அருமைத் தோழர்களே!
வணக்கம்.
நமது சங்கத்தின் பொதுச்செயலாளரும், AIRRBEAவின் Joint Secretaryயுமான தோழர்.மாதவராஜ் அதிகமாக லீவு எடுத்துவிட்டார் என்று சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டு இருந்ததும், அதை கண்டித்து நாம் எதிர்ப்பு தெரிவித்ததும் தோழர்களுக்குத் தெரியும்.
தோழர்.மாதவராஜ் தொழிற்சங்க காரணங்களுக்காக லீவு எடுத்தார் என்றும், அவர் முறையாகத்தான் லீவு எடுத்தார் என்றும் நாம் முன்வைத்த காரணங்களை நிர்வாகம் ஒப்புக்கொள்ளாமல், தோழர்.மாதவராஜ் அவர்களுக்கு `lowering one stage for two years' தண்டனை வழங்கப் போவதாக show-cause notice அனுப்பியது. அதை சரியில்லை என PGBWU தலைமையிலிருந்து பொது மேலாளரிடம் பேசினோம். நமது கருத்துக்களை பரிசீலிப்பதாக அவரும் positiveஆக பதிலளித்து இருந்தார். ஆனால் `lowering one stage for two years' என்னும் தண்டனையை உறுதி செய்தே Final Order அனுப்பினார். இதனை நாமும், PGBOUவும் கடுமையாக கண்டித்தோம். AIRRBEA பொதுச்செயலாளர் தோழர்.சையீதுகான், NFRRBE பொதுச்செயலாளர் தோழர் சிவ்கரன் திரிவேதி, BEFI-TN பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் ஆகியோர், `இது தவறான அணுகுமுறை, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட பழிவாங்கும் செயல், உடனடியாக சரிசெய்ய வேண்டும்` என நமது நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்கள். NFRRBO பொதுச்செயலாளர் தோழர்.வெங்கடேஷ்வரரெட்டி சேர்மனிடம் போனில் பேசியிருக்கிறார். தொடர்ந்து நாமும் PGB சேர்மனை சந்தித்து பேசுவதென முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், 30.1.2015 அன்று PGBWU மற்றும் PGBOU தோழர்கள் 60 பேருக்கும் மேல் சேர்மனை mass deputation -ஆகச் சென்று சந்தித்தோம். AIRRBEA Joint Secretary தோழர்.மாதவராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்தும், ஓய்வு பெறும் வேளையில் சார்ஜ் ஷீட்கள் வழங்கப்படுவதை எதிர்த்தும் மெமொரெண்டம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து PGBWU, PGBOU தலைவர்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தோழர்.மாதவராஜ் இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யட்டும், அதில் நிர்வாகம் நாம் சொன்ன கருத்துக்களை பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக` கூறியது. அதுபோல, பணி ஓய்வு பெறுகிற வேளையில் ஒழுங்கு நடவடிக்கைகளை தவிர்க்கவே விரும்புவதாகவும், அவர்களது பணி ஓய்வு பிரச்சினையின்றி இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் சொல்லியது. நிர்வாகத்தின் இணக்கமான அணுகுமுறையால் நாம் அன்று மாலை நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டோம். நிர்வாகம் சூழ்நிலையை சுமூகமாக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
அதிகமாகும் ஒழுங்கு நடவடிக்கைகள்:
ஒழுங்கு நடவடிக்கைகளை குறைப்பார்கள் என்று நினைத்தால், இங்கு நிர்வாகம் நாளுக்கு நாள் ஒழுங்கு நடவடிக்கைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு 24மணி நேரமும் இயங்கும் துறையாக AIVD மாறிக்கொண்டு இருக்கிறது.
கோவில்பட்டி கிளையில், Outsourcing employee ஒருவரால் நடந்தாகச் சொல்லப்படும் தவறுகளுக்கு, Password secrecyஐ கடைப்பிடிக்காததே காரணம் என்று குற்றம் சாட்டி ஏறத்தாழ 21 தோழர்களுக்கு (ஆபிஸர்கள் மற்றும் கிளர்க்குகள்) நிர்வாகம் explanation கேட்டது. இதுபோல மேலும் சில கிளைகளில் உள்ள தோழர்களுக்கும் கேட்கப்பட்டு இருந்தது. நாம் அப்போதே நிர்வாகத்திடம் பேசினோம். `Password secrecy' ஐ கடைப்பிடிக்க வேண்டும் என ஒரு புறம் சொல்லிக்கொண்டே, இன்னொருபுறம் Password கொடுக்காமல் கிளையை நடத்த முடியாது, ஜாக்கிரதையாக இருங்கள் என அறிவுறுத்துவதும் நிர்வாகம்தான் என்னும் உண்மையை எடுத்துரைத்தோம். `password ஐ parent branchல் கொடுத்தால்தான் deputationக்கு ஆள் தர முடியும் என பேரம் நடப்பது நிர்வாகத்துக்கு தெரிந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதையும் முன்வைத்தோம்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட நிர்வாகம், `இந்தக் குற்றச்சாட்டுகளை explanation நிலையிலேயே முடித்துக் கொள்கிறோம். இனிமேல் இதுபோல் நடக்காமலிருக்க, உங்கள் உறுப்பினர்களிடம் சொல்லுங்கள்` என்றது. நாமும் அதுபோல் மண்டலக் கூட்டங்கள் அனைத்திலும் `password secrecy' ஐ கடைப்பிடிக்குமாறு தோழர்களுக்கு அறிவுறுத்தினோம்.
ஆனால் நிர்வாகம் தான் சொன்னதற்கு மாறாக, சென்ற மாதம் கோவில்பட்டி கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற இருந்த தோழர்.சமீம்பானு அவர்களுக்கு `password secrecy'ஐ கடைப்பிடிக்கவில்லையென சார்ஜ்ஷீட் கொடுத்தது. அதனை PGBOUவுடன் சேர்ந்து நாமும் எதிர்த்தோம். இறுதியாக அவர் பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, `unconditionally and voluntarily accepted the charges' என டிக்டேட் செய்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, `lowering one stage' என்னும் தனது கீர்த்தி பெற்ற தண்டனையை வழங்கியது நிர்வாகம். இது நமக்கு விடப்பட்ட எச்சரிக்கை.
இதோ, இந்த மாதம் ஓய்வு பெற இருக்கும் தோழர்.காக்கும்பெருமாளுக்கு, அவர் சாம்பவார் வடகரைக் கிளையில் ஒருநாள் டெபுடேஷன் சென்றபோது, 'password secrecy'ஐ கடைப்பிடிக்கவில்லையென சார்ஜ் ஷீட் கொடுத்துள்ளது. 32 வருடம் இந்த வங்கிக்காக உண்மையாக உழைத்த ஒரு ஊழியருக்கு, அவர் ஒருநாள் டெபுடேஷன் சென்றதில் நடந்ததாகச் சொல்லப்படும் தவறுக்காக இந்த நிர்வாகம் கொடுத்திருக்கும் பரிசு இது. நாம் நிர்வாகத்திடம் பேசியிருக்கிறோம். தோழர்.காக்கும் பெருமாளுக்கு எந்த தண்டனையும் வழங்கக் கூடாது என்று எடுத்துரைத்திருக்கிறோம். நிர்வாகம் `தாங்கள் positive ஆக இருப்பதாகவும், ஆனால் CVO என்ன முடிவு எடுக்கிறாரோ?` என சொல்லியது. நாம் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. நிர்வாகம் தான் கடைப்பிடிக்கும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு CVOவை காரணம் காட்டுகிறது என நாம் சந்தேகிக்கிறோம்.
மேலும் `password secrecy'கடைப்பிடிப்பதற்கான சுற்றுச் சூழலை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறோம். ஒரு கம்ப்யூட்டரில் பணிபுரியும்போது நமது விரல் அசைவுகள் தெரியாதபடிக்கு கேபின் போல அடைத்திருக்க வேண்டும். இங்கு எல்லாம் திறந்த வெளியில். பிறகு எப்படி password secrecyஐ கடைப்பிடிக்க முடியும்? நிர்வாகம் இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கைகள் எடுப்பதாகச் சொல்லி இருக்கிறது.
தோழர்களே! விழித்துக் கொள்வோம். எதன் பொருட்டும் `password secrecy' ஐ விட்டுக்கொடுக்க வேண்டாம். அதுபோல jewel loan packet register-ஐயும் உடனுக்குடன் entry போட்டு பராமரித்துக் கொள்ளுங்கள். முதலில் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்.
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை:
13.2.2015 அன்று நமது சங்கத் தலைவர்கள் சேர்மனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு விஷயங்களும், கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டன.
2013ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த புதிய தோழர்களில் ஏறத்தாழ 30 தோழர்களுக்கு இன்னும் confirmation order வரவில்லையென்றோம். ஏற்கனவே இந்தப் பணி துவங்கி விட்டதாகவும், confirmation orderகள் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. (சுற்றறிக்கை கிடைக்கும்போது பலருக்கு confirmation வந்திருக்கும்.)
சென்ற போர்டு மீட்டிங்கில், ஸ்பான்ஸர் வங்கிக்கு இணையாக Staff Housing loan தொகை உயர்த்தப்பட்டு இருப்பதை வரவேற்றோம். அதற்கான சர்க்குலர் சீக்கிரம் வெளியிடப்பட வேண்டும் என்றோம். இரண்டொரு நாட்களில் வெளியாகும் என நிர்வாகம் சொல்லியிருக்கிறது.
மெஸஞ்சர்களிலிருந்து கிளர்க்குகளாக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு இன்னும் டிரான்ஸ்பர் போடப்படவில்லை. அதுபோல சென்ற வருடம் பதிவி உயர்வு பெற்றவர்களுக்கு இன்னும் அரியர்ஸ் வழங்கப்படவில்லை. நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொல்லியது.
ஆட்களை எடுக்காமல் நிர்வாகம் கிளைகளை வேகவேகமாக திறந்து வருகிறது. இதனால் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. 200க்கும் மேலே கிளர்க்குகளையும் அது போல 200க்கும் மேலே ஆபிஸர்களையும் புதிதாக பணிநியமனம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் நிர்வாகம் சொல்லியது. விரைவில் அதற்கான அறிவுப்புகள் வெளியாகும் எனவும், ஏப்ரல், மே மாதத்திற்குள் புதியவர்கள் பணிக்குச் சேர்ந்து விடுவார்கள் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
நமது சங்கத்திற்கு recognition கொடுக்க வேண்டும் என்றோம். நிர்வாகம் அதற்கான விதிகளை ஆராய்ந்து, சாதகமான நடவடிக்கைகள் எடுப்பதாகச் சொல்லியது. அதற்கான விதிமுறைகளை நாம் தருகிறோம் எனச் சொல்லியிருக்கிறோம்.
Petrol Allowance மற்றும் House maintenanace Allowance குறித்துப் பேசினோம். ஸ்பான்ஸர் வங்கியோடு தொடர்பு கொண்டு அதில் ஒரு சாதகமான முடிவு விரைவில் எடுப்பதாகச் சொல்லப்பட்டது.
நிர்வாகத் தரப்பில், வங்கியின் Advances position நினைத்தது போல இல்லையென்றும், அதனை உயர்த்துவதற்கு சங்கங்கள் co-operate செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு நாம், தங்கவிலையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் என்றும், ஓய்வு பெறுகிற நேரத்தில் நிர்வாகம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றொரு காரணம் என்றும் சொன்னோம். ஆபிஸர்கள் லோன் கொடுப்பதற்கு அச்சப்படுகிற நிலைமை உருவாகி வருகிறது. அதை நிர்வாகம் சரிசெய்ய வேண்டும், நாங்கள் எங்கள் தரப்பில் advances position உயர நிச்சயம் ஒத்துழைப்போம் என்றோம்.
தற்காலிக மெஸஞ்சர்களின் வாழ்வில் வெளிச்சமாய் வந்திருக்கும் தீர்ப்பு:
தற்காலிக மெஸஞ்சர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொடர்ந்த முயற்சிக்கும், இயக்கத்திற்கும் மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. 31.3.2011 தேதியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருந்த தற்காலிக மெஸஞ்சர்களை 31.3.2011 தேதியிலிருந்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களை அவர்கள் பணி செய்த காலத்தை கணக்கிலெடுத்து, தொடர்ந்து வரும் பணி நியமனங்களின் போது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆக இந்த வங்கியில் 5 வருடம் சர்வீஸ் முடித்த தற்காலிக மெஸஞ்சர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்ய வழி ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பின் நகல், டிரியூப்னலிலிருந்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து நமக்கு அனுப்பி வைக்கப்படும். ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும். அப்போதுதான் தீர்ப்பின் முழு விபரம் தெரிய வரும்.
ஒன்றுமில்லாமல், எதிர்காலத்தை கேள்விகளோடு பார்த்திருந்த தோழர்களுக்கு இப்போது நம்பிக்கையும், பாதையும் கிடைத்திருக்கிறது. நிர்வாகம் இந்தத் தீர்ப்பினை அமல்படுத்தி, அவர்களது வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் என நம்புகிறோம்.
பாட்னாவில் நமது தோழர்கள்:
BEFIயின் 9 வது அகில இந்திய மாநாடு பாட்னாவில் 7,8,9,10 தேதிகளில் நடைபெற்றது. AIRRBEA-TN லிருந்து மொத்தம் 7 தோழர்கள் கலந்துகொண்டனர். நமது சங்கத்திலிருந்து தோழர்கள் சங்கரசீனிவாசன், அருண் பிரகாஷ் சிங், சங்கர், சந்தானசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதிநிதிகள் விவாதத்தில் தோழர்.சங்கரசீனிவாசன் கலந்துகொண்டு கிராம வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்திருக்கிறார். PGBEAவும், PGBWU வும் ஒன்றாக AIRRBEA தலைமையின் கீழ் இணைந்ததைத் தெரியப்படுத்திய போது மொத்த அரங்கமும் ஆரவாரித்தது. கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்றும், கிராம வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நமக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தோழர்.நந்தகுமார் தலைவராகவும், தோழர்.பிரதீப் பிஸ்வாஸ் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். நமது தோழர்.சங்கரசீனிவாசன் General Council member ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
நான்கு நாட்கள் வேலை நிறுத்தமும், காலவரையறையற்ற வேலை நிறுத்தமும்:
10 வது இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேறுவதை IBA இழுத்தடிப்பதும், குறைந்த ஊதிய உயர்வு வழங்குவதில் பிடிவாதமுமாக இருக்கிறது. வங்கி ஊழியர் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து, போராட்டங்களை ஒத்தி வைத்த போதிலும், மத்திய அரசும் IBAவும் தங்கள் நிலையில் மாறாமல் கடுமையாக இருக்கின்றன. எனவே பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள் வேலைநிறுத்தமும், மார்ச் 16 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தமும் செய்வதென முடிவு செய்திருக்கின்றன. இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களாகிய நாமும் கலந்து கொள்கிறோம். Probationary periodல் இருந்தாலும் வணிக வங்கிகளில் ஊழியர்கள் நான்கு நாட்கள் வேலைறுத்தத்தில் கலந்து கொள்வதால், நமது வங்கியிலும் அது போன்று probationary periodல் இருப்பவர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த வேலை நிறுத்தங்களை வலியுறுத்தி, வணிக வங்கி ஊழியர் கூட்டமைப்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறது. 20.2.2015 அன்று badge wearing, 24ம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும் திட்டமிட்டு இருக்கிறது. இந்த இயக்கங்களிலும் நாம் நம்மை இணைத்துக் கொள்வதோடு அங்கங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் நமது தோழர்கள் பங்கெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தனியார் மயமாக்கலுக்கு எதிராக டெல்லி பேரணி:
கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தை AIRRBEA துவக்கியது. தொடர்ந்து அகில இந்திய அளவில் கிராம வங்கிகளில் இயங்கும் அனைத்து சங்கங்களும் இணைந்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இராஜ்ய சபா மெம்பர்களை சந்தித்து, நம் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவது என்றும், மார்ச் 10 ம் தேதி டெல்லியில் பேரணி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. நாமும் நமது தமிழகத்து இராஜ்ய சபா மெம்பர்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறோம். டெல்லி பேரணிக்கு நமது சங்கத்திலிருந்து 22 தோழர்கள் கலந்துகொள்கின்றனர்.
வழக்கு நிதி:
தோழர்களே, தொடர்ந்து நாம் இயங்கி வருகிறோம். அகில இந்திய அளவில் பென்ஷனுக்கான வழக்குச் செலவுக்கு நம் சங்கத்திலிருந்து நிதி அனுப்ப வேண்டி இருக்கிறது. AIRRBEA விலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தற்காலிக மெஸஞ்சர்கள் வழக்குக்கான ஆரம்பச் செலவை மட்டுமே இதுவரை நாம் கொடுத்து இருக்கிறோம். பலமுறை சென்னை சென்று வந்திருக்கிறோம். இப்போது வழக்கு வெற்றி பெற்ற நிலையில் வழக்கறிஞருக்கு fees கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே அனைத்துத் தோழர்களும், தங்கள் பங்களிப்பாக ரூ.400/-ஐ உடனடியாக சங்கக் கணக்கிற்கு (Pandyan Grama Bank Workers Union, Account No: 5009, Virudhunagar branch) செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் சந்திப்போம்.
தோழமையுடன்
(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர்
ReplyDeleteGreetings Sir,,,,,Expecting 2 Graduation Increments to newly recruited Clerks.........