மெஸஞ்சரிலிருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு கண்டம் விட்டு கண்டம் போல தொலைதூரங்களுக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு இருக்கிறது. அருகிலேயே டிரான்ஸ்பர் செய்ய வாய்ப்பிருந்தும், அவர்களுக்கு, பதவி உயர்வு பெற்றதற்கு தண்டனை போல இந்தக் கொடுமையை நிர்வாகம் இழைத்திருக்கிறது.
அதுபோலவே, கிளரிக்கலிருந்து ஆபிஸர்களாய் ஆனவர்களையும், ஆபிஸர்களில் ஸ்கேல் ஒன்றிலிருந்து இரண்டுக்கு பதவி உயர்வு பெற்றவர்களையும் ஒரு கை பார்த்திருக்கிறது நிர்வாகம்.
ஆனால், ஆபிஸர்களில் ஸ்கேல் இரண்டிலிருந்து மூன்றுக்கு டிரான்ஸ்பர் ஆனவர்களில் சிலருக்கு அருகருகே டிரான்ஸ்பர் போட்டு அழகு பார்த்திருக்கிறது. அதில் ஒருவருக்கு முப்பது இஞ்ச் தூரத்தில் டிரான்ஸ்பர் போட்டு சாதனை நிகழ்த்தியிருக்கிறது நிர்வாகம்!
நமது தொழிற்சங்கங்கள் பேசியபோது, "ஒன்றிரண்டு டிரான்ஸ்பர்கள் நிர்வாக வசதிக்காக போடக்கூடாதா?" என நிர்வாகம் சொல்லியது. அப்படி அந்த முப்பது இஞ்ச் டிரான்ஸ்பரால் என்ன நிர்வாக வசதி என்று குழப்பமாகவே இருந்தது. இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் காரியாப்பட்டியில் mobile banking மற்றும் business correspondent ஐ துவக்கி வைக்கும் நிகழ்ச்சியொன்றை ரிசர்வ் வங்கி உயரதிகாரியை வைத்து நமது நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதற்கு வருகை புரிந்த வி.ஐ.பிக்களை வரவேற்க அந்த முப்பது இஞ்ச் டிரான்ஸ்பர்க்காரர்தான் முன்னின்று ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இந்தியாவுக்கு வந்த புஷ்ஷுக்குக் கூட இந்திய அரசாங்கம் இப்படியெல்லாம் மலர் தூவி மரியாதை செய்திருக்காது. செண்டா மேளம், "நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற..." இதயக்கனி பாட்டு எல்லாம் ஒலிக்க மகளிர் குழு பெண்களை வரிசையாக நிற்க வைத்து சிவப்புக்கம்பளத்தில் நடந்து வரும் வி.ஐ.பிக்கள் மீது மலர் தூவச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்து பெருமையில் பூரித்துச் சிரிக்கிறார் பாருங்கள்:
நமக்குச் சிரிப்பு வரவில்லை. அவமானமாக இருக்கிறது. ஒரு சிலரை மரியாதை செய்கிறோம் என்று பெண்களை இழிவு படுத்தும் காரியம் இது என்றே நினைக்கிறோம். இந்தக் காரியத்தைச் செய்வதற்கு பெண்கள்தானா கிடைத்தார்கள்.
அந்தப் பெண்களின் ஏழ்மையும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் தானே இப்படிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. வசதியானவர்களை இப்படிக் கொண்டு வந்து இவர்களால் நிறுத்த முடியுமா? அப்படியெனில், வறுமையில் உழல்பவர்கள் மீது இவர்களுக்கு இருக்கும் பார்வை இதுதானா? இதுதான் வங்கியின் மகிழ்வுடன் கூடிய மலர்முக சேவையா? வாழ்க்கை நிலைமையை உயர்த்திக்கொள்ள வங்கியை நாடி வருபவர்களை இப்படியா பயன்படுத்துவது? கிராம வங்கிகளின் நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கை இது என நாம் கருதுகிறோம்.
அந்தக் காலத்து ராஜாக்களுக்கு இதுபோன்ற மரியாதைகள் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் இது ஜனநாயகக் காலம். இங்கு மனிதர்கள் அனைவரும் சமம் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். அந்த ஜனநாயகத்தைப் போற்றும் செயலா இது?
இப்போதுதான் தெரிகிறது. பெரியகுளம் கிளை திறப்பு விழாவிலும் இதுபோன்று காரியங்கள் நடந்ததாம். அதற்கும் ஏற்பாடு செய்ததும் அவர்தானாம்.
அருவருப்பான இந்தக் கலாச்சாரத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் நிர்வாகம் மதிக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு பதவி உயர்வும், கூடவே முப்பது இஞ்ச்சில் 'நிர்வாக வசதிக்காக' ஒரு டிரான்ஸ்பரும் கொடுத்து இருக்கிறது போலும்!