோழருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் ஏன் நடந்துகொள்ளக் கூடாது? நிர்வாகம் ஏன் கனிவோடு அணுகக் கூடாது?

இப்படி லீவு சாங்ஷன் செய்யப்படுவதில், உயரதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளில், சிறு தவறுகளையும் பெரும் குற்றங்களாக சித்தரித்து விளக்கம் கேட்பதில் பல நூறு விஷயங்களை சொல்ல முடியும்.

இந்த நிர்வாகத்தின் `மனிதாபிமானமற்ற` ஸ்தல புராணம் நீளமானது. அருவருப்பானது. கோரமானது. இதுதான் நிர்வாகத்தின் மனோபாவமாக இருந்தால் இங்கு பணிபுரிகிறவர்களுக்கு எப்படி இந்த வங்கியின் மீது பற்று ஏற்படும். பார்க்கும் வேலைகளில் உற்சாகம் இருக்கும்?

(தொடரும்)

2 comments:

Comrades! Please share your views here!