அன்பிற்கினிய தோழர்களே!
வணக்கம். 1978ஆம் ஆண்டு முதல் கிராம வங்கி ஊழியர்களின் உரிமைகளுக்காக போராட துவங்கிய நமது அகில இந்திய சங்கத்தின் போராட்ட பயணம் இன்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது இந்த நீண்ட நெடிய போராட்ட பயணம் நமக்கு உணர்த்துவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்......
நியாயமான கோரிக்கைகளுக்காக சரியான திசையில் எடுத்துச்செல்லப்படும் எந்த ஒரு போராட்டமும் பலனற்று போய்விடாது. வேண்டுமானால் நமது இறுதி இலக்கை அடைய சிறிது கால தாமதமாகலாம். ஆனால் சமரசமற்ற உறுதியோடு நமக்கான இலக்கை நோக்கி நாம் போராட்ட பாதையில் முன்னேறும் போது வெற்றிகள் நம் வசமாவது நிச்சயம்.
உதாரணமாக.....
1980ஆம் ஆண்டு “சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் இயக்கம் துவங்கினோம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த நமது இடைவிடாத போராட்டத்தின் விளைவாகவே 1990 ஆம் ஆண்டு ஏப்ரல்30 அன்று கிராம வங்கி ஊழியர்களுக்காக AWARD அறிவிக்கப்பட்டது. இத்தகைய நமது பழைய வரலாறுகள் தான் தற்போதைய போராட்டக் களங்களில் நாம் தளர்ச்சியின்றி முன்னேற நமக்கு உத்வேகம் அளித்து வருகிறது. நமது நீண்ட நாள் கோரிக்கையான பென்ஷன் திட்டமும் தற்போது நமது கைகெட்டும் தூரத்தில் வந்துவிட்டது என்பதனையும் இங்கு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தச் சூழலில் நாம் பென்ஷனுக்காக கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களையும், எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் இங்கு நினைவு கூறுவது அவசியமாகிறது.....
பென்ஷன் ஒரு நெடிய போராட்டம்:
வங்கித்துறைக்கு பென்ஷன் திட்டம் அறிமுகமானது 1993-95ஆம் ஆண்டுகளில் தான். அப்போது மூன்று லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் அத்திட்டத்தை தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் வருங்கால வைப்பு நிதி (PROVIDENT FUND) திட்டத்தையே சிறந்ததாக கருதி தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால் அப்போது வங்கிகளில் சேமிப்புக்கான வட்டிவிகிதங்கள் 14% வரை இருந்தது. அதாவது பணி நிறைவின் போது வருங்கால வைப்பு நிதியில் இருந்து மொத்தமாக கிடைக்க கூடிய பணத்தை வங்கிகளில் முதலீடு செய்தால் அதன் மூலம் கிடைக்க கூடிய வட்டி என்பது பென்ஷனாக அப்போது வழங்கப்பட்டு வந்த தொகையை விட அதிகாமானதாக இருந்ததே அதற்கு காரணம்.
நமது இந்திய ஆட்சியாளர்களின் புதிய பொருளாதார கொள்கைகளாலும், அதிமேதாவித்தனமான பொருளாதார திட்டங்களாலும் வங்கியின் வட்டி விகிதங்கள் யாரும் யூகிக்க கூட இல்லாத அளவிற்கு 5.5% வரை அதலபாதாளத்திற்கு வீழ்ந்தது. பென்ஷன் திட்டத்தை விடுத்து வருங்கால வைப்பு நிதி திட்டத்தை தேர்ந்தெடுத்தவர்கள் செய்வதறியாது திகைத்து போனார்கள். அதனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்தவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பாக பென்ஷன் திட்டத்தையே மறுதேர்வு செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக்கோரி 2nd option for pension என்னும் முழக்கத்தை முதன்முதலாக BEFI தொடுத்தது. ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி போன்ற நிதித்துறை நிறுவனங்களில் இது போன்ற இரண்டாம் வாய்ப்புகள் பலமுறை வழங்கப்பட்டுள்ளதையும் BEFI- அப்போது சுட்டிக்காட்டியது.
ஆனால் BEFI-யின் இந்த கோரிக்கையை IBA ஏற்க மறுத்து விட்டது. வேறு எந்த சங்கத்தின் ஆதரவுமின்றி இதற்காக தனித்து இயக்கங்களை BEFI தொடர்ந்து நடத்தி வந்தது. இந்தச்சூழலில் BEFI அல்லாத மாற்று சங்க உறுப்பினர்களுக்கும் இக்கோரிக்கையின் அவசியத்தை உணரத்துவங்கினார்கள்.மேலும் ஊழியர்கள் மட்டத்தில் இக்கோரிக்கை குறித்து இருந்த ஆதரவும்,ஈடுபாடும் மாற்று சங்கத்தலைமைகளையும் யோசிக்க வைத்தது. தமது ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிர்பந்தம் மாற்று சங்க தலைவர்களுக்கு உண்டானது. இதன்விளைவாக ஐந்து ஊழியர் சங்கங்களையும், நான்கு அலுவலர் சங்கங்களையும் உள்ளடக்கிய UFBU 2nd option for pension என்னும் கோரிக்கையை தனது பிரதான கோரிக்கையாக அறிவித்து போராடத் துவங்கியது.
மிக நீண்ட தொடர் போராட்டத்திற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 2nd option for pension என்னும் கோரிக்கையை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வென்றெடுத்தார்கள். கடந்த பத்து வருடங்களாக “PARITY OF PENSION BENEFIT" என்னும் கோரிக்கையை பிரதானமாக வைத்து போராடி வரும் நமது அகில இந்திய சங்கத்திற்கு பொதுத்துறை வங்கி ஊழியர்களின் இந்த வெற்றி புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அமைந்தது.
பென்ஷனுக்காக AIRRBEA-தூவிய விதைகள்:
AIRRBEA-வின் சார்பில் பென்ஷனுக்கான முதல் வழக்கு கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மாண்புமிகு மாநில நிதியமைச்சர் திரு.பவன் குமார் பன்சால் மூலம் மத்திய அரசிடம் நமது பென்ஷன் கோரிக்கை குறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.பசுதேவ் ஆச்சார்யா மூலம் மாண்புமிகு பிரதமர்.மன்மோகன் சிங்கிடம் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் நேரடியாக நமது பென்ஷன் குறித்து கலந்துரையாடி உள்ளார்.
நிதித்துறை செயலாளர் திரு.அருண் ராமநாதனிடம் பலமுறை நமது பென்ஷன் கோரிக்கை குறித்து கலந்துறையாடி உள்ளார் நமது அகில இந்திய பொதுச்செயலாளர்.தோழர்.D.K.முகர்ஜி அவர்கள்.
AIRRBEA-வின் சார்பாக பென்ஷன் குறித்து ஆகும் நிதிச்சுமையை கணக்கீடு செய்ய “Actuary" நியமித்து நிதிச்சுமைக்கான அறிக்கையும் சமர்பித்துள்ளோம்.
நமது தொடர் நடவடிக்கைகளின் விளைவாக மத்திய அரசாங்கம் கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷன் குறித்து ஆகும் நிதிச்சுமையை கணக்கீடு செய்ய “Acturay" நியமித்ததை மாண்புமிகு மாநில நிதியமைச்சர் திரு.பவன் குமார் பன்சால் அவர்கள் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் வைத்து நடைபெற்ற நமது அகில இந்திய சங்கத்தின் உறுப்புச் சங்கமான கர்நாடகா ஊழியர் சம்மேளனம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தார்.
பென்ஷன் கோரிக்கைகாக டெல்லியில் வைத்து பலமுறை தர்ணா போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
நூற்றிற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பிரதமரிடமும்,மத்திய நிதியமைச்சரிடமும் நமது பென்ஷன் கோரிக்கைகாக சிபாரிசு செய்யவைத்தும் இரு அவைகளிலும் கேள்வி நேரத்து போதும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மூலமாகவும் நமது கோரிக்கையை வலியுறுத்த செய்துள்ளோம்.
AIRRBEA-வின் உறுப்பினர்கள் அனைவரையும் பென்ஷன் கோரிக்கைகாக மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுத வைத்துள்ளோம்.
கொல்கத்தாவிலும், டெல்லியிலுமாக தொடர்ச்சியாக ஏழுமுறை மாண்புமிகு.மத்திய நிதியமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜியுடன் நமது அகில இந்திய பொதுச்செயலாளர். தோழர்.D.K.முகர்ஜி அவர்களும் நமது அகில இந்திய தலைவர்களும் நமது இந்த கோரிக்கை குறித்து பேசியுள்ளனர்.
திரு.பாசுதேவ் ஆச்சார்யா,தாபன் சென்,மைனுல் ஹசன்,பிருந்தா காரத் மற்றும் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர்களை வைத்து பாராளுமன்ற கேள்வி நேரத்தில் சமீபத்தில் மீண்டுமொரு முறை நமது பென்ஷன் கோரிக்கைகாக கேள்விகள் எழச்செய்தோம்.
தோழர்களே!
இப்படியாக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் “PARITY OF PENSION" என்பதை நமது பிரதான கோரிக்கையாக வைத்து பல கட்ட போராட்டங்களையும், தொடர் பேச்சுவார்த்தைகளையும் மத்திய அரசிடம் நடத்தி வருகிறோம். தற்போது இந்த நெடிய போராட்ட பயணம் வெற்றி சிகரத்தை அடையும் தூரத்தை நெருங்கிவிட்டது. நம் கோரிக்கைகளுக்கான விடியலோடு வருகிற புத்தாண்டை நாம் எதிர்கொள்வோம் என நம்புவோம்.அது AIRRBEA-வின் மகுடத்திற்கு மேலும் ஒரு இறகாய் அமையும் என ஆவலோடு விழித்திருப்போம்.....