29.7.11

இருட்டிலிருந்து - 4

கடந்தகாலம் எப்போதும் வசந்தத்தின் பூக்களை சொறிந்து கொண்டும், நிகழ்காலம் எப்போதும் கோடையின் தணலை கொட்டிக் கொண்டும் இருக்கின்றன.

-மாதவராஜ்

பழையபேட்டை கிளையில் எதோ பிரச்சினையாம், சேர்மன் திருமலை  கிளையில் இருந்தவர்களை எல்லாம் கடுமையாக பேசிவிட்டாராம் என்றுதான் முதலில் தலைமையலுவலகத்தில் பேச்சு அடிபட்டது. மேலும் விபரங்களைக் கேள்விப்பட பட ஒரு சுவராஸ்யம் சேர்ந்து கொண்டது. ஆள் ஆளுக்கு அதை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த கிளையின் மேலாளராய் இருந்த கோமதிநாயகம் சொல்லிக் கொடுத்துத்தான் திருமலை அங்கு போயிருந்தாராம். அங்கு கடைநிலை ஊழியராய் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன்1 என்னும் மணியிடம் "நீ எப்பவும் லேட்டாத்தான் வருவியோ' என்று கேட்டிருக்கிறார். மணி மறுத்திருக்கிறார். "நோ...நோ.. உன்னைப்பத்தி நிறைய கம்ப்ளைண்ட் வந்திருக்கு. ஐ யம் குட் ஃபார் குட், பேட் ஃபார் பேட்" என்று அதட்டலாய் திருமலை சொல்லவும் மணி "மன்னிக்கணும். இங்கில¦ஷ்ல என்ன பேசுறீங்கன்னு தெரியல" என்று சொல்லியிருக்கிறார். "என்ன... கிண்டல் பண்றியா, இதெல்லாம் பழைய சேர்மன்கிட்ட வச்சுக்க" என்று சொல்லிவிட்டு அந்தக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த ரோஹிணி என்பவரிடம் திருமலை தனது கோபத்தைக் காட்டியிருக்கிறார். இங்கிலிஷில் பொரிந்து தள்ளியிருக்கிறார். அப்புறம் வேகமாய் வெளியேறி இருக்கிறார்.

திருமலை சென்றபிறகு ரோஹிணி அழுதிருக்கிறார்கள். 'அவர் என்ன சொல்லிவிட்டுப் போனார் என்று உங்களுக்குத் தெரியுமா...கேட்டீங்களா.." என்று புண்பட்டு கேட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் சரிவர திருமலையின் ஆங்கிலத்திற்கு அர்த்தம் புரியாமல் நின்றிருக்கிறார்கள். "ஒங்க கூட எல்லாம் யார் வேலை பார்ப்பார்கள்" என்று திருமலை கேட்டதாகச் சொன்னார்களாம். அவமானமாயிருந்திருக்கிறது. தலைமையலுவலகத்தில் சேர்மனுக்கு நெருக்கமானவர்கள் வேறு ஒரு கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். சேர்மன் போகும் வழியில் வங்கியின் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டதாம். வாடகைக் கார் ஒன்றை பிடித்துத்தான் சென்றாராம். அந்த எரிச்சலை காட்டி விட்டார் என்றார்கள். 'என்ன நடந்தது என்று முழுசாய்த் தெரியவில்லை, நம்ம என்ன செய்ய முடியும்' என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன்2 சொன்னாராம். சிதம்பரமோ சேர்மனிடம் பேச வேண்டும் என்றார். யூனியன்காரர்கள் சேர்மனை கேள்வி கேட்காமல் மௌனம் சாதிப்பதாய் ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. "சேர்மன் அவங்க ஜாதிக்காரர், அதான் இப்படி" என்று சாத்தூர் மாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ள டீக்கடையில் நின்று ஒரு சாயங்காலத்தில் டீயின் ருசியோடு விஷயங்கள் அலசப்பட்டன.

சில நாட்களில் திருமலை மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க ரோஹிணி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகச் சொல்லப்பட்டதும் மொத்தமும்  தீப்பற்றிக் கொண்டது. அதிர்ச்சியும், மௌனமான சந்தோஷங்களும் ஒருசேர ஊழியர்களின் முகங்களில் தென்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது சாதரணமானவர்கள் காட்டும் எதிர்ப்பு எல்லாக் காலங்களிலும் சிலாகிக்கப்படுகிறது. அடுத்த நாளே ரோஹிணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மணி ஜமீன்கொல்லன் கொண்டான் கிளைக்கும், வெங்கு சிக்கல் கிளைக்கும் மாறுதல் செய்யப்பட்டார்கள். வங்கியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது போல இறுக்கம் நிலவியது. சிவன் கோவில் தெருவில் இருந்த தலைமையலுவலகத்தில் திருமலையின் கார் சத்தம் கேட்டதும் அனைவரும் நிசப்தமாகிப் போனார்கள். எங்கள்துறை உதவி சூப்பிரண்டட் மெய்யப்பன் கூட திடுமென தனக்கு கூடுதல் அதிகாரம் கிட்டியதாய் அடிக்கடி எல்லோரையும் உற்றுப்பார்த்துக் கொண்டார். இத்தனைக்கும் நடுவில் வழக்கம் போல அமைதியாய் இருந்த சூப்பிரண்டட் இஸ்மாயில்3 மரியாதைக்குரியவராய் தெரிந்தார். எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் போய், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வேளை அது. எங்காவதிருந்து "இறைவா...உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு" என்று பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. 

பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கட்டிடத்தில் எங்களோடு பக்கத்தில் இருந்த அக்கவுண்ட்ஸ் துறையின் கடைநிலை ஊழியர் பெயரும் மெய்யப்பன்தான்.  அவர் திருமலை குறித்து மேலும் மேலும் செய்திகளை புதிது புதிதாக கொண்டு வந்து கொண்டிருந்தார். ஒரு கிளையின் மேலாளரை "பாஸ்டர்ட் ஒனக்குல்லாம் எவண்டா வேலை கொடுத்தான்" என்று கேட்டாராம். கிருஷ்ணகுமார் பணிபுரிந்து கொண்டிருந்த ராமநாதபுரம் கிளைக்குச் சென்று "ஷோ மீ த யூனியனிஸ்ட்.. ஐ வில் கிக் ஹிம்" என்று இரைந்திருக்கிறார். சங்கத்தின் பொறுப்பில் இல்லாததால் கிருஷ்ணகுமார் அமைதியாக இருந்தாராம். அப்படியே திருமலையை எதிர்த்து பேசியிருந்தாலும் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் தனக்காக பேசுவார்களா என்ற அவநம்பிக்கையால் அவர் அப்படி இருந்துவிட்டதாக கிருஷ்ணகுமாரின் மௌனத்துக்கு காரணங்கள் கூறப்பட்டன. எங்கும் எதிர்ப்புக் குரல்கள் முணுமுணுப்புகளாக அரவமில்லாமல் எழுந்து கொண்டிருந்தன.

நடப்பதையெல்லாம் கேள்விப்பட்டாலும் பெரிதாக ஒன்றும் ஆர்வம் காட்டாமல் நான் பாட்டுக்கு என்னுடைய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். கிரிக்கெட் விளையாடப் போவதில் சாத்தூரில் சில நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். கணையாழிக்கு இரண்டு கவிதைகள் அனுப்பியிருந்தேன். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் இருந்த அண்ணன்களுக்கும், பெங்களூரில் இருந்த தம்பிக்கும் கடிதங்கள் எழுதி, பதில்களுக்காக காத்திருந்தேன். எங்கள் அலுவலகத்திற்கு ஐந்தாறு கட்டிடங்கள் தாண்டி இருந்த ஆக்ஸ்போர்டு பள்ளிக்குப்4 போய் வருகிற குழந்தைகளை உதவி சூப்பிரண்டட்டின் எரிச்சலான பார்வையையும் அலட்சியப்படுத்தி பார்த்துக் கொண்டிருப்பேன்.  சென்னையில் தனது தங்கையை பள்ளிக்குச் சில நேரங்களில் அழைத்துச் செல்லும் அம்முவின் ஞாபகம் வரும்.  இரவில் சிதம்பரத்தோடு பேக்பைப்பர் அடித்து, இரண்டு பச்சை முட்டைகளை உடைத்து குடித்து, சில புரோட்டாக்களையும், மேலும் சில ஆஃப்பாயில்களையும் விழுங்கி படுத்துக் கொண்டாலும் எதையோ இழந்து போன மாதிரி இருக்கும். கடந்தகாலம் எப்போதும் வசந்தத்தின் பூக்களை சொறிந்து கொண்டும், நிகழ்காலம் எப்போதும் கோடையின் தணலை கொட்டிக் கொண்டும் இருக்கின்றன. இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' மீட்டும் ஏக்கங்களில் புதைந்து கொள்வேன்.

இலக்கியம் பேசுவதற்கு அருகில் யாரும் இருக்கவில்லை. மகரபூஷணம் இருக்கும் போது ஒருதடவை மணிசங்கர் லாட்ஜுக்கு நடுராத்திரியில் வந்த சோமு5 கொஞ்சம் பேசினார். ஜோல்னாப் பையோடு வந்த அவரிடம் சில ரஷ்யப் புத்தகங்கள் இருந்தன. கல்கியின் 'பொன்னியின் செல்வனி'ல் 'அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்' என்று பூங்குழலி பாடியது அவர் தெரிந்திருக்கவில்லை. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' அவர் படித்திருக்கவில்லை. ஆனாலும் நான் பேசியபோது அமைதியாக கேட்டுக் கொண்டார். எனது கவிதைகளை படித்தார். சில விமர்சனங்களைச் சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சத்தில் விடிகாலை நான்கு மணிக்குப் போல அவர் எழுந்து போனது மட்டும் அரைகுறைத் தூக்கத்தில் நினைவிலிருந்தது. 

மகரபூஷணமும் சோமுவும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர்களாம். சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்துக்கு வந்துவிட்டு இரவில் தங்கிவிட்டு திருச்செந்தூருக்கு சென்றதாய் விடிந்தபிறகு மகரபூஷணம் சொன்னார். இப்போது விளாத்திக்குளம் அருகில் அரியநாயகிபுரம் கிளையில் வேலை பார்க்கிறாராம். இதற்கு முன்னர் சோமு தலைமையலுவலகத்தில் பணிபுரிந்தாராம். அப்போது பிசினஸ் டிப்பார்ட்மெண்ட் சூப்பிரண்டட் சுப்பிரமணியம்6 ஒருதடவை அவரை சொடக்குப் போட்டு அழைக்க, சோமு கடுமையாக கோபப்பட்டு, தலைமையலுவலகத்தில் அனைவரையும் வெளியே அழைத்து ஸ்தம்பிக்க வைத்தாராம். கடைசியில் சுப்பிரமணியம் மன்னிப்பு கேட்ட பிறகே அனைவரும் வேலைக்கு வந்தார்களாம்.

அந்த நிகழ்ச்சியை திரும்பவும் வங்கியில் பேச ஆரம்பித்தார்கள். அப்போது சங்கம் சரியாக இருந்ததாகவும், இப்போது சோரம் போய்விட்டதாகவும் வெளிப்படையாக பேசினார்கள். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு மரியாதையில்லை, இந்த யூனியன்காரர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது பரவிக்கொண்டே இருந்தது. ஸ்பான்ஸர் வங்கியான ஐ.ஓ.பி மூலமாகவே ரோஹினியின் சஸ்பென்ஷன் விலக்கப்பட்டதாகச் சொன்னார்கள். சிதம்பரத்திடம் அவர் வீட்டில் வைத்து இதுபற்றி பேசும் போதெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். நடக்கிற விஷயங்களும், சேர்மனின் நடவடிக்கைகளும் அவருக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிந்தது. 'சேர்மனிடம் பேசியிருக்கிறோம், எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வார். 

அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது. வெளியே பேசுவது எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதையெல்லாம் சொல்லவும் எனக்கு மனமில்லை. கிருஷ்ணகுமார் தலைமையில், பழையபேட்டை மணி, விஸ்வநாதன்7, கணேசன் எல்லோரும் கிளை கிளையாய் செல்வதாகவும், சேர்மனையும், யூனியனையும் எதிர்த்து பிரச்சாரம் செய்வதாகவும் மெய்யப்பன் ரகசியமாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.  சங்கத்தின் செயற்குழுவில் இருந்த சோலைமாணிக்கமும்8, சோமுவும் பகிரங்கமாக சங்கத்தலைமையை விமர்சிப்பதாகவும் சொன்னான். ‘என்னண்ணே...இதெல்லாம் உண்மையா'" என்று சங்கர் சிதம்பரத்திடம் கேட்டான். சிதம்பரம் ஒப்புக் கொண்டார். "பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். கூட்டிர்ற வேண்டியதுதான்." என்றார். "நீ ஜெயிச்சிருவியாண்ணே" என்று சங்கர் கேட்டுச் சிரித்தான். "நாஞ் ஜெயிக்காம யார்டா இங்க ஜெயிப்பா? பத்துருவோம்." என்று வீறாப்பாய் பதில் வந்தது. 

அந்த நாட்கள் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருநாள் காலை பதினொன்றரை மணிக்கு "இந்திரா காந்தியை சீக்கியக் காவலாளியே சுட்டுக் கொன்னுட்டானாம்" என்று தகவல் யாரோ சொல்ல பதற்றம் சூழ்ந்தது. வெளியே கடைகள் எல்லாம் சடசடவென மூடப்பட்டன. ஆக்ஸ்போர்டு குழந்தைகளை அவரவர் தாய்மார்கள் வந்து அள்ளிக் கொண்டு சென்றார்கள். லேசாய் ஒருபக்கம் வெள்ளை முடி தெரியும் இந்திரா காந்தியின் முகம் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் வங்கியும் இயங்கவில்லை. நல்லவேளை ஆச்சி மெஸ் திறந்து வைத்திருந்தார்கள். ஆனால் இரவு சாப்பாடு இருக்காது என்று சொல்லி விட்டார்கள். சாயங்காலம் ஒரு காலியான சிமெண்ட் லாரியில் ஏறி தூத்துக்குடிக்கு நான், ஜீவலிங்கம், முருகன் பயணமானோம். கோவில்பட்டியில் வைத்து வண்டியை மடக்கி சிலர் திருப்பி அனுப்பி விட்டார்கள். மணிசங்கர் லாட்ஜிக்குத் திரும்பிய போது சட்டை, பேண்ட், உடம்பு பூராவும் சிமெண்ட் முலாம் பூசியிருந்தது. குளித்து படுத்த போது இந்திரா காந்தி முகம் ஞாபகத்துக்கு வரவில்லை.

காலையில் சிதம்பரத்தை பார்க்கச் சென்றோம். அவர் இல்லை. சிகரெட், டீக்குக் கூட வழியில்லை. உள்ளூரில் வேலை பார்த்த ஆர்.வீ.ஆர் என்று அழைக்கப்படும் வரதராஜனும்9, ஆர்.எஸ்.என்10 என்று அழைக்கப்படும் சங்கரநாராயணனும் உதவி செய்தார்கள். அவர்கள் இருவரும் சேர்மன் செக்ரட்டரியேட்டில் பணிபுரிபவர்கள். யூனியன் மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அப்போது. ஆனால் அன்றைக்குத்தான் தெரிந்தது அவர்களுக்கு சேர்மன் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லையென்பது. அவர்கள் பேச்சிலேயே குறிப்பாய்த் தெரிந்தது. சிதம்பரத்தின் தன்னம்பிக்கை மீது பரிதாபம்தான் வந்தது.

அடுத்த சில நாட்களில் பொதுக்குழுவிற்கான சர்க்குலர் சங்கத்திலிருந்து மாரியப்பன் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். சங்கத்தில் பொறுப்பில் இப்போது இருப்பவர்களே தொடர்ந்து இருக்க வேண்டும் என சேர்மன்  திருமலை விரும்புவதாக வெளியே சொல்லப்பட்டது. கோவில்பட்டியில் வைத்து அதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சேர்மனே ரகசியமாக நடத்தியதாகவெல்லாம் பேச்சு வந்தது. கிருஷ்ணகுமார் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக இன்னொரு பக்கமிருந்து செய்தி வெளியானது. சிதம்பரத்தை கொஞ்ச நாளாய் பார்க்க முடியவில்லை. அவரும் தனக்கு ஆதரவு திரட்டிக்கொண்டிருந்தார். பரபரப்பாய் பொதுக்குழுவிற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

1. சுப்பிரமணியன் - இப்போது PGBEA வின் உதவிப்பொதுச்செயலாளர். மேலச்செவல் கிளை
2. மாரியப்பன் - PGBOA வில் பொதுச்செயலாளராய் இருந்தார். இப்போது கீழவெளிவீதி கிளையில் அலுவலர்.
3. இஸ்மாயில் - ரிடையர் ஆகிவிட்டார்.
4. ஆக்ஸ்போர்டு பள்ளி - இப்போது வாசு ஜவுளி ஸ்டோர்.
5. சோமசுந்தரம் - PGBEA வில் தலைவர் உட்பட முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். இப்போது ஆறுமுகநேரி கிளையில் கிளர்க்காக இருக்கிறார்.
6. E.சுப்பிரமணியம் - ரிடையர் ஆகிவிட்டார்.
7. விஸ்வநாதன் - இப்போது PGBOUவின் செயற்குழு உறுப்பினர். ஆமத்தூர் கிளை மேலாளர்.
8. சோலமாணிக்கம் - இப்போது PGBEA பொதுச்செயலாளர். 
9. ஆர்.வரதராஜன் - இப்போது சித்துராஜபுரம் கிளை மேலாளர்.
10 ஆர்.சங்கர நாராயணன் - இப்போது திருச்சி கிளையின் அலுவலர்.

(இன்னுமிருக்கிறது...)

இருட்டிலிருந்து முந்தைய பகுதிகள்: 1    2    3

1 comment:

  1. Feedback:

    "website is super.iruttilirunth is going well"

    -sankarakumar

    ReplyDelete

Comrades! Please share your views here!