7.5.12

PGBEA - PGBOU circular 6/2012 dt 07.05.2012



சுற்றறிக்கை எண் : 6/2012 நாள்: 07.5.2012


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடந்துகொண்டு இருக்கும் நமது அகில இந்திய இயக்கத்தை சென்ற சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம். மூன்றாவது கட்டமாக, ஏப்ரல் 26ல், நமது AIRRBEAவின் டெல்லி ஆர்ப்பாட்டமும் கருத்தரங்கமும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு கிராம வங்கியிலிருந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களோடு, தமிழகத்திலிருந்து 16 தோழர்களும் கலந்திருந்தனர். கட்சி வித்தியாசமில்லாமல் 18 எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பென்ஷன் உள்ளிட்ட நமது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு.தொல்.திருமா வளவன் எம்.பி அவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். உடல் நலமில்லாத போதும், நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.திலிப் குமார் முகர்ஜி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது, நமது இயக்கத்தை உணர்வுபூர்வமாக்கியது.

இனி அடுத்தக் கட்டமாக, பென்ஷன், தேசீய கிராமப்புற வங்கி, தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல், ஸ்பான்ஸர் வங்கிக்கு ஆபிஸர்கள் டெபுடேஷன் மற்றும் வங்கி நிர்வாகக்குழுவில் அலுவலர்கள், ஊழியர்கள் பிரதிநிதிகளுக்கு இடம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்களிடையே பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும், இறுதியாக ஜூன்8ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது எனவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் கோரிக்கைகளை விளக்கி நமது இரு சங்கங்களிலிருந்து போஸ்டர்களும், துண்டுப் பிரசுரங்களும் விரைவில் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களிடம், பென்ஷன் உள்ளிட்ட நமது பிரச்சினைகள் குறித்து எடுத்துச் சொல்லுங்கள்.

கூட்டுச் செயற்குழுக் கூட்டம்:

நமது இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழுக்கூட்டம் 6.5.2012 அன்று நடந்தது. நமது பிரச்சினைகள், அவைகள் மீதான நமது செயல்பாடு மற்றும் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்த மிக ஆழமான விவாதங்கள் வெளிப்பட்டன. நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நமது கூட்டுச் செயற்குழுக்கூட்டம் நிர்வாகம் குறித்து கீழ்க்கண்ட மதிப்பீடுகளுக்கு வந்திருக்கிறது.

(a) கோரிக்கைகளும், இழுத்தடிக்கும் நிர்வாகமும்:

நமது பொருளாதாரக் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை இந்த நிர்வாகம். அமைதியாகவும், பொறுமையாகவும் நாம் நடத்திய எந்தப் பேச்சுவார்த்தைக்கும் நிர்வாகம் மதிப்பளிப்பதாய் தெரியவில்லை.

(1) Pay protection to Ex-servicemen (2) Computer operator allowance for 2008 batch recruitees (3) Newspaper allowance  (4)House maintanence allowance (5)Reimbursement of 15 litres petrol to clericals (5) TA and Lodge expenses for officers என நாம் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கனவே நீண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸர் வங்கி, ஸ்பான்ஸர் வங்கி என்று பல்லவியை பாடுகிறது. ஆனால் லீவு நாட்களுக்கு TA  மற்றும் halting allowance கொடுப்பதற்கு எந்த ஸ்பான்ஸர் வங்கியை கேட்க வேண்டும் எனத் தெரியவில்லை. இஷ்டத்திற்கும் அவை சுழிக்கப்பட்டும் போனால் போகட்டும் எனவும்தான் சாங்ஷன் செய்யப்படுகின்றன.

பல கிளைகளில் வங்கியின் நெட்வொர்க் அடிக்கடி துண்டிக்கப்பட்டு, மானிட்டரில் அசைவு இல்லாமல் போய்விடும். பக்கத்துக் கிளைகளுக்குப் போய் அன்றைய வேலையை முடிக்க வேண்டும். சமயங்களில் மொத்தமாய் நெட்வொர்க் மூச்சடங்கிவிடும். அன்று இரவு எத்தனை மணியனாலும் கண் துஞ்சாமல் இருந்து முடிக்க வேண்டும். இவைகளுக்கு overtime allowance  கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் அதைக் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. சென்ற ஆண்டுக்கணக்கு முடிவின் போது, அரசு அறிவிப்பிற்கேற்ப இரண்டு நாட்கள் அதிகமாக வேலை பார்த்தோம். அந்த நாட்களுக்குண்டான overtime allowance வணிக வங்கிகளில் கொடுக்கப்பட்டு விட்டது. நமது நிர்வாகத்திடம் சொன்னால், 'ஸ்பான்ஸர் வங்கி' என பல்லவி பாடும்.


இப்படி கோரிக்கைகள் ஒருபுறம் குவிந்துகொண்டு இருக்கிறது. நிர்வாகம் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும் எல்லாவற்றையும் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. இனி இதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை.

(b) பணி நெருக்கடியும் நிர்வாகத்தின் பாராமுகமும்:

சென்ற சர்க்குலரில் நாம் nofrill account போன்றவைகளால் ஏற்படும் சிரமங்கள், ஜெனரேட்டர் இல்லாததால் ஏற்படும் அவதி, கிளைகளில் பெருகும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை சமாளிக்கப் போதிய manpower இல்லாமல் இருப்பது என நம் பணிநெருக்கடிகளை விளக்கி இருந்தோம். இதுகுறித்து சேர்மனிடம் PGBOU  பேசவும் செய்தது. அவைகளை புரிந்துகொள்வதாகவும், சரிசெய்ய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறினார். ஆனால் அவரது நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கிறது.

மாலை ஆறு மணிக்கு மேலாக, கரண்ட் இல்லாத சமயத்தில் வந்த ஆடிட்டர்களிடம் ஒத்துழைக்கவில்லை என்று சொன்னதற்காக நமது அலுவலர் மீது கோபத்தில் பாய்கிறார் சேர்மன். ஆடிட்டர்களை சமாளிக்கவும், சரி கட்டவும் நிர்வாகத்திற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு 5 மணிக்கு மேல் கிளைகளில் உட்கார்ந்து அவர்களுக்கு இரவெல்லாம் சேவகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை. அதற்கான overtime allowance கொடுக்கிறார்களா இவர்கள்? இப்படி ஆடிட்டர்கள் வரும்போது கடந்தகாலங்களில் ஓரிரு இடங்களில் cooperate செய்திருக்கிறோம். இப்போது அதையே கட்டாயப்படுத்தி கிளைகளில் ஐந்து மணிக்கு மேல் இருக்க வைக்க இந்த நிர்வாகத்திற்கு எப்படி தைரியம் வந்தது. நாம் விதிப்படி வேலை செய்வோம் என முடிவு செய்தால்தான் இவை யாவும் சரியாகும்.

கிளைகளில் நாளுக்கு நாள் பணிகள் கூடிக்கொண்டே இருக்கின்றன. ‘மகிழ்வுடன் கூடிய மலர்முகச் சேவை' என்று சொன்ன காலமெல்லாம் இப்போது கரையேறிவிட்டது போலும். மன அழுத்தம், எரிச்சல், கோபம் என பலவித உணர்வுகளுக்கு நம் தோழர்கள் ஆளாகின்றனர். பெரும் பாரங்களைச் சுமந்துகொண்டு தடுமாறி நடந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஆதரவாகவும், மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டிய நிர்வாகம், அவர்களை பின்பக்கமிருந்து சாட்டையால் சொடக்கி அடிமைகளைப் போல இழிவுபடுத்துகிறது.

(C) பணி ஓய்வில் சலுகைகளையும், நிம்மதியையும் வழிப்பறி செய்யும் நிர்வாகம்:

பணி ஒய்வில் ஒருவர் செல்கிறார் என்றால், அவரது பணி ஓய்வு நிம்மதியாக இருப்பதற்கான ஏற்பாட்டைச் செய்து தரவேண்டியது நிர்வாகம். இளமைக் காலத்திலிருந்து, முதுமைக்காலம் வரை இந்த வங்கியோடு வாழ்ந்து, உழைத்த ஒருவரை இந்த வங்கி நிர்வாகம் நடத்தும் விதம் பெரும் கொடுமையானது. நிர்வாகம் என்பது மனிதர்களால் நிரம்பி இருந்தாலும் இதயமற்ற ஒரு இயந்திரமாகிப் போய்க் கிடக்கிறது. அவரது பணிக்காலத்தில் நடந்த சின்னச் சின்னத் தவறுகளுக்கும் அவரையே முழுப் பொறுப்பாக்கி, சலுகைகளிலிருந்து பிடித்துக் கொள்கிறது.

இதுகுறித்து, நாம் ஏற்கனவே பலமுறை நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். தோழர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம். முன்கூட்டியே பணி ஓய்வு பெறுகிறவர்களுக்குத் தெரியப்படுத்தி, அந்தத் தவறுகளை சரிசெய்ய அவகாசமும், வாய்ப்பும் அளியுங்கள் என்றால் நிர்வாகம் , ‘சரி, சரி'யெனச் சொல்லிவிட்டு திரும்பத் திரும்ப அதையேதான் செய்கிறது. அண்மையில் பணி ஓய்வு பெற்ற இரு அலுவலர்களுக்கு, பணி ஓய்வுக்கு முந்திய நாள் சார்ஜி ஷீட் கொடுத்து, அவர்களை வெறுங்கையோடு வெளியே அனுப்பி வைத்திருக்கிறது.

பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

(d) ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள்:

இதுகுறித்து நாம் ஏற்கனவே 'வெள்ளை அறிக்கை' வெளியிடப் போவதாக அறிவித்திருந்தோம். அதற்குப் பிறகும் நிர்வாகம் நிறுத்திக் கொள்ளவில்லை,  திருத்திக்கொள்ளவில்லை. எனவே நாமும், அதுகுறித்த உண்மைகளை உரக்கப் பேச வேண்டி இருக்கிறது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், இந்த நிர்வாகம் புதிதாக குவித்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளும் சேர்த்து இந்த வங்கியின் பல நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. சதாநேரமும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தே யோசித்துக்கொண்டு, அந்த ஃபைல்களை மட்டுமே புரட்டி புரட்டிக் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருக்கும் நிர்வாகத்தால் எப்படி புதிய திசைகளில் வங்கியை செலுத்த முடியும்.

ஒரு குறிப்பிட்ட தவறு, மீண்டும் நடக்காமல் இருப்பதே ஒழுங்கு நடவடிக்கைகளின் நோக்கம். ஆனால் இங்கு அப்படி இல்லை. அப்படியானால், அது நபர் சார்ந்த குற்றங்கள் இல்லை. system சார்ந்த குற்றம். அதை சரிசெய்ய, நிர்வாகம் தன் பக்கம் இருக்கும் தவறுகளை முதலில் சரி செய்ய வேண்டும்.

நகைகள் விஷயத்தில் நடந்த சில அசம்பாவிதங்களில் நிர்வாகம் நடத்திக்கொண்டு இருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் கேலிக்கு உரியவை. நமது system குறித்து மறுபரிசீலனை செய்யவும், அதற்கான அடிப்படையான காரணங்களை ஆராயவும் ஒரு நேர்மையான நிர்வாகம் முற்படும். இங்கு அப்படியில்லை. யாரையாவது பலிகிடாவாக்கி, தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறது.

பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்பதற்காக சிலருக்கு வேண்டுமென்று, சார்ஜ் ஷீட் சமீப காலங்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பதவி உயர்வு கொடுப்பதற்காக சிலருக்கு சார்ஜ் ஷீட் கொடுப்பதை ரொம்ப காலமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. ஒழுக்கம் பற்றி யார் பேசுவது?

இங்கே எந்த தர்மமும், நியாயமும் இல்லை என கீழ்மட்டத்தில் பலரும் மனதிற்குள் புழுங்க ஆரம்பித்துவிட்டனர். இது ஊழியர்கள், அலுவலர்களின் மனோபாவத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். நீதியின் மீது நம்பிக்கையற்றுப் போவது என்பது திரி கருகுவதைப் போல. ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சிரழித்த பேரும், பெருமையும் இது போன்ற நிர்வாகங்களுக்கேச் சேரும்.

(e) தறிகெட்ட தலைமையலுவலகம்:

சமீபத்தில் வந்த அனாமதேய இ-மெயில் ஒன்று தலைமையலுவலகத்தின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டியது. ஒவ்வொரு துறையில் இருக்கும் குழப்பங்களும் குளறுபடிகளும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன. அவைகளைச் சரிசெய்யும் முனைப்பில்லை.

ஐந்து மணிக்கு மேலும் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்பது தலைமையலுவலகத்தைப் பிடித்த பெரு நோய்களில் ஒன்று. அந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களே, நிர்வாகத்திற்கு பிடித்தமானவர்களாய் கருதப்படுகின்றனர். ஐந்துமணிக்குச் சரியாக எழுந்து சென்றால், நிர்வாகத்தால் அழைக்கப்பட்டு செய்யக்கூடாத தவறை செய்தவர்களைப் போல விசாரிக்கப்படுகின்றனர்.

தலைமையலுவலகத்தில் தொடர்ந்து சிலரே பணிபுரிவதும், staff welfareல் நேரடியாகத் தலையிடும் PADமற்றும் AIVD துறைகளில் அதிகக் காலம் சிலர் பணிபுரிவதும்தான் இதற்கெல்லாம் காரணமாயிருக்கிறது. நிர்வாக விசுவாசம் என்ற பெயரில் வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் அருவருப்பானவை. தேங்கும் தண்ணீரில்தான் அசுத்தங்கள் உறைகின்றன. கிருமிகள் உற்பத்தியாகின்றன.


(f) பதவி உயர்வில் பாரபட்சங்கள்:

சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிற அலுவலர்கள் பதவி உயர்வு மிக மோசமான முன்னுதாரனங்களைக் கொண்டு இருப்பதாக நமது கூட்டுச் செயற்குழு கருதுகிறது. Seniority, honesty, performance கொண்ட சிலர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். எதுவும் இல்லாத சிலர் பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். பாரபட்சங்கள் ஊருக்கும் உலகத்துக்கும் தெரியும்படியாய் இருக்கிறது. இதுவும் அலுவலர்கள் மத்தியில், ஒரு வெறுமையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிர்வாகத்தின் யோக்கியத்தனம் கடுமையாக அம்பலப்பட்டு இருக்கிறது.

வங்கியை சீர்திருத்த ஆரம்பமாகும் நமது இயக்கம்!

நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இழுத்தடிப்பதிலேயே நிர்வாகம் குறியாய் இருக்கிறது. ஊழியர்களையும் அலுவலர்களையும் ஒருபக்கம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வைத்துக்கொண்டு தனது நேர்மையற்ற, பாரபட்சமான செயல்பாடுகளை கூச்சநாச்சமில்லாமல் இன்னொரு பக்கம் அரங்கேற்றுகிறது. நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை வன்மமாக மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. பொய்யாய் புன்னகைத்துக்கொண்டே, சென்ற சேர்மன் திரு.சுந்தர்ராஜின் அராஜகங்களின் தொடர்ச்சிகளை நிறைவேற்றுகிறது.  ‘Vision' , ‘vision' என்று மேலாளர்கள் கூட்டங்களில் பேசிய நிர்வாகத்திற்கு தொழிலாளர் விரோதப்பார்வையைத் தவிர எந்த visionம் இல்லாமல் இருக்கிறது.

தன்னை முன்னிலைப்படுத்தக் காட்டிய வேகத்தையும், ஆர்வத்தையும் இந்த வங்கியை முன்னிலைப்படுத்துவதற்கு இந்தச் சேர்மன் தலைமையிலான நிர்வாகம் காட்டவில்லை. தனது நிர்வாகத்திறமையின்மையால் வங்கியில் அங்கங்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் பொறுப்பாக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளை தாறுமாறாய் உபயோகிக்கிறது.

ஒரு தொழிற்சங்கமாக இவைகளை விமர்சிக்காமல், சரிசெய்ய முன்வராமல் போனால், நமது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிடும். இதனை உணர்ந்து, சுதாரித்து எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது. நம்மைத் தற்காத்துக் கொள்ள, ஒன்றுபட்டுத் திரள வேண்டிய காலகட்டம் இது. இரண்டு சங்கக் கூட்டுச் செயற்குழுவின் ஒட்டுமொத்த உணர்வும் புரிதலும் இதுதான்.

(a) தீர்வுகளாக முன்வைக்கும் கோரிக்கைகள்:

இதன் அடிப்படையில் வங்கியை சீர்திருத்த நமது இயக்கம் ஆரம்பமாகிறது. நாம் அதற்கான தீர்வுகளாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1.ஏற்கனவே நாம் எழுப்பியிருக்கும்/நிலுவையிலிருக்கும் அனைத்து பொருளாதாரக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

2.கிளைகளுக்குப் போதிய அளவு manpower  வேண்டும். Shortage of manpower மூலம் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் பொறுப்பாக்கக் கூடாது.

3.பணிக்காலம் தாண்டி தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் கிளைகளுக்கு மாறுதல் செய்ய வேண்டும். PAD  மற்றும் AIVD துறையின் முதுநிலை மேலாளர்களை இரண்டு வருடங்களுக்கு மேல் அந்தப் பதவியில் நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது.

4.ஓய்வு பெறுகிறவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, அவர்களுக்குரிய பிரச்சினைகள் மற்றும் சரிசெய்யப்பட வேண்டிய விஷயங்களை நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுகாலச் சலுகைகள் குறித்த ஒரு working sheet கொடுக்கப்பட வேண்டும். ஓய்வுகாலச் சலுகைகள் வழங்கப்படாவிட்டால் அதற்குரிய பின்னணியும் காரணங்களும் முறைப்படி அறிவிக்க வேண்டும்.

5.டிரான்ஸ்பர் பாலிசி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, டிரான்ஸ்பரில் பாரபட்சங்களையும், பாதிப்புகளையும் களைய வேண்டும்.

6.அனைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வாபஸ் பெற வேண்டும்.

7.பல ஆண்டுகளாய் நிலுவையில் இருக்கிற, தற்போது மேலும் குவிக்கப்பட்டு இருக்கிற ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். அவைகளை நியாயமான முறையில், ஒரு கால வரையறைக்குள் முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

8.பதவி உயர்வில் அலுவலர்களும் ஊழியர்களும் பெறும் மதிப்பெண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

9.கிளைகளிலும், தலைமையலுவலகத்திலும் ஐந்து மணிக்கு மேல் பணிபுரிகிறவர்களுக்கு overtime allowance கொடுக்கப்பட வேண்டும்.

10. தலைமையலுவலகத்தில் PGBEA, PGBOU தலைவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட வேண்டும்.

(b) முதற்கட்ட இயக்கம்:

இந்தத் தீர்வுகளை முன்வைத்து நமது சமரசமற்ற பயணத்தைத் தொடர இருக்கிறோம். மிக நிதானமாக, சாத்வீகமான அறவழியிலேயே நாம் அடியெடுத்து வைக்கிறோம். சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட வழிகளில்தான் நமக்கு எதிரான யாவற்றையும் முறியடிக்க முனைகிறோம். நிர்வாகத்திற்கு நமது நிலையை தெரிவிப்பது, உறுப்பினர்களிடம் உண்மைகளை விளக்குவது, எல்லாவற்றையும் கேள்விகளுக்குள்ளாக்குவது, அணி திரளுவதுதான் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளாக இருக்கும். இதன் அடிப்படையில், நமது கூட்டுச் செயற்குழு முதற்கட்டமாக இரண்டு நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கிறது.

1. வரும் 10.5.2012 அன்று நமது சங்கத் தலைவர்கள் mass deputation  சென்று, நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு memorandum கொடுக்க இருக்கிறோம். அன்று மாலை 5 மணிக்கு மேல் தலைமையலுவலகம் முன்பாக கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டம் நடத்த இருக்கிறோம்.

2. விதிப்படி வேலைகளையும், நிர்வாகச் சீரழிவுகளையும் விளக்கி, கீழ்க்கண்ட தேதிகளில் ஐந்து Regionகளிலும் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம்.

தூத்துக்குடி - 12.5.2012 மாலை 6 மணி- இடம் : தூத்துக்குடி
திருநெல்வேலி - 13.5.2012 காலை 10 மணி- இடம் : திருநெல்வேலி
இராமநாதபுரம் - 14.5.2012 மாலை 6 மணி - இடம் : இராமநாதபுரம்
விருதுநகர் - 19.5.2012 மாலை 6 மணி - இடம் : மதுரை
சிவகங்கை - 20.5.2012 காலை 10 மணி - இடம் : காரைக்குடி

கூட்டம் நடைபெறும் இடம் குறித்து சம்பந்தப்பட்ட Regionல் உள்ள கிளைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும்.

தோழர்களே!
விழித்துக் கொள்வோம்.
தோழமையுடன்



   
(M.சோலைமாணிக்கம்)                                 (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                           பொதுச்செயலாளர் - PGBOU

2 comments:

Comrades! Please share your views here!