பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு AIRRBEA & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு AIRRBEA)
சுற்றறிக்கை எண் : 2 நாள்: 25.5.2011
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
வங்கியில் நிலவும் சூழல்களையும், பிரச்சினைகளையும் ஆராய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி கடந்த 23.5.2011 அன்று கூடியது. ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களுக்குப் பிறகு, தெளிவான பார்வைகளுடன் வழிமுறைகள் திட்டமிடப்ப்பட்டன.
1. பிரமோஷன் நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. பெருமளவுக்கு கிளரிக்கல் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. 205 கிளைகளுக்கு, 250 கிளரிக்கல் எப்படி போதும்? ஏறத்தாழ 180 கிளைகள் single man கிளைகளாக இயங்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனால் வங்கியில் ஒரு அசாதாரணச் சூழலும், நெருக்கடியும் உருவாகியிருக்கிறது. கிளரிக்கல் தோழர்கள் ஒரு ஆத்திர அவசரத்துக்குக் கூட லீவு எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். லீவு எடுத்தால் டெபுடேஷன் ஏற்பாடு செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. தினம் தினம் தலைமையலுவலகம், வட்டார அலுவலகம், சங்கங்கள் எல்லோருக்கும் இதுவே முக்கிய அலுவலாக மாறிப்போயிருக்கிறது. கிளையில் பணிகள் தாமதமாகின்றன, வணிகம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலைமைக்கு பொறுப்பேற்று, நிர்வாகம் புதிய பணி நியமனத்தை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என இரு சங்கங்களும் வலியுறுத்துகின்றன.
2. கடந்த ஒரு வருடமாகவே, பணியாளர் துறையில் பணிகள் மிக மந்தமாகவும், ஊழியர் பிரச்சினைகள் காலதாமதம் செய்யப்பட்டும் நடைபெற்று வருகின்றன. எல்.டி.சி போன்ற சலுகைப் பெறுவதற்குக் கூட இங்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. கடைநிலை ஊழியர்களாயிருந்து எழுத்தர்களாக பதிவி உயர்வு பெற்றவர்களை கண்டம் விட்டு கண்டம் போல தொலைதூரத்துக்கு விரட்டியடிக்கப்பட்டு இருக்கின்றனர். டிரான்ஸ்பர்களில் பாரபட்சம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. GM(A)வின் அணுகுமுறையும், நடவடிக்கைகளுமே இவை யாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. மாற்றுச் சங்கத்தினருக்குத் தேவையானவற்றை சிரமேற்கொண்டு செய்கிறார். ஆனால் நமக்கு சேர்மன் ஒப்புக்கொண்ட டிரான்ஸ்பர்களைக் கூட இவர் போடுவதில்லை. அப்படி என்ன அவர்களோடு அவருக்கு உறவு என்பது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. GM(A)வைப் பற்றி பலமுறைகள் வங்கியின் சேர்மன் அவர்களிடம் புகார் செய்திருக்கிறோம். ஆனாலும், அவர் திருந்துகிறவராயில்லை. அவரால் ஏற்பட்டு இருக்கக்கூடிய குழப்பங்களும், பாதிப்புகளும் சரிசெய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு சங்கங்களும் சேர்ந்து ஈடுபட வேண்டிய அவசியம் நேரும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
3. பொருளாதாரக் கோரிக்கைகள் பல இங்கு நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நூறு சதவீதம் CBS ஆன கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என மார்ச் மாதத்திலேயே அரசாணை வந்து விட்டது. ஏப்ரல் போய், மே மாதமும் முடியப் போகிறது. இன்னும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் நமக்கு வழங்கப்படவில்லை. பல கிராம வங்கிகளில் ஊழியர்களும் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் பெற்றுவிட்ட நிலையில், நாம் இன்னும் பெறாமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது. இதுபோல மேலும் பல கோரிக்கைகள் நிலுவையில் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை இப்போது முன்வைக்கிறோம். நிர்வாகம் உடனடியாக இவைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
a. Computer increment to all
b. Newspaper allowance to all
c. Compliment to all
d. Enhancemant of LTC facilities
e. Reimbursement of fuel expenses
4. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு இக்காலக் கட்டத்தில் எந்த நியதிகளும், நியாயங்களுமற்று துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதாவும், பென்சன் நிதி மசோதாவும் அப்படிப்பட்டவையாகவே இருக்கின்றன.
வங்கிச் சட்ட திருத்த மசோதாவின் மூலம் அந்நிய தனியார் வங்கிகள் இந்திய வங்கித் துறைய ஆக்கிரமிக்கும். இதனால் சாதாரண மனிதர்களுக்கான வங்கியாக இனி செயல்பட முடியாத நிலை ஏற்படும். பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடும், தனியார்களுக்கேப் போய்விடும்.
புதிய பென்சன் நிதியம் ஒழுங்கமைப்பு மசோதாவின் மூலம், சந்தை நிலைமைக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதாவது லாபம் வந்தால் மட்டுமே பென்சன் அல்லது பட்டை நாமம்தான்.
இவைகளோடு கிராம வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. மேலும் கண்டேல்வால் கமிட்டி பரிந்துரையின் படி, ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு சம்பளம், வங்கிகளுக்குள்ளேயே ஊழியர்களுக்கும் வித்தியாசமான ஊதிய நிர்ணயம், கடைநிலை ஊழியர்கள் என்ற பகுதியினரையே இல்லாமல் ஆக்குவது, எழுத்தர்களை அலுவலர்களில் பாதியாகக் குறைப்பது என நடவடிக்கைகளைத் துவக்கவும் மத்திய அரசு தயாராகி வருகிறது. இவைகள் நம்மையும் பாதிக்கும் எனத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த இரு மசோதாக்களை எதிர்த்து BEFI நாடு முழுவதும் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளது. வணிக வங்கியில் உள்ள பிற சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றன. நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவும் இந்த இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொள்வது என அறைகூவல் விடுத்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் 22ம் தேதி, நமது தலைமையலுவலகத்தில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த நமது சங்கங்கள் இணைந்து முடிவு செய்திருக்கின்றன. இது நமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்காலம் குறித்த கவலையுடனும் நடத்தும் போராட்டம். அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. தயாராவோம் அணிவகுக்க.....
தோழமையுடன்