15.2.14

PGBEA - PGBOU Circular 3/2014 dated 14.2.2014





பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA, NFRRBO)




சுற்றறிக்கை: 3/2014                                         நாள்: 14.02.2014

அருமைத் தோழர்களே!

வணக்கம். பிப்ரவர் 10, 11 தேதிகளில் நாடு முழுவதும் 48 மணி நேர வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நியாயமான ஊதிய உயர்வுக்காகவும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நடந்து முடிந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் 14 லட்சம் கோடி மதிப்புள்ள பண வர்த்தனைகள் முடங்கியிருக்கின்றன என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இவை யாவற்றுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் வலியப் போய் நடத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே முயற்சித்தன. அரசும், ஐ.பி.ஏ வும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் பிடிவாதம் பிடித்ததால்தான் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ` வங்கியின் லாபம் முழுவதையும் ஊதியங்களுக்குச் செலவிட முடியாது எனவும், அதன் ஒரு பகுதியை முதலீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்` என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். எதோ லாபம் முழுவதையும் நாம் கேட்பது போல ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்திருக்கிறார். நாம் நியாயமான ஊதிய உயர்வினைத்தான் கேட்கிறோம். இந்த நாட்டில் பெரு முதலாளிகள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு துப்பில்லை. அப்படி செய்தாலே, வங்கிகளின் லாபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

மத்திய அரசும், ஐ.பி.ஏவும் பிடிவாதம் தளர்த்தி நியாயமான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இணக்கமான சூழல் ஏற்படவில்லையென்றால், சங்கங்கள் இன்னும் விரிவடைந்த, தீவீரமான போராட்டங்களுக்குத் தயாராகும். அதற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் இணைந்து கலந்து கொண்டனர். பண்டியன் கிராம வங்கியில் 233 கிளைகளில் 192 கிளைகளில் வங்கிச் சேவை நடைபெறவில்லை. வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட PGBEA, PGBOU, PGBOA தோழர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நாம் பெறப் போகும் ஊதிய உயர்வில், நமது பங்கு இருக்கிறது என பெருமை கொள்வோம்.

வீர வணக்கம் தோழர்களே!

தொடரும் PGB நிர்வாகத்தின் அராஜகப் போக்கும் பழிவாங்கும் படலமும்!

சென்ற சர்க்குலரில் தோழர் முருகதாஸ் பணிபுரிந்த நாட்களுக்குரிய  ஊதியத்தை கேட்டதற்காக அவரை இந்த நிர்வாகம் திடுமென காரணம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்தததை குறிப்பிட்டு இருந்தோம். நிர்வாகம் அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய ஊதியத்தை கொடுத்து விட்டது. அவரை விரைவில் reinstate செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

ஆனால் இவ்விஷயத்தை வெளியிட்டதற்காகவும், நிர்வாகத்தின் போக்கை தட்டிக் கேட்டதற்காகவும் PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ் மீது பாய்ந்திருக்கிறது. அவர் மீது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சார்ஜ் ஷீட் ஒன்று கொடுத்தது தோழர்களுக்கு ஞாபகமிருக்கும். 4.1.2013 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு, பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி  எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம்.

நிர்வாகம் `ஒரு பதிலைக் கொடுங்கள். மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்காமல் நிறுத்திக்கொள்கிறோம்` என்றது. அதன் பேரில் தோழர்.மாதவராஜ் 18.1.2013 அன்றே பதிலைக் கொடுத்தார். நிர்வாகம் அத்தோடு பிரச்சினையை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தது. இப்போது 13 மாதங்கள் கழித்து, அந்த சார்ஜ் ஷீட் ஃபைலை தூசிதட்டி எடுத்து, என்கொயரி ஆர்டர் செய்திருக்கிறது. அப்பட்டமான பழிவாங்கும் போக்கும், தொழிற்சங்க விரோத மனப்பான்மையும் வெளிப்பட்டு இருக்கிறது.  இதனை நாம் கண்டிக்கிறோம். இரண்டு சங்கங்களும் கலந்து பேசி இது குறித்த எதிர்ப்பு இயக்கங்களை முடிவு செய்யும். BEFI, AIRRBEA  தலைமைக்கு கொண்டு சென்று நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நமது கோரிக்கைகளும் இயக்கமும்!

சென்ற சர்க்குலரில் இந்த நிர்வாகத்தின் மீது ஒரு எட்டு விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். அவைகளை சரி செய்யும் விதமாக ஆறு கோரிக்கைகளையும் எழுப்பியிருந்தோம். நேற்று (13.2.2014) நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி இணைந்து அது குறித்து விவாதித்தன. நமது இயக்கத்தையும், நிர்வாகத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனங்களையும் விளக்கி, கோரிக்கைகளை முன்னிலைப் படுத்தி முதலில் பிரச்சார இயக்கம் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.

நமது கோரிக்கைகளை தெரியப்படுத்தி, அதன் மீது உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையை ஒட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நமது இரு சங்கத்தின் செயற்குழுக்களும் விரைவில் கூடி முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், நமது பிரச்சார இயக்கத்தின் முதல் கட்டமாக-

1.நிர்வாகத்தின் மீதான நமது விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விளக்கி ஒரு சிறு புத்தகமாக பிரசுரம் அனைத்துத் தோழர்களுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.

2. முக்கிய நகரங்களில் கீழ்க்கண்ட வாசகங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படும்.
-------------------------------------------------
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகமே!
1.     இதயமேயில்லாமல் காட்டு தர்பார் செய்யும் தலையலுவலகத்தின் உயர்         பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளைத் தலைமையலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்து!
2.     மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் படி மக்களுக்கு     அவர்கள் வேலைபார்க்கும் இடத்திலேயே பணத்தை பட்டுவாடா செய்!
3.     ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி ஓய்வு பெற்றவர்களின் வயிற்றில் அடிப்பதை     கைவிடு!
4.     ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் ஊழியர்களையும், அலுவலரையும்         சித்திரவதை செய்யாதே!
5.     கிளைகளில் போதிய வசதிகளை செய்து, பணிநெருக்கடிகளை தீர்த்து வை!
6.     தற்காலிக ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்!

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ்
யூனியன்
-------------------------------------------------


இந்த வங்கியில் தொழில் அமைதி நிலவுவதும்,  ஊழியர்களும் அலுலர்களும் உற்சாகமாக பணிபுரிவதற்குமான சூழலை ஏற்படுத்துவதும் நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது.


தோழமையுடன்

                                                
(J.மாதவராஜ்)                                                           (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                              பொதுச்செயலாளர் - PGBOU   

(PGB management பற்றிய தொடரின் அடுத்த பகுதி- வெளிப்படைத்தன்மையற்ற PGB நிர்வாகம் - நாளை வெப்சைட்டில் வெளியாகும்)


No comments:

Post a Comment

Comrades! Please share your views here!