செப்டம்பர் மாத ‘புத்தகம் பேசுது’ இதழில் நமது சங்கத் தலைவர் மாதவராஜ் அவர்களின் பேட்டி வந்துள்ளது. பேட்டி கண்டவர் இலக்கியப் படைப்பாளியும், இந்தியன் வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவருமாகிய தோழர்.எஸ்.வி.வேணுகோபால்!
--------------------
எண்பதுகளில் எழுத்துலகிற்கு வரவாகக் கிடைத்தவர்களில் ஜா மாதவராஜ் முக்கியமானவர். செம்மலரில் வெளியான அவரது மண்குடம் அக்காலத்திய தண்ணீர்ப் பஞ்சத்தின் காலத்தில் பிறந்த கதை, இன்றும் வாசிக்கப் புதுமையான அனுபவத்தைத் தருவது. கிராம வங்கி ஊழியரான அவர், தொழிற்சங்க முன்னணி பொறுப்பாளராகவும் பரிணமித்ததில் இலக்கியமும் கூடவே பயணம் செய்ததில் இரண்டும் ஒன்றுக்கொன்று உடன்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் சிரமங்களையும் அவர் பேசுகிறார். சிறுகதைகள் மட்டுமல்ல, உணர்வுகளைத் தீண்டும் ஆழமான சொல்லடுக்குகளில் ஆவேசமான செய்திகளையும், உணர்சிகர நிகழ்வுகளையும் எழுதிக் கொண்டிருப்பவர். ...சிறுகதைத் தொகுப்புகள், காந்தி புன்னகைக்கிறார், சி ஐ ஏ குறிப்புகளின் வழி சே குவேரா பற்றிய சித்திரம், ஆதலினால் காதல் செய்வீர்...என நூல் வரிசை. வலைப்பூ உலகில் நுழைந்ததும் ஏராளமான சொற்சித்திரங்கள். பதிவுலகில் பலரது சிறுகதைகள், கவிதைகள், சொற்சித்திரங்களையும் முதன்முதலாகத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் அவரது முக்கிய பங்களிப்பு இருந்தது. இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம், உத்தப்புரம் என ஆவணப் படங்கள் எடுத்துள்ளார். நிறைய நண்பர்களை வலைப்பூ உலகில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத் தலைவராக நடப்பு நேரத்தில் மிகுந்த பொறுப்புகளோடும், அதன் தவிர்க்க முடியாத கடமைகளோடும் ஓடிக் கொண்டிருந்த அவரை இந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி அன்று சாத்தூரில் அவரது இல்லத்திலேயே சந்தித்தோம்.
--------------------
எழுத வேண்டும் என்ற கிளர்ச்சியை உள்ளிருந்து தூண்டிக் கொண்டிருப்பது பெரும்பாலும் வாசிப்பு அனுபவமாக இருக்கும். உங்கள் வாசிப்பின் வேர்களைக் கொஞ்சம் அடையாளப் படுத்துங்களேன்...
சிறு வயதிலிருந்தே கதைகளைக் கேட்பதில் ஒரு மோகம். அப்பாவோட அம்மா - ஆச்சி - நல்லா கதை சொல்வாங்க. மகாபாரதக் கதைகளாக இருக்கும் பெரும்பாலும். எங்க பெரிய அண்ணன் தியாகராஜ் நிறைய கவிதைகள் எழுதுவார். டைரி முழுக்கக் கவிதைகளா இருக்கும். அவருக்கும், அடுத்த அண்ணனுக்கும் வயது இடைவெளி மிகக் குறைவு. ஒரு கட்டத்தில் பெரிய அண்ணனை சாயர்புரத்தில் இருக்கும் பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து படிக்கட்டும் என்று அனுப்பி விட்டார் அப்பா. அண்ணன் விடுமுறைக்கு இங்கே வரும்போது, நானும் தங்கை அம்பிகாவும் அங்கே போய்விடுவோம். அந்த வீடு புத்தகங்களால் கட்டப்பட்ட வீடு என்றுதான் சொல்லவேண்டும். பெரியம்மா மகன் முருகேசன் நிரம்பப் படிக்கும் ஆர்வம் கொண்டவர். பருவ இதழ்கள் பலவற்றுக்கும் நேரடி சந்தா கட்டி இருப்பார்கள். வருட வாரியாக தொகுத்துக் கட்டி மிக பத்திரமாகப் பாதுகாத்துவைத்துப் படித்தும் வந்தார்கள். தமிழ்வாணன், சுஜாதா முதற்கொண்டு மாவோ, மார்க்ஸ் வரை அங்கு இல்லாத புத்தகங்கள் கிடையாது. எல்லா அறைகளிலும் நூல்கள் கிடைக்கும். வீட்டைச் சுற்றி மா, தென்னை, கொய்யா, பப்பாளி....என பழமரங்களும், செடி கொடிகளும் இன்னும் பிற தாவரங்களுமாக அற்புதமான வாசிப்புச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.
வாராந்தரி ராணி கையில் எடுத்தால் அப்படி படிப்பேன். குரங்கு குசலாவை மறக்க முடியாது. அப்புறம் அம்புலிமாமா ஒரு வித்தியாசமான உலகம் அப்போது. அப்புறம் தமிழ்வாணனின் சங்கர்லால், இந்திரா, தேநீர் கொண்டு வந்து கொடுக்கும் மாது...இவர்கள் என்னை ஆக்கிரமித்திருந்தார்கள்.
ஆனால் சரித்திரக் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது...
அதில் குறிப்பாக யாருடைய கதைகள் ?
புத்தகங்களுக்குள் போவதற்குமுன் எங்கள் அண்ணன் பற்றி இன்னும் ஒன்று சொல்லியாக வேண்டும். நல்ல கதை சொல்லி. அவரது கதைகளில் வீரர்கள் குதிரைகளில் ஏறிப் பார்ப்பார்கள். டொக் டொக் என்று குதிரைகள் ஓடிக் கொண்டே இருக்கக் கதையை வேண்டுமென்றே நகர்த்தாது வம்பு செய்வார். குதிரை நிற்கவில்லையே நான் என்ன செய்ய என்பதாக அவர் பதில் இருக்கும். பிறகு அவராக மனமிரங்கிக் குதிரையின் குளம்படி ஓசையை மெதுமெதுவாகக் குறைத்து நிறுத்திவிட்டுக் கதையை மேலே தொடர்வார். அந்தக் கணத்திலேயே குதிரைகள் மீது ஒரு மோகம் படர்ந்தது. எப்போதும் நான் ஒரு குதிரையில் ஏறிப் பயணம் செய்து கொண்டே இருப்பது போல தோன்றும். எனக்கு முன் குதிரையில் தங்கை அம்பிகா இருப்பாள். அவள் என்னைக் காட்டிலும் வேகமாக வாசிப்பவர்.
சாண்டில்யன், ஜெகசிற்பியன் எழுதிய வரலாற்றுக் கதைகள் படித்திருந்தாலும், கல்கி தான் என்னை மிகவும் வசீகரித்தவர். அவரது எழுத்து தனித்துப் பிடித்திருந்தது எனக்கு. எனது அம்மா மிகப் பெரிய வாசகி. பொன்னியின் செல்வன் நாவலை கல்கியில் வந்ததை அப்படியே பைண்டிங் செய்துவைத்ததைப் படிப்பார். தூக்க முடியாத அந்தத் தொகுதிகளை விரும்பி வாசிப்போம் நானும், அம்பிகாவும். பெரிய பழுவேட்டரையரை யார் கொலை செய்திருப்பார்கள் என்று நானும் அவளும் விவாதிப்போம். ஊகிப்பதற்கான சாத்தியங்களைத் தந்த வாசிப்பு அது. சைவம், வைணவம், சமணம், பவுத்தம் போன்றவை குறித்த விவாதங்கள் சுவையையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தன. அலைகடல் ஓய்ந்தாலும் அகக் கடல் ஓய்வதில்லை என்ற கவிதை வரிகள் வரும் அலை ஓசை நாவலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அடுத்த கட்டங்களில் சமூகக் கதைகளுக்கு வாசிப்பு நகர்ந்த போது, சிவசங்கரியும், இந்துமதியும் என் எதிரே இருந்தார்கள். தரையில் இறங்கும் விமானங்கள் கனவுகள் பொங்க நிற்கும் அந்தத் தம்பியின் பாத்திரமாக என்னை எண்ணிக் கொள்வேன். வாஸந்தி, பாலகுமாரன், சுஜாதா என்று மாறிய கட்டத்தில் அந்தப் பருவ எண்ணங்களுக்கு ஏற்ற பாத்திரங்களாக கணேஷ், வசந்த் சிலாகித்து வாசிக்க வைத்தார்கள்.
தீவிர வாசிப்புக்குள் யாருடைய நூல் வழியே இறங்கினீர்கள் ?
இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனலை அதன் தலைப்பில் கவரப்பட்டு வாங்கிப் படித்தேன். அதுவரை கொண்டிருந்த சமூகம் குறித்தான பார்வையை அது கவிழ்த்துப் போட்டது. எங்கள் அண்ணனுடைய நண்பர் சிதம்பரம் என்பவர் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர். நாத்திகக் கருத்துகளோடு எங்களிடம் வந்து காரசாரமான விவாதங்களை நடத்துவார். நானும், எனது தங்கையும் இளவயதுக் காலத்தில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பஜனைகளில் கலப்பதும், போட்டிகளில் பரிசு வெல்வதுமாக இருந்தவர்கள். இன்றும் என்னால் அந்தப் பாசுரங்களை அப்படியே சொல்ல முடியும். இதில் தான் சிதம்பரம் கேள்விகளை வைத்தார்.
இதன் தாக்கங்கள் என்னுள் ஊடாடிக் கொண்டிருந்தது. கல்லூரியில் ஒரு முறை ஆங்கிலத்தில் பேச வேண்டிய வகுப்பு ஒன்றில், எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் நாத்திகக் கருத்துக்களை நான் முன்வைத்தபோது, பேராசிரியர் பொன்ராஜ் என்பவர் மிகவும் 'கிக்' ஆகிப் போய்விட்டார். மாறுபட்ட விஷயங்களைப் பேசுவதை யாரும் கொண்டாடும்போது பிறக்கும் உற்சாகம் எனக்கும் தொற்றியது. மாய மான் ஓடத் தொடங்கியது.
வேலை தேடும் படலத்தில் இந்த வாசிப்பின் கனம் என்னவாக இருந்தது?
வேலை தேடி சென்னைக்குச் சென்று சேர்ந்த ஒரு காலம், நிராகரிப்பின் சுவை தெரிந்த சோதனை நேரம். வெறுத்துப் போன வாழ்க்கைப் பருவம். ரப்பர் கம்பெனி ஒன்றிலும், பிறகு வீடு வீடாகச் சென்று பாலிசி பிடிக்க அலைந்த இன்சூரன்ஸ் கம்பெனியிலும் மனம் ஒட்டவே இல்லை. சென்னையில் அண்ணன் வீட்டில் தங்கிய போதுதான், அடுத்த வீட்டில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இருந்தார்...அவரது மூத்த மகள் 'அம்மு'வும் இருந்தாள். அண்ணன் ஒருவாறு ஊகித்துக் கொண்டாரா தெரியாது....சும்மா வீட்டில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். தினமும் கையில் இருபது ரூபாய் கொடுத்து கன்னிமாரா நூலகத்திற்குப் போய் படித்துவிட்டு வா என்பார். மிகுந்த சிரமம் கொடுத்த வேலை அது. அங்கும் நிறைய வாசித்தேன். முக்கியமாக ஜே கே நூல்கள். அவர் மீது மரியாதையும், பயமும் கூடிவிட்டது. அண்ணன் இதற்குள் பாண்டிச்சேரிக்கு மாற்றல் ஆகிச் சென்றார். எனக்கும் பாண்டியன் கிராம வங்கியில் வேலை கிடைத்து சாத்தூர் சென்றுவிட்டேன். ஏராளமான புதிய அனுபவங்கள். தொழிற்சங்க அறிமுகம்...
அது இன்னோர் உலகத்தின் நுழைவு அல்லவா...?
நிச்சயமாக. வாசிப்பின் தளங்களை அது மாற்றிக் கொடுத்தது. முதன்முதலில் நிஜ நாடகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு கோவில்பட்டி சென்றது மறக்க முடியாத உணர்வுகளைக் கிளர்த்தியது. எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி...என்று பாடிய கரிசல் குயில் கிருஷ்ணசாமியும், நாடகங்கள் நிகழ்த்திய கோணங்கி, ச தமிழ்ச்செல்வனும், சாரதியும் நெஞ்சு நிறைந்தார்கள். சிறு சலனத்தை நான் உணர்ந்தேன். மனம் தவிப்புக்குள்ளானது.
வங்கியில், பா கிருஷ்ணகுமார் அறிமுகம் ஆனதும், அவரது பாரதி குறித்த பேச்சுக்களைக் கேட்கத் திரிவேன். நெருக்கம் அதிகமானதும், இலக்கிய பரிச்சயம் கூடியது. எத்தனை எத்தனை புத்தகங்கள்...
ஒருமுறை தொழிற்சங்க உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 'டிரிப்' போடப் பட்டபோது நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை' வாசித்துக் கொண்டிருந்தேன். கையூர் தியாகிகள் கதையில் கலந்தேன். அதில் வரும் அப்புவானேன். சிருகண்டனானேன். இறுதிப் பக்கங்களை வாசிக்கையில் தாளமாட்டது தேம்பித் தேம்பி அழுதேன். விவசாயிகள் சங்கம் என்றால் என்ன என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன். வாசிப்பின் தளம் மேலும் விரியத் தொடங்கியது. அதில் சில அற்புத மனிதர்களின் நேரடி கவனம் எனக்கு வாய்த்தது மறக்க முடியாதது..
தொழிற்சங்க வாழ்க்கையின் பயணத்திலா...
ஆமாம். எங்கள் சங்க அலுவலகம் இயங்கிய 42 B எல் எஃப் தெரு முகவரிக்கு நிறைய வரலாறு உண்டு. லாட்ஜ் வாழ்க்கையை விட்டுத் தப்பி, ஒரு சமயத்தில் நான் அங்கேயே அடைக்கலம் புகுந்தேன். எங்களை ஊக்கப்படுத்தும் சக்திகளாக இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள் பலரும் அங்கு வந்து செல்வது வழக்கம். அதில் தோழர் எஸ் ஏ பெருமாள், மேலாண்மை பொன்னுச்சாமி வந்தார்கள் என்றால் இரவு முழுக்கத் தங்கிப் பேசிவிட்டு அடுத்தநாள் காலையில் தான் புறப்பட்டுச் செல்வார்கள். தனுஷ்கோடி ராமசாமி எனது வாழ்வில் முக்கிய இடம் பெற்றவரானார். சாத்தூரில் டாக்டர் வல்லபாய் அவர்களது பங்களிப்பும் குறிப்பிடவேண்டியது....
சோவியத் கதைகளைத் தேடிச் சென்றது இந்தக் காலகட்டம் தான். கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், செகாவ்...என சமூகத்தின் மீதும், தொழிற்சங்கத்தின் மீதுமான ஈடுபாட்டையும் கூட்டிய உன்னதமான இலக்கிய வரிசைகளைப் போய்க் கண்டடைந்தேன்.
அப்போது எழுதவும் தொடங்கிவிட்டிருந்தீர்கள். .... உங்கள் "மண்குடம்" பெரிய வரவேற்பைப் பெற்றது...அது உருவான கதையைச் சொல்லுங்கள்..
சாத்தூரின் தண்ணீர்ப் பஞ்சம் என்னை மிகவும் வாட்டியது. எனது சொந்த ஊரில் பத்தடி தோண்டினால் தண்ணீர் ஊற்றெடுக்கும். இங்கோ மக்கள் அல்லாடிக் கொண்டிருந்தார்கள். அலைந்து தவித்தார்கள். இரவு முழுக்க யாரோ விக்கல் எடுத்துக் கொண்டே இருப்பது மாதிரி அடிபம்புகள் அடித்துக் கொண்டே இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். தண்ணீர் லாரி வரக் கண்டால் மக்கள் குடங்களை எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒருநாள் மண் குடங்களோடு வந்து தண்ணீர் கேட்டுப் போராடுவோம் என்று போர்டு எழுதி வைத்திருந்தார்கள். மக்களோ பிளாஸ்டிக் குடங்களை வைத்துக் கொண்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்ததும், ஒரு மண்குடம் தண்ணீர் கஷ்டம் பற்றிப் பேசுவதாக இந்தக் கதை உருவானது. டாக்டர் வல்லபாய் வாசித்ததும் அழுதார். 1986ல் செம்மலர் இதழில் வந்தது. அந்த மாத இலக்கிய சிந்தனை விருதும் பெற்றது. கிருஷ்ணகுமார் என்னைக் கொண்டாடினார். கந்தர்வன் பச்சை மசியில் என்னைப் பாராட்டி எழுதிய கடிதத்தையும், எஸ் வி வேணுகோபாலன் எழுதிய கடிதத்தையும் இன்றும் வைத்திருக்கிறேன்.
தொடர்ந்து ராஜகுமாரன், லட்சுமண ரேகை..என எழுதிய எனது ஐந்து கதைகளை மாதம் ஒன்றாக செம்மலர் வெளியிட்டது. தமிழ்செல்வன் மிகவும் பாராட்டியதோடு, வி ஸ காண்டேகர் வாசித்ததுண்டா எனக் கேட்டார். எதற்காக என்று தெரியாது. வண்ணதாசன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் தாக்கங்கள் என்னுள் இருந்தது. நிறைய படிப்பதும், எழுதுவதுமாகக் கழிந்தது காலம்...
லட்சுமண ரேகை கதையை எழுதிய போது, மேலாண்மை வந்திருந்தவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். அவர் படிக்கும்போது நான் உறங்கிவிட்டேன். காலையில் அவர் சென்றுவிட்டிருந்தார். மேசையில் எனது கதையின் பக்கத்தில் அதற்குப் பாதி அளவு பக்கங்களில் ஒரு கடிதம் இருந்தது. கதையை சிலாகித்துத் தனது கருத்துக்களை எழுதிவைத்துச் சென்றிருந்தார் அவர். அருமையான இலக்கியப் பதிவு அது.
திருச்சியில் அப்போது நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு ஓர் இலக்கியத் திருவிழா போல் இருந்தது.....கே ஏ குணசேகரன், கந்தர்வன், தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்ச்செல்வன்...எத்தனையோ பேரின் சந்திப்புகள். புதிய அறிமுகங்கள். இளம் படைப்பாளிகளின் உற்சாகத் துள்ளல். ஓயாத பகிர்வு, பேச்சு, விவாதம்...மீண்டும் அப்படி அமையாத ஏக்கத்தைத் தரும் நினைவு அது..
பொதுவாக கவிதை தான் எழுத்துலகின் முதல் வாசலாக இருக்கிறது. நீங்கள் எப்படி?
நானும் அவ்வழியே தான் நுழைந்தேன். எனது கவிதைகள் கணையாழியிலும், தீபத்திலும் வந்தன. ஒரு முறை எஸ் ஏ பி வந்த போது காண்பித்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. கவிதை என்றால் என்ன என்பது பற்றி ஒரு மணி நேரம் பொழிந்தார். அவர் பேசப் பேச எத்தனையோ பேருடைய கவிதைகளை மனத்திலிருந்து அருவி போல கொட்டிக் கொண்டே போனார். அத்தோடு எனது கவிதை வாழ்க்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
கொஞ்சம் உங்கள் தொழிற்சங்க வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவோம். அதில் படைப்பாளியின் மனம் பொருந்துவது பற்றிச் சொல்லுங்கள்...
நினைவுகள் அழிவதில்லை நூல் சங்கங்கள் மீது, தியாகங்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. கிராம வங்கி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தில் எங்கள் தலைவர்கள் அசீஸ் சென் (இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிறுவன பொதுச்செயலாளர்; சில ஆண்டுகளுக்குமுன் காலமானார்), இன்றும் ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் திலீப் முகர்ஜி போன்றோர் பெரிய நம்பிக்கைகளைக் கொடுத்தவர்கள். உள்ளார்ந்த மரியாதையும், மதிப்பும் உருவாக்கிக் கொடுத்த காலம் அது. பிரதமர் இந்திரா அவசர நிலை காலத்தில் தோற்றுவித்தது தான் கிராமவங்கிகள். அதையடுத்த ஆண்டுகள் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன. எண்பதுகளில் திரைப்படங்கள், இலக்கியங்கள், சங்க அமைப்பின் இயக்கங்கள் எல்லாமே மனிதர்களின் சிறந்த பக்கங்களை பிரதிபலித்தன என்று எண்ணத் தோன்றுகிறது. எம் ஜி ஆர், சிவாஜி காலங்களைக் கடந்து இயக்குனர்கள் பெயர்கள் மக்களிடம் பேசப்பட்ட காலம் அது. பாலு மகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன்...இப்படி!
செம்மலரில் ஷாஜஹான் கடித வடிவில் ஒரு சிறுகதை எழுத, அதற்கு பதில் கடித வடிவில் இன்னொரு சிறுகதை வழங்கியிருந்தார் போப்பு. காமராஜ் எழுதத் துவங்கியிருந்தார். வாசிப்பு மனங்களும், எழுத்துக்களும் புதிய சூழலை எட்டியிருந்தன.
ஒரு சிறந்த இலக்கியவாதி நல்ல போராளியாகவும் இருக்கிறார். ரசனை மிக்கவர்கள் உறவுகளைக் கொண்டாடுபவராகவும் இருக்கிறார்கள். புத்தகங்களைக் கொண்டாடுவோர் சிறந்த தொழிற்சங்கவாதியாக இயங்க முடிகிறது.
இதனிடையே அம்முவைப் பார்க்கச் சென்னை செல்வது எனக்கு அந்தக் காலத்தில் காஸ்ட்லியான காதல் ஆகிவிட்டது. எங்கள் திருமணத்திற்கு ஜே கே வை அத்தனை சுலபமாக சம்மதிக்க வைக்க முடியவில்லை..
அந்த சுவாரசியமான நினைவுகளை இப்போது திரும்பிப் பார்த்தால் என்ன தோன்றுகிறது..
பா.கிருஷ்ணகுமாரும், தனுஷ்கோடி ராமசாமி அவர்களும் ஜே கே வை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார்கள். அவர் பிடி கொடுக்கவில்லை. பையனை வரச் சொல்லுங்கள் என்ற அளவுக்கு மட்டும் வந்திருந்தார். நான் சென்றபோது காதல் என்றால் என்ன என்று கேட்டு நீண்ட விவாதத்தைக் கிளப்பினார். சாதி விஷயத்தில் ஊரும், உறவும் எப்படி ஏற்கும், பெற்றோரை எப்படி ஏற்கச் செய்ய முடியும் என்பதாக எல்லாம் கேட்டு, தவிர்க்கச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். என்னால் அவர் சொன்னதை ஏற்க முடியவில்லை என்றாலும், அவரை எதிர்த்துப் பேசும் பேச்சுக்கு இடமின்றி உட்கார்ந்திருந்தேன். வீட்டில் அம்மாவிடம் சொன்னபோது அவர் சொன்னதை மறக்க முடியாது....அவ்வளவு பெரிய எழுத்தாளர் மக, என் மகனை நேசிக்கிறா என்பது எவ்வளவு பெருமையான விஷயம் என்று என்னிடம் சொன்னார். அவருக்குள் இருந்த வாசகியின் குரல் அது..
அருமை...உங்கள் அம்மாவின் வாசிப்பு பற்றியும், பாட்டு பற்றியும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்...கொஞ்சம் சொல்லுங்களேன்..
அம்மா நிறைய படிப்பவர். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்துக்கள் என்று நாறும்பூநாதனைக் கொண்டாடுவார். முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டவர். ஏதாவது பாடிக் கொண்டே இருப்பார். அவருக்குள் இருந்த சோகம் எனக்கு இருபது வயதிற்குப் பிறகுதான் தற்செயலாக ஒருமுறை பிடிபட்டது. விடுப்பில் ஒருமுறை வீட்டுக்குச் சென்றபோது மடியில் படுத்துக் கொண்டு 'எத்தனை பாடுவீங்க, இப்போ ஏதாவது பாடுங்களேன்' என்று கேட்டபோது பொலபொலவென்று கண்ணீர் விட்டார்கள். 'உன் அப்பா ஒரு தடவை கூட இப்படி என்னைப் பாடச் சொல்லிக் கேட்டதில்லை' என்றார்கள். நான் உறைந்து போனேன். எல்லாமே இயல்பாக எடுத்துக் கொண்டு நகரும் வாழ்க்கைக்குள் இப்படியான அம்மாக்களின் சோகங்கள் அடர்த்தியான மௌனமாய் வீடுகளில் நிறைந்திருக்கிறது...
எண்பதுகளைப் பற்றி உற்சாகமாகச் சொன்னீர்கள்.. தொண்ணூறுகளில் எல்லாவற்றிலும் ஏற்பட்ட மாறுதல்கள் உங்கள் வாசிப்பிலும், எழுத்திலும் எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தின ?
சோவியத் தகர்வு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வெறுமை ஆக்கிரமித்தது. பெருமூச்சுக்களின் காலம் அது. தனிப்பட்ட விததிலும் ஒரு மாற்றம். எங்கள் வங்கியில் 44 நாட்கள் தொடர்ந்த வேலை நிறுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட சூழலில் நான் பூச்சிக் காட்டை விட்டு சாத்தூருக்குத் திரும்ப நேர்ந்தது. சங்கத்தில் முக்கிய பொறுப்பேற்க வந்தது. 1991 -1999 காலம், சவால் நிறைந்த காலத்தில் சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் கூட்டுப் பணியில் நான் வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தேன்.
இரண்டாயிரமாவது ஆண்டு வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டன. சங்கத்திலும், வாசிப்பிலும், எழுத்திலும் புதிய விஷயங்கள்..
பாரதி புத்தகாலயம் தொடங்கப்பட்ட பிறகு காந்தி புன்னகைக்கிறார், சே குவேரா..என்று வேகமாக சில புத்தகங்களை எழுத ஊக்கம் கிடைத்தது. புத்தகம் பேசுது இதழிலும் தடை செயயப்பட்ட புத்தகங்கள் மீதான ஒரு தொடரை எழுதிவந்தேன். இடையில் விடுபட்டுவிட்டது. மீண்டும் தொடர வேண்டும்.
இணையதள உலகத்தில் நுழைந்ததும் அது வேறு அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. எத்தனை எத்தனை விதமான எழுத்துக்கள்..
வலைப்பூ வாசிப்பு குறித்த தொடர் ஈர்ப்பை உங்கள் தோழமை வட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்..அதில் உங்கள் கவனத்தை அப்படி எது கவர்கிறது?
பத்திரிகைகளில் வருவதைப் போல் பல மடங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அச்சில் வெளிவரக் காத்திருப்பதைப் போன்ற தேவைகள் இல்லை. உடனுக்குடன் வாசகர்கள் எதிர்வினை கிடைத்துவிடுகிறது. ஒரே நேரத்தில் நிறைய பேரைச் சென்று சேர முடிகிறது. சிறுகதைகள், கவிதைகள் என எதிலும் வித்தியாசமான எழுத்துக்களை உங்களால் உணர முடியும். குறிப்பாக பெண்கள் நிறைய பதிவுகளைப் போடுகிறார்கள்...அமிர்தவர்ஷணி அம்மா என்ற பெண்மணியைச் சொல்லவேண்டும். உப்பு நமக்குச் சாப்பாட்டில் ஒரு பொருள்..ஆனால் சமையலில் அது கூடக் குறைய இருந்துவிடுவது ஏற்படுத்தும் பதட்டங்களை அவர் அப்படி எழுதியிருப்பார். என் தங்கை அம்பிகா வலைப்பூவில் எழுதத் தொடங்கியபோது நான் பிரமிப்பு அடைந்தேன்.
இளைஞர்கள் உலகமாக இருக்கிறது இணையதளம். தங்களது சமூகத் தனிமையை அவர்கள் சமூகத் தொடர்பு உலகமாக அதில் உரு மாற்றிக் கொள்கிறார்கள். வலைப்பூ ஓர் உளவியல் பரப்பு. இளைய தலைமுறையின் மறுகோணத்தை நீங்கள் அங்கு பார்க்க முடியும். உரையாடலின் நுட்பத்தை, உறவுமுறையை, சண்டையை, நூல் வாசிப்பை, உலக திரைப்பட அறிமுகத்தை, எல்லையற்ற விவாதத்தை...வலைப்பூ விரித்து வைக்கிறது. ஜனநாயகத்தின் பரந்த வெளியாகவும் இருக்கிறது..அதே நேரத்தில் கட்டற்ற சுதந்திரத்தின் அத்துமீறல்களும் இருக்கத் தான் செய்கிறது.
கவிதைகள், கட்டுரைகள், சொல்லோவியங்களைப் பதிவுலகப் படைப்புகளாக வம்சி வெளியீடாகக் கொண்டு வந்தோம்.
ஒரு கட்டத்தில் காட்சி ஊடகத்தை நோக்கியும் நகர்ந்தீர்கள்.. 'பள்ளம்' குறும்படம் தானே உங்களது முதல் முயற்சி?
ஆமாம். சாலையில் பள்ளம் தோண்டுவோரின் ஒரு நாள் வாழ்க்கையிலிருந்து சில பொழுதுகளைப் படம் பிடித்தோம். நண்பன் பிரியா கார்த்தி அதற்குப் பிறகு ஆவணப் படங்கள் எடுக்கவும் காமிராவோடு ஆர்வத்தோடு வரத் தொடங்கினான். சாலையோரப் பணியாளர்கள் வேலை நீக்கம் செயயப்பட்ட போது அவர்கள் சங்கமும், எங்கள் சங்கமும் அடுத்தடுத்து இயங்கிக் கொண்டிருந்ததால், அவர்களது பிரச்சனைகளை அருகிலிருந்து உணர முடிந்தது. ஒரு தொழிலாளி சித்தம் கலங்கித் தெருக்களில் விர்ரென்று போய்க் கொண்டே இருப்பார். மனப் பிறழ்வும், பொருளாதாரத் தாக்குதலும், குடும்ப பிரச்சனைகளுமாக அவர்கள் அவதியுறுவதை ஆவணப் படம் ஆக்க அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்துவோடு சேர்ந்து உழைத்தோம்.
எடிட்டிங் முடிக்கும் நிலையில் அவர்களுக்கு வேலை வழங்குவதாக அரசு அறிவித்தது. எப்படி முடிப்பது என்று யோசித்து நாங்கள் முடித்தவிதம் பாராட்டுதல் பெற்றது. அவர்களையெல்லாம் அழைத்து வந்து திரையிட்டோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் மறக்க முடியாதது. பிறகு ஒரு நாளில் எனக்கு முன் பின் அறிமுகம் ஆகாத சாலைப் பணியாளர் ஒருவர் என்னைக் கடந்து செல்கையில் தோழர் என்று உரக்க விளித்ததையும் சொல்ல வேண்டும்...
இது ஒரு இதிகாசம் எடுத்தோம். பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தல் களத்தின் பின்னணியில் சாதிய விஷயங்கள் குறித்த உரையாடலை எழுப்ப விரும்பினோம். எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாத இயலாமையை உணர்ந்தோம்.
ஆனால் ஆவணப் படங்கள், குறும்படங்கள் முக்கிய பதிவுகளைச் செய்ய முடியும் என நான் திடமாக நம்புகிறேன். அமெரிக்காவில் மூர் எடுத்த 9\11 என்ற படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஜார்ஜ் புஷ்க்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக ஷூக்களை எறியத் தூண்டும் அளவு உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்திய படம் அது. மாஞ்சோலை தொழிலாளர் துயரத்தைப் பேசும் நதியின் மரணம், பாலாறு போன்றவை எழுப்பும் கேள்விகள் மக்கள் சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே மக்கள் தியேட்டர்களை நாம் உருவாக்க வேண்டும். சாலைகளில் படங்களைப் போட்டுக் காட்டவேண்டும். முன்பு ஒருமுறை Children of Heaven திரையிட்டபோது மொழியின் பிரச்சனை இன்றி மக்கள் அதை ரசித்துப் பார்க்கவே செய்தனர். அந்தச் சிறுவன் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் பரிசு வாங்கிவிடுவானா, ஷூ கிடைக்குமா என்ற உச்சகட்டக் காட்சியை அத்தனை அமைதியாக மக்கள் எதிர்பார்ப்போடு பார்த்ததை நான் கண் கூடாகக் கண்டேன்.
வீதி திரையரங்குகள் ஏற்படுத்தி மக்களுக்கு மாற்று சினிமாவை, மாற்று ரசனையை நிச்சயம் வழங்க முடியும். அவர்களைச் சேர முடியும்.
உங்கள் எழுத்துக்களில் உணர்ச்சி தத்தளிப்பு மிகுந்திருக்கும்.. குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் கடந்து போன மனிதர்கள் குறித்த சொல்லோவியங்களில்... பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழில் வந்த தொழிற்சங்க வரலாற்றுக் குறிப்புகளான இருட்டிலிருந்து தொடரிலும் அது தெரியும்...
சிலரை மறக்க முடியாது. மனிதர்களை நாம் இழக்கும்போது தான் அவர்கள் இருப்பின் சிறப்பை நாம் காலம் கடந்து உணர்கிறோம். வரதராஜ பெருமாள் என்கிற எங்கள் வங்கித் தோழன் அப்படித்தான். அவன் சங்கத்தில் எந்த முக்கிய பொறுப்பும் வகித்ததில்லை. அவன் கடைசியாக ஒரு கூட்டத்தில் தேநீரும், பிஸ்கட்டும் கொடுத்து நகர்ந்த காட்சி அப்படியே நிலைத்துவிட்டது. அவன் மறைவு அதிலிருந்து பின்னோக்கி என்னை இழுத்துச் செல்வதை நான் எழுதுகிறேன். அதிகாரியான பாலு சார் விஷயமும் அப்படித்தான். அவரை இழந்தே விட்டோம். அந்த மனிதர் நிறைய கனவுகளை வைத்திருந்தவர். தான் சிறந்த பேச்சாளராக வர வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது அவருக்கு. மது பழக்கத்தில் சிக்கியவரை மீட்டெடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தோம். புத்தக வாசிப்பிற்குள் ஆர்வத்தோடு இறங்கினார். வீட்டிற்கு வந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போகிறேன் என்றும் சொல்வார். அதைத் தொடர்ந்து உறுதி செய்வதில் முன்னுரிமையற்று வேறு வேலைகளில் இருந்து விட்டோம் என்று குற்ற உணர்ச்சி வாட்டுகிறது என்னை. அவரைப் பற்றிய சொல்லோவியம் அதற்கு நான் தேடிய வெளிப்பாடு.
நடுத்தர வகுப்பு மனிதர்கள் வாழ்வின் வெற்றி தோல்விகளில் நழுவி விழும்போது வடிகால் தேடுகின்றனர். வேலை முடிந்து வீடு திரும்பும் இடைப்பட்ட நேரம் அவர்களை வேறு எங்கோ இழுக்கிறது...மிக இயல்பாக ஏதாவது போதைக்கு ஆட்பட்டு விடுகின்றனர். அவர்களைத் தற்காத்துக் கொள்ள இலக்கியங்கள் எவ்வளவோ செய்ய முடியும். பகிர்ந்து கொள்ளத் தெரிந்தால் போதும்...
பெரிய வாசிப்பும், எழுத்தும் இருந்தால் தான் இலக்கியவாதி என்றில்லை. பழகும் தன்மையிலே கூட அதன் தெறிப்புகள் இருக்கும். என்ன சார் ஷேவ் பண்ணாம வந்திருக்கீங்க ஏதும் பிரச்சனையா என்று ஒருவர் கேட்பதிலேயே உள்ள மனிதம் போதும். அனுபவங்கள் உள்ள யாருமே இலக்கியவாதிகள் தான்..அனுபவங்களே அற்றவர்கள் மனிதர்களாகவே இருப்பதில்லை..
காலத்தை பிரதிபலிக்கும் படைப்புகளின் வரிசையில் உங்களுக்கு ஏதாவது குறிப்பான சிந்தனை உண்டா, உலகமயம் பற்றியோ, வேறு பிரச்சனைகள் மீதோ ?
கடந்த நூற்றாண்டு முடிவிலிருந்து இந்த நூற்றாண்டு தொடக்கம் வரை மிகக் குறுகிய கால இடைவெளியில் அறிவியல், அரசியல், பொருளாதாரம், கல்வி...என பல துறைகளிலும் கனவேக மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன..தொலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்...அலைபேசி வரை வந்துவிட்டோம். நமது தலைமுறை பாக்கியவான்களாக இவற்றின் மாற்றத்தை சந்தித்திருக்கிறோம்..நமது எதிரே கடந்து போன மாற்றங்கள் நிறைய உண்டு..எதிர்காலத் தலைமுறை பழைய சங்கதிகளைச் சொன்னால் நம்புவார்களா தெரியாது. அத்தனை பெரிய இடைவெளி இருக்கும்..எத்தனையோ சிதைவுகள் நிகழ்ந்த காலம். மனிதம் எப்படி வாழ்ந்தது, வீழ்ந்தது என்பதன் கூறுகள் வெளிப்பட்ட காலம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்த பல விதமான எதிர்வினைகள்....இப்படி எத்தனையோ நடந்திருக்கின்றன...
இவற்றை உள்வாங்கி இவற்றினூடான ஒரு பயணமாக ஒரு இலக்கியப் படைப்பு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அது அடுத்தடுத்த தலைமுறைக்கான வாசிப்புக்குப் போய்ச் சேரவேண்டும்.
படைப்பாளிக்கும் குடும்பத்துக்குமான உறவு பற்றி சொல்லுங்களேன்..
ஆஹா..சிக்கலைக் கொண்டு வந்திட்டீங்களா. படைப்பாளி ஒன்றும் பெரிய பீடம் அல்ல. குடும்ப உறுப்பினர் தான் அவரும். அவர்கள் நேரடியாகச் சந்திக்கிற இடம் தான் குடும்பம். அப்போது அவர் படைப்பாளி அல்ல. படைப்பு மனம் வேறுபடுத்திப் பார்க்கப் பட்டு விட்டால் பிரச்சினைக்கு இடமில்லை. படைப்பும் ஜீவனோடு, உண்மையாக இருக்க வாய்ப்பு பிறக்கும். படைப்புக்கும், படைப்பாளிக்குமான இடைவெளியைக் குடும்பம் பார்க்கும்போது தான் சிக்கல் உருவாகிறது. இந்த பிரக்ஞையோடு தவிக்கிற படைப்பாளி தோற்றுப் போகிறான்..மாபெரும் வெற்றியோ, மாபெரும் தோல்வியோ படைப்பாளி மனம் தனிமைப்பட்டு வாழ்கிறது. லௌகிக வாழ்வின் சங்கடங்கள் படைப்பாளியை இருப்பில் இருக்க விடுவதில்லை. அந்த முரண்பாடுகளோடு தான் அவன் வாழ்கிறான். படைப்பு நிகழும் அந்தக் கணத்தில் தீர்மானமாகும் படைப்பின் வழியாக அவனைத் தேடக் கூடாது. தான் எதுவாக இல்லையோ தன்னால் என்ன இயலாதோ அதை எழுதுகிறான். சொல்லத் தான் முடிகிறது அவனுக்கு. சமன்படுத்தி வாழ்வது சவால்தான்.
படைப்பாளிகள் பேசப்படும் காலம் இது..முற்போக்கு இலக்கிய முகாமின் இப்போதைய அக்கறை என்னவாக இருக்க வேண்டும்?
பொதுப் பரப்பில் எல்லாப் படைப்பாளிகளும் பேசப்படுவதில்லை. குறிப்பிட்ட சிலரையே நாம் எப்போதும் உடனடி கவனத்தில் வைத்திருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்..எத்தனையோ சாதித்த பலர் ஏனோ கொண்டாடப்படுவதில்லை. உதயசங்கரை எடுத்துக் கொள்ளுங்கள். இருபத்தைந்து ஆண்டுகளாக சிறுகதை, மொழிபெயர்ப்பு, குழந்தைகள் இலக்கியம் என்று ஓயாது இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது சிறுகதைத் தொகுப்பைப் புரட்டினால் பல வடிவங்களையும் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார். அவர் ரயில்வே நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் என்பதால், அந்தக் காலத்தில் தாம் அன்றாடம் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள், பயணிகள் குறித்தெல்லாம் புதுமையான பார்வையை வைக்கிறார். தமிழில் அரிதான செய்திகள் அவர் வாயிலாகக் கிடைக்கிறது. அந்த ரயில் நிலையம் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வண்ணங்களில் தத்ரூபமாக விரிகிறது நமது கண் முன்னால்! அவரைக் குறித்த பேச்சு இல்லை..அவரைப் போல பலரைச் சொல்லலாம். இப்போது நிறைய இளம் படைப்பாளிகள் சிற்றிதழ்களில், வலைப்பூக்களில், இணையதளத்தில் வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, உற்சாகப் படுத்தி வரவேற்க வேண்டிய வேலை முற்போக்கு இலக்கிய முகாமிற்கு உண்டு. சிந்திக்கும் புதிய தலைமுறை அந்நியப்பட்டுப் போகும் காலச் சூழலில் ஈடுபாடு கொள்ள வைக்க வேண்டிய பெறும் கடமை நம் முன் இருக்கிறது.
நன்றி : புத்தகம் பேசுது
தோழர் மாதவராஜ்---மாதவராஜ் அல்ல மா தவ ராஜ் என்பதை தெரிய வைத்தது புத்தகம் பேசுது மாத இதழில் வந்த மாதவராஜ் பேட்டி.
ReplyDeleteபேட்டி அருமையாக உள்ளது. மிகவும் இயல்பாகவும் எங்கும் மிகைப்படுத்தப்படாமலும் உள்ளது. மாதுவின் எளிமை இதிலும் தெரிகிறது.
ReplyDeleteSeptember 13, 2011 8:08 AM