“சதா நேரமும் பயமாவே இருக்கு. ஒரு லட்சம், இரண்டு லட்சம்னு பணத்தை விட்டா என்ன செய்றது. அவங்க பாட்டுக்கு அம்பது, அறுபதுன்னு ஜுவல் லோன் போடுறாங்க. ஏகப்பட்ட ரிடம்ப்ஷன். முடியல”
“முன்னால எப்பவும் பத்து இருபது பேர் நின்னுக்கிட்டு அவசரப்படுத்திக்கிட்டேயிருந்தா என்ன செய்வீங்க. கனவுல கூட கேஷ் கட்டுல்லாம் பாம்புகளாகச் சுருண்டு நெளிந்து பயமுறுத்துது”
“ஆயிரம், ஐநூறு ருபாய்க் கட்டு கட்டா வருது. கள்ள நோட்டு பார்க்க என்ன ஏற்பாடு இருக்கு. எதோ தர்மத்துல ஒடுது. நம்ம கையில் ஒண்ணும் இல்ல.”
“கொஞ்ச நாளா ஒரே படபடப்பா இருக்கு. நேத்து மெடிக்கல் செக்-அப் செய்யப் போனேன். இரத்த அழுத்தம் கடுமையாகக் கூடியிருப்பதாகச் சொன்னார்கள்.”
“நாப்பத்தஞ்சு ஐம்பது வயசுக்குப் பிறகு ஊரைவிட்டு இருநூறு முன்னூறு கி.மீ தள்ளி வேலை பார்க்க வேண்டியிருக்கு. மனசு கெடந்து அடிக்குது. என்ன வாழ்க்கை இது.”
“ஒரு ஆத்திர அவசரத்துக்கு லீவு எடுத்துக்கொள்ளலாம், ஆள் டெபுடேஷன் வருவாங்கன்னு நெலைமை இருந்தாக்கூட ஒரு தெம்பும் தைரியமும் இருக்கும். இங்க அதுவும் இல்லைய.”
வங்கியின் பிஸினஸ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறவர்களுக்கு, இந்தக் குரல்களில் இருக்கும் வலியும் வேதனையும் புரிந்த மாதிரி தெரியவில்லை. சதா நேரமும் அவர்களை ஒரு வித புழுக்கத்திலும், அவஸ்தையிலும் வைத்திருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. பணி நெருக்கடியும், பணிச் சூழலும், ஊழியர்களின் நலனில் அக்கறையற்ற போக்குமே இவை யாவற்றுக்கும் காரணமாகின்றன.
இந்த அமைப்பில் உழைப்பவனுக்கு மரியாதையில்லை. உழைப்பை வாங்குகிறவர்களுக்குத்தான் மரியாதை. மனிதர்களிடமிருந்து அவர்களுக்கு உழைப்பு மட்டுமே தேவைப்படுகிறது. அவர்களின் உணர்வுகளும், சந்தோஷங்களும், வருத்தங்களும் ஒரு பொருட்டேயல்ல. அதை காது கொடுத்துக் கேட்கவும் தயாரில்லை. முழுவதுமாகப் பிழிந்து உழைப்பை வாங்கிவிட்டு மனிதர்களை சக்கையாகத் தூக்கி எறிய அவர்கள் தயங்குவதில்லை. அப்படி சக்கையாகப் பிழிவதற்குத்தான் விதிகளும், விதி மீறல்களும் இங்கு முன்வைக்கப்படுகின் றன.
உழைப்பைப் போற்றவும், உழைப்பவனை மதிக்கவும் உலகம் பூராவும் காலகாலமாக போராட்டங்களும், எழுச்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான இரத்த சாட்சியமே மே தினம். எட்டுமணி நேர வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம் என்பது பெரும் கலகத்தில் பிறந்த ஒரு நியாயம். உலகமயமாக்கலுக்குப் பிறகு அதையெல்லாம் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, மீண்டும் அதிபயங்கரமாக உழைப்பைச் சுரண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்படியொரு காட்சிதான் நமது வங்கியிலும் நிலவுகிறது.
வங்கியில் வேலை பார்ப்பவர்கள் வங்கிக்காக மட்டுமா உழைக்கிறார்கள். அவர்களுக்கென்று குடும்பம் இருக்கிறது. பாசமான சில உறவுகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று சில சந்தோஷங்கள் இருக்கின்றன. சில கஷ்டங்கள் இருக்கின்றன. எதிர்காலம் குறித்த கவலைகள் இருக்கின்றன. இவையே ஒரு மனிதனின் உழைப்பை இயக்கும் சக்திகளாய் இருக்கின்றன. இவையே ஓடிக்கொண்டு இருப்பவனுக்கு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் நிழல்களாகவும், தொடர்ந்து ஓடுவதற்கு தெம்பு அளிக்கும் கூடாரங்களாகவும் இருக்கின்றன. இப்படியொரு உலகத்தை அப்படியே அவனது மண்டையில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு, ஒரு மனிதனின் செயல்களிலும், நினைவுகளிலும் முழுக்க வங்கிப்பணியை மட்டுமே நிரப்புவது எவ்வளவு பெரிய அநியாயம். அராஜகம். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.
இதனால்தான் நமது ஊழியர்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மன அழுத்தங்களுக்கு (stress) ஆளாகிக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் நம்மைப் பீடித்துக்கொண்டு இருக்கும் பெரும் நோய். கண்ணுக்குத் தெரியாத இந்த ஆபத்து அப்படியே நம் ஊழியர்களின் மீது படர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வேதனையில் அவர்கள் துடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளே, இந்தக் கட்டுரையில் ஆரம்பத்தில் நாம் கண்ட வரிகள். அவர்களை ஆசுவாசப்படுத்த, அவர்களுக்கு ஆதரவாய் நிற்க, தோள்களைத் தட்டிக்கொடுக்க வங்கி நிர்வாகம் யோசிக்க வேண்டும். உழைப்பை வாங்குவது மட்டுமே குறியாய் இருக்கக் கூடாது. உழைப்பை போற்றவும், அதைப் பாதுகாக்கவும் தெரிய வேண்டும்.
நாம் இயந்திரங்களல்ல, மனிதர்கள்.
இதுவரை தோழர்களிடமிருந்து வந்த கருத்துக்கள்:
ReplyDelete____________________________
“நாம் இயந்திரங்களல்ல, மனிதர்கள் கட்டுரை அருமை. ஒட்டு மொத்த காசாளர்களின் மனக்குமுறலை எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.நாம் வேடிக்கை பார்க்கும் சிறுவர்களைப்போல் அதிமுக்கிய வேலைகளை விட்டு விட்டு வெட்டி வேலைகளை செய்து கொண்டு இருப்பதைப்போலவும் ஓட வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருப்பதாகவும்,வளர்ச்சியை நோக்கி ஓட வேண்டும் என்பது போன்ற ஒரு கற்பனையை அரசும் நிர்வாகங்களும் தொடர்ந்து படைத்து வருகின்றன. இதை உடைப்பதே முதல் வேலையாக இருக்க வேண்டும்.கட்டுரை கொஞ்சம் மென்மையாக இருப்பது போல உள்ளது.சொரணையற்றவர்களுக்கு கொஞ்சம் காரம் சேர்த்து இருக்க வேண்டும்.”
____________________________
”நிர்வாகம் நம்மிடம் வேலையை கோரும் வேகமும், பணியாளர்களுக்கு அவர்கள் செய்யவேண்டுவதை செய்ய காட்டும் வேகமும் எப்போதும் தலைகீழ் விகிதத்தில்தான் இருக்கிறது., முள்ளி வாய்க்காலில் உணவு கோருவோர்க்கு ராஜபக்ஷே நிவாரணம் தருவதைப்போலே”
____________________________
”எல்லோருக்கும் சேர்த்து ஒரு காசாளர்தானே இருக்கிறார். ஒரு கிளையில் 3 எழுத்தர் 3 அலுவலர் இருக்கிறார்கள் என்று வணிகத்தை மானாவாரியாக உயர்த்தினால், ஒரு காசாளர் எவ்வளவு பணம்தான் வாங்குவார், கொடுப்பார்? கேட்டால் திறமை இருந்தால் அலுவலர் பதவி பெற்று போக வேண்டியதுதானே, கேஷ் பார்க்கவேண்டி வராதல்லவா என்று ஏளனம் சில இடங்களில் பதிலாக வருகிறது.”