(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)
------------------------------------------------------------------------------
website: www.pgbea.net email: pgbea.vnr@gmail.com. gspgbou@gmail.com
------------------------------------------------------------------------------
சுற்றறிக்கை எண் : 7/2011 நாள்: 15.9.2011
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
கடந்த சில தினங்களாக, பரமக்குடியை மையப்படுத்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பதற்றமும், அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில், நமது வங்கியின் கிளைகளே பெரும்பாலும் இருக்கின்றன. வணிகம் அதிகரித்து, வாடிக்கையாளர்களை நம் பக்கம் கொண்டுவர வேண்டிய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். நமது தோழர்கள் பணிக்குச் செல்வதிலும், பணிபுரிவதிலும் சிரமங்கள் இருக்கும். சமுக அக்கறை கொண்ட நம் சங்கங்கள் இந்த விஷயத்தை கவலையோடு பார்க்க வேண்டி இருக்கிறது.
இங்கு ஒவ்வொரு சமூகமும் அவரவர்களுக்கான ஒரு தலைவரை முன்னிறுத்தி, தங்களது அடையாளமாகவும், உருவமாகவும் போற்றுவது நடக்கிறது. பெருந்திரளாய் ஓரிடத்தில் கூடி அன்னாரது பிறந்தநாளை ஆரவாரத்துடன் கொண்டாடுவதும் வழக்கமாகியிருக்கிறது. இதுபோன்றுதான் தாழ்த்தப்பட்ட மக்கள், மறைந்த தங்கள் தலைவர் இமானுவேல் சேகரன் அவர்களுக்கு 11.9.2011 அன்று குருபூஜை நடத்திட ஏற்பாடு செய்து வந்தனர். இதை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. 9.11.2011 அன்று ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் படுகொலை செய்யப்படுகிறான். அதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்திற்குச் செல்ல தடைவிதித்து ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். நிகழ்ச்சிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன. தாங்கள் உற்சாகத்துடன் நடத்தத் திட்டமிட்டிருந்த குருபூஜையின் கோலாகலங்கள் கலைந்து போக, தாழ்த்தப்பட்ட மக்களிடையே இயல்பாக ஆத்திரம் ஏற்படுகிறது. சிலர் பரமக்குடியில் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். காவல்துறைக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழு பேர் கொலை செய்யப்படுகின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைத்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தி, சமூகப்பதற்றம் ஏற்பட காரணமாயிருந்தது தமிழக அரசின் காவல்துறையே. தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிரள்வதையும், பெருந்திரளாய் கூடுவதையும் பொறுக்க முடியாத ஆதிக்க மனோபாவம் இதற்குள் ஓளிந்திருக்கிறது. இந்தப் புரிதலோடு சமுக நல்லிணக்கத்திற்காகவும், மக்களிடையே அமைதி திரும்பவும் நாம் குரல் கொடுப்போம்.
அகில இந்திய தர்ணா!
திட்டமிட்டபடி, செப்டம்பர் 6ம்தேதி நமது தர்ண எழுச்சியோடு நடந்து இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் ஆள் பற்றாக்குறையிலும், பணி நிலைமைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம் நமது உறுதியையும், சமரசமற்ற முயற்சியையும் உணர்த்தியிருக்கிறது.
பென்ஷன், வணிக வங்கிக்கு இணையான அலவன்சுகள், தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும், வங்கியின் நிர்வாகக்குழுவில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பிரதிநிதிகள் வேண்டும் என்கிற கோரிக்கைகள் கோஷங்களாக எழும்பி இருக்கின்றன. இதேநாளில் தேசம் முழுவதும் அனைத்து கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்கள் முன்பாகவும் இதே போன்று குரல்கள் எதிரொலித்திருக்கின்றன. போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை. நமக்கான, நம் எதிர்காலத்துக்கான போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழர்களையும் PGBEAவும், PGBOUவும் பெருமையுடன் பார்க்கிறது.
‘நெட்வொர்க் ஃபெயிலியர்’:
கிளைகளில் அடிக்கடி ‘நெட்வொர்க் ஃபெயிலியர்’ என்று கணினிகள் இயங்காமல் நின்றுவிடுகின்றன. அதனால் வங்கிப்பணிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. வாடிக்கையாளர்களின் எரிச்சலுக்கும், கோபங்களுக்கும் நேரிடையாக நாமே பதில்சொல்லவும், ஆளாகவும் வேண்டி இருக்கிறது. நிர்வாகத்துடன் இதுகுறித்து நம் சங்கங்கள் பலமுறை பேசியிருக்கின்றன. மாற்று ஏற்பாடுகள் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில், 12.9.2011 அன்று முழுவதும ‘நெட்வொர்க் ஃபெயிலியர்’ ஆகிவிட்டது. விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடனும், வங்கிப்பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்ற ஈடுபாட்டுடனும் கிளைகளில் பணிபுரியும் நம் தோழர்கள் வரவு செலவுகளை செய்து இருக்கின்றனர். இந்த நடைமுறை தேவையற்றது என்ற போதும், நம் தோழர்கள் வங்கி மீது கொண்ட அக்கறையென்றே எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எப்போது சரியாகும், கிளைகளில் என்ன செய்ய வேண்டும் என்று எந்த அறிவிப்பையும், ஆலோசனைகளையும் தராமல் பலத்த மௌனத்தில் இருந்தது நிர்வாகம். கிளைகளில் இருந்து கேட்டால் மட்டுமே எதாவது பதில் சொல்வது என்ற நிலை சரியல்ல. பொறுப்பானவர்களின் செயலுமல்ல.
இந்த நிலைமையில், ஒருசில இடங்களில் வங்கிப்பணி அன்றைய தினம் முழுமையடையவில்லை என நிர்வாகத்திற்கு கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. முழுத் தவறையும் தன் மீது வைத்துக்கொண்டு ஊழியர்களையும், அலுவலர்களையும் இவ்விஷயத்தில் குறை சொல்வது அழகல்ல, ஆரோக்கியமானதல்ல.
சாட்டிலைட் கிளைகள்:
நிர்வாகம் அங்கங்கே சாட்டிலைட் கிளைகளை இயக்க ஆரம்பித்திருக்கிறது. வங்கியின் வளர்ச்சியில் இவையெல்லாம் முக்கியமானவை என்ற போதிலும், இது குறித்து முறையான அறிவிப்பும், சர்க்குலர்களும் இன்றுவரை இல்லையென்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. கிளைகளிலிருந்து இந்த சாட்டிலைட் கிளைகளுக்கு என்று ஒரு ஆபிஸர் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டியிருக்கிறது. அவருடைய பணித்தன்மைகள் எத்தகையவை, பொறுப்புகள் என்ன வகையானவை, அவருக்குரிய சலுகைகள் என்னென்ன என்று எந்த வரையறையும் இல்லை. தங்கள் கைக்காசைப் போட்டு அவர்கள் சென்றுவர வேண்டி இருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்தவும், முறைப்படுத்தவும் வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகி இருக்கிறது.
டிரான்ஸ்பர்கள்:
எழுத்தர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், பாதிக்கப்பட்ட தோழர்களுக்கும் சாதகமான டிரான்ஸ்பர்கள் போடுவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மாதங்கள் பலவாகிவிட்டன. ‘இன்று போடுகிறோம்’, ‘நாளை போடுகிறோம்’ என இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவ்வப்போது நிர்வாகக் காரணங்கள் என்று சொல்லி போடப்படும் டிரான்ஸ்பர்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. இவ்விஷயத்தில் மேலும் காலதாமதம் செய்யாமல், ஒப்புக்கொண்ட டிரான்ஸ்பர்களை போட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வங்கியின் வணிகமும், ஊழியர்களின் மனோநிலையும்:
நமது வங்கியின் டெபாசிட்டை விரைவாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது cd ratio கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதை சரிசெய்யவும், வங்கியை பலப்படுத்தவும் வேண்டிய நெருக்கடி நம் அனைவருக்கும் ஏற்பட்டு இருகிறது. இதை நாம் உணர்ந்து பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில், நிர்வாகத்தின் நடவடிக்கைகள், அதற்கு உறுதுணையாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டும். ஆனால் எதிர்மறையாக இருக்கிறது. சம்பளப்படித்தம் செய்வதில் வேகமாக இருக்கும் நிர்வாகம், நியாயமாக தர வேண்டிய LTC, hospitalization expenses reimbursement, sanction of leave, joining time, TTA, TA போன்ற பல விஷயங்களில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் இருக்கிறது. இன்னும் நமக்கு வரவேண்டிய computer increment, newspaper allowance உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குவதில் எந்த முனைப்பும் இல்லை. அதிருப்தியான மனநிலையில், உத்வேகமும், உற்சாகமும் இழந்து போவதுதான் மனித இயல்பு. இதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தையேச் சாரும்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!