தேசமெங்கும் உள்ள 70000க்கும் மேற்பட்ட கிராம வங்கி ஊழியர்கள் மற்றூம் அலுவர்கள் நம் அனைவருக்கும் தெரிந்த பேர் திலிப் குமார் முகர்ஜி. நமது வாழ்வில் நெருக்கமாக உணர்ந்த மனிதராக அவர் இருக்கிறார். நமது பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டும், அவைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவர், AIRRBEAவின் முகமாக இருக்கிறார். அவருக்கு 7.9.2011 அன்று 75 வயதாகிறது. குழந்தையாக சிரிக்கவும், நண்பனாக தோளில் கைபோட்டு பழகவும், தலைவராக வழிநடத்தவும் முடிகிற அவர், தன் வாழ்வின் பெரும்பகுதியை கிராம வங்கி ஊழியர்களுக்காகவும், அலுவலர்களுக்காகவும் அர்ப்பணித்திருக்கிறார்.
ஆறு சகோதரர்களோடும், நான்கு சகோதரிகளோடும் பிறந்தவர் நமது தோழர் திலிப்குமார் முகர்ஜி. ஆரம்பத்தில் ஆசிரியராகவும், பிறகு 1958 லிருந்து, 1959 வரை எல்.ஐ.சியிலும் பிறகு 1962லிருந்து 1976வரை மாநில அரசு ஊழியராகவும் பணிபுரிந்தவர் 1976 ஏப்ரல் முதல் கௌர் கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். 1978லேயே, அந்த கிராம வங்கியின் ஏரியா மேலாளராக உயர்ந்திருக்கிறார். ஆனால், நிர்வாகத்தின் படிக்கட்டுகளில் மேலும் ஏறிச்செல்லும் விருப்பங்கள் அவருக்கு இருக்கவில்லை. கிராம வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளே அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்திருந்தன. 1979ல், அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (AIRRBEA) ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் vice-president ஆக பொறுப்புக்கு வந்தவர், தனது பெரும்பாலான நேரத்தை சங்க நடவடிக்கைகளுக்கு ஒதுக்கிக்கொண்டார். இந்த தன்னியல்பான அவரது உத்வேகமும், எழுச்சியுமே அவரை அடுத்த மாநாட்டில் AIRRBEAவின் பொதுச்செயலாளராக்கி, இன்றுவரை அவரை நம்மோடு பிணைத்திருக்கிறது. 1995ல் பணி ஓய்வு பெற்றாலும், அவரது சங்க நடவடிக்கைகளுக்கு ஓய்வில்லாமல் இருக்கிறது.
அவருக்கு சாம்ராட் என்னும் ஒரு மகன் இருக்கிறார். இப்போது மண்முடித்து நல்ல வேலையிலிருக்கிறார். ஆரம்ப காலங்களில், அகில இந்திய சுற்றறிக்கைகளை டைப் செய்த்வரின் பெயர் சாம்ராட் என்று இருப்பதை அறிந்தவர்களுக்கு, அவரது குடும்பமே, சங்க நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட்டு இருந்தது என்பதை உணர முடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராம வங்கிகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். மத்திய அரசின் நிதியமைச்சகம், நபார்டு, ஸ்பான்ஸர் வங்கியின் உயரதிகாரிகள் பலருக்கு முகர்ஜி என்றால், யாரென்று தெரியும். அப்படியொரு இடைவிடாத தொடர்புகளும், பேச்சுவார்த்தைகளும் முகர்ஜிக்கே உரியவை. கிராம வங்கி ஊழியர்களுக்காகவும், கிராம வங்கிகளுக்காகவும் அவர் செலவிட்ட தருணங்களில், அவரது குடும்பமும், அவரது துணைவியாரும் எதிர்கொண்ட தனிமையை, அதன் கொடுமையை, அவர் மட்டுமே அறிந்திருந்தார். சுமந்திருந்தார். எப்போதும் களைப்பற்று உழைக்கும் அந்த மனிதருக்குள் இருந்த தனிப்பட்ட சோகங்களை மிக நெருக்கமானவர்களே அறிந்திருந்தார்கள். பொது வாழ்வில், தொழிற்சங்க இயக்கத்தில் இதனையும் எதிர்கொண்டாக வேண்டும் என்கிற அவரது சித்தம் அழுத்தமானது. அவரது துணைவியார் மனநலமும், உடல்நலமும் பாதிக்கப்பட்டு, காலமானபோது அவரது மகன் சாம்ராட், “அவருக்கு இந்தியா முழூவதும் சொந்தங்களும், உறவினர்களுமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என AIRRBEAவின் தலைவர்களுக்கு எழுதிய கடிதம், முகர்ஜியின் வாழ்வை எழுதிச் செல்வதாக இருக்கிறது.
இதோ... இப்போதும் ஓயாமல் நமக்காக அவர் செல்போனில் பேசிக்கொண்டும், சுற்றறிக்கைகள் எழுதிக்கொண்டும், பயணம் செய்துகொண்டு இருக்கிறார். பென்ஷனை கிராம வங்கி ஊழியர்களுக்கு வாங்கித் தந்தாக வேண்டும் என்கிற வேகம் அவருக்குள் அடங்காமல் இருக்கிறது. அவருக்கு வயது 75! காலம் அவரை கொண்டாடுகிறது. அவரை வாழ்த்துவோம். போற்றுவோம். தொடர்ந்து அவரோடு பயணிப்போம்.
ரெட் சல்யூட் காம்ரேட் திலிப் குமார் முகர்ஜி!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!