28.6.11

EA சர்க்குலர் 28.6.2011

சுற்றறிக்கை எண் : 2/2011 நாள்: 28.6.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நமது பொறுமை, நிதானம் எல்லாவற்றையும் இந்த நிர்வாகம் அளவுக்கு மீறி சோதித்துக்கொண்டு இருக்கிறது. கடுமையான ஆள் பற்றாக்குறையிலும், பணிச்சுமையிலும் தவித்துக்கொண்டு இங்கு பணிபுரிந்தாலும், நமக்கு குறைந்தபட்ச மரியாதை கூட கிடையாது என்று சொல்கிறது நிர்வாகம். குளறுபடிகள் மற்றும் கோளாறுகளுக்கு மொத்த உருவமாய்த் திகழும் இந்த நிர்வாகம், இங்கு ஊழியர்களை பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறது. வங்கியின் வளர்ச்சியின் மீதான அக்கறையாலும்,  ‘எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவர்கள்' என்று பழி சொல்ல ஒரு கூட்டம் காத்துக் கிடப்பதாலும், நாமும் நிறையவே பொறுமையாக இருந்து பார்த்துவிட்டோம். பேச்சு வார்த்தைகள் மூலமாக முடிந்தவரை விவகாரங்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் கடைப்பிடித்த அமைதியை கொஞ்சம் கூட இந்த நிர்வாகம் மதிக்கவில்லை.

கம்யூட்டர் அலவன்சு இதர கிராம வங்கிகளில் கொடுத்து மாதங்கள் பலவாகிவிட்டன. இங்கு அதற்கான முயற்சிகளையே நிர்வாகத்தரப்பில் காணோம். ‘காம்ப்ளிமண்ட்' இந்த வருடமாவது தருவார்கள் என எதிர்பார்த்தோம். அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இப்படி இன்னும் பல சலுகைகளைச் சொல்ல முடியும். எந்தவிதமான பொருளாதாரக் கோரிக்கைகளையும் இந்த நிர்வாகம் நிறைவேற்றித் தரவில்லை.

பதவி உயர்வும், புதிய பணிநியமனமும் ஒரே நேரத்தில் நடந்திருந்தால் இங்கு பெரிய அளவுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்காது. அதிலும் சரியான திட்டமிடுதல் இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக வங்கியே நிலைகுலையுமளவுக்கு கிளரிக்கல் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது. உடல்நலமில்லையென்றாலும், நெருங்கிய உறவினர்களுக்கு நலல்து கெட்டது என்றாலும் அதற்கெல்லாம் செல்ல முடியாமல் அனைவரும் புழுங்கிக்கொண்டு இருக்கின்றனர். தனக்குரிய லீவினை எடுக்க முடியாமல், எல்.டி.சி செல்ல முடியாமல் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். சங்கங்கள் தானாக முயற்சி எடுத்து அங்குமிங்கும் பேசி, தொலைதூர மாவட்டங்களுக்கு டெபுடேஷன் ஏற்பாடு செய்தால், ‘லீவு நாட்களுக்கு' அலவன்சு கிடையாது என்று கெடுபடி மட்டும் கொடிகட்டி பறக்கிறது.

இந்த நிலையில். நிர்வாகம் இன்னொரு புறம் கிளைகளை திறந்துகொண்டே இருக்கிறது. இருக்கிற கிளைகளிலேயே, ஆள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவை செய்ய முடியாமல் திண்டாட, புதிய கிளைகளை திறப்பது என்ன வகையான நிர்வாகம் என்று தெரியவில்லை. போதிய மனித சக்தியோடு கிளைகளை திறப்பதை நாம் எப்போதுமே வரவேற்கிறோம். ஆனால், ஆட்களே இல்லாமல் நமது நிர்வாகம் மந்திரத்தில் மாங்காய் பறிக்க முயல்வதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

இப்படி, அதிரடியாக திறக்கப்படும் கிளைகளுக்கு, அதிரடியாக மாறுதல் உத்தரவுகளையும் பிறப்பித்துக்கொண்டே இருக்கிறது நிர்வாகம். சென்ற வெள்ளிக்கிழமை 24.6.2011 அன்று காரைக்குடி, புதுக்கோட்டை, சிங்கம்புணரி போன்ற அதிக வணிகம் உள்ள கிளைகளையெல்லாம் இப்போது ‘சிங்கிள் மேன்' கிளைகளாக்கி விட்டு இருக்கிறது. அங்கு பணிபுரியும் நமது தோழர்களை தானடித்த மூப்பாய் புதிய கிளைகளுக்கு தூக்கி வீசியிருக்கிறது. நாம் இதனை கடுமையாக எதிர்த்தோம். நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், வேண்டுமானால் இரண்டு மாதங்களுக்கு யாரையாவது டெபுடேஷன் போட்டு கிளைகளை நடத்துங்கள் என்றும்  சம்பந்தப்பட்ட ஆர்.எம்மிடமும், பணியாளர்துறை எஸ்.எம்மிடமும் பேசினோம். தொடர்ந்து டெபுடேஷன்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆனால், இன்று 28.6.2011 அன்று திடீரென்று, டெபுடேஷன்களை கேன்சல் செய்துவிட்டு, ஏற்கனவே போட்ட டிரான்ஸ்பர்களின்படி, நம் தோழர்களை  உடனே ரிலீவ் செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறது நிர்வாகம். கேஷ் பார்த்துக்கொண்டு இருந்த தோழரை, பாதியில் அப்படியே நிறுத்தி, மாறுதல் செய்யுமாறு உயர் இடத்தில் இருந்து கடுமையான ஆணை வேறு! என்ன அராஜகம் இது. ஒரு விதியும், முறையும், குறைந்த பட்ச நாகரீகமும் கூட கிடையாதா? இது என்ன பொதுத்துறை வங்கியா, அல்லது யாருடைய தனிப்பட்ட சொத்தா?

Yes.... it is the last straw on the camel's back. இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நடக்கும் காட்டு தர்பாரை முழுமையாக அம்பலப்படுத்தும் வேளை நெருங்கியிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது, நமக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் தருணம் வந்திருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ‘system ' ‘system'  என்றும், தனக்கு systemதான் முக்கியம், அதை யாராவது மீறினால் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் வாய்க்கு வாய் நமது சேர்மன் அவர்கள் சொல்வார். இங்கு எல்லாம் system  படிதான் நடக்கிறதோ? எல்லா systemகளையும் மீறுவதும், மீற வைப்பதும், சிதைப்பதும் நிர்வாகமே. CBSல் ஆயிரம் கோளாறுகள். எத்தனை டம்மி passwordகள். customer IDயில் எத்தனை சமாளிப்புகள். TXN  இல்லாமலேயே pass பண்ண நிர்வாகமே தூண்டுவது, யாருடைய passwordஐயும் யாரும் பயன்படுத்துவது என எவ்வளவு எவ்வளவு இருக்கிறது. இங்கெல்லாம் சேர்மன் system பற்றி பேச மாட்டார்.

டிரான்ஸ்பர்களில் எல்லாம் systemபடிதான் நடக்கிறதோ? வேண்டியவர்களுக்கு, அவர்கள் விரும்புகிறவரை மாற்றி மாற்றி டிரான்ஸ்பர்கள். பக்கத்திலேயே டிரான்ஸ்பர்கள். ஆனால்  மற்றவர்களுக்கு? அவர்கள் மனிதர்கள் இல்லையா? பிரமோஷனில் என்ன system  கடைப்படிக்கப்படுகிறது?  ஒழுங்கு நடவடிக்கைகளில் என்ன system  கடைப்பிடிக்கப்படுகிறது?

இனி, நாம் இங்கு எது system  என்று சொல்லித் தருவோம். விரைவில் நமது சங்க செயற்குழு கூடி அதற்கான பாடத்திட்டங்களை முடிவு செய்யும்.

சந்திப்போம்.


தோழமையுடன்
   
(M.சோலைமாணிக்கம்)  
பொதுச்செயலாளர் - PGBEA