7.7.11

நம் வாழ்வில் விளக்கி ஏற்றி வைத்தது AIRRBEA! (திரும்பிப் பார்ப்போம்-1)

பாண்டியன் கிராம வங்கியில் நான்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.
1. Pandyan Grama Bank Employees Association (PGBEA)
2. Pandyan Grama Bank Workers Union (PGBWU)
3. Pandyan Grama Bank Officers Union (PGBOU)
4. Pandyan Grama Bank Officers Association (PGBOA)

PGBEAவும், PGBWUவும் clerical  மற்றும் messengerகளையும் represent செய்பவை.

PGBOUவும், PGBOAவும் officerகளை represent செய்பவை.

இவைகளில் PGBEA மற்றும் PGBOU  ஆகிய இரு சங்கங்களும் அகில இந்திய சங்கமான AIRRBEAவுடன் இணைக்கப்பட்டவை. எப்போதும் இணைந்தே செயல்படுபவை. இந்த இரண்டு சங்கங்களும்தான் Pandyan Grama Bankல் மெஜாரிட்டி சங்கங்களாய் இருக்கின்றன.

PGBEAவும், PGBOUவும் இணைந்திருக்கின்ற All India Regional Rural Bank Employees Association (AIRRBEA) அகில இந்திய அளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களையும், அலுவலர்களையும் தனது உறுப்பினர்களாய்க் கொண்டு தனிப்பெரும் சங்கமாய் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து கிராம வங்கிகளிலும் AIRRBEAவுக்கு உறுப்புச் சங்கங்களும், உறுப்பினர்களும் இருக்கின்றனர். அதற்கென்று வரலாறும், பாரம்பரியமும் உண்டு. இந்திய கிராம வங்கிகளின் வரலாற்றோடு அது பின்னிப் பிணைந்தே இருக்கிறது.

1969ல் வங்கிகள் தேசீய மயமாக்கப்பட்ட பிறகு, அவைகளின் எல்லையும் நீட்சியும் வேகமாக பரவியது. வங்கிச் சேவை என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கம் அரசுக்கு இருந்தது. தேசத்தின் பொருளாதாரச் சுழற்சியில் அனைவரையும் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயமும் தேவையும் ஏற்பட்டது. ஆனாலும் கிராமப்புறங்களில் வங்கிச் சேவை என்பது அரிதாகவே இருந்தது. எனவே கிராமப்புறங்களில் வங்கிக்கிளைகள் திறக்க அரசு திட்டம் தீட்டியது. ஏற்கனவே இருக்கும் வணிக வங்கியின் கிளைகளை திறக்காமல், கிராமப்புறங்களுக்கென்று பிரத்யேகமாக வங்கிகள் திறக்கலாம் என கருதியது. அப்படி தேசம் முழுவதும் உருவானதுதான் கிராமப்புற வங்கிகள். (Gramin Banks).

‘கிராமங்களில் இருக்கும் அடித்தட்டு மக்கள் அங்குள்ள கந்துவட்டிக்காரர்களிடம் அகப்பட்டு அவதிப்படுவதிலிருந்தும்,  வாழ்க்கையையே அடகுவைத்து நிர்க்கதியாக நிற்பதிலிருந்தும் மீட்கப் போகிறோம்’ என்னும் அறைகூவலோடு அரசு கிராம வங்கிகளை ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அரசின் வஞ்சகமும், சூதும் இருந்தது. அந்த கிராம வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு, இதர வங்கிகளில் இருக்கும் ஊதியம் வழங்காமல், மிகக் குறைந்த ஊதியத்தை நிர்ணயித்தது. அதாவது 100 ருபாய் கொடுக்கும் இடத்தில் வெறும் 20 அல்லது 30 ருபாய்க்கு ஆள் பிடிப்பது போலத்தான் இதுவும்.

1975ல் கிராம வங்கிகள் தோற்றுவிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, கிராம வங்கி ஊழியர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கொண்டனர். வணிக வங்கியில் இருக்கிற அனைத்து சேவைகளையும், பணிகளையும் வாங்கிக்கொண்டு, வணிக வங்கி ஊழியர்களை விட மிகக் குறைவான ஊதியத்தைக் கொடுப்பதைக் கண்டு முணுமுணுக்க ஆரம்பித்தனர். வங்கி ஊழியர்களில், தாங்கள் இரண்டாம் தரமானவர்களாய் நடத்தப்படுவதைப் பொறுக்க முடியாமல் கொதித்து எழுந்தனர். இந்த அவமானத்தையும், அநீதியையும் துடைத்தெறிய சங்கம் அமைத்தனர். அதுதான் AIRRBEA. அப்போது சங்கத்திற்கு தலைமை தாங்க முன்வந்தவர்தான் தோழர்.திலிப் குமார் முகர்ஜி.  வணிக வங்கியில் மிகப்பெரும் சங்கங்களாய் இருந்த AIBEA  மற்றும் NCBE போன்ற சங்கங்களிடம் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க அணுகினர். அவர்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் ஒரு குரல் அழுத்தமாக ஆதரவு தெரிவித்தது. ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராய் இருந்த தோழர்.அசிஸ்சென் AIRRBEAவுக்கும் தலைமை தாங்க முன்வந்தார். அவரது வழிகாட்டுதலின் பேரில், 1979ல் கண்ணணூரில் நடந்த AIRRBEAவின் பொதுக்குழுவில் உருவான கோரிக்கைதான் ; “Equal Pay for Equal Work". அதாவது, வணிக வங்கி ஊழியர்களைப் போல வேலை பார்க்கும் எங்களுக்கு வணிக வங்கி ஊழியர்களின் ஊதியத்தை வழங்கு என்பதே இதன் அர்த்தமும், அடிநாதமும்.

தொடர்ந்து இயக்கங்களும், நீதிமன்ற வழக்குகளுமாய் பனிரெண்டு வருடங்களாய், கிராம வங்கி ஊழியர்களும் அலுவலர்களும் இடைவிடாமல் போராடினர். அப்போதும் ‘இது சாத்தியமல்ல, இந்தப் போராட்டம் தேவையுமில்லை’ என்றவர்கள் இருந்தார்கள். எப்போதுமே போராடாமலேயே அரசுக்கும், நிர்வாகத்துக்கும் ஆதரவாய் ஒரு கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் நம்பிக்கையும், உறுதியும் கொண்ட AIRRBEA இந்தியா முழுவதிலுமுள்ள கிராம வங்கி ஊழியர்களைத் திரட்டி தர்ணாக்களும், டெல்லியில் பேரணிகளும், வேலைநிறுத்தங்களும் செய்துகொண்டே இருந்தது. நீதிமன்றத்தையும் அணுகியது. இந்த மொத்த இயக்கத்தின் விளைவாகத்தான் 1987ல் சுப்ரீம் கோர்ட், கிராம வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஆராய மாண்புமிகு நீதிபதி ஓபுல்ரெட்டி தலைமையில் National Industrial Tribunal  ஒன்றை அமைத்தது.

Tribunalல் ஆயிரக்கணக்கான ஆவணங்களையும், நூற்றுக்கணக்கான சாட்சியங்களையும் ஆதாரங்களோடு வைத்தது AIRRBEA. அப்போதும் நம்பிக்கையற்றவர்கள் இருக்கவே செய்தார்கள். அன்று வணிக வங்கியில்  உயரதிகாரிகள் நமக்கு எதிராக Tribunalல் சாட்சி சொன்னார்கள். அந்த வணிக வங்கி உயரதிகாரிகள் யாரென்றால்,  வணிக வங்கிகளில் உள்ள பெரும்பான்மை சங்கமான AIBOC ஐச் சேர்ந்தவர்கள்!  ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடந்த இந்த சட்டரீதியான போராட்டத்தில் 1991ல் இறுதியாக வெற்றி நமக்கு கிடைத்தது. வணிக வங்கியில் உள்ள அதே வேலைகளை பார்க்கும் கிராம வங்கி ஊழியர்களுக்கும், வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான கொடுக்க வேண்டும் என்று மாண்புமிகு நீதிபதி ஓபுல் ரெட்டி தீர்ப்பளித்தார். கிராம வங்கி ஊழியர்களின் இழைக்கப்பட்ட அநீதி துடைத்தெறியப்பட்டது. கிராம வங்கி ஊழியர்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை சமூக அந்தஸ்தும் உயர்ந்தது. இன்று நமது குழந்தைகள் உயர்ந்த படிப்புக்கும், நமக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்ளவும், நாலுபேர் நம்மை மதிப்பதற்கும் காரணம் AIRRBEA.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்புக்கு பிறகுதான் வணிக வங்கியில் உள்ள பெரும்பான்மை சங்கங்களான AIBEA, NCBE, AIBOC  போன்ற சங்கங்கள் கிராம வங்கி ஊழியர்களையும் அலுவலர்களையும் மதிக்கவே ஆரம்பித்தன.  கிராம வங்கி ஊழியர்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ளவும், தங்கள் ஆதரவு சங்கங்களை உருவாக்கவும் செய்தன.  நாம் பிரச்சினையில் இருக்கும்போது உதவ முன்வராதவர்கள், நாம் கோரிக்கை வைத்த போது கேலி செய்தவர்கள், நாம் போராடுகிறபோது எதிர்த்தவர்கள்,  நாம் வெற்றி பெற்றபிறகு தோள் மீது கை போட வந்தார்கள். அப்படி NCBE இணைக்கப்பட்டவர்கள்தான் PGBWUவும், AIBOCஉடன் இணைக்கப்பட்டவர்கள்தான் PGBOAவும். இதுதான் அவர்கள் வரலாறு.

அன்றிலிருந்து இன்று வரை AIRRBEAவிலேயே இருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்கள்தாம் PGBEAவும், PGBOUவும். இதுதான் நமது வரலாறு.

வணிக வங்கியின் ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னாலும், அரசு அதிலும் பல குளறுபடிகளையும், கோளாறுகளையும் செய்தது.  அவைகளை கண்காணித்து, எதிர்த்து, போராட்டங்கள் நடத்தி நிவர்த்தி செய்து வருவதும் AIRRBEA தான். இதோ இப்போதும் கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷனுக்காக போராடி, அரசை சம்மதிக்க வைத்திருப்பதும் AIRRBEA தான். கிராம வங்கிகள் அனைத்தையும் இணைத்து NABARD, IDBI  போல National Rural Bank of India  என ஒரு வலிமையான அமைப்பை உருவாக்கிட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் AIRRBEAதான்.

கிராம வங்கி ஊழியர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்ததும், வைப்பதும் AIRRBEAதான். மகத்தான அந்த அமைப்பில் உறுப்பினர்களாய் இருப்பதிலும், தொடர்வதிலும் நாம் பெருமை கொள்வோம்.