21.6.11

EA-OU circular dt.9.9.2010

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்

சுற்றறிக்கை எண்: நாள்: 9.9.2010


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

உணவு தானியக் கிடங்குகளில் தேங்கி, அழுகிப்போகும், தானியங்களைக்கூட ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்க முடியாது என கொள்கை பேசும், பொருளாதார மேதைதான் நமது பிரதமர். இவரது தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பாக செப்டம்பர் 7ம் தேதி வேலைநிறுத்தம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் நாமும் நமது கடமையை நேர்மையாக, நிமிர்ந்து நின்று ஆற்றியிருக்கிறோம். இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தில், கிளைகளை எப்படியும் திறக்க வைக்க வேண்டுமென்று நிர்வாகம் எவ்வளவு வேகமாகவும், தீவீரமாகவும் செயல்பட்டு இருக்கிறது! இதே வேகத்தை ஊழியர் நலன்களை காட்ட  வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்தனைக்கும் நடுவில் நெஞ்சுரத்தோடு வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழர்களுக்கும் வீர வணக்கம்.

சென்ற மாதமே ஊதிய உயர்வும், அரியர்ஸும் இருக்குமென எதிர்பார்த்து ஏமாந்தோம். அரியர்ஸையாவது உடனையாகக் கொடுங்கள் என நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஊதிய உயர்வில், கிளரிக்கல் தோழர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் அலவன்சு ரூ.1500/-. இதில் ரு.1000/- அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்பட்டும், மீதி ரூ.500/- தனியாகவும் கொடுக்கப்பட வேண்டும். நமக்கு ரூபாய்.1000/- அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்பட்டு, மீதி ரூ.500/-ஐ நிறுத்திவிடவும் யோசிக்கப்பட்டு இருக்கிறது. நாம் உடனடியாக ஐ.ஓ.பி நிர்வாகத்துடன் பேசி, இதனைச் சரி செய்திருக்கிறோம். இப்போது வணிக வங்கிகளில் வழங்கப்படுவது போலவே நமக்கும் கம்ப்யூட்டர் அலவன்சு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் பணிச்சுமை கூடிக்கொண்டு இருக்கிறது. ஆள் பற்றாக்குறையும் கடுமையாக இருக்கிறது. இதற்கும் நடுவே நாம் பெரும்பிரயத்தனங்கள் செய்து வங்கியின் தொழிலை அபிவிருத்தி செய்து வருகிறோம். இந்த வங்கியின் மீது உள்ள பிரியத்தாலும், இந்த வேலையில் உள்ள ஈடுபாட்டினாலும் வங்கியின் விதிகளை மீறியும் வாடிக்கையாளர் சேவை செய்வதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் எச்சரிக்கிறோம். நாளை, விதிகளை மீறுவது நமது வேலைக்கும், எதிர்காலத்துக்கும் உலை வைக்கக்கூடும். அப்போது அவர்கள் பக்கம் நாங்கள் நிற்க முடியாது என நிர்வாகத்தரப்பில் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். எனவே, இருக்கும் விதிகளைக் கடைப்படித்துக்கொண்டே, நாம் இந்த வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் சேவை செய்ய வேண்டுமென்று உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இப்போது புதிதாக CBS  சிஸ்டம் அறிமுகமாகிக்கொண்டு இருக்கிறது. அதிலும், அறிந்தும் அறியாமலும் பல விதிகள் மீறி வேலை பார்க்கப்படுகிறது. நகைக்கடனை ஆபிஸர் ‘பாஸ்’ பண்ணி அனுப்பும் முன்னரே, கேஷ் கவுண்டருக்கு வவுச்சர்கள் அனுப்பப்படுகின்றன. ஏனென்றால் கஸ்டமர் ஐ.டி உருவாகி, கடன் விபரங்களை கம்ப்யூட்டரில் நிரப்ப நேரமாகிறதாம். அதுவரை வாடிக்கையாளர்களை நிற்க வைக்கக் கூடாதாம். இப்படிச் செய்வதில் இருக்கிற ஆர்வத்தை புரிந்துகொள்கிறோம். ஆனால் இனியும் இப்படியான வழக்கத்தை மேற்கொள்ள வேண்டாமென்று தோழர்களை எச்சரிக்கிறோம். மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் ஆபத்துக்கள் அவைகளில் இருக்கின்றன என எச்சரிக்கிறோம்.

அதுபோலவே, கஸ்டமர் ஐ.டி என்பது மிக முக்கியமான விபரங்கள் அடங்கியது. வேகமாகவோ, எளிதாகவோ நிரப்ப வேண்டுமென்று தவறான தகவல்களால் நிரப்பி விடாதீர்கள். சம்பந்தப்பட்ட கணக்கில் எதாவது பிரச்சினையென்றால், அப்போது அந்த கஸ்டமர் ஐ.டியில் இருக்கும் தவறான தகவல்கள் நம் கழுத்தை நெறிக்கும். வேண்டிய விபரங்கள் அனைத்தையும் ஆதாரங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பெற்று, சரியான தகவல்களோடு கஸ்டமர் ஐ.டியை உருவாக்குங்கள்.

இந்த இடத்தில் நிர்வாகத்துக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறோம். ஒரு கணக்கு தொடங்க, புதிய சிஸ்டத்தில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் ஆகின்றன.  இன்று இருக்கும் அவசர உலகத்தில், தொழில் போட்டிகளில் இது அதிகப்படியான காலம். எளிய முறைகளை ஆராய்ந்து உருவாக்கித் தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இன்னும் பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. மாறிக்கொண்டு இருக்கும் இந்த பணிச்சூழலில், எப்படி நாம் பணியாற்றுவது, எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது என நாம் அனைவரும் உட்கார்ந்து பேச வேண்டி இருக்கிறது. அதற்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இடங்களும், தேதிகளும் விரைவில் அறிவிக்கிறோம்.

தோழமையுடன்