வங்கித்துறையில் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான ஊதிய விகிதம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, IBAவுக்கும், சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை 9 இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மூலம், நாம் இன்று பெற்றுவரும் ஊதியமும், சலுகைகளும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்தமுறை, 9 வது இருதரப்பு ஒப்பந்தம் காலாவதியாகி, இரண்டு வருடங்களுக்கு மேலாகியும், பத்தாவது இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேறாமல் இருக்கிறது. ஏறிவரும் கடுமையான விலைவாசி, வேலைப்பளு இவையெற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, 25 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என சங்கங்கள் (United Forum of Bank Unions - UFBU)) கோரிக்கை வைத்தன. ஆனால் IBAவோ, 11 சதவீதம்தான் தரமுடியும் என்கிறது.
இதுவரை பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவிட்டன. UFBU சார்பில், தங்கள் கோரிக்கையான 25 சதவீத உயர்விலிருந்து இறங்கி வர சம்மதம் தெரித்தபோதிலும், IBA தரப்பில் தங்கள் நிலைபாடான 11 சதவீத உயர்வுக்கு மேல் ஏறிவர முடியாது என பிடிவாதமாக இருக்கிறது.
கடைசியாக 10.11.2014 (நேற்று) டெல்லியில் IBAவுக்கும், UFBUவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் IBA தரப்பில் 11 சதவீதத்தைத் தாண்டி உயர்வு கொடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலும், பி.ஜே.பி ஆட்சியில் இருந்தாலும், உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சியே நடைபெறுகிறது என்பதற்கு இந்தபேச்சுவார்த்தைகளும் ஒரு உதாரணம். இரு கட்சிகளுமே முதலாளிகளுக்கு ஆதரவானவை என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், UFBU சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வரும் நவமபர் 12ம் தேதி (நாளை) நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது.
வணிக வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் ஊதியமே, கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுவதால், AIRRBEAவும் அதன் இணைப்புச் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளன.அதுபோல AIBOC இணைப்புச் சங்கங்களும் முடிவெடுத்துள்ளன.
நமது பாண்டியன் கிராம வங்கியைப் பொறுத்த வரையில், இங்குள்ள அனைத்துச் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
நியாயமான ஒரு ஊதிய உயர்வுக்காக போராடுகிறோம்.
நமது ஊதியத்திற்காக நாம் போராடுகிறோம்.
நமது எதிர்காலத்திற்காக நாம் போராடுகிறோம்.
வெற்றி நமதே!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!