பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR ) (இணைப்பு: AIRRBEA)
சுற்றறிக்கை எண்: நாள்: 28.8.2010
அருமைத்தோழர்களே!
வணக்கம்.
இந்த தேசத்தின் மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்பட்டு வரும் இந்த அரசின் கொள்கைகளும், செயல்பாடுகளும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை சோதனையும், வேதனையும் நிறைந்ததாகக் கொண்டு வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாய் உயர்ந்திருக்கிறது. ஊதிய உயர்வு என்று நாம் கொள்ளும் உற்சாகத்தையெல்லாம் இந்த விலைவாசி உயர்வு கொள்ளையடித்து விடும்.
கல்வி, வேலைவாய்ப்புகள் எல்லாம் சுருங்கிப்போக, பெருவாரியான இளைஞர்கள் திசையறியாது நிற்கின்றனர். அவர்களை அரசு கண்கொண்டு பார்ப்பதில்லை.
அணி திரட்டப்பட்டாத பல கோடி தொழிலாளர்களின் நாளைய வாழ்க்கை குறித்து எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு ஒரு பொருட்டே இல்லை.
நம்மைச் சுற்றிலும் நெருப்பு வைக்கப்பட்டு இருக்கும்போது, நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல வேடிக்கை பார்க்க முடியாது. இந்த சமூகத்தோடு, அதன் ஒவ்வொரு அசைவுகளோடும் நாம் பின்னிப் பிணைந்திருப்பவர்கள். நமது தலையீட்டை உறுதியாக்க வேண்டும்.
இந்த புரிதல்களோடுதான் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஒருநாள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. வங்கித்துறையில் AIBEA AIBOA, BEFI, AIRRBEAவும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வதென தீர்மானித்திருக்கின்றன.
ஆக, நாம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பங்கேற்கிறோம்.
1.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து.
2.புதிய வேலை வாய்ப்புகளையும், பணிப்பாதுகாப்பையும் உருவாக்கு.
3.பொதுத்துறைகளில் பணிகளை காண்ட்ராகட் முறையில் நிறைவேற்றுவதை நிறுத்து.
4.தொழிலாளர் நலச் சட்டங்களை அதன் அர்த்தங்களோடு உறுதியாக அமல்படுத்து.
5.அணி திரட்டப்படாத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உருவாக்கு.
6.பொதுத்துறை வங்கிகளையும், நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நிறுத்து.
இந்தக் கோரிக்கைகளோடு நமது இன்னொரு கோரிக்கையும் இணைக்கப்பட்டு இருக்கிறது. ச்மீபத்தில் பெரும் தனியார் நிறுவனங்களுக்கு கிராம வங்கிகளை, அப்படியே தாரை வார்க்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருவதாக அறிகிறோம். அதற்கான திட்ட நகலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அதை எதிர்க்கிற நமது கோரிக்கையையும் இணைத்துக் கொண்டு நாம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்.
இவை அனைத்துமே நமது வாழ்க்கையோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை. நம்மையும், நமது தேசத்தையும் காக்கும் மகத்தான காரியமே இந்த வேலை நிறுத்தம். நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன், பெருமிதத்துடன் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்.
தோழர்களே!
நமது இரு சங்கங்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள இருப்பதால், நிர்வாகம் கிளைகளில் பணி நடக்க மாற்று ஏற்பாடு செய்யுமானால், சாவியை ஒப்படைத்து விடுங்கள். ஒரே கிளையில் இருக்கும் joint custodian இருவருக்குமே அதிகார பூர்வமான/எழுத்துபூர்வமான மாற்று ஏற்பாடு செய்யப்படுமானால், நகைகளை சரிபார்த்து சாவியை ஒப்படையுங்கள். அதுபோல, வேலைநிறுத்தம் முடிந்த பிறகு நகைகளை சரிபார்த்து சாவியை வாங்குங்கள். இந்த முறை பின்பற்றுவதற்கான அவகாசம் தரப்படவில்லையெனில், சாவியோடு வேலைநிறுத்ததில் பங்கேற்கலாம் தோழர்கள்.
நம் எதிர்காலம் காக்கும் இந்த வேலைநிறுத்தத்தை மகத்தான வெற்றியாக்குவோம்.
000
தொடர்ந்து நிர்வாகத்தோடு பலமுறை ஊதிய உயர்வு அமலாக்கம் குறித்துப் பேசினோம். ‘நிச்சயம் இந்த மாதம் புதிய சம்பளமும், அரியர்ஸும் வழங்கப்பட்டு விடும்’ என நிர்வாகம் உறுதி சொன்னது. பல கிராம வங்கிகளில் உடனடியாக வழங்கப்பட்டு விட்டதையும், அதற்கான ஆணைகளையும் எடுத்துரைத்தோம். ‘எங்கள் மேல் நம்பிக்கையில்லையா?’ என்ற பதில்களே வந்தன. ஆனால் இப்போது இந்த மாதம் புதிய ஊதியம் இல்லையென தகவல்கள் வருகின்றன. காரணங்கள் என்னவாயிருப்பினும், இந்த காலதாமதம் ஒப்புக்கொள்ள முடியாதது. வருத்தப்படுகிறோம். ஊழியர்களும், அலுவலர்களும் அதிருப்தியான பணிச்சூழலையே இதனால் உணர்வார்கள் என்பதை தவிர்க்கமுடியாமல் சொல்லிக்கொள்கிறோம்.
தோழமையுடன்