25.6.11

EA-OU circular dt.26.04.2010

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
(360/RMD) (இணைப்பு :AIRRBEA & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA)
விருதுநகர்
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
சிறிது காலதாமதத்திற்கு பின்னர் உங்களை சந்திக்கிறோம்.
சதிகள், சூழ்ச்சிகள், வன்மங்கள் நிறைந்த காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன. ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஆதரவாக இனி இங்கு குரல்கள் எழக் கூடாது என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றனர். நிர்வாகத்திற்கு எதிராக இனி கோரிக்கைகள் வைத்து போராடக் கூடாது என்று வியூகங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. சூரியனை மறைத்துவிடலாம் என்னும் பேதமையையும், அஞ்ஞானத்தையும் என்னவென்பது? வரலாற்றிலிருந்து எந்தப் பாடத்தையும் படிக்காத அல்லது படிக்க விரும்பாத மூடர்களை என்ன செய்வது?
நிர்வாகத்தின் தயவில் குளிர் காய்வதும் காரியங்கள் சாதிப்பதும்தான் தொழிற்சங்கமென அவர்களே பீற்றிக்கொள்ளட்டும். ’சிங்கம் நாய் தரக்கொள்ளுமோ நல்லரசாட்சியைஎன்னும் மகாகவி பாரதியின் கவிதை வரிகளே அவர்களுக்கு தக்க பதிலாக ஒலிக்கட்டும்.
நாம் இங்கு ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் மரியாதை வேண்டுமென்கிறோம். கிளைகளில் இருக்கும் கடும் வேலைப்பளுவை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறோம். பெண் ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்கிறோம். தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்கிறோம். அனைவருக்கும் newspaper allowance வழங்கப்பட வேண்டும் என்கிறோம். புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறோம். வருடா வருடம் கொடுக்கப்பட்டு வந்த compliment தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்கிறோம். இது நிர்வாகத்திற்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் தொழிற்சங்கங்களுக்கு எப்படி பிடிக்காமல் போகும்?
இந்த கோரிக்கைகள் வைத்து போராடிய நம்மை நிர்வாகம் முடக்குவதற்கும், அடக்குவதற்கும் பெரு முயற்சிகள் செய்தது. அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நிர்வாகத்தோடு தொழிற்சங்கங்கள்
என்ற பேரில் சிலர் கூட்டு சேர்ந்து கொண்டு, போராடுகிறவர்களுக்கு எதிராக கிளம்புவதை எப்படி புரிந்து கொள்வது? இந்த மண்ணில்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனும் இருந்தான், அவனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும் இருந்தான். இப்படித்தன் வரலாறு நமக்கு உண்மையையும், போலிகளையும் அடையாளம் காட்டுகிறது.
தங்கள் சுயநலத்திற்காக ஊழியர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு, நிர்வாகத்தை கட்டித் தழுவும் கருங்காலிகளும், கயவர்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுவார்கள் என்பதுதான் அனுபவம். அதுவும் இங்கு நடக்கும்.
போராடுகிறவர்களுக்கு சார்ஜ் ஷீட்களும், சஸ்பென்ஷன்களும் வழங்கும் நிர்வாகம், போராடாதவர்களுக்கு மெரிட் சர்டிபிகேட் என்று ஒன்றை வழங்குகிறது. அதை சிலர் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அது உழைக்கும் மக்கள் மீது பூசப்பட்ட சேறு என்பதையும், அது ஒரு அவமானச் சின்னம் என்பதையும் பலர் இங்கு புரிந்தே வைத்திருக்கின்றனர். இப்படி பாகுபடுத்துவது Industrial dispute Actக்கு எதிரான நடவடிக்கை என்பதை நிர்வாகம் அறியாமல் இருக்கலாம். ஆனால் நாம் அதை தெளிவுபடுத்தியே ஆக வேண்டி இருக்கிறது. இப்படியொரு இழிந்த காரியத்தைச் செய்த நிர்வாகத்தை prosecute செய்யவேனுமென நாம் ALCக்கு complaint செய்திருக்கிறோம். அதுகுறித்து நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. நிர்வாகம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
சார்ஜ் ஷீட்கள் கொடுக்கப்பட்டவர்களுக்கு இன்கிரிமெண்ட் வெட்டு இருக்குமென்றும், கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்றும் சிலர் இங்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கின்றனர். எதோ நமக்கு staff service regulation பற்றி எதுவும் தெரியாது என்றும், Disciplinary Proceedings பற்றி ஞானம் இல்லாதது போலவும் சில கிணற்றுத் தவளைகள் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கின்றன. நமது பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கண்டு தப்புக்கணக்கு போடுகின்றனர். வங்கி, அதன் நிலைமை கருதி BEFI மற்றும் AIRRBEA அறிவுறுத்தியதின் பேரிலேயே நாம் அமைதி காத்தோம். அதை சரியாக நிர்வாகம் புரிந்துகொள்ளுமானால் இந்த வங்கியில் தொடர்ந்து அமைதி நிலவும். பழிவாங்குவதற்கும், தொழிற்சங்கங்களை முடக்குவதற்கும் இதுதான் தருணம் என நிர்வாகமும், அதன் கைக்கூலிகளும் நினைத்தால், நாம் தொட்டால் சுடும் நெருப்பு என்பதை புரியவைக்க வேண்டி வரும்.
போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்தி, நிர்வாகத்திற்கு வாலாக இருந்த சங்கத்தின் தலைமையொன்றிற்கு நிர்வாகம் சென்ற மாதத்தில் நன்றியாக சில மாறுதல்களை போட்டது. போராடியவர்களை எதிர்த்ததற்கு கிடைத்த அந்த எலும்புத்துண்டுகளைக் காட்டி, “பார்த்தீர்களா நிர்வாகம் நம்பக்கம்என பீற்றிக்கொண்டு சிலர் தங்கள் சங்கத்திற்கு ஆள் பிடிக்க கிளம்பிவிட்டனர். வெட்கம் கெட்ட அவர்களுக்கு நம் தோழர்கள் பலர்
சூடு சொரணை இருக்கிறதா உங்களுக்குஎன கேள்வி கேட்டு முகத்தில் அறைந்திருக்கின்றனர். அது எதுவுமற்ற ஜென்மம் ஒன்றுஉங்கள் காலில் வேணுமானாலும் விழுகிறேன். கையெழுத்துப் போடுங்கள்என கேட்டு கெஞ்சி இருக்கிறது. புதிதாக பணிக்குச் சேர்ந்த பெண் தோழர்கள் வீட்டிற்குச் சென்று, அவர்களை வற்புறுத்தி இருக்கிறார்கள். எல்லாம் இந்த நிர்வாகத்தின் பேரைச் சொல்லியே நடந்திருக்கிறது. அதையும் நாம் உரிய இடத்திற்கு தெரிவிக்க இருக்கிறோம்.
போராடிய காலத்தில் நம்மோடு இருந்த அலுவலர் சங்கத் தலைமை, நிர்வாகத்தின் தயவோடு இங்கு அகற்றப்பட்டு இருக்கிறது. அந்த சங்கத்தின் உள் முரண்பாடுகளுக்குள் நாம் ;போக வேண்டியதில்லை. ஆனால், அந்த சங்கத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு தாதா உள்ளே சென்று, நம்மோடு போராட்டத்தில் கூட இருந்த தலைவர்களில் ஒருவரை நாற்காலியோடு மிதித்துத் தள்ளி அடித்து தள்ளியிருக்கிறான். அவனுடைய கார் டிரைவரும் நம் அலுவலரை அடித்து இருக்கிறான். தன்னுடைய சீட்டுக் கம்பெனியில் பணம் வாங்கிக் கட்டாதவர்களை ஒரு கந்துவட்டிக்காரன் இப்படி அடித்து நொறுக்குவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒரு சக வங்கி அலுவலர் மீது எப்படி காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுக்க முடியும்? அவனுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? இந்த வங்கியில் ஒரு வன்முறைக் கலாச்சாரம் விதைக்கப்படுகிறது என்றே நாம் இதனைப் புரிந்துகொள்கிறோம். எல்லாம் தெரிந்த நிர்வாகம் இங்கு கடைவாயில் புன்னகை பூக்க பார்த்துக் கொண்டு இருக்கிறது. தோழர்கள் அனைவரிடமும் இதனை அம்பலப்படுத்தி, எச்சரிக்கை செய்யப் போகிறோம்.
அந்த அலுவலர் சங்கத் தலைமையை ஆட்டுவிக்கும், அல்லது அதனை வழிகாட்டும் அமைப்பாக இந்த வங்கியில் உள்ள பெரும்பாலான Regional managerகள் இருக்கின்றனர். நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அவர்கள் ஒரு சங்கத்தை வழிநடத்துபவர்களாக எப்படி இருக்க முடியும்? நிர்வாகம் சங்க நடவடிக்கைகளுக்குள் அத்துமீறி கை நுழைப்பதாகவே இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது. அவர்கள் அனைவரும் Regional manager பதவியில் மேலும் நீட்டிக்கும் தகுதியை இழந்துவிட்டனர். அவர்கள் குறித்து உரிய இடத்தில் விரைவில் பிரச்சினை எழுப்ப இருக்கிறோம்.
தோழர்களே!
சகல அநியாயங்களையும், அநீதிகளையும் இந்த நிர்வாகமே முன்னின்று நடத்துகிறது. அதனுடைய எல்லா விளைவுகளுக்கும் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென எச்சரிக்கிறோம்.
வங்கியில் இன்று நிலவும் முக்கியப் பிரச்சினை குறித்து அக்கறை கொள்ளாமல், அவைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயாமல், தொழிற்சங்க முரண்பாடுகளுக்குள் மூக்கை நுழைத்துக் கொண்டு இருக்கிறது நிர்வாகம் என குற்றஞ்சாட்டுகிறோம். பழிவாங்குவதை மட்டுமே சர்வகாலமும் யோசிக்கிற நிர்வாகம், வங்கியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது என பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
AJL க்கு அநியாயமாக வட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது நம் கம்ப்யூட்டர்கள். அந்த programme- இல் பெரும் தவறு இருக்கிறது. இதனைச் சுட்டிகாட்டி, மூன்று வாரங்களாகின்றன. இன்றுவரை அது தீர்க்கப்படவில்லை. வாடிக்கையாளர்களை வஞ்சித்து நம் லாபத்தை கூட்டிக் காண்பிப்பது சரியல்ல. எல்லா கிளைகளிலும் இதே கதிதான். Manualஆக வட்டிக் கணக்கு எத்தனை நாட்கள் போட முடியும். பல சிரமங்களை கிளைகளில் நம் தோழர்கள் சந்திக்கின்றனர். பல வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய நிலைமைக்கு வங்கி தள்ளப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து, வங்கியைப் பற்றி சதா நேரமும் கவலைப்படுபவர்கள் வாயைத் திறக்கக் காணோம். நாம் இதனை, வங்கியின் எதிகாலம் குறித்து பிரச்சினையாகப் பார்க்கிறோம். இதனை உடனடியாக நிர்வாகம் சரிசெய்ய வேண்டுமென்று கோருகிறோம். இதுவரை, ஏற்பட்ட இழப்புகளுக்கும், முறைகேடுகளுக்கும் நிர்வாகமே பொறுப்பேறக் வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
ஒரு முறையோ, தெளிவோ, தேவையான சூழலோ இல்லாமல் நிர்வாகம் கணிணி மயமாக்குவதை நாம் கண்டிக்கிறோம். ALPMலேயே இங்கு பல பிரச்சினைகளை தினமும் கிளைகள் எதிர்கொண்டு வருகின்றன. அவைகளை சரிசெய்யாமல் நிர்வாகம் வேகவேகமாக TBA முறைக்கு கிளைகளை கொண்டு சென்றது. சர்வர்களில் ஏராளமான பிரச்சினைகளை இப்போது தினமும் சந்திக்கிறோம். அதற்குரிய infrastructure உருவாக்காமல், திடுமென இப்போது CBS என்கிறது. ஒரு முறையிலிருந்து இன்னொரு முறைக்குக் கொண்டு செல்ல்லும்போது அதன் பிரச்சினைகளை ஆராயாமல் செல்வது பெரும் குழப்பங்களையே உருவாக்கும். வங்கியின் அன்றாடப்பணிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் நிர்வாகம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றே நடந்து கொள்கிறது. இந்த நிலைமை நீடிக்குமானால், வங்கி மிகப்பெரிய சோதனைகளை விரைவில் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
தோழர்களே!
நாம் நேர்மையானவர்கள்.
நாம் உண்மையானவர்கள்.
நாம் ஊழியர்களின், அலுவலர்களின் பிரச்சினைகளை பேசுகிரவர்கள்.
நாம் வங்கியின் பிரச்சினைகளைப் பேசுகிறவர்கள்.
நாம் மான, ரோஷமிக்க மனிதர்கள்.
மீண்டும் சந்திப்போம்.