27.8.11

இருட்டிலிருந்து - 7



வெட்டித் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப்பெரியவர்கள் சிலர் பேசிக்கொண்டு இருப்பார்கள். பாம்பு கடித்து ஒருவன் அலறிக்கொண்டு அங்கு வந்து துடிதுடிப்பான். அவனுக்கு எந்தவிதமான வைத்தியம் செய்யலாம் என பெரும் விவாதங்கள் நடக்கும். வலியின் வேதனைக்குரல் பின்னணியில் ஒலிக்க ஆள் ஆளாளுக்கு ஒன்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். முடிவற்ற சர்ச்சைகளுக்கு இடையில் அந்த பாவப்பட்ட மனிதன் இறந்து போவான். இதுதான் 'பாம்பும் பஞ்சாயத்தும்' நாடகம். கிராம வங்கி ஊழியனின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க யாரும் முன்வராத சோகத்தை அழுத்தமாக பதிவு செய்வதாய் இருந்தது. நிர்வாகத்தை கேட்டால், ஸ்பான்ஸர் வங்கி என்று சொல்ல, ஸ்பான்ஸர் வங்கியை கேட்டால் நபார்டு என்று கைகாட்ட, நபார்டோ தனக்கு அதிகாரம் இல்லை என்று நிதியமைச்சகத்துக்கு வழிசொல்ல, எல்லாவற்றுக்கும் மத்தியில் மாநில அரசு எந்த சம்பந்தமுமில்லாமல் அதுபாட்டுக்கு இருக்க, தூண் விட்டு தூண் ஓடிக்கொண்டு இருக்கும் கிராம வங்கி ஊழியனின் வாழ்க்கை அதில் இருந்தது. வசனங்களும், காட்சிகளும் பார்வையாளர்களை முழுமையாக ஆக்கிரமித்தது. அதிகார அமைப்புகளுக்கு எதிரான கேள்விகள் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டன. கிருஷ்ணகுமாரை எல்லோரும் கைகுலுக்கி பாரட்டினார்கள். அந்த மொத்த விழாவையும் நாடகம் தனக்குரியதாய் எடுத்துக்கொள்ள சேர்மன் திருமலை முகம் சுருங்கி காரில் ஏறிப்போனார்.

கிருஷ்ணகுமார் மீதான நம்பிக்கையும், மரியாதையும் கூடிக்கொண்டே போனது. தலைமையலுவலகத்திற்குள் இப்போது அவர் வந்தால் அமைதி உடைந்து கலகலவென்று ஆனது. "வாங்க வாங்க" என்று முகம் மலர்ந்து ஊழியர்கள் அவரைச் சூழ ஆரம்பித்தார்கள். தைரியமாக அவரோடு டீ குடித்தார்கள். இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டட் உமர் சலீமை மாமா என்று அன்போடு கூப்பிடுவார். ஸ்டாப் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டெட் சங்கரசுப்புவும் இவரைப் பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தார். தோழர் என்னும் வார்த்தையோடு பேர் சொல்லி பேசும் வழக்கம் பாண்டியன் கிராம வங்கியில் உருவாகியது. அந்த மனிதனின் ஆளுமையின் மொழியாக அது மெல்ல எல்லோருக்குள்ளும் பரிணமித்துக்கொண்டு இருந்தது.  நிர்வாகத்திற்கு சகிக்க முடியாமல் இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணகுமாரோடு பேசுகிறவர்கள் கண்காணிக்கப்பட ஆரம்பித்தார்கள். அவரோடு சிரித்தவர்கள் நிர்வாகத்திற்கு அந்த நிமிடம் முதல் எதிரிகளாகி விட்டார்கள். நாளொரு டிரான்ஸ்பர் போட்டுக்கொண்டிருந்த நிர்வாகம் பெரும்பாலானவர்களுக்கு விரோதமாகியிருந்தது அந்த சூழலின் மறுபக்கம்.

லேபர் கமிஷனரோடு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நிர்வாகம் 1985 ஏப்ரல் 16ம் தேதி இரவோடு இரவாக அலுவலர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை அனுப்பியது. பிரமோஷன் குறித்து முடிவு ஏற்படுவதற்கு முன்னரே நிர்வாகத்தின் இந்த அத்துமீறலை சங்கம் கடுமையாக கண்டித்து ஏப்ரல் 26ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்தது. ஏப்ரல் 23ம் தேதி நடந்த சென்னைப் பேச்சுவார்த்தையில் தோழர் டபிள்யு.ஆர்.வரதராஜன் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு லேபர் கமிஷனரிடம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தியிருந்தார். நிர்வாகம் அலுவலர் பணிநியமனத்தை நிறுத்தினால் போராட்டத்தை கைவிடுவதாக சொல்லியதை சேர்மன் திருமலை ஏற்கவில்லை. உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போகும் என அவர் நினைத்திருக்க வேண்டும். முன்னர் நடந்த பலவீனமான தர்ணா அவருக்கு அப்படியொரு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். இந்த தடவை உண்ணாவிரதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். கடைசியாக கிருஷ்ணகுமார் பேசியபிறகு காய்ந்த வயிறோடு சாயங்காலம் ஐந்து மணிக்கும் எழும்பிய கோஷங்களில் அனல் பறந்தது.

இன்னொரு அநியாயமும் நடந்தது. எழுத்தர் பதவிக்கான பணிநியமனத்திற்கு பத்திரிக்கைகளில் நிர்வாகம் விளம்பரம் செய்திருந்தது. அதில் கல்வித்தகுதியாக ப்ளஸ் டூ என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வணிக வங்கிகளில் கூட அப்போது எழுத்தர் பதவிக்கான கல்வித்தகுதி பத்துதான். ப்ளஸ் டூ அறிமுகமாகி ஐந்தாறு வருடங்களே ஆகியிருந்தன. வங்கியில் பணிபுரியும் கடைநில ஊழியர்கள் எல்லாம் எஸ்.எஸ்.எல்.சி அல்லது பத்து வரைக்கும் படித்தவர்களாகவே இருந்தனர். அவர்களில் யாரும் இந்த பணி நியமனத்திற்கு மனுப்போடக் கூட அருகதையற்று போயினர். ஏற்கனவே அவர்களுக்கு பதவி உயர்வு என்பது சுத்தமாக மறுக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற வாய்ப்பும் பறிக்கப்படுவது எரிச்சலை உண்டு பண்ணியது.

சங்கத்திலிருந்து நிர்வாகத்திடம் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. தாங்களாக தகுதியை நிர்ணயிக்கவில்லை என்றும், நபார்டுதான் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாக சொல்லியிருக்கிறது. சுற்றறிக்கையையும் எடுத்துக் காண்பித்து இருக்கிறார்கள். சங்கத்தின் கோரிக்கையை பரிந்துரை செய்து நபார்டுக்கு கடிதம் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறது. பாம்பு கடித்ததற்கு எதாவது வைத்தியம் செய்தாக வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே சங்கத்திற்கு இருந்தது. சங்கம் உடனடியாக அகில இந்தியத் தலைமைக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. அதிகார அமைப்புகள் எப்போதும் தண்டனை வழங்கும் உரிமையை வழங்குவதை அருகில் இருப்பவர்களிடமும், சலுகைகள் வழங்கும் உரிமையை தொலைவில் இருப்பவர்களிடமும் கொடுத்து வைத்திருக்கிறது.

சங்கத்தைப் பற்றி, சங்க நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். கிருஷ்ணகுமாரின் அறைக்குச் செல்வது வழக்கமாயிருந்தது. பார்க்கிற நேரங்களில் பெரும்பாலும் யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். ஒவ்வொரு கடிதமும் மெனக்கெட்டு, அதில் மொத்தமாக மூழ்கி எழுதும் அவரது சிரத்தை ஆச்சரியமாக இருந்தது. நல்ல பெரிய எழுத்துக்களில், புள்ளிகளை எல்லாம் உருட்டி உருட்டி, இடைவெளி விட்டு எழுதும் போது பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். நிறைய ஸ்கெட்ச் பேனாக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வண்ணமாக முகவரி எழுதுவார். கடிதங்களாய் குவிந்திருக்க மணி அவற்றை ஒட்டிக்கொண்டு இருப்பார். யாவற்றுக்கும் நடுவே கிருஷ்ணகுமாரின் பேச்சு ததும்பிக்கொண்டே இருக்கும். தோழர்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். சாத்தூருக்குப் பக்கத்தில் உள்ள சிறுகிராமமான நடுச்சூரங்குடியைச் சேர்ந்த காமராஜ் ஒருநாள் பாண்டுகுடி கிளையிலிருந்து வந்திருந்தபோது அறிமுகமாகியதும் அங்குதான். எங்கள் குடியிருப்பு மீண்டும் இடம் பெயர்ந்தது. நாடார் தெருவில் வணிகவரி அலுவலகத்திற்கு மேலிருந்த மாடிக்கு சென்றோம்.

அந்த மே ஒன்றாம் தேதியை ஊழியர்கள் மனதிற்கு கொண்டு சென்றது சங்கம். சிகாகோ நகரில் நடந்த  வீரஞ்செறிந்த போராட்டத்தை விளக்கி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. தோழர்கள் நிறைந்து காணப்பட்ட உற்சாகச்சூழலில் தலைமையலுவலகத்தின் முன்புறம், அகில இந்திய சங்கத்தின் குடிசை போல வடிவமைக்கப்பட்டிருந்த AIRRBEA எழுத்துக்கள் கொண்ட செந்நிறக்கொடி ஏற்றப்பட்டது. தகவல் பலகை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் சங்கம் மிக உன்னிப்பாகவும், தெளிவாகவும் இருந்தது. அடிக்கடி எழுந்த கோஷங்களில் இப்போது PGBEA என்னும் வார்த்தை தோழர்களுக்கு மிகச்சொந்தமான அந்நியோன்யமான உணர்வை தந்திருந்தது. கோலாகலமாக ஆரம்பித்த மேமாதம் மிக ஆக்ரோஷமான தர்ணாவோடு முடிந்தது. மே 31ம் தேதி நடந்த அந்த தர்ணா சங்க வரலாற்றில் முக்கியமான நாள்.

கிருஷ்ணகுமாரோடு நட்பு பாராட்டியதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் உமர்சலீமும், சங்கரசுப்புவும். முக்கிய துறையின் கண்காணிப்பாளர்களாக, நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அவர்கள் 'துஷ்டர்களோடு' பழக்கம் வைத்திருந்தது சேர்மன் திருமலைக்கு பிடிக்காமல் போயிருந்தது. அவர்களை அவமானப்படுத்துவதிலும், ஓரங்கட்டுவதிலும் மும்முரமாயிருந்தார். தனக்கு வேண்டியவர்களிடம், தன்னை துதி பாடுபவர்களிடம் நெருக்கம் கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை அமல்படுத்திக்கொண்டு இருந்தார் வீட்டி. தாங்கள் மட்டும் சகமனிதனோடு சினேகம் கொண்டு நாலு வார்த்தை பேசுவது கண்டு வெறுப்புகொள்வது அவர்களின் சுயத்தை பெரிதும் பாதித்திருந்தது. இருவரும் பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் முக்கிய அங்கமாயிருந்ததால், நிலைமை வேறு ஒரு திசையிலிருந்து ஆராயப்பட்டது.

அலுவலர்களுக்கென்று பிரச்சினைகள் இருந்தும் அவற்றை கோரிக்கைகளாக முன்னிறுத்தி பேசி, போராடி சாதிக்கிற மனோபாவமும், தார்மீக பலமும் அற்று இருந்த அவர்கள் நிர்வாகத்துக்கு எதிராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். அப்போது அதன் தலைவராக இருந்த சாத்தூர் கிளை மேலாளர் துரைராஜ், பொதுச்செயலாளராக இருந்த வங்கியின் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் எல்லோரும் கிருஷ்ணகுமாரோடு மேலும் இணக்கம் கொண்டனர். வைப்பாற்று மணலில் ஒரு இரவில் கிருஷ்ணகுமாரோடு மனந்திறந்து பேச, கோரிக்கைகள் வடிவம் பெற்றன. ஊழியர் சங்கத்திற்கும், அலுவலர் சங்கத்திற்கும் இடையில் கூட்டுப்போராட்டத்திற்கான தளம் உருவானது.

தன் இஷ்டத்திற்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் மிரட்டுவதற்கு டிரான்ஸ்பரை நிர்வாகம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக முறையான டிரான்ஸ்பர் பாலிசி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையே கூட்டுப்போராட்டக்குழுவின் பிரதான நோக்கமாயிருந்தது. கடைநிலை ஊழியர்களை  எழுத்தர் பணிநியமனத்திற்கான தேர்வு எழுத  அனுமதிக்க வேண்டும், கிளைகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும், அனைத்துக்கிளைகளுக்கும் கால்குலேட்டர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் கோரிக்கைகளாகியிருந்தன. மே 31ம் தேதி தர்ணா என்றும், நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூன் 3ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என்றும் சர்க்குலர் வெளியானது.

கொஞ்சங்கூட எதிர்பாராத இந்த நிகழ்ச்சி நிர்வாகத்தை நிலைகுலைய வைத்தது. சங்கத் தேர்தலில் தோற்றுப்போனவர்கள் ஐ.என்.டி.யு.சி இணைப்பில் பாண்டியன் கிராம வங்கி எம்ப்ளாயீஸ் யூனியன் என்று ஒன்று ஆரம்பித்திருந்தார்கள். அதை பொம்மைச் சங்கம் என்று கிருஷ்ணகுமார் அடிக்கடி குறிப்பிடுவார். அந்த சங்கத்திலிருந்து வரிந்து கட்டிக்கொண்டு கூட்டுப் போராட்டக்குழுவைத் தாக்கி சுற்றறிக்கைகள் இறைக்கப்பட்டன. ஊழியர்கள் சங்கம் போராட்டம் மட்டுமே தீர்வு என்று நம்புகிறது என்றும், அதன் தலைவர்கள் தீவீரவாதிகள் என்றும் அவர்களை நம்பி அலுவலர்கள் சங்கம் செல்ல வேண்டாமென்றும் புலம்பித் தள்ளியிருந்தது. அதில் பொதுச்செயலாளர் என்ற இடத்தில் கையெழுத்துப் போட்டிருந்த சிதம்பரத்தின் கையெழுத்துக்களைப் பார்க்கும் போது பாவம் போல இருந்தது. களப்பணியாளர்கள் என்ற பெயரில் ஒரு மொட்டைக்கடிதம் கூட்டுப் போராட்டக்குழுவை தரக்குறைவாக, சுயநலக்குழுவாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகத்தின் ஆசைகளும், ஆசீர்வாதங்களும் எல்லா எழுத்துக்களிலும் நிரம்பியிருந்தது.

நாட்களை வேகமாக நகர்த்திய அந்தக் கோடை வெப்பமான மனிதர்களாய் தோழர்களை உருமாற்றியிருந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட மே 31 தர்ணாப் பந்தல் மிக நீளமாக சிவன் கோவில் தெற்கு ரத வீதியில் நிறைந்திருந்தது. வீடுகளை ஓட்டிச் செல்லும் சாக்கடை நாற்றத்தை தாங்கியபடி தோழர்கள் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த ஒற்றுமைக்கு முன்னால் நிர்வாகம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என நம்பிக்கை எல்லோருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் நிர்வாகம் பிடிவாதமாக இருக்க, ஜூன் 3ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது.

(இன்னும் இருக்கிறது....)

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!